நேற்று இரவு நன்றாக தூங்கினேன் ஒரு சிறுவனைப் போல..... என் தாத்தாவின் தாலாட்டும் நினைவுகளில்.... கனவுகள் கூட வண்ணங்களில் தோன்றின.......ஞாபகக் கிளறல்களின் நூல் பிடித்த பின்னோக்கிய தேடலில் நேற்று பார்த்த "தலைமுறைகள்" படம் தன் திரை வடிவத்தை இன்னும் இன்னும் எனக்கு தெரிந்த வானம் அளவு, தன்னை விரித்துக் கொண்டே சென்றது....

thalaimuraigalதூர தேசம் செல்லும் பறவையின் கூர் நோக்கில் உள் வாங்கிய பொழுதை கொஞ்சம் நிறுத்தி, பசி கொண்ட பசு மாட்டின் அசை போடுதலாய் மனம் அசை போட அதன் போக்கில் நிஜம் விசை தேட... துள்ளும் ஆழ் மனதின் ஓட்டம் ஒரு நிலைக்குள் நின்று தயாராகி சாகும் நாட்களுக்கு முந்தையது போல நான் ஒரு வாழ்க்கை கண்டேன்.... ஆம்... தலைமுறைகள்.. ஒரு வாழ்க்கைதான்... ஒரு இடைவெளிதான்.. ஒரு கலாசாரம்தான்... ஒரு அன்பின் வெளிப்பாட்டு தேசம்தான்... சில மனிதர்களின் சித்திர தேடலின் விடுபட்ட வண்ணங்களின் தெரித்தல்கள்தான்...

காதல்.... ஒரு போதும் சாதி மதம் பார்ப்பதில்லை... பார்த்து பார்த்து வந்தால் அது கல்யாணம்.... காதல் அல்ல.. எப்படித்தான் காலையில் தாலியை கட்டி விட்டு அன்று இரவே, குடும்பமே வெளியில் காவல் காக்க அறைக்குள் கலவி கொள்வதோ....(!) ?.....(இன்று வரை புரியாத புதிர் )

அந்த வாலிபன். ஒரு கிறிஸ்துவ பெண்ணை காதலித்து சம்மதம் கேட்டு கிடைக்காத சூழலில் திருமணமும் செய்து கொண்டு வீட்டுக்கு வரும் போது... அவனின் தந்தை வழக்கம் போல் மறுத்து விரட்டி விடுகிறார்....இந்த இடத்தில் காட்சியை நிறுத்தி விட்டு மாடுகளிடம் கேட்பது போல கேட்கத் தோன்றுகிறது.... கல்யாணம் பண்ணி கொள்ள ஒரு பெண் தானே தேவை...(இப்போதெல்லாம் அதையும் தாண்டி விட்டது உலகமயமாக்கல்) இதில் கிறிஸ்துவம் என்ன.. இந்து என்ன....? (இதற்கு முன் எழுதிய கயல் திரைப் பட பார்வையில் கூட விமர்சித்த ஒரு வாசகர் " பிரபு சாலமன் கிறிஸ்டியன் அதுக்காக படம் சூப்பர்னு எல்லாம் சொல்லாதீங்க.. சுமார்தான்னு எழுதி இருந்தார்...... அன்று நண்பர்களிடம் சொல்லி சொல்லி சிரித்தேன்... திரும்பவும் என்கிருந்துடா ஆரம்பிக்கறது...!?)

ஓடுகிறது வருடம்...

12 வருடங்களுக்கு பின்.. தந்தைக்கு உடல் நிலை சரி இல்லை.. பார்க்க வருகிறான் மகன்...

அதே கோபத்தில் தந்தை...

ஆனால் அவனின் அமைதியான அனுசரணையான அணுகுமுறை அவரை அவரின் வயதின்பாலும்.. மனதை மாற்றுகிறது.... மனம் அப்படித்தான்... மாறிக் கொண்டே இருக்கும்... சிலருக்கு நிமிடங்களில்.. சிலருக்கு நாட்களில்.. சிலருக்கு வருடங்களில்.. மாறாதவர்கள் பைத்தியமாகி விடுகிறார்கள்.. மரணம் கூட மாற்றாத மனம் அவர்களுடையது........அது ஆபத்தானதும் கூட...

