kaatru veliyidai 600

ஒவ்வொருவருக்கும் ஒன்றோ, இரண்டோ காதல் அனுபவங்கள் இருக்கும். அந்த அனுபவங்களை வைத்து ஒன்றிரண்டு கதைகளோ, படங்களோ எடுக்க முடியும். அவை வெற்றிகரமாகவும் அமையலாம். ஆனால், அவற்றையே 5 படங்கள், 10 படங்கள் என எடுக்க நினைத்தால், எப்படி இருக்கும்? ஒரே மாதிரியான காட்சி அமைப்புகள், ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத கதைப்போக்கு என மணிரத்தினம், கவுதம் வாசுதேவன் ஆகியோரின் தற்போதைய படங்கள் போல் இருக்கும்.

மணிரத்தினத்தின் 'காற்று வெளியிடை' படமும் அப்படித்தான் வந்திருக்கிறது. இந்த முறை இவரது காதல் நாடகத்திற்கான திரைச்சீலையாக காஷ்மீர், கார்கில் போரை மாற்றியுள்ளார். காஷ்மீருக்குப் பதிலாக சொக்காம்பட்டி திரைச்சீலையை மாட்டியிருந்தாலும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது.

கதாபாத்திரங்கள் சவசவ என்று படைக்கப்பட்டிருக்கின்றன. எந்த கதாபாத்திரத்திற்கும் தெளிவான ஸ்கெட்ச் இல்லை. பாத்திரங்களே இப்படி இருப்பதால், அவற்றின் மீது கட்டப்பட்ட காட்சியமைப்புகளும் மனதில் நிற்காமல், திரையில் அவை பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கின்றன. திரையில் ஓடுவதற்கும், நமக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல திரையரங்கில் நாம் உட்கார்ந்திருக்கிறோம்.

படத்தில் மிகுந்த எரிச்சலைத் தருவது கதாநாயகன் (கார்த்தி) பாத்திர அமைப்பும், வசனங்களும் தான். 'இதயத்தைத் திருடாதே' படத்தில் தேவாலயத்தில் எல்லோரும் அமைதியாகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்போது, நாகார்ஜூன் சத்தமாய்க் கத்தி, தனது காதலை ஏற்றுக் கொள்ள வைப்பாரே, அது முதல் தடவை பார்க்கும்போது ரசிக்க முடிந்தது. அதை 'மணிரத்தினம் குறும்பு' என்று விமர்சகர்கள் ஏற்றிவிட்டதில், இன்றுவரை அவர் அதை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார். எந்தவொரு நாகரிகமும் இன்றி, எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் கதாநாயகன் கத்திக் கொண்டிருக்கிறார். எழுந்துபோய், நாலு அப்பு அப்பலாமா என்று நமக்கு எரிச்சல் வருமளவிற்கு இருக்கிறது அந்தக் கத்தல். கதாநாயகனின் இந்த எக்ஸெண்டிரிக் நடவடிக்கைகளால் கதாநாயகியுடன் வரும் மோதலும், பிரிவும்தான் படத்தின் கதை என்பதால் மொத்தப் படமும் படுத்துவிடுகிறது.

கார்த்தி முதல் படத்திலேயே நடிப்பில் வெளுத்து வாங்கியவர் அல்லது வெளுத்து வாங்கப்பட்டவர். அவரிடம், 'ஃபைட்டர் பைலட் என்றால் இஞ்சி தின்ற குரங்கு மாதிரியே இருக்க வேண்டும்' என்று மணிரத்தினம் சொல்லியிருப்பார் போல... மனுஷன் அப்படியே நடிக்க முயன்று, பல காட்சிகளில் மலச்சிக்கல் வந்தவன் மாதிரியே முழிக்கிறார்.

படத்திற்கு இன்னொரு பெரிய மைனஸ் வசனங்கள். சவசவ காட்சியமைப்பில் வசனம் கொஞ்சமாவது உசுப்பேற்றுகிற மாதிரி இருக்க வேண்டும். ஆனால், இங்கு வெறுப்பேற்றுகிறது.

'விஷுவல்ஸ் பிரமாதம்' என்று பல பேர் புளகாங்கிதப்பட்டு பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார்கள். 'அதைப் பார்க்கணும்'னு தியேட்டருக்குப் போவீர்கள் என்றால், மணிரத்தினம் உங்களை ரெண்டரை மணி நேரம் கதறக் கதற அடிப்பார். யூடியூப்பில் 'Kashmir beauty' என்று தேடிப் பார்த்தால் இதேபோன்ற விஷூவல்ஸ் நிறைய கிடைக்கும். அவற்றைப் பார்த்துவிட்டு, வீட்டிலேயே உட்கார்ந்துவிடுவது உங்களது மனஅமைதிக்கு மிகவும் நல்லது. படத்தில் வரும் விஷுவல்ஸ் எல்லாம், படுமோசமான கதையோட்டத்தினால் ரசிக்க முடியாமல் இருக்கிறது.

தன்னிடம் சரக்கு தீர்ந்துபோய் விட்டது என்பதை மணிரத்தினம் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும். அதுதான் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் நல்லது. நல்ல டெக்னீஷியன்களை மணிரத்தினம் உடன் வைத்துக் கொள்வதுபோல், நல்ல கதை-வசனகர்த்தாக்களை உடன் வைத்துக் கொள்வது, அவர்களது கதைகளைப் படமாக எடுப்பது என அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், மோசமான தோல்விப் படங்களோடு அவர் திரையுலகில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும்.

- கீற்று நந்தன்