தல என்று லட்சோபலட்சம் தமிழ் இளைஞர்களால் பிரியத்துடன் அழைக்கப்படும் அஜித் குமார், சில ஆண்டுகளுக்கு முன்பு தன் ரசிகர் மன்றங்களை கலைத்தார். இதன்மூலம் அதுவரை அவரைப் பிடிக்காதவர்களின் மதிப்பில் கூட உயர்ந்து நின்றார் தல. "திடீர்னு இவ்வளவு பக்குவமா பேசுறீங்களே எப்படி?" என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, "நாப்பது வயது தந்த பக்குவம்" என்று பதில் தந்தார் அஜித். இந்த பக்குவம் அஜித் குமாரின் ரசனையிலும் ஏற்பட்டால், அது ரசிகர் மன்றங்களைக் கலைத்ததை விடவும் பெரிய சமூக சேவையாக இருக்கும்.

ajith vedalam

தமிழில் கலைப் படங்கள் Vs வணிகப் படங்கள், உள்ளூர்ப் படங்கள் Vs உலகப் படங்கள் என்று நிறைய விவாதங்கள் நடக்கின்ற சூழலில், வேதாளத்தை நான் முழுக்க முழுக்க ஒரு வணிகப் பட ரசிகனாவே அணுகுகிறேன்.

சமீப காலமாக, சில மனிதர்களைப் பார்த்துவிட்டால் அன்றைய நாள் அவ்வளவுதான் என்ற மூடநம்பிக்கை எனக்குள் எப்படியோ புகுந்து விட்டது. சிலசமயம் அது பலித்து விடவும் செய்கிறது. வேதாளத்தில் அது பலித்தது. திரையரங்குக்கு அரை மணி நேரம் தாமதமாக சென்று இருக்கையில் வந்து உட்கார்ந்தால், தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தர்ம சங்கடங்களில் ஒருவரான பரோட்டா சூரி உயிரைக் கொடுத்து காமெடி பண்ணிக் கொண்டிருந்தார். அப்போதே என் முகத்தில் இருள் படர ஆரம்பித்துவிட்டது. அந்த இருள் படம் முடியும்வரை மறையவில்லை.

பரோட்டா சூரி கதாகாலட்சேபம் நடத்துவதுபோல் பேசிக் கொண்டிருக்க, அஜித் அவர் அருகில் நின்று தேமேயென்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போதே எனக்கு எரிச்சல் தொடங்கிவிட்டது. இந்த டிவி சீரியல் ஷாட்டை உலகின் எந்த மூலையிலாவது வணிகப் படங்கள் என்ற பெயரில் யாராவது எடுக்கிறார்களா? வணிகப் படமோ, கலைப் படமோ... தன்னை இயக்குனன் என்று நம்பும் எந்த ஒரு ஆளும் இப்படி ஆதாம் ஏவாள் காலத்து பாணியில் ஷாட் வைக்க மாட்டான்; படமும் எடுக்க மாட்டான். இந்த காட்சி மட்டுமல்ல, வேதாளத்தின் மொத்த தரமே அவ்வளவுதான்.

சிவாவின் திறமைக்கு இன்னொரு சாட்சி: வில்லனின் தம்பி அஜித் குமாரை கொல்வதற்குத் திட்டமிடுகிறார். கேமரா குரங்கு கையில் சிக்கியதுபோல் தாறுமாறாக அலைந்து காட்சிகளை படம் பிடிக்கிறது. பலவித கோணங்களில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சிகளை துண்டு துண்டாக வெட்டி, அனிருத்தின் காதைப் பிளக்கும் இசையோடு நமக்குப் பரிமாறுகிறார் சிவா. இந்த வேலையை செய்ய என்ன திறமை வேண்டும்? அல்லது கற்பனாசக்தி வேண்டும்? இவற்றில் கொஞ்சம் கூட அழகில்லை, நிதானமில்லை, நேர்த்தியுமில்லை. எப்படியெல்லாம் படமெடுக்கக் கூடாது என்பதற்கான copybook இந்த காட்சிகள்.

ஒரு திறமையான இயக்குனன் காட்சிகளை உருவாக்கி, இறுதியில் திரைக்கு கொண்டுவரும்போது நான் மேலே குறிப்பிட்டிருப்பதுபோல் ரசிகனை யோசிக்க விடமாட்டான். தான் சொல்ல வரும் விஷயத்தில் ரசிகனை முழுமையாக ஈர்த்து, அவனது கவனத்தை கட்டிப் போட்டு கதை கேட்க வைப்பான் - அதாவது பார்க்க வைப்பான். அப்படியொரு அனுபவத்தை சமீபத்தில் எனக்குத் தந்தது இருபத்தியேழே வயது நிரம்பிய ஆனந்த் ஷங்கரின் அரிமா நம்பி. அரிமா நம்பியும் வணிகப் படம்தானே? கலைப் படம் இல்லையே? இப்படியாக, கோடிக்கணக்கான பணத்தை வாரி இரைத்து எடுத்தாலும் வேதாளம் ஒரு டிவி சீரியல் தரத்தில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது.