ஆண் குழந்தைக்காக வரிசையாக பெண் குழந்தைகள் பெற்றுக் கொண்டே சலித்து சண்டையிடும்........ பெரும்பாலைய மக்கள் மத்தியில் அவனின் தங்கை கதாபாத்திரம்.. ஒரு பெண் குழந்தைக்காக வேண்டி தொடர்ந்து ஆண் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பாத்திர படைப்புகளில்... பாலு மகேந்திரா... நிமிந்து நிற்கிறார்...நடிப்பிலும் சரி.... கோணத்திலும் சரி..... தொகுப்பினிலும் சரி..... இயக்கத்திலும் சரி... மாற்று பார்வை கொண்ட மகா கலைஞன்..... கற்றுக் கொண்டவர்கள் பாக்கியவான்கள்....

இப்போது.. மருமகளும் பேரனும் வர.. வீடு வேறு மாதிரி சூழலுக்குள் செல்கிறது.... மெல்ல கதை ஓட்டம்... பேரனுக்கும் தாத்தாவுக்கும்.. இடையே பயணப் படுகையில்... ஒரு கிராமம் வெறும் காக்கா குருவி... பறவை பட்சிகளின் சத்தத்தைக் கொண்டே காண்பிக்கப் படுகிறது....இசை தேவன்.. நட்பின் பலம்........ ஆனால் அதே சமயம் கொஞ்சம் அதிகமாகவும் போய் விட்டது.. என்பது என் பார்வை.. பார்வைகள் வித்தியாசப்படும் தானே..?..... கல்யாணத்தின் போது ஆங்கிலம் மட்டுமே தெரியும் மருமகள்.. இப்போது தமிழ் கற்று விடுகிறார்... ஆனால்.... அப்பாவும் அம்மாவும்.. ஆங்கிலத்திலேயே பேசுவதால்.. பள்ளியும் ஆங்கில வழி பள்ளி என்பதால்....பேரனுக்கு தமிழ் சுத்தமாக தெரிவதில்லை....("என் குழந்தைங்க ரெண்டு பேருக்குமே தமிழ் வராது... எப்பவும் இங்கிலீஷ்தான்......" என்று பெருமையாக சொல்லும் சில கிறுக்கச்சி அம்மாக்களை நினைக்கத் தூண்டும் காட்சி இது...) அது லெப்டில் அடித்து ரைட்டில் ரத்தம் வர வைக்கும் செய்தி.. பழையது என்றாலும் நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என் தமிழனுக்கு...... போன முறை யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதையே மறந்து விடும் புத்திசாலிகள் தான் நம்மில் பலர்....... மொத்தத்தில் வெகுளிகள்.. வெகுளிகள் வீதிக்கு ஆவார்கள்.. வேலைக்கு ஆவார்களா...?

எல்லா மருத்துவர்களும் நகரத்திலேயே இருந்து விட்டால் கிராமத்தை யார்தான் பார்ப்பது...?.... மருமகள் முன்னே வருகிறார்.... பெண் முன்னெடுக்கும் காரியங்கள் வெற்றி பெரும் என்பதை இன்னும் ஒரு முறை நினைவூட்டவே இந்தக் காட்சி என்று நினைக்கின்றேன்.. ஒரு வீட்டில் ஒரு பெண் படித்தால் அந்த வீடே படித்தது போல என்பது போல...

பெயர்க்கு பின்னால், போட்டுக் கொள்ளும் வீணா போன சாதியின் பெயரை, கூடாது என்று புரிந்து கொள்ள, இத்தனை வயது ஆகி இருக்கிறது என்று தாத்தா, தன் நண்பனிடம் பேசும் போது ஒரு சாதாரண வசனம் தானே என்று கடந்து விட முடிவதில்லை.. அது தீரா ரயிலின் ஓசை போல.. மிக மிக தெளிவான இரைச்சலை தருவித்துக் கொண்டேயிருக்கிறது, அடுத்த கட்சிக்கு வந்த பின்னும்........

"பட்டம் போடறதே இயல்பா இல்ல, இந்த காலத்துல... இதுல சாதி வேற.. போங்கடா நொன்னைங்களா..." என்று இயக்குனர் சசிக்குமார் கூறிக் கொண்டே இப்படத்தை தயாரித்தது போல இருக்கிறது.... அதற்கு கண்டிப்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் ஒரு தமிழன் என்ற உணர்வோடு உரித்தாக்கிக் கொள்வதில பெருமை அடைகிறேன்...

