எறும்பு தின்பண்டங்களை மட்டுமா அரிக்கும்? மனதை அரித்து மன நோயாளியாக்குவதற்கு கூட எறும்பைக் குறியீடாகக் கொள்ளலாம்.

MLM _multi level marketing - சாதாரண மக்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை சமீப ராஜதந்திரம் படம் வரை தமிழில் பார்க்கிறோம். சமீபத்திய படங்களில் MLM பற்றிய பேச்சு எப்படியோ வந்து விடுகிறது. பங்களாதேஷில் கூடத்தான். "எறும்பின் கதை" படத்திலும்.

ant story

பங்களா தேஷ் பற்றி நாம் இன்னும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். அங்கிருந்த முஸ்லீம் மதவாதிகளின் இந்து மக்கள் மீதான - பாபர் மசூதி இடிப்பின் போது நிகழ்த்தப்பட்ட - வன்முறைகளைப் பற்றி "லஜ்ஜா" நாவலில் எழுதியதற்காக தஸ்லிமா நஸ்ரின் துரத்தப்பட்டு இந்தியாவில் வாழ்கிறார். மூன்று வருடங்களுக்கு முன் நான் டாக்கா சென்றிருந்தபோது ஏதாவது வங்காள தேசப்படத்தைப் பார்க்க விரும்பினேன். திருப்பூரை விட பனியன் உற்பத்தி அதிகம். கூலி குறைவு. கொத்தடிமைத் தனமான பனியன் தொழிலாளர் வாழ்க்கையைக் கண்டேன். திரைப்படம் பார்க்கும் ஆசை இருந்து கொண்டே இருந்தது.

உள்ளூர் நண்பர்கள் "பார்க்க வேண்டாம். இந்தியாவின் இந்திப் படங்களின் மோசமான பதிப்புகள் எங்களூர் படங்கள்" என்றனர். இதை மறுக்கும் விதமாக சில அபூர்வமான படங்களும் வெளிவருகின்றன. சமீபத்தில் வந்த பங்களாதேஷ் படம் “எறும்பின் கதை"

டாக்காவை அதன் அழுக்குத்தனத்தோடு சரியாகக் காட்டியிருக்கும் படம். நகரத்தின் புனித வாழ்க்கையும் நுகர்வு சார்ந்து பழகும் மக்களின் இயல்பும், மித்து என்ற வேலையில்லாத இளைஞனை ரொம்பவும் பாதிக்கிறது. MLMல் சேருகிறான். ஓட்டை கைப்பேசி வைத்திருக்கிறான். நிர்வாகம் நல்லதாக வாங்கச் சொல்ல புதியது வாங்கச் செல்கிறான். பழையதை விற்கும் ஒருவனிடமிருந்து பாதி விலைக்குப் பெறும் அவனுக்கு அது ஒரு நடிகையின் கைப்பேசி என்பதும் அது தொலைந்து போனதும் பின்னர் தெரிகிறது. அவள் கொண்டு வந்து கொடுத்து பணம் பெற்றுக் கொள் என்கிறாள். அவள் தரும் அன்பளிப்பை மறுத்து MLMல் சேரச் சொல்கிறான். அவளும் சேர்ந்து புகைப்படம் எடுத்து விளம்பரம் தர MLMற்கு வலு சேருகிறது. அவளின் கைப்பேசியில் இருந்த வீடியோவை பதிவு செய்து வைத்திருப்பதாயும் தன்னுடன் நட்பைத் தொடர்ந்தால் அதை வெளியிட மாட்டேன் என்கிறான். அவளும் ஒப்புக் கொள்கிறாள். திரைப்படத்தில் நடிப்பது போல் பத்து நிமிடம் கணவன் மனைவியாக நடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை அவள் ஏற்றாலும் பின் எரிச்சலுற்று துரத்தி விடுகிறாள்.

அவளின் உதவியாளர் மூலம் வீடியோ பதிவானதைப் பெற முயற்சிக்கிறாள். வீட்டிற்குச் சென்று மிரட்டுகிறாள். வீடு களேபரமாகிறது, MLMமில்லும் சோதனை. கம்பனி மூடப்படுகிறது. முதலீட்டாளர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். வீட்டிற்கு வந்து தொல்லை தருகிறார்கள். நடிகையின் வீடியோ தொந்தரவு வேறு. ஓடி ஒளிகிறான். நண்பனின் துணிக்கடையில் இரவு நேரங்களில் பெண் துணி பொம்மையுடன் படுத்துக் கொள்கிறான். தொந்தரவுகள் அவனை அலைக்கழிகின்றன. மன நிலை பிசகு ஏற்படுகிறது. "அம்மா நான் பழையபடி ஆகணும். பள்ளிக்குப் போகணும்" என்று அரைக்கால் சட்டை, பை எடுத்து கிளம்புகிறான்.

திருமணமாகாத தங்கை “ அண்ணா, நீ தப்பிக்க நடிக்கிறாய்தானே. ஆமாம் என்று சொல்" என்று கேட்டு கதறுகிறாள். எறும்பு உடம்பில் ஊறுவது போல் அவனை பிரச்சினைகள் சூழ்ந்து அரித்துக் கொண்டிருக்கின்றன. பிரச்சினைகளால் மன நோயின் கூறுகளை அவனின் நடவடிக்கைகள் காட்டிக் கொண்டே இருக்கின்றன. ஒரு இளைஞனை தடுமாற வைக்கிற எல்லாம் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்திய சூழலிலும் இதை வெகுவாகப் பொருத்திப் பார்க்கலாம்,

இதில் அழுக்கான டாக்கா, வறுமை சார்ந்த வாழ்க்கைகள், தடுமாறும் அரசியல், சமூகப் பாதுகாப்பிலாத பங்களாதேஷ் மக்களின் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை சரியாகப் புரிந்து கொள்ளலாம். இதில் வரும் அப்பா பாத்திரம் நோயாளியான நிலையில் எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். டாக்காவை அப்படித்தான் அரசியல்வாதிகளும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்களோ என்று இப்படம் நினைக்கச் செய்தது.

- சுப்ரபாரதிமணியன்

Pin It