2010ல் வெளியான ஆங்கிலப் படம் ‘தி விசில் ப்ளோவர்’. இயக்கியவர் லாரிசா கொண்ட்ராக்கி என்ற இளம் இயக்குனர். இது கேத்ரின் போல்கோவாக் என்பவரின் உண்மைக்கதை.

  the whistleblowerயூகோஸ்லாவியா உடைந்ததும் அதிலிருந்து பிரிந்த போஸ்னியா ஹெர்ஸகோவினா, செர்பியா, குரோஷியா போன்ற நாடுகள் தங்களுக்குள்ளான போர்களில் சின்னாபின்னமடைந்ததும் பலருக்கு நினைவிருக்கும். போஸ்னியா ஹெர்ஸ்கோவினா குடியரசில் செர்பியர்களும், குரோஷியர்களும், தங்கள் பகுதிகளைத் தனி நாடாக்க முயன்றனர். போஸ்னிய முஸ்லீம்களுக்கும் அங்கு வாழ்ந்த செர்பியர்களுக்கும் இடையே கடும் உள்நாட்டுப் போர் மூன்று ஆண்டுக்கள் 92-95 வரை நடந்தது. பால்கன் பிரதேசத்தில் பெரிய ராணுவத்தை வைத்திருந்த யூகோஸ்லாவியாவின் வாரிசான் செர்பியாவைப் பலவீனபப்டுத்தவும் ரஷ்ய ஆதரவு பெற்ற போச்னிய செர்பியக் குடியரசுப் செர்பிய படைக்குழுக்களை வீழ்த்தவும் நேட்டோ செர்பியா மீது பேரழிவு ஏற்படுத்திய கடும் விமானத்தாக்குதல்கள் நடத்தியது. இந்தத் தேவைக்காக செர்பியர்களை எதிர்த்துப் போரிட்ட பாஸ்னிய இஸ்லாமிய வீரர்களை ஆதரித்தது. போஸ்னிய முஸ்லிம்களையும் பாச்னிய குரோஷியர்களையும் வாஷிங்டன் ஒபந்தம் மூலம் இணைத்தது. போர் முடிந்த பிறகு போஸ்னியாவில் அமைதி காக்கும் பணியை நேட்டோ ஏற்றுக் கொண்டது. நேட்டோ பாஸ்னியாவில் காவல்துறை வேலைகளைச் செய்யும் பணியை அமெரிக்காவைச் சேர்ந்த