kutram kadithal 1

நம்பிக்கையோடு நமக்கு இன்னுமொரு புது இயக்குநர் பிரம்மா! தேசிய விருது; ஜிம்பாப்வே, மும்பை, கோவா, புனே, பெங்களூரு என சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடல்; எங்காளுகளும் நல்லபடம் தருவாங்கைய்யா! என்றுப் பெருமிதம் கொள்ளச்செய்கிறது குற்றம் கடிதல்.

5-ம் வகுப்பு மாணவன் சகமாணவிக்கு பிறந்த நாள் பரிசாக முத்தம் கொடுத்துவிடுகிறான். அதை தவறாய் நினைக்கும் ஆசிரியை கன்னத்தில் ஓங்கி அறைகிறார். ஏற்கனவே மூளைக்கு செல்லும் நரம்பு சிக்கலில் இருக்கும் மாணவன் (இதுவரைக்கும் இதுகுறித்து யாருக்கும் தெரியாது) மயக்கமடைந்து பின்னர் 'கோமாவுக்கு' செல்கிறான். பள்ளி நிர்வாகம், அடித்த ஆசிரியை, அவர் கணவர், ஆசிரியையைப் பிரிந்துவாழும் 'ஏசு அடியாரான' தாய்,மாணவனின் விதவைத்தாய், அவனின் முற்போக்கு மாமன், செய்தியறியும் காவல்துறை என அனைவரும் பதட்டமடைகிறார்கள்.

இதுபோன்ற நிகழ்வுகளில் தேர்ச்சி பெற்ற பள்ளி நிர்வாகம் ஆசிரியையை பாதுகாப்பதையும், மாணவனுக்கு மருத்துவம் செய்வதையும்,நிலைமைகளை சமாளிப்பதையும் அழகாக படமாக்கியுள்ளார்கள். அதேபோல், மாணவன் பிழைத்த பிறகு விசாரணை அதிகாரி, ஆசிரியர் எந்த குற்றமும் செய்யவில்லை என ஊடகங்களிடம் பூசி மெழுகுவதும் எதார்த்தம்.

அந்த இடத்தில்தான் ஆசிரியையின் குற்றத்தை  ஒப்புக்கொள்ள வைத்து ஆசிரியர்களின் கடமையை உணர்த்துகிறார் இயக்குநர். "ஒழுக்கம், கட்டுப்பாடு எல்லாம் முக்கியம்தான், ஆனா அதைவிட உயிரு முக்கியம்" என ஆசிரியை தனது பொறுப்பை உணர்ந்து அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் மிக அருமை.

இது இயக்குநரின் படம். கதாநாயகனை தேர்ந்தெடுத்துவிட்டு கதையை ஒட்டுபோடும் கிறுக்குகளுக்கு மத்தியில், தெளிவான கதைக்கு நடிகர்களைத் தேர்வுசெய்து நடிக்க வைத்திருக்கிறார். பதட்டமடைவதால் யாருடைய அன்றாட வாழ்க்கையும் ஒரேயடியாய் ஸ்தம்பித்து விடுவதில்லையென்பதை காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. பரபரப்போடே பள்ளி முதல்வரின் துணைவியார் மாவரைக்கிறார், கணவரின் உடல்நலம் கருதி கஞ்சி வைத்திருக்கிறார், பள்ளி ஆசிரியர்கள் ஊடகங்களைக் கண்டு நடுங்குகிறார்கள். மிகைப்படுத்தாத காட்சியமைப்புகள் நம்மை வியக்க வைக்கின்றன.

 சிறுவனாக மாஸ்டர் அஜித், அஜித்தின் அம்மாவாக நடித்திருக்கும் சத்யா, முற்போக்கு மாமன்  பாவெல் நவகீதன், ஆசிரியையாக ராதிகா பிரஷித்தா, கணவராக சாய் ராஜ்குமார், பிரின்சிபாலாக வரும் குலோத்துங்கன் உதயகுமார், அவர் மனைவியாக நடித்திருக்கும் துர்கா வேணுகோபால் என அனைவரும் பின்னுகிறார்கள்.

இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜன், ஒளிப்பதிவாளர் மணிகண்டன், எடிட்டர் பிரேம் என நல்ல டீம் ஒர்க்.