சரி சிவா ஆக்ஷனில் கோட்டை விட்டுவிட்டார். சென்டிமென்ட் காட்சிகள் எப்படி? அது அதைவிட மோசம். உப்புச் சப்பில்லாத, செயற்கையாக தருவிக்கப்பட்ட, எரிச்சலை மட்டுமே எழுப்பும் 'குடும்பக்' காட்சிகள். சிவா தேர்ந்தெடுத்திருக்கும் நடிகர்கள் இந்தப் பணிக்கு கச்சிதமாக உதவுகிறார்கள். பரோட்டா சூரி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், தம்பி ராமையா, 'அழகர்சாமியின் குதிரை' நாயகர் சிவபாலன் இவர்கள் அனைவரையும் ஒரே படத்தில் காண நேர்வதைவிட பெரிய தண்டனை என்ன இருக்க முடியும்? உலகளவில் மோசமான நடிகராக உருவெடுத்து நிற்கும் தம்பி ராமையா, இந்தப் படத்தில் பார்வையற்றவராக வருகிறார். அவரை வாய்பேச முடியாதவராகக் காட்டியிருந்தால் நமக்கு விமோசனம் கிடைத்திருக்கும். அவருக்கு மனைவியாக நடித்திருப்பவரும் குறைந்தவர் அல்ல. TV serials revisited.

எரிச்சலைக் கிளப்புவதில் ஒவ்வொருவரும் போட்டி போடுகிறார்கள். இது போதாதென்று கூத்துப் பட்டறை கலைராணி வேறு. ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் ஒரு ஸ்டெரியோடைப் நடிகரைப் பற்றி சுவாரஸ்யமான சில குறிப்புகள் வரும். தமிழ் சினிமாவில் அதற்கு சரியான உதாரணம் கலைராணி. தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் இவர் அறச் சீற்றம் கொண்ட சில வசனங்களைப் பேசுவார் அல்லது யாராவது ஒருவரின் இறப்புக்கு ஒப்பாரி வைப்பார். கலைராணியின் வருகை எனக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போலிருந்தது. அவரைக் கண்டதுமே முகத்தை சுவற்றோரம் திருப்பிக் கொண்டேன். என்ன பேசினார் என்பது கூட என் காதில் விழவில்லை. சரி அந்தக் காட்சியோடு தப்பித்தோம் என்றால் கிளைமாக்ஸில் இன்னொரு முறை அவர் வசனம் பேசும் காட்சி சில நொடிகள் வருகிறது. சித்திரவதை.

வணிக சினிமாவாக இருந்தாலென்ன? அதில் இயல்பான, நெகிழ்ச்சியான காட்சிகளை உருவாக்க முடியாதா என்ன? சண்டக்கோழியில் சதா வம்பு செய்து கொண்டிருக்கும் மீரா ஜாஸ்மின், விஷாலிடம் காதல் வயப்பட்டவுடன் ஒரு காட்சியில் "தயவுசெஞ்சு போயிடுங்க. திரும்பினா நான் அழுதுருவேன்" என்று உருகி நிற்பாரே? அந்தக் காட்சியில் எத்தனை அழகு இருந்தது? விஷால் தன் முறைப்பெண்களை விட்டுவிட்டு மீரா ஜாஸ்மினை காதலிப்பது தந்தை ராஜ்கிரணுக்குத் தெரியவர, அந்த இரு பெண்களும் ராஜ்கிரணிடம் விஷாலுக்காக பேசும் காட்சி எவ்வளவு அழகு?அரிமா நம்பி ஒரு ஏ சென்டர் படம். ஆகவே அதை கணக்கில் எடுக்க முடியாது என்று வாதிட்டால் சண்டக்கோழி ஒரு பி, சி சென்டர் படம்தானே? அதில் இருந்த நேர்த்தியில் பத்து விழுக்காடாவாது வேதாளத்தில் இருந்ததா?

வேதாளத்தின் ட்ரெயிலரைப் பார்க்கும்போது அஜித் ஏதோ மனநிலை பிறழ்ந்த பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அப்படியல்ல. படத்தில் அவர் ஒரு சராசரி மனிதராகத்தான் வருகிறார். அப்படியானால் படம் முழுக்க ரௌடிகளைப் பார்த்து அவர் ஏன் தன் முகத்தை வினோதமாக மாற்றிக் கொண்டு சேட்டை செய்கிறார்? இப்படி முக சேட்டை செய்தால் "இந்த ஆளுக்கு என்னாச்சு?" என்றுதான் ரவுடிகள் நினைப்பார்களே தவிர, அவரைப் பார்த்து பயப்படவா செய்வார்கள்? என்ன ரசனை இது? எந்த ஊர் வணிக சினிமாவில் நாயகன் காரணமே இல்லாமல் இப்படி முகத்தால் சேட்டை செய்கிறான்? போலவே அஜித் சில பழைய பாடல்களுக்கு லிப்-சிங்க் செய்வதும், உடல் பெருத்த அவரை தங் தங் என்று குதிக்க வைப்பதும் என்ன மாதிரியான தெறிமாஸ் ரசனை என்றும் எனக்குப் புரியவில்லை. ரசனைக் கேட்டின் மோசமான உதாரணங்கள் இவை. இந்த தெறிமாஸை உருவாக்க ஒருவருக்கு என்ன உழைப்பு அல்லது ரசனை வேண்டும்? சிவாவுக்கு வானளாவ புகழ்ச்சி வேறு.

