இயற்கை படத்தில் காதலின் உன்னதத்தைத் தொட்ட; ஈ படத்தில் போராட்டத்தின் அரசியலை விதைத்த; பேராண்மையில் ‘மக்களின் ஆயுதம் மார்க்சியமே’ என நெஞ்சு நிமிர்த்திய இயக்குனர் ஜனநாதன் "புறம்போக்கு என்கிற பொதுவுடமை" படத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை துணிவோடு பாத்திரமாக்கியிருக்கிறார்.

சபாஷ் தோழர் ஜனநாதன்!

purampooku 350

தமிழ்நாட்டில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி என்றால் அது கேலிக்கூத்தாக்கிவிட்டது. நக்சல்பாரி இயக்கங்களின் வரலாற்றுத் தொடர்ச்சியோடு உள்ள குழுக்கள் வளராமல் குறுகி சிதறுவது சாபக்கேடு. அதைவிடக் கொடுமை என்னவென்றால் இரசிகர் மன்றங்களைவிட சிறிய அமைப்பு வடிவங்களையும், விரல்விட்டு எண்ணுகிற உறுப்பினர்களையும் கொண்டுள்ள இயக்கங்கள் பெருகிவிட்டன.

எல்லோரும் புரட்சிக்கு தாங்கள் மட்டுமே தகுதியென சொல்லி களத்திலிருக்கிறார்கள். சின்னச் சின்னக் குழுக்கள் செய்து முடிக்கும் வகையில் புரட்சி என்ன அவ்வளவு சாதாரணமானதா? தமிழ்நாட்டில் பல புரட்சிகர சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அரசையே ஆட்டிப் பார்க்கும் புரட்சிகர எழுச்சி நடைபெற்றதென்றால் அது பஞ்சாப், கஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில்தான். ஒவ்வொன்றும் இதோ இப்போது ஆட்சியைப் பிடித்துவிடும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில்தான் அவற்றை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து அசையாமலிருக்கிறது இந்திய அரசு.

தமிழர்கள் இந்தப் போராட்டங்களை கணக்கில் கொள்ளாததன் மடத்தனத்தை விட்டொழிப்போம். ஆனால் ஈழத்தின் படிப்பினையை மறுக்க முடியாதல்லவா? இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா என உலக வல்லாதிக்க நாடுகள் அத்தனையும் இணைந்து ஒரு இன அழிப்பை நடத்தியதுதானே!

அதுதான் உலகமயமாக்கல். கொள்ளையடிப்பதில் உலக மூலதனங்கள் ஒருங்கிணைகிறபோது மூலதனங்களின் அரசுகளும் ஒருங்கிணைகின்றன. இன்றைய தேசிய விடுதலை உட்பட எந்த விடுதலையும் ஒருங்கிணைந்து சுரண்டுகிற உலக மூலதனத்திற்கு எதிரானதே. (இது படத்தில் ஒரு வசனமாக வெளிப்படுவது அற்புதம்) அதனால்தான் ஒருங்கிணைந்த மூலதனங்களின் உலக அரசுகள் ஒருங்கிணைந்து சின்னதோ, பெரியதோ எல்லா விடுதலைப் போராட்டங்களையும் நசுக்குகின்றன.

அப்படித்தான் ஈழ விடுதலையும், விடுதலைப் புலிகளும் நசுக்கப்பட்டனர். விடுதலைப் புலிகள் மட்டுமல்ல; அசாமின் உல்ஃபா, நேஷனல் சோசலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகலாந்த், பர்மாவின் கச்சின் என பட்டியல் நீளும்.

உலக அரசுகள் ஒருங்கிணைந்து எந்த ஒரு மூலையில் நடக்கிற போராட்டங்களையும் நசுக்குகிறபோது விடுதலை இயக்கங்களின் நாடு கடந்த ஒருங்கிணைப்பு அவசியமாகி விட்டது. இந்த நிலையில்தான் படத்தில் விரிவடைந்த அமைப்பு வடிவமான "தெற்காசிய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி"-யின் பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த கட்சியின் மையக்குழு உறுப்பினரான நாயகன் (ஆர்யா) இந்தியாவில் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். மனித வெடிகுண்டாக இந்தியா இராணுவத்தோடு மோதி அரசுக்கு அதிர்ச்சியையும், மக்களுக்கு விழிப்பையும் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும்போது கைதாகிறார். மரண தண்டனை விதிக்கப்பட்ட அவரை மீட்க நாயகியும் (கார்த்திகா) சிறு குழுவும் முயற்சிக்கிறது.