ரிவர் என்றால் என்ன...(!)..? என்று பேரன் கேட்கையில் ரிவர்னா ஆறு என்று அர்த்தம் சொல்லிய அம்மாவிடம் அவன் மீண்டும் "ஆறு என்றால் என்ன?(!!!!) என்று கேட்கும் போது... தனக்கு தானே "ஆறுனா?" என்று கேட்டுக் கொண்டு, தெரியல.. தெரியாதது ஒன்னும் பிரச்சினை இல்லை என்பது போல தலையை ஆட்டும் மருமகள்... ஒரு பேரதிர்ச்சி சாயல்....தன்னிடம் கேட்ட பேரனை விக்கித்து பார்க்கும் பார்வையில், தாத்தா... காணாமல் போன மணல்களின் படிமங்களை சுமந்து உதிர்க்கிறார்... அந்தப் பார்வை பேரனைப் பார்ப்பது மட்டும் அல்ல... இப்போது எனக்கு கூட கேட்கத் தோன்றுகிறது....... ஆறு என்றால் என்ன... எங்கே எம் நொய்யல்......................?

பேரனுக்கு தமிழ் கத்துக் கொடுத்தல்... அப்படியே அவனிடம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுதல்... மாறி மாறி. காட்டுக்குள் நடை.. ஓட்டம்... விளையாட்டு மற்றும் பகிர்தலில் தாத்தா பேரனாகவும்.... பேரன் தாத்தாவாகவும்... இரு தலைமுறையின் நெருங்குதலை உணர முடிகிறது...... தாத்தாக்களை கூட இப்படித்தான் இருப்பார்கள் என்று எதிர்காலத்தில்(?) காட்டிக் கொடுக்கும் சூழலை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லிய காட்சிகளில்... கொஞ்சம் அல்ல.. நிறையவே யோசிக்கவேண்டியுள்ளது இன்றைய சிறுவர்கள் சிறுமியர்கள் பற்றி... அதே சமயம் தாத்தாக்கள் பாட்டிகள் பற்றியும்...,..... அதே சமயம் இந்தியாவின் முதுகெலும்பு கிராமத்தைப் பற்றியும்.........முக்கியமாக இன்றிய அப்பா அம்மாக்கள் பற்றியும்................கொஞ்சம் சலிப்பூட்டும் இயல்புத்தன்மை மீறிய சில காட்சிகள் இருந்த போதிலும்.. தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே நடக்கும்.. சம்பாசனைகள்.. பார்வைகள்.. உடல் மொழிகளில்... ஒரு உன்னத உறவு அழுது கொண்டே சிரிக்கிறது...

தமிழ் தெரியாது என்று தாத்தாவிடம் ஆங்கிலத்தில் பேரன் சொல்லும் காட்சியில் பேரனை கொஞ்சம் உற்றுப் பார்த்து விட்டு சட்டென அழும் தாத்தா... "அவன் என் பேரன்மா....." என்று கூறுகையில் பண்பாட்டு சங்கிலியின் முடிச்சின் அவிழும் தன்மையை படபடப்போடு, பத பதைப்போடு காட்டியிருக்கிறார் இயக்குனர்......... இறுதியில் மழையினூடே பேரனும் தாத்தாவும்.. ஆடி மகிழும் காட்சி....(பதேர் பஞ்சலி துர்காவை நினைவு படுத்தினாலும்...) அது இறுதிக் காட்சி என்ற திரையை விலக்கிக் கொண்டே சென்று ஒரு வாழ்வை, ஒரு பயணத்தை முடிப்பதற்கு அல்லது தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக ஒரு கணம் நின்று சுழலுகிறது.....

பெருசா ஒண்ணுமில்ல.... இங்கே பெருசா ஒண்ணுமே இல்ல... தமிழ் படி.. தாத்தாவையும் படி... அவ்ளோ தான்... ரெண்டுமே உனக்கான விதைகள்.... விதைகள் இன்றி மரங்கள் ஏது.. கிளைகள்தான் ஏது.. நிழல்கள்தான் ஏது.. கேள்வியினூடே...... அல்லது பலத்த மௌனத்தோடு முடிகிறது படம்... வாழ்வின் தொடர்ச்சியாய்.....................

- கவிஜி

Pin It