வில்லனின் ஆட்களில் ஒருவரை அரைமணி நேரம் மட்டுமே உயிர் பிழைக்க வைத்து வாக்குமூலம் பெறுவதாக ஒரு காட்சி வருகிறது. தமிழ் சினிவாவின் மிக அருவருப்பான காட்சிகளில் இது நிச்சயம் இடம்பெறும். ஒருவரின் மனதில் எப்படி இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான கற்பனைகள் தோன்றுகின்றன? சரி காட்சிப்படுத்துவதிலாவது கொஞ்சம் கண்ணியம் இருந்ததா என்றால், அது அதைவிட மோசம். சினிமா என்கிற வஸ்துவுக்கும் சிறுத்தை சிவாவுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதைச் சொல்ல இந்த ஒரு காட்சியே போதும்.

சரி, craftஐ விட்டுவிடுவோம். ஹிந்தியில் யாருமே சீண்டாத வில்லன் ராஹுல் தேவ், அவரது தம்பி இருவருக்கும் ஒரு காட்சியில் கூட லிப் சிங்க் சரியாக அமையவில்லையே? இதை எந்த வகையில் சேர்ப்பது? அல்லது படம் முழுக்க காட்டு விலங்குகள் ஓலமிடுவதைப் போன்றிருக்கும் அந்த மகா இரைச்சலை குறைத்திருக்கலாமே? சிவாவை யார் தடுத்திருப்பார்கள்? வணிக சினிமா இப்படித்தான் இருக்கும் என்ற சாக்குப்போக்கு அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. உலகின் எந்த மூலையில் இதுபோன்ற தரக் குறைவான வணிக சினிமாவை உற்பத்தி செய்கிறார்கள்? அரங்க அமைப்பு, ஒலியமைப்பு, ஒளியமைப்பு, லிப்-சின்க் போன்ற அடிப்படை விஷயங்களில் கூட கோட்டைவிடும் மூன்றாம்தர வணிக சினிமா எந்த ஊரில் தயாரிக்கப்படுகிறது? எந்த ஊரில் சினிமா என்கிற பேரில் டிவி சீரியல்கள் வெளியிடப்படுகின்றன? ஒரு சராசரி ஆங்கிலப் படத்தில் கூட ஒரு நேர்த்தி இருக்கிறதே அது எப்படி?

'என்னை அறிந்தால்' எனக்கு சலிப்பாகவே இருந்தது. ஆனால் வேதாளத்தைப் பார்த்தபின்பு கௌதம் மேனன் அஜித்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் எவ்வளவு பெரிய சேவை செய்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏன் 'ஆரம்பம்' கூட ஒரு நல்ல வணிகப் படம்தான். அதில் அஜித் என்னை உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியதாக சில நண்பர்களிடம் பேசினேன். சிவா நம் நுண்ணுணர்வில் அமிலத்தை ஊற்றுபவர். அவரைப் போன்றவர்களிடமிருந்து விலகியிருப்பது அஜித்துக்கு நல்லது.

கடந்த ஐந்தாண்டுகளில் வந்த திரைப்படங்களில் வேதாளத்தைவிட ஒரு மோசமான படம் என் நினைவுக்கு எட்டவேயில்லை. இந்தப் படத்தின் இரைச்சல் சிங்கம்-2ஐயும் மிஞ்சிவிட்டது. அது பின்னணி இசையால் நிகழ்ந்தது என்று நாம் சுருக்கிப் பார்க்க முடியாது. அது இயக்குநரின் ரசனைக்கும், சினிமா பற்றி அவருக்கு இருக்கும் ஞானத்துக்குமான அடையாளங்கள். இது அஜித் படம் என்பதால், அவர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்; இது அவரது சொந்தத் தேர்வு. வேதாளத்தைப் போன்று நான்கு படங்கள் பார்த்தால் போதும்; நம் ரசனையில் நிரந்தரமான சேதம் ஏற்பட்டுவிடும். பின்பு, எந்த ஒரு உலக சினிமாவும் நம் ரசனையை மீட்க முடியாது.

பிற்சேர்க்கை: ISIS பயங்கரவாதிகளுக்கு இணையான பயங்கரவாதிகளான தமிழ்நாடு சென்சார் போர்டு உறுப்பினர்கள், இந்தப் படத்துக்கு U சான்றிதழ் வழங்கி கௌரவித்திருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமான வன்முறை கொண்ட ஒரு படத்துக்கு U சான்றிதழ். நாம் கொடுத்து வைத்தவர்கள்தான்.

- சித்தார்த் கந்தசாமி