எப்படியாவது மீட்டுவிடுவதென்ற தோழர்களின் போராட்டமும்; அரசுக்கு சவாலான இந்தத் தூக்கை நிறைவேற்றி விட்டுதான் மறுவேலை என்று துடிக்கும் இளம் சிறையதிகாரியின் (ஷாம்) அதிகாரத்துவ நடவடிக்கையும்; தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது சம்பளம் வாங்கும் சாதாரணப் பணியல்ல, அது ஒரு கொலை செயல், அதில் என்னைப்போன்ற அப்பாவிகளை ஈடுபடுத்தாதீர் என தூக்கிலிடுகிறவரின் (விஜய் சேதுபதி) துடிப்பும்தான் படம்.

திரைப்படம் அரசின் ஒடுக்குமுறைக்கருவிகளில் முக்கியமான சிறைத்துறையையும், நேர்மையான அதிகாரிகள்தான் அரசின் கொடூரங்களை நிறைவேற்றுகிறவர்கள் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. சிறைத்துறை அதிகாரியாக வரும் ஷாம் கண்டிப்போடு நிறைய சீர்திருத்தங்கள் செய்கிறார். அதே கண்டிப்போடு அவர்தான் நாயகனின் தூக்கு தண்டனையையும் நிறைவேற்றுகிறார். கண்டிப்பு என்பதுதான் கிரண்பேடிகள், தேவாரங்கள் என்பதையும்; கண்டிப்புகளும், சீர்திருத்தங்களும் மனிதாபிமானமோ அல்லது புரட்சிகரமோ ஆகாது என்பதையும் படம் இயல்பாக சொல்கிறது. அதிகார வர்க்கத்தின் இயல்பான முகத்தை ஷாமின் பாத்திரம் சரியாகச் செய்கிறது.

சட்டத்தின் பேரால் அரசு செய்யும் கொலைக்கு ஒருவகையில் கூலிப்படை அடியாளாக இருந்தேயாக வேண்டியதன் வலியை விஜய் சேதுபதி அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

இளம்கம்யூனிஸ்ட்டாக கதாநாயகி கார்த்திகாவை உருவகப்படுத்தியுள்ளதை கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பெண் என்றால் உடை (ஆக அதிகபட்சம் சுடிதார்), வாகனம் (ஸ்கூட்டி), கடினமான இடங்களில் ஆண்கள் தாங்க நடப்பது என்றில்லாமல் பைக், ஜீன்ஸ், எல்லா இடங்களிலும் ஆண்களுக்கு முன்னால் எனப் படைத்திருப்பது பெருமை.

கதாநாயகன் ஆர்யா அலட்டாமல் நடித்து நம்மைக் காப்பாற்றியுள்ளார். தப்பித்துவிடுவோம் என்கிற நம்பிக்கையையும், இனி வழியில்லை என்கிறபோது எழுகிற ஒருவித இயலாமையையும், புரட்சியாளன் மண்டியிட மாட்டான் என்கிற மனோதிடத்தையும் அற்புதமாக வாழ்ந்துள்ளார்.

sp jananathan 1அறிவித்த நாளுக்கு முன்பே கதாநாயகனை தூக்கிலிடுகிற காட்சி பகத்சிங்கை நினைவுபடுத்துவதோடு காந்தியின் துரோகத்தையும் சேர்த்தே நினைவூட்டுகிறது.

படம் முழு அரசியல் படம்தான். என்றாலும் ஓர் அதிகார வர்க்கத்தின் சரியான பிரதிநிதி (சிறையாதிகாரி), ஒரு மக்களின் தலைவன், இருவருமே இணைந்திருக்கிற சிறைச்சாலை இவையெல்லாம் அழகான, ஆழமான அரசியலைப் பேசுவதற்கான வாய்ப்புகள். எல்லாம் நழுவ விடப்பட்டுள்ளன. நடிகர்களின் தன்மைக்கேற்ப வசனங்களை உருவாக்குகிற போக்கு படத்தின் வீரியத்தைக் குறைத்திருக்கிறது.

இரண்டாம் பகுதியில் இருக்கும் விறுவிறுப்பு முதற்பாதியில் இல்லை. ஒருவிதமான நாடகப்பாணியில் தொய்வாக இழுக்கிறது. அதை இன்னும் கூடுதலாக்குவதுபோல் இசை இம்சிக்கிறது. அரசியல் படங்களில் செல்வாக்கு செலுத்த வேண்டிய பாடல்கள் மிஸ்ஸிங்.