வசனம் மட்டும் பெரும்குறை. படம் முழுக்க "ஒண்ணுமில்லை, ஒன்றுமாகாது.." என்பதை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். இவ்வளவு வளமான தமிழ் மொழியில் ஆறுதல் சொல்வதற்கு வெவ்வேறு வார்த்தைகள் இல்லையா?

ஆனால் அது என்ன பாலியல் கல்வி?

படத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது தவறு என்பதோடு மாணவர்களுக்கு பாலியல் கல்வி அவசியம் என்கிற கருத்தும் வலியுறுத்தப்படுகிறது. அதுவும் 5- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என்பதாகத் தெரிகிறது.

பாலியல் பிரச்சினை குறித்த கவலை எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது.ஒரு 10 வயது சிறுவன் தன்வயது சிறுமிக்கு முத்தம் கொடுப்பதில் பாலியல் உணர்வு இருக்கிறதுதான். ஆனால் அது காம இச்சையை தீர்க்கும் நடவடிக்கையல்ல. அது அச்சிறுவர்களிடம் தொடரக்கூடியதுமல்ல.

சிறுவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது இந்த பாலியல் உணர்வுகள் மட்டுமல்ல. அவர்களுக்கு நண்பர்கள், அவர்களோடு சேர்ந்து நீர்நிலைகள், தாவரங்கள், விளையாடும் இடங்கள், குடும்ப உறவுகள், பண்டிகைகள், பலகாரங்கள், புத்தாடைகள் என எல்லாமே கேளிக்கைகள்தான். ஒன்றை விட்டு ஒன்று என கடந்து கொண்டேயிருப்பர்.

இவற்றுக்கிடையில் தனது பெற்றோர், சொந்தங்கள், அண்டை வீட்டார் போன்றோரில் யாராவது செய்யும் கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் பிரதிபலிக்கும். அது பறவைகள், விலங்குகள் மூலமும் தெரிய வரும். ஆனாலும் இதனைவிட அவர்களுக்கு தேவைப்படும் விளையாட்டு உலகம் பெரிதாக இருப்பதால், இது மற்றவற்றுக்கு கீழ்படிந்து காணாமல் போய்விடும். அந்த வயதில் அதற்குமேல் இந்த கிளுகிளுப்புகளுக்கு பெரிய மதிப்பிருக்காது.kutram kadithal

விஷயம் என்னவென்றால் பெரியவர்களின் வாழ்க்கையைப் போலவே சிறுவர்களின் வாழ்க்கையும் நெருக்கடியாகி விட்டதுதான். 3 வயதிலிருந்துப் படிக்க வேண்டியிருக்கிறது. 5 வயதிற்குமேல் டியூஷன் உட்பட தனிப்பயிற்சிகள் தொடங்கி அவர்கள் நேரம் களவாடப்படுகிறது. இந்த நிலையில்தான் கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் போன்ற விளையாட்டு மட்டுமே வாய்ப்பாக வாய்த்தால் அது விளையாட்டிலிருந்து விபரீதமாகிறது.

இதை எப்படி பாலியல் கல்வி மூலம் முறைப்படுத்த முடியும்? சிறுவர்கள் சிறுவர்களாக இருப்பதற்கு அவர்களது கல்விச்சுமையைக் குறைத்து அவர்களது உலகத்தை அவர்களுக்கு கொடுத்தால் இயல்பு. மாறாக, அவர்களுக்கு இருக்கிற சுமையோடு பாலியல் கல்வியையும் கூடுதல் சுமையாக்கி பெரிய மனிதனாக்கி விடுவீரோ? வயதுக்கும், தேவைக்கும் சம்பந்தமில்லாத சுமையை மூளை ஏற்றிக்கொண்டு, மூளைக்குள் இருப்பதை பரிசோதிக்க முயன்று சிக்கலில்தானே தீரும்.

இளைஞர்களுக்கு கூட பாலியல் பிரச்சினை கல்வியில்லாததால் அல்ல. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள்! அப்போ கல்வி பெற முடியாதவர்களெல்லாம் காமவெறியர்களாகவும், பாலியல் குற்றவாளிகளாகவும்தான் இருக்கணும். இது உண்மையா? விட்டால், படிக்க வாய்ப்பில்லாத ஏழைகளையெல்லாம் சுட்டுக் கொல்லுங்கள் என்பார்கள் போலவே!

பிரச்சினை என்னவென்றால், வரவர இளைஞர்கள் திருமணம் புரிகின்ற வயதுவரம்பு கூடிக்கொண்டே போகிறது. படித்து முடித்து வேலைக்குப்போய் காசு சம்பாதித்து, ஆணாக இருந்தால் வீட்டிலிருக்கும் சகோதரிகளை கட்டிக்கொடுத்து, பெண்ணாக இருந்தால் கடன் சுமைகளுக்கு வழி கண்டுவிட்டு திருமணத்திற்கு செல்வதற்குள் அரைக்கிழடாகி விடுகிறார்கள்.

ஏழைகளுக்கு இந்தப் பிரச்சினையில்லை. நடுத்தர வர்க்கத்திற்குதான் எல்லாப் பிரச்சினையும். உரிய வயதில் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டு அதற்குப்பிறகு படிப்பு, வேலை தேடல் என்கிற சமூகச்சூழல் இல்லை. இங்கே கல்யாணமானால் உடனேப் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும். கலாச்சார வளர்ச்சியுமில்லை, பொருளாதார வளர்ச்சியுமில்லை.

சரி, இளைஞர்களுக்கு கூட பாலியல் கல்வி சொல்லிக் கொடுப்பதென்றால் என்ன சொல்லிக் கொடுப்பார்களாம்? ஆசையைத் துற என்றா? பாதுகாப்பாய் உறவு கொள்வது குறித்துதானே! பாலியல் கல்வி என்பது ஆண் - பெண் உறவை தடுப்பதல்ல. அது பெண்களின் மாத சிக்கல், உடல் மாற்றம், அதுகுறித்து ஆண்களுக்கும், பெண்களுக்கும்கூட இருக்கும் புரிதலின்மை மற்றும் தவறானப் புரிதல் குறித்தவையேயாகும்.

சொந்த வளர்ச்சியில்லாத சமூகத்தின் மற்ற சிக்கல்கள்போலவே பாலியல் சிக்கலும் பாடாய்படுகிறது.

முற்போக்காளர்களை அமைப்பு சார்ந்தவர்களாக சிந்திக்க முடியாத தமிழ் திரையுலகம்

படத்தில் சிறுவனின் தாய்மாமன் முற்போக்காளனாக இருக்கிறான். கம்யூனிஸ்டுதான். சாலை விபத்தில் பெரியவர் அடிபடும்போது விபத்தேற்படுத்திய வாகனத்திலேயே அனுப்பி மருத்துவம் செய்ய வைக்கிறான். அவனுக்கு பலபேர் துணைநிற்கிறார்கள். சங்கம் நடத்தும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறான். அப்படியானவன், சிறுவனின் பிரச்சினையில் வெறும் கோபத்தையா வெளிப்படுத்துவான்? உறவு ஒருவேளை உணர்வை முன்னிறுத்தினாலும், தோழர்கள் உடனிருந்து ஒழுங்குபடுத்த மாட்டார்களா?

முற்போக்கு மாமனைவிட அம்மா இயல்பாக, ஏழைகளுக்குண்டான குணநலன்களோடு இருக்கிறார். அம்மா, அடித்த ஆசிரியையின் அறியாமையை மன்னித்து விடுகிறார். முற்போக்கு மாமன் 'ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தையும் காட்ட மாட்டேன்' என்பதன் மூலம் யாராக இருந்தாலும் அடிக்கு அடிதான்  என்று வர்க்க பேதமில்லாமல் கொந்தளிக்கிறார். இயக்குநருக்கு சராசரி சனங்களில் பெண்களுக்கு இருக்கும் பெருந்தன்மை தெரிந்ததுபோல் அமைப்பாக இருக்கும் தோழரின் அரிய குணம் தெரியவில்லை.

இதுபோன்ற அரசியல் பிழைகள் முக்கியமானதாக இருந்தாலும் இயக்கங்கள் வலுவில்லாத நிலையில் பொறுக்க வேண்டிதானிருக்கிறது. கூடவே சுட்டிக்காட்ட வேண்டியும் இருக்கிறதல்லவா?

ஆனாலும் சிக்கலுக்குரிய கதைக்களத்தை நேர்த்தியாக கையாளும் இயக்குநரைக் கொண்டாடாமல் இருக்க முடியாது. படத்தைப் பாருங்கள் எல்லோருக்கும் அதன் அருமை தெரியும்.

- திருப்பூர் குணா          

Pin It