படம் ஆரம்பித்து 20 வது நிமிடத்தில் புரிந்து விட்டது. இது என்ன படம் என்ன கதை என்று.

ஓர் எழுத்தாளன்

சமீப காலமாக அவன் கதை சொதப்பிக் கொண்டே இருக்கிறது. மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட ஒரு கதை வேண்டும். நீண்ட தடுமாற்றத்துக்கு பின்... தவிப்புக்கு பின்... போதைக்கு பின்... ஒரு கரு கிடைக்கிறது.

uru film

கருவை கதையாக்க மேகமலைக்கு போகிறான் எழுத்தாளன். அங்கு நடக்கும் அமானுஷ்யங்கள் போலொரு நாடகம்.. மெல்ல மெல்ல அரங்கேறி அவனை "உரு" வாக ஆக்குகிறது. ஆங்கில பட பாணியில் காட்டுக்குள்... தனித்த வீடு. இரவும் அது சார்ந்த நிறமும்.. அச்சு அசலாய் ஆட்டிப் படைக்கிறது. ஒரு கட்டத்தில்.... தேடி வரும் மனைவியை வீட்டுக்குள் அடைத்து வைத்து அடுத்த 5 மணி நேரத்தில் உன்னைக் கொல்ல போகிறேன் என்கிறான் முகம் நிறைந்திருக்கும் முகமூடியில்....

நிகழ்த்துக் கலையில் தத்தளிக்கும் தான்யா கச்சிதம்

படம் நெடுக ஒரு வித இருட்டுத் தன்மையை அற்புதமாக பூசியிருக்கிறார்கள். ஓரிடத்தில் கூட சலிப்பு தட்டாத திரைக்கதை. ஒவ்வொரு பிரேமையும் எத்தனையோ முறை ஒத்திகை பார்த்து எடுத்திருப்பது படத்தின் மீதான அக்கறையை காட்டுகிறது. ஹீரோவுக்கான எந்த வட்டத்திலும் கலையரசன் சிக்காமல் அந்த பாத்திரத்தை நிரப்பி இருப்பது நல்ல முன்னேற்றம். ஆங்கில பட பாணியில் படம் நெடுக காரணமின்றியும் கதை சொல்லலாம் என்று நிரூபிக்கிறது கதையின் ஓட்டம். குறைந்த பட்ஜெட். மிகக்குறைந்த கதாபாத்திரங்கள். படம் ஆரம்பித்து இடைவெளி தொடர தொடர நாயகனை விட்டு மெல்ல நாயகிக்கு தாவும் திரை மொழி அற்புதம்.

இசையில் "சைக்கோ" டொய்ங்......டொய்ங்.....டொய்ங்........ கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம்.

மிக சிக்கலான ஒரு கதையை இத்தனை இலகுவாக புரிய வைத்ததில் தான் படம் சறுக்குகிறது என்று நம்புகிறேன். முதல் திருப்பம் 20 வது நிமிடத்தில் புரிந்து விட... அடுத்த கிளைமாக்ஸ் திருப்பம் யாருமே எதிர் பார்க்காதது. ஆனால் அத்தனை பெரிய இறுதிக் காட்சியை ஜஸ்ட் லைக் தட் கடந்து போயிருப்பதுதான் படத்தின் அங்கலாய்ப்பு. இத்தனை அழகான கதையை கடைசி நேரத்தில் கை விட்ட படைத்தவனை பார்த்து கோபமாக கேட்கிறேன்.

"ஏன் உரு வை கை விட்டீர்....?"

சினிமா என்பது காட்சி மொழி. வசனங்கள் மூலமாக காட்சியை பதிய வைப்பதை விட.. நகர்தல் மூலமாக இறுதிக் காட்சியை செதுக்கி இருந்தால்... "உரு" முழுமையா ஆகி இருக்கும். உடன் இருக்கும் நிஜ உருவங்களையே கதைக்குள் கதாபாத்திரங்களாக உலவ விடும் படைக்கும் மூளையின் பிதற்றல்... ஒரு படைப்பாளியின் கனவுலகத்தின் நிறத்தை அள்ளி வீசி ஆக்கம் செய்திருக்கிறது. படைப்பாளியின் மூளை ஒரு நொடியும் சும்மா இருப்பதில்லை. அது "மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை" என்பது போல தான். அது தவித்துக் கொண்டே இருக்கிறது. நொடி நேர பிறழலில்... நினைவற்று மீள இயலாத பால்வெளிக்குள் சுற்றிக் கொண்டே இருக்கிறது. தன்யாவின் சிரிப்பில் கதை உள் நுழைந்து வெளி வரும் இடம்... கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று டைட்டில் கார்ட் போடும் இடம்.

உரு வுக்கு பெயர் கூட மாற்றியிருக்கலாம். உரு சமீப காலத்தின் கதை சொல்லல் முறையில் ஏற்பட்ட உட்சபட்ச முன்னேற்றம். அந்த அறைக்குள் கலைக்கும் தன்யாவுக்கும் நடக்கும் சண்டைக்காட்சி..... உலக சினிமாவில் ஏற்கனவே பார்த்திருந்தாலும்.... இங்கே நிறைவு. இருக்கும் பொருள்களையே வைத்து விளையாடி இருப்பது...நேர்த்தியான சண்டைக்காட்சியை முன்னுதாரணமாக்குகிறது. அவர்கள் இருவரின் கடின உழைப்பு அடிக்கு அடி... பிரமிக்க வைக்கிறது. படம் நெடுக சாத்தானின் கோரம் ஓர் எழுத்தாளனை ஆட்டிப் படைக்க அவளின் இறுதி சிரிப்பில்.. மௌனத்தில்... சர்ப்பத்தின் தக்க வைத்தல் யாரோவுக்கும் யாரோவுக்கும் இடையே யாரோவாகவும் தானே இருக்க வேண்டும் என்று நம்பும் ஒரு மாய தத்துவத்தை பதிந்து கொண்டே போகிறது.

நரம்புகளாலும்...... சதைகளாலும்..... எலும்புகளாலும்....ரத்தத்தாலும்.......மட்டுமே ஒரு எழுத்தாளன் இருப்பதில்லை. கதைகளாலும் அவன் இருக்கிறான்.

ஒரு எழுத்தாளனாய் எனக்கு நெருக்கத்தை தந்திருக்கும் உருவை நான் இன்னும் ஒரு முறை கூட பார்க்க இருக்கிறேன்...

கவிஜி