எழுபதுகளின் இறுதிப்பகுதி - புதுமுக வகுப்பில் கோட்டை விட்டுவிட்டு ஊரையே பூகோள ரீதியாக அலசிக் கொண்டிருந்த நேரம். என்னோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்த நண்பர்கள் சிலருக்கு திடீரென்று மண்டைக்குள் ஏதோ ரசயான மாற்றம் நிகழ்ந்து ‘குறியீடு...படிமம்...’ என்றெல்லாம் பேச ஆரம்பிக்க... என்னமோ ஏதோ என்று பதறிப் போய்விட்டேன் நான். ‘என்னடா ஏதோதோ பேசுறீங்க... என்னாச்சு உங்களுக்கு?’ என்றால்... ‘அதெல்லாம் உனக்குப் புரியாது. வேலையைப் பாரு’ என்று சொல்லிவிட்டு வானத்தையோ, மரத்தையோ வெறித்து வெறித்துப் பார்ப்பார்கள்.

கொஞ்ச நாள் முன்புவரை... ‘வறுமைக்குக் கோடு போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் எங்கள் வீடுகளுக்கு ஓடு போட்டால் ஒழுகாமலாவது வாழ்வோம்’ என்கிற ரகத்தில் எழுதிக் கொண்டிருந்த இவர்கள், ஏதோ ஒரு புளிய மரத்தின் கீழ் பெற்ற இலக்கிய ஞானத்தால் ‘பிரக்ஞை.. சமிக்ஞை.. கவிதானுபவம்’ என்று வெளுத்துக் கட்ட ஆரம்பித்தார்கள். ‘’டே சீனா! மத்ததெல்லாம் நீங்களே வெச்சுக்கங்க... அந்த கவிதாவோட அனுபவத்தை மட்டும் சொல்லு போதும்” என்பேன். “ச்சே... அது வாழ்வனுபவம்டா. சும்மா இரு..” என்று மிரட்டுவார்கள் நண்பர்கள்.

அதுவரை சீனிவாசன், சூரி என்று சாதாரணமாக தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருந்தவர்கள் ஸ்ரீனிவாஸன், ஸூரி என்றும்... இதயம், சுவாசம் என்று எழுதிக் கொண்டிருந்தவர்கள் ஹிருதயம்... ஸூவாஸம் என்றும் எழுத ஆரம்பித்தார்கள். அவர்களைப் பார்த்தாலே எரிச்சல், எரிச்சலாக வரும். தினந்தோறும் அவர்களோடு சண்டைதான். “டேய் சுரேஷ்... நாட்டுல எவ்வளவு பேர் சோத்துக்குக் கஷ்டப்படறான். அதெல்லாம் எழுதமாட்டீங்களா?” என்பேன். “அது ஒரு எகனாமிஸ்ட்டோட வேலை” என்பான். “சரி... இலங்கைல நம்மாளுகளையெல்லாம் கொல்றாங்களே அதப் பத்தி எழுதலாமே...” என்றால், “அது ஒரு ஹியூமன் ரைட்ஸ் ஆளுகளோட வேலை” என்பான். “மரங்களை வெட்றான். மழையே இல்ல. அது...?”

“அது ஈக்காலஜிஸ்ட்டோட வேலை...”

“அப்ப.. உங்களுக்கெல்லாம் என்ன புடுங்கரதாடா வேலை” என்று சண்டைக்குக் கிளம்பி விடுவேன். இந்த மாதிரி சண்டைகள் எல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்தது நாகார்ஜூனன்தான். 88ஆம் ஆண்டு நாகார்ஜுனனோடு ஏற்பட்ட பழக்கம் பல்வேறு சாளரங்களை என்னுள் திறந்துவிட்டது. “யாரையும் திட்டாதே. உனக்கு என்ன தேவையோ அதை எடுத்துக்கோ, புரியவில்லையா பத்துத் தடவை படி.. அப்பவும் புரியாட்டி கிழிச்சுப் போடு. குற்றால அருவி கொட்டற மாதிரி அவ கூந்தல் இருந்துச்சுன்னு லா.ச.ரா. சொல்றாரா. அப்படி எப்படிச் சொல்லலாம்?ன்னு சண்டைக்குப் போகாதே. கையில் எப்பவும் ஸ்கேல் வெச்சுக்கிட்டு சுத்தக் கூடாது...” என்றபடி போகும் நாகார்ஜூனனூடான பொழுதுகள்.

