aandavan kattalai

தொழில்நுட்ப அறிவும், கில்லாடித்தனமான திரைக்கதையும் இருந்தால் போதும் என்கிற வரையறையுடன் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும், இந்தக் காலகட்டத்தில் தர்மதுரை, ஆண்டவன் கட்டளை போன்ற நல்ல படங்களும் வெளிவந்திருப்பது ஆறுதலாக இருக்கிறது. நல்லவனாய் இராதே, வல்லவனாய் மட்டும் இரு என்கிற கதாநாயக பிம்பத்தை சமீப காலத் திரைப்படங்கள் சொல்லி வந்தன. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லாது; மீண்டும் சூதே வெல்லும் என்கிற அரிய தத்துவத்தை விஜய் சேதுபதி போன்ற நடிகர்களை வைத்தே சில இயக்குனர்கள் சொல்லி வந்தார்கள். இப்படி ஒரு இக்கட்டான திரைச் சூழலில்தான் ஆண்டவன் கட்டளை மிக முக்கிய கவனம் பெறுகிறது.

எளிதாக, நேர்மையாகப் பெறக்கூடிய விசயத்தைக் கூட கள்ளத்தனமாக சட்டத்திற்குப் புறம்பாகப் பெறுவது என்பது வெகு இயல்பான விசயமாக மாறிவிட்ட சூழலை இத்திரைப்படம் அப்பட்டமாக எடுத்து இயம்புகிறது. கடவுச்சீட்டு பெறுவது அல்லது திருத்தம் செய்வது போன்ற காரணங்களுக்காக இடைத்தரகர்களை அணுகும் விஜய் சேதுபதி சந்திக்கும் இன்னல்களை படம் முழுக்க சுவராஸ்யம் குன்றாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கதாநாயகி தனித்த ஆளுமையாக காட்டப்பட்டாலும், கதாநாயகனுக்காக செயற்கையாக நளினத்தை வரவழைத்துக் கொண்டு இரண்டு பாடல்களுக்கு நடனமாட வேண்டிய சூழல் நமது படங்களில் இருக்கும். ஆனால் இத்திரைப்படத்தின் கதாநாயகி, படம் முழுவதும் நேர்மையான செய்தியாளர் என்கிற தளத்திலிருந்து எள்ளளவும் விலகவில்லை. செய்தியாளர் என்றாலே, அரசியல்வாதிகளின் அந்தரங்களை புகைப்படம் எடுப்பது, எதிரியின் கோட்டைக்குள் புகுந்து புலனாய்வு செய்வது போன்ற செயல்களையே வீர தீரச் செயல்களாக நமது தமிழ் சினிமா சித்தரிக்கும். இப்படத்தில் வரும் கதாநாயகியோ, தொழிற்சங்கப் போராட்டம், அகதிகள் பிரச்சனை என சமூகப் பிரச்சனைகளை மய்யப்படுத்தியே தனது ஊடகவியலாளர் பணியினை மேற்கொள்கிறார்.

செய்தியாளர்களை சாகசக்காரர்களாக காண்பிக்கும் தமிழ் சினிமாவின் அபத்தத்திலிருந்து விடுபட்டு சமூக உணர்வாளராக கதாநாயகியை காண்பித்ததற்காகவே இயக்குனரை தனியாகப் பாராட்டலாம். காவல்துறை அதிகாரி ஈழத்தமிழரைப் பற்றி விசாரிக்கும் பொழுது தனக்கு தெரியாது என்று பொய் சொல்லும் காட்சியில் வெளிப்படும் மனிதாபிமானமும், ”ஊடகத் துறையில் இருந்து கொண்டு, ஊனமுற்றோர்களை ஒதுக்கி வைக்கிறீயே” என்கிற கேள்விக்கு மனம் உடைந்து பதறும்போது, தனது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்துகிறார்.

