ரோமியோ ஜூலியட் இயக்குனரின் அடுத்த படம். ரோமியோ ஜூலியட் ஒரு மட்டமான படம். இருந்தாலும் போகனைப் பார்ப்பதற்கு முக்கியக் காரணம் மீண்டும் இணைந்திருக்கும் ஜெயம்ரவி அரவிந்த்சாமியின் தனிஒருவன் காம்போ. பயந்து கொண்டே பார்க்க ஆரம்பித்தால் நினைத்தபடியே மொக்கையாகவே ஆரம்பிக்கிறது. ஹூரோ ஓப்பனிங் சாங், அதன்பின்னர் போக்கிரி க்ளைமாக்ஸை நினைவூட்டும் ஒரு சண்டைக்காட்சி, பிறகு நம்ம மக்கு ஹூரோயின் என்ட்ரி. ஹன்சிகாவின் என்ட்ரியிலிருந்து குடித்துவிட்டு ரகளை செய்வதாக வரும் காட்சியெல்லாம் உயிரோடு நம்மை நாமே எண்ணெய் சட்டியில் வறுத்தெடுப்பதற்கு சமம். பிராண சங்கடம். நேரடியாகக் கதையை ஆரம்பிப்பதில் என்ன பிரச்சினை. (சும்மா.. வழ வழான்னு)

bogan film

அரைமணிநேரம் கழித்து அரவிந்த்சாமி எண்ட்ரி. ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. போலிஸ் அதிகாரி ஜெயம் ரவிக்கும், பணக்காரர் அரவிந்த்சாமிக்கும் இடையேயான சுவாரஸ்யமான கேட் அன்ட் மவுஸ் கேம்தான் இந்த போகன். அவர்களை இணைக்கும் ஒரு ஃபேன்டஸி எலிமென்ட்தான் படத்தின் அடிநாதம்.

ஒரு ஃபேன்டசியான கதையை பார்க்கும்பொழுது வைதேகி காத்திருந்தால் செந்திலைப்போல "இதுல எப்படின்னே எரியும், போங்கன்னே" என்ற எண்ணம் ரசிகர்களுக்குத் தோன்றாமல் இருக்க வேண்டும். லாஜிக்கை யோசிக்கவிடாமல் காட்சிகள் நன்றாக இருக்க வேண்டும். (இருமுகன் படத்தில் இதுபோன்ற ஒரு வஸ்து இருந்தாலும் காட்சிகளில் எந்த சுவையும் இருக்காது). அந்த இடத்தில் போகன் ஓரளவுக்கு வெற்றி பெற்று விடுகிறது.

தனிஒருவனைப் போலவே இதிலும் அரவிந்த்சாமி, ஜெயம்ரவி இருவருக்குமான கதை எந்த இடத்திலும் ஒருவருக்கு மட்டுமே சென்றுவிடாதபடி பக்காவாக பேலன்ஸ் ஆகிறது. அரவிந்த்சாமிக்கு சொல்லப்படும் கிளைக்கதை தேவையற்றதாகத் தோன்றியது. அந்த ஃபேன்டசியான அம்சம் என்னவென்று தெரியாமல் பார்ப்பவர்களுக்கு இன்னும் சுவாரஸ்யத்தைத் தரலாம். க்ளைமாக்ஸ் கொஞ்சம் இழுவைதான். லாஜிக் ஓட்டைகளென்ன பள்ளங்களே கூட இருக்கிறது.

தனிஒருவனை இனி ஜெயம் ராஜாவாலேயே எடுக்க முடியாது. அந்த அளவு இல்லாவிட்டாலும் போகன் நல்லதொரு டைம்பாஸ் படம்.

- சாண்டில்யன் ராஜூ