அப்போதுதான் அந்த முடிவுக்கு வந்தேன். எது எனக்கான எழுத்து? முதலில் அதை நோக்கிப் போவது. மாறுபாடானவற்றோடு மல்லுக்கு நிற்பதைக் காட்டிலும் மக்களுக்கான எழுத்தை நோக்கி நகர்வதே அது. எது எவ்விதம் ஆயினும்.. எது எழுத்து? அதுவும் எனக்கானது எது? என்கிற கேள்வி எழுகிறபோதெல்லாம் ‘பூவுலகின் நண்பர்கள்’ முதன்முதலாக வெளியிட்ட ‘புதிதாய் சில’ என்கிற தொகுப்பில் வந்த ஒரு கவிதைதான் எனது பதிலாக இருக்கிறது இன்றைய கணம் வரை:

1

people“ஒருநாள்
என் நாட்டு
அரசியல் சாரா அறிவுஜீவிகள்
எளிமையான எம் மக்களால்
குறுக்கு விசாரணை செய்யப்படுவர்.
தன்னைச் சிறுக சிறுக இழந்து கொண்டிருந்த
தீச்சுடரென மெதுவாக
அவர்கள் தேசம் செத்துக்கொண்டிருந்தபோது
அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்
என்று விசாரிக்கப்படுவார்கள்.

ஒருவரும் அவர்களிடம்
அவர்கள் உடைகளைப் பற்றியோ
அவர்களின் மதிய உணவையடுத்த
நீண்ட உறக்கத்தைப் பற்றியோ
கேட்கப் போவதில்லை.
அவர்களின்
‘உலகளாவிய’ கருத்துக் கொண்ட
மலட்டுப் புரட்சியைப் பற்றிக்கூட
அறிய எவரும் ஆவலாக இல்லை.
அவர்கள் தங்கள் நீதியை எப்படிப்
பெற்றார்கள் என்று ஒருவருமே
கவலைப்படப்போவதில்லை.

கிரேக்கப் புராணங்களைப் பற்றியோ
ஒரு சுய மாறுதலை அவர்கள் உணர்ந்தது பற்றியோ
அவர்களிடம் எதுவும் கேட்கப் போவதில்லை.
முழுப் பொய்யின் நிழலிலே
பிறந்த
அவர்களின் மடத்தனமான
சமாளிப்புகளைப் பற்றியும்
அவர்களிடம் கேட்கப்போவதில்லை.

2.

அந்த நாளில்
அந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.
அரசியல் சாரா அறிவு ஜீவிகளின்
புத்தகங்களிலோ,
கவிதைகளிலோ
இடம் பெற்றிராத
அந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.

ஆனால்
தினமும் அவர்களுக்கு
ரொட்டியும், பாலும் சேகரித்துத் தந்த
ஆம்லெட்டும், முட்டையும் உடைத்து ஊற்றிய,
அவர்களின் வாகனங்களை ஓட்டித் திரிந்த
அவர்களின் நாய்களையும், தோட்டங்களையும் மேய்த்துவந்த
மொத்தமாக
அவர்களுக்காகவே தங்களை அர்ப்பணித்துவிட்ட
அந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.
வந்து கேட்பார்கள்:
‘ஏழைகள் துன்பத்தில் துடித்துக் கொண்டிருந்தபோது
அவர்களின்
இளமையும், வாழ்வும் திகுதிகுவென எரிந்து
கொண்டிருந்தபோது
நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?”

3

என் இனிய நாட்டின்
அரசியல் சாரா அறிவுஜீவிகளே
அப்பொழுது
உங்களால் பதிலளிக்க இயலாது.
உங்கள் மனோதிடத்தை
மௌனம் அரித்துத் தின்னும்.
உங்கள் ஆத்மாவை உங்கள்
துன்பமே கடித்துக் குதறும்.
உங்கள் அவமானத்தில்
நீங்களே ஊமையாகிப் போவீர்.

- பாமரன்

Pin It