கதாநாயகன் நல்லவனாக வருகிறார். கதாநாயகி கூடுதலாக ஆளுமைப் பண்பும் நிறைந்தவராக வலம் வருகிறார். திருமணம், மணவிலக்கு குறித்து சமூக வெளியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் புனிதத்தையும், பதட்டத்தையும் போகிற போக்கில் போட்டு உடைக்கிறது இத்திரைப்படம். சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற கற்பிதங்கள் அனைத்தும் எளிதில் உடைக்கக்கூடிய, உடைத்துவிட்டுப் போகக் கூடிய அம்சங்கள் என்பதை எளிமையான முறையில் உணர்த்துகிறது.

இதையெல்லாம் தாண்டி இத்திரைப்படம் பேசும் மிக முக்கியமான அரசியல் மதுரை – சென்னை அரசியல். மதுரை போன்ற நகரில் உடைமைச் சமூக வாழ்வில் இருந்தவர்கள் கூட சென்னையில் உதிரி வாழ்க்கைத்தான் வாழ முடியும் என்பதை சொல்கிறது. அது மட்டுமல்ல, சென்னையில் வீடு வைத்திருப்பவர்கள் மேல்தட்டு வர்க்கமாக இருந்தாலும் சரி, அடித்தட்டு வர்க்கமாக இருந்தாலும் சரி, தன்னளவில் அவர்கள் சர்வாதிகார மனநிலையில்தான் இரு்ககிறார்கள் என்பதை உணர்ந்து இயக்குனர் சொல்லி இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

மதுரை போன்ற ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என்றால் வீடு கிடையாது என்று வெளிப்படையாக சொல்வார்கள். இன்னும் சிலர், பிரான்மலைக் கள்ளர் சமூகத்தினருக்கு வீடு கிடையாது என்பார்கள். மேற்கண்ட சமூகங்களுக்கு வீடு கொடுத்தால், வீட்டை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள், பிரச்சனை பண்ணுவார்கள் போன்ற பல்வேறு காரணங்கள் பொதுப் புத்தியில் சொல்லப்படும். ஆனால், சென்னையில் சாதி கிடையாது, தீண்டாமை கிடையாது  போன்ற கற்பிதங்கள் இன்றளவும் நம்பப்படுகிறது. ஊர்புறத்தை விட சென்னையில் சாதி உணர்வு குறைவுதான் என்றும் சொல்லப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் அது சரி என்றே படும். ஆனால், வெளியூரிலிருந்து பிழைக்க வந்து, போராடிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் சென்னையின் இன்னொரு முகம் தெரியும்.

சென்னையில் தீண்டாமை கிடையாது என்கிறார்கள். ஆனால் எந்தவித ஆதரவும் இல்லாமல் சென்னைக்குப் பிழைக்க வரும் எல்லா சாதிக்காரனும் சென்னையில் தீண்டாமையை அனுபவிக்கிறான் என்பதே நிதர்சன உண்மை. இயக்குனர் இந்த உண்மையை அனுபவித்து எடுத்திருக்கிறார். கிறித்தவர்கள் என்றாலோ, இசுலாமியர்கள் என்றாலோ சென்னையிலும் வீடு கிடைப்பது கடினமாகத்தான் இருக்கிறது என்பதை சிங்கம் புலியின் வசனத்தின் மூலம் நகைச்சுவையாக சொல்லியிருப்பார் இயக்குனர்.

aandavan kattalai 1

தமிழ் பேசும் இசுலாமியர்களையும், கிறித்தவர்களையும் வெறுத்து ஒதுக்கும் வீட்டு உரிமையாளர்கள் அய்ரோப்பிய கிறித்தவர்களுக்கும், சவூதி பணக்கார சேக்கிற்கும் அடிமை வேலை பார்ப்பதை நாசூக்காக இப்படம் பகடி செய்கிறது. சைவ உணவு பழக்கமுடையவர்களுக்கு மட்டும்தான் வீடு என்று சொல்வது தனி ரகம். அந்த வகை வீட்டு உரிமையாளர்களும் சென்னையில்தான் அதிகம். அது மட்டுமல்ல, மதுரைக்காரார்கள் என்றால் ரவுடியாகத்தான் இருப்பார்கள் என்று சினிமா உருவாக்கிய பொதுப் புத்தியில் மதுரைக்காரர்களுக்கும் வீடு கிடையாது என்கிற புது கண்டிசனையும் சென்னை உரிமையாளர்கள் முன் வைக்கிறார்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

மதுரையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்கள் பெரும்பாலும், சாதி உணர்வையும், வன்முறையையும் களமாகக் கொண்டு வெளிவந்ததன் விளைவு, மதுரைக்காரர்களை சாதாரண மனிதர்களிடமிருந்து பிரித்துப் பார்க்கும் மன நோய் பலருக்கும் வந்து விட்டது. விவரம் தெரிந்தவர்கள் யாரும் மதுரையைப் பற்றி தவறாகக் கருத மாட்டார்கள். இப்படத்தில் வரும் கதாநாயகன் முழுக்க முழுக்க நேர்மையானவனாகவும், மென்மையானவானாகவும் இருக்கும் மதுரைக்காரன். சென்னையின் உதிரித்தனமான வாழ்க்கையால் மிரண்டு போகிறான், பாதிக்கப்படுகிறான். இறுதியில் விரக்தியின் உச்சிக்கே சென்று, ”எங்க ஊரில் ராஜா மாதிரி வாழ்ந்தவன்டா, எங்களை இவ்வளவு மோசமா நடத்துறீங்களே” என்று சென்னை வீட்டு உரிமையாளர்களைப் பார்த்து விஜய் சேதுபதி கத்தும்பொழுது திரையரங்கில் கைதட்டல்கள் காதைப் பிளக்கிறது. பார்வையாளன் அனுபவித்த வலி திரையரங்கில் கரவொலியாக வெளிப்படுகிறது.

நகர் சார்ந்த அரசியல், கிராமம் சார்ந்த அரசியல் என்பதையும் தாண்டி, சென்னைப் பெருநகர் அரசியல் என்று தனியாக ஒன்று இருக்கிறது. இந்த அரசியலில் சென்னையின் பூர்வீக குடிமக்களும் பாதிக்கப்பட்டவர்கள்தான், பிழைக்க வந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்கள்தான். இன்றைய கார்ப்பரேட் பெருநகரக் கலாச்சாரம் கிராமம், நகரம், படித்தவர், படிக்காதவர் என்றில்லாமல் அனைவரையும் பாதிக்கவே செய்திருக்கிறது. இந்த அரசியலை முன்னெடுக்காமல், ஊர்ப்பெருமையையும், சாதி உணர்ச்சியையும் ஊட்டி தன் சந்தை நலனை உறுதிப்படுத்திக் கொள்ளும் திரைப்பட வணிகர்களுக்கு மத்தியில், ஆண்டவன் கட்டளை தனிமரியாதை பெறுகிறது.

மதுரைக்காரன், சென்னையில் அகதியாக இருக்கக் கூடிய சூழலை சொல்லும் அதே வேளையில், சொந்த நாட்டை இழந்து ஏதிலியாய் தவிக்கும் ஈழத்தமிழரின் சோகத்தையும் இத்திரைப்படம் பதிவு செய்கிறது. உலக அளவில் நாடில்லாமல் தவிக்கும் ஈழத்தமிழன், சென்னைக்குள் வீடு இல்லாமல் தவிக்கும் மதுரைத் தமிழன் என நுட்பமான அரசியலை பேசியிருக்கிறது ஆண்டவன் கட்டளை. இவ்வளவு ஆழமான செய்திகளை அலசியிருக்கும் இத்திரைப்படத்திற்கு பெயர் மட்டும் ஏன் பொருத்தமே இல்லாமல் இருக்கிறது என்று தெரியவில்லை. 

- ஜீவசகாப்தன்