thani oruvan 600

தனி ஒருவன் திரைப்படம் சமீபத்தில் அனைவராலும் பாராட்டப்படுகிறது. படத்தின் விறுவிறுப்பு அனைவரையும் ஈர்த்திருக்கிறது. சமூகத்தில் நடக்கும் சிறுசிறு தவறுகளுக்கு பின்னால், பெரிய குற்றங்கள் காரணமாக இருக்கிறது. அந்த பெரிய குற்றங்களுக்கு காரணமாக இருப்பவன் தனி ஒருவன். அந்த தனி ஒருவனை அழிப்பதையே, தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்ட தனி ஒரு கதாநாயகன். இதுதான் இந்தப் படத்தின் கதை. ஒரு ஊர்ல ஒரு கெட்டவன் இருப்பான். அவர்தான் நம்பியார். அவனை அழிப்பதற்காக அவதாரம் எடுத்து மக்களைக் காப்பாற்றுவார் எம்.ஜி.ஆர். இதுதான் வழக்கமான தமிழ் சினிமா பார்முலா. அந்த மசாலா பார்முலாதான் இந்த தனி ஒருவன். அசூரர்களை அழிப்பதற்காக கடவுள்கள் அவதாரம் எடுப்பது போல், நமது கதாநாயகர்கள் வில்லன்களை அழித்து மக்களைக் காப்பாற்றுகிறார்கள். அவதாரங்களை பூசிக்கும் மனநிலை கொண்ட நம் மக்கள் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜீத் போன்றோர்களின் தனி மனித சாகசத்திற்குப் பலியானார்கள்.

தனிமனித துதி திரைப்படங்களின் பார்முலாவில், வில்லனையும் ரசிக்கும் விதமாக கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். இது மிகவும் ஆபத்தான போக்கு. வில்லனை அடித்து நொறுக்கும் கதாநாயகனுக்குத்தான் ரசிகர்கள் கைதட்டுவார்கள். ஆனால், இந்த திரைப்படத்தில், வில்லன் பேசும் வசனத்திற்கு கை தட்டு கிடைக்கிறது. என்ன காரணம்? இந்த திரைப்படத்தில், கதாநாயகன், வில்லன் இரு தரப்பினர் பேசும் வசனங்களும், ஆளுமை வளர்ச்சி (personality development) தொடர்புடையவை.

தனக்கென்று எந்தவித அரசியலும் இல்லாமல், தன்னை முன்னிறுத்துவது மட்டுமே இலட்சியம் என்று நினைக்கும் கார்ப்பரேட் இளைஞர்களுக்கு கதாநாயகன், வில்லன் இருவரும் நல்ல தீனி போடுகிறார்கள்.

சமூக மாற்றம் தனிஒருவனால் சாத்தியமா?

ஆண், பெண், திருநங்கை, இளைஞர்கள், பாட்டாளிகள் என அனைவரும் இணைந்து போராடுவதன் மூலமாகவே சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியும். ஆனால், இங்கு அம்மா, அப்பா இல்லாத ஒருவன், தனியாக தன்னுடைய அறிவுத்திறனால், உடல் வலிமையால் தீயசக்தியை அழித்து விடுகிறான். அவனுக்கு நண்பனும், காதலியும் உதவி செய்தால் போதும். இந்த உலகத்தின் நன்மைகள் அனைத்தும் தனிப்பட்ட ஒருவனால் சாத்தியம் என்று சொல்வதன் மூலம், அவதார புருசர்களை உருவாக்குகிறார்கள்.

இத்திரைப்படம், பன்னாட்டு ஒப்பந்தம், அரசியல்வாதிகளின் ஊழல் என பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசுகிறது. இதற்கெல்லாம் யார் காரணம் என்றால் அரவிந்த்சாமி என்கிற ஒற்றை வில்லனை கைகாட்டுகிறது. அவனை எப்படி அழிக்க முடியும்?. அரசால் அழிக்க முடியுமா?முடியாது. காவல்துறையால் முடியுமா? முடியாது. மக்கள் புரட்சியால் முடியாது. எப்படி அவனை அழிக்க முடியும்?. இந்தப் படத்தின் கதாநாயகனால் மட்டுமே தனி ஒருவனாக இருந்து அழிக்க முடியும். எவ்வளவு அபத்தமான ஆபத்தான கருத்தை இத்திரைப்படம் திணிக்கிறது.

இன்றைய சமூக பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் அரவிந்தசாமி போன்ற ஒற்றை வில்லன்களா.?

இன்று திட்டமிட்டு உருவாக்கப்படும் நுகர்வு கலாச்சாரம், உலகமயத்தால் ஏற்பட்ட வணிக சந்தை குறித்து இத்திரைப்படம் எதுவும் பேசவில்லை. ஆனால், வில்லன் கார்ப்பரேட் வில்லனாக இருக்கிறான். ஆகையால் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான மனநிலையை இயக்குனர் விதைக்கிறாரா?. கண்டிப்பாக இல்லை. வில்லன் பேசும் அனைத்து வசனங்களுக்கும் ,திரையரங்கில் கைதட்டு கிடைக்கிறது. “ஏழையாகப் பிறந்தது என் குற்றம் இல்லை. ஏழையா செத்தா அது என் குற்றம்” என்று அரவிந்தசாமி பேசும் முதல் வசனம் தொடங்கி, “நான் நாட்டுக்காக இதை செய்யலை, உன்னுடைய அறிவுத்திறமைக்காக இதை செய்கிறேன்னு” சொல்கிற கடைசி வசனம் வரை, திரையரங்கில் கைதட்டு கிடைக்கிறது.

இந்தப் படத்தின் வணி்க வெற்றிக்கு காரணம், சமூக அக்கறை கிடையாது, கதாநாயகன் மற்றும் வில்லன்களின் அறிவுக்கூர்மையான செயல்பாடுகள்தான். அதாவது கார்ப்பரேட் மூளைதான் இங்கு ரசிகர்களிடம் கைதட்டலை பெறச் செய்திருக்கிறது.

சட்டத்தை மீறுவதுதான் கதாநாயகத்தனமா?

வில்லனை அழிப்பதற்காக எந்த தப்பும் பண்ணலாம், எந்த சட்டத்தின் எந்த ஓட்டையிலும் புகுந்து வரலாம் என்பது, இது போன்ற திரைப்படங்களின் பார்முலா. இயக்குனர் ஹரியின் திரைப்படங்களில் கதாநாயகன் தப்பான வழியில் சென்று வில்லனை அழிப்பான். “சாமி” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வரும் விக்ரம், லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்துவார். “சிவாஜி” படத்தில் கருப்பு பணத்தை மீட்பதற்காக, இவரே கருப்பு பணத்தை கையகப்படுத்துவார். “காக்க காக்க “படத்தில் சூர்யா, போலி மோதல் சாவு என்கிற பெயரில் ஒருவனைக் கொன்று விட்டு மனித உரிமை ஆர்வலர்களை இழிவுபடுத்துவார். இவை அனைத்தும் சட்ட விரோதமான செயல்பாடுகள். இவை அனைத்தும் கதாநாயகத்தனமாக நமக்கு காட்டப்படுகிறது. தனி ஒருவன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாகவே இருந்தாலும், காவல், சட்டம் என எந்த துணையுமில்லாமல், தன்னுடைய அசாத்திய திறமையின் மூலமே எதிரியை அழிக்கிறார்.

எனக்கு எதிரியை உருவாக்கும் தனிஒருவன்.

படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை உருவாக்குகிறது இந்தத் திரைப்படம். ஏனென்றால், அப்போதுதானே கதாநாயகனாக முடியும். பள்ளிக்குழந்தைகள், சக குழந்தைகளுடன் நட்புடன் பழகுவதற்குப் பதிலாக, போட்டி போடும் மனநிலையை உருவாக்கிவருகிறது இன்றைய கல்வி முறை. “போட்டி போடு, வெற்றி பெறு” என்பதே முதலாளித்துவ உலகின் தாராக மந்திரம். போட்டி போட்டுக் கொண்டு, ஒருவனை ஒருவன் அழித்துக் கொண்டு, முன்னேறு, உபரி ஈட்டு என்கிற சந்தை வெறியில் இன்றைய இளைஞன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இன்றைய சூழலில், ‘உன் எதிரி யார் என்று சொல், உன்னை யார் என்று சொல்கிறேன்’ என்கிற புதுமொழியை இத்திரைப்படம் கற்றுத் தருகிறது. எனக்கு எதற்காக எதிரி இருக்க வேண்டும்? தனிநபருக்கோ, இந்த சமூகத்திற்கோ எதிரி என்று யாரும் கிடையாது. இந்த சமூகம் உருவாக்கும் கருத்தியல்கள்தான் நமக்குப் பகையாகவும், நட்பாகவும் இருக்கிறது. தனி நபரை துதிப்பது எப்படி ஆபத்தோ, அதை விட ஆபத்து தனிநபரை எதிர்ப்பது மட்டுமே தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருப்பது.

 தனி ஒருவன் திரைப்படம் தனி நபர் துதி, தனி நபர் எதிர்ப்பு என இரண்டு ஆபத்தையும் ஒரு சேர செய்திருக்கிறது. பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ், காந்தி போன்ற தலைவர்கள் மக்களுக்கு எதிரான கருத்தியல்களை விமர்சித்தார்கள். அதற்கு எதிராகப் போராடினார்கள். எந்த ஒரு தனிநபரையும் இலக்காக வைத்து அவர்கள் போராடவில்லை. இப்போதும் மக்களுக்கு எதிரான பொருளாதார கொள்கைகள், சாதிய கட்டமைப்புகள், அடிப்படைவாத சிந்தனைகள் போன்ற அமைப்புகளுக்கு எதிராகத்தான் போராட வேண்டும். இந்த கருத்தியலுக்கு மாற்றாக மக்கள் நலனிற்கு ஆதரவான முற்போக்கு சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

தனி ஒருவனால் இவ்வுலகம் வாழ்வு பெறும் என்பது எவ்வளவு அபத்தமோ, அதே போல்தான் தனி ஒருவனால் மட்டுமே உலகிற்கு ஆபத்து இருக்கிறது என்று காட்டுவதும். சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் முதலாளித்துவ, சாதிய கட்டுமானத்திற்கு பலியான மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த சமூக அறிவு இல்லாமல், தனி ஒருவனை தீமைகளின் ஒட்டு மொத்த உருவமாக சித்தரிப்பது, எதார்த்தத்திற்கு முரணானது.

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிற பாரதியின் பாடல் வரிகள் உணர்த்துவது என்ன? தனிப்பட்ட ஒரு மனிதனின் பசியைத் தீர்க்க, சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் போராட வேண்டும் என்பதுதான். ஆனால், இத்திரைப்படம் அதற்கு நேர்மாறாக, சமூகப் புரட்சியை தனி மனித பிரச்சனையாக சுருக்கிவிடுகிறது.

- ஜீவசகாப்தன்