kuttram 23

அருண்விஜய் நடிப்பில் ஈரம், வல்லினம் படங்களின் இயக்குனர் அறிவழகன் இயக்கியிருக்கும் படம் குற்றம் 23. தனது முந்தையப் படமான ஆறாது சினம் (மலையாள 'மெமரீஸ்') படத்தின் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு அவுட்லைனையும் எடுத்துக்கொண்டு, இதில் ரசிகர்களை திருப்திபடுத்த முயன்றிருக்கிறார்.

சில கொலைகள், அதை விசாரிக்கும் ஒரு கெத்தான போலிஸ் அதிகாரி - இதுதான் கதை. அதில், இன்று மருத்துவத் துறையில் நடந்து கொண்டிருக்கும் சில முறைகேடுகளை இணைத்து நீட்டாக எடுத்திருக்கிறார்கள். ஒரு த்ரில்லர் இன்வெஸ்டிக்கேஷன் படத்திற்கு சில கொலைகள் நடக்க வேண்டும், அந்தக் கொலைகளின் காரணத்தைக் கண்டறிய ஓரு போலிஸ் அதிகாரி இருக்க வேண்டும், அந்தக் கொலைகளை அவர் கண்டறிவதற்கு வசதியாக கொலையுண்டவர்களை இணைக்க ஒரு இணைப்புப் புள்ளி இருக்க வேண்டும். இவையெல்லாம் இந்தப் படத்திலும் தப்பாமல் இருக்கிறது. ஆனால் இந்த அம்சங்களை சரிவர இயக்குனர் கையாண்டிருக்கிறார். திரைக்கதை வடிவமைப்பும் அது தரும் சின்னச் சின்ன திருப்பங்களும் நல்ல திரைப்படத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அருண்விஜய், ஒரு போலிஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என தமிழ் சினிமா போட்டு வைத்திருக்கும் வட்டத்துக்குள் செம ஃபிட்டாக பொருந்துகிறார். திறமைசாலி. அவர் இன்னும் பெரிய இடங்களுக்கு சென்றே தீரவேண்டும். இயக்குனர் கேட்டுக்கொண்டதை செய்திருக்கிறார். "மலை மலை", "மாஞ்சா வேலு" போன்ற குப்பைகளில் நடிப்பதை விட்டுவிட்டு, இதுபோன்ற படங்களிலேயே தொடர்ந்து நடிக்கலாம்.

கதாநாயகியின் கதாபாத்திரத்தைத் தனியாகப் பிரித்து சலிப்படையச் செய்யாமல் அந்த விசாரணைக்குள்ளாகவே கொண்டுவந்தது நன்றாக இருந்தது. அவரும் குறையின்றி நடித்திருக்கிறார். அபிநயாவின் நடிப்பு அபாரம். ஆனால் முக்கியமான எமோஷனல் காட்சிகளில் லிப் சிங்க்கில் சொதப்பி விடுகிறார். ஒரே ஒரு மான்டேஜ் பாடல். தடையை ஏற்படுத்தவில்லை.

சில விசயங்கள் குறைகளாகத் தெரிந்தன. இறுதிக்காட்சி வரை கொலையாளியைப் பற்றிய பிம்பத்தை அதிகரித்துக் கொண்டே சென்று, முழுமையாக நமக்கு அனைத்து விவரங்களும் தெரியும்போது ஒரு திருப்தியின்மை ஏற்படுகிறது. இந்த வில்லனை இதே போன்ற கதாபாத்திரத்தில் பார்த்து சலிப்படைந்து விட்டதா எனத் தெரியவில்லை. கொலையின் ஆரம்புப்புள்ளியான ஃப்ளாஷ்பேக்கிலும் நம்பகத்தன்மை இல்லை. படத்தை முடிப்பதிலும் ஒரு அவசரம் தெரிந்தது.

இருந்தாலும் பார்த்து, ரசிக்கக்கூடிய ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் இந்த "குற்றம் 23".

- சாண்டில்யன் ராஜூ