சமூகப் பொறுப்போடு அரசியலை கலையாக்கித் தருகிற இயக்குனர் தனது சினிமாவிற்காக திரைத்துறை தாண்டியும் உழைத்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அரசியல், அமைப்பு, நடைமுறை ஆகியவை குறித்து அனுபவமுள்ள தோழர்களோடு, படைப்பாளிகளோடு சேர்ந்து இயங்கியிருக்க வேண்டும். அவ்வாறில்லாத முயற்சிதான் இந்தப் படத்தின் சறுக்கல்களுக்கு காரணமென நினைக்க வைக்கிறது.

இறுதியாக-

படத்தின் நோக்கம் மரண தண்டனை எதிர்ப்பு அரசியல் என இயக்குனர் பேசுகிறார். இது கம்யூனிஸ்டுகளின் பார்வையல்ல.

சுரண்டுகிற வர்க்கங்களின் அரசுகள் மரண தண்டனையை நிறைவேற்றுவதை கண்டிப்பாக கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறார்கள். சுரண்டல் சமூக அமைப்பே குற்ற நடவடிக்கைகளுக்கு காரணமாக இருப்பதால் அதன் அரசுக்கு மரண தண்டனை மட்டுமல்ல, எந்தவித தண்டனையையும் நிறைவேற்ற உரிமையில்லை என்பதே கம்யூனிஸ்டுகளின் வாதம்.

ஆனால் தண்டனைகள் மூலமாக நீதியை நிலைநாட்டுவது என்பது அரசுகளின் தனிப்பட்ட முயற்சியல்ல. சுரண்டல் கொடுமைகளுக்கெதிரான மக்களின் போராட்டங்களால்தான் உரிமைக்கான சில சட்டங்களும், உரிமை மீறலுக்கான தண்டனைகளும் கிடைத்துள்ளன. அது மக்களின் விருப்பமுமாகும். விஷயம் என்னவென்றால், அரசு யாரிடம் உள்ளதோ அவர்கள்தான் சட்டத்தையும், தண்டனையையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சுரண்டல் அரசும் அதிகார வர்க்கமும் தண்டனைகள் மூலமாக மக்களின் தலைவர்களைப் பழிவாங்க நினைக்கிறது. மக்கள் சமூக விரோதிகளை ஒழிப்பதற்கு அது பயன்பட வேண்டுமென நினைக்கிறார்கள். இவ்வகையில்தான் மக்கள் விரோதிகளுக்கும், மனிதத்தன்மையற்ற குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்கு என மக்களே முழங்குகிறார்கள்.

உழைக்கும் மக்களின் அரசான கம்யூனிஸ்டுகளின் ஆட்சியிலும் மரண தண்டனை இருக்கும். எதிர்புரட்சி நடவடிக்கைகளும், பதுக்கல்களும், கலப்படங்களும், காட்டிக் கொடுத்தல்களும் முற்றுப்பெறுகிற வரைக்கும்; மக்கள் பேரழிவிலிருந்து விடுபடுகிற வரைக்கும் கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில்கூட மரண தண்டனை இருக்கும்.

என்னதான் சொல்லுங்கள்... அடையாள அரசியலான இனவாதமும், சாதியவாதமும் தேசியம் என்கிற போர்வையில் செல்வாக்கு செலுத்துகிற இன்றைய நிலையில் “வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாத எந்த தேசிய விடுதலையும் வெற்றி பெறாது” என்று பொட்டில் அறைந்தாற்போல் படம் சொல்கிற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

மணிரத்தினங்களும், கமல்ஹாசன்களும், முருகதாசுகளும் கொட்டுகிற எதிர் அரசியல் குப்பைகளை முற்போக்கு படங்களென ஏமாறுகிற தமிழ் திரைச் சூழலில், எதிர் அரசியலாக அல்லாமல் மக்கள் அரசியலை படைப்புகளாக தொடர்ச்சியாகக் கொண்டுவரும் இயக்குநரைக் கொண்டாடாமல் வேறு என்ன செய்வீர்களாம்?

இதுதான் மக்களின் அரசியல், இதைத்தான் படமாக்குவேன் என நின்று வெற்றி பெற்று வரும் நமது இயக்குனரை கைகுலுக்கிப் பாராட்டியேயாக வேண்டும். அதை கண்டிப்பாக படம் பார்த்துதான் நிறைவேற்ற வேண்டும்.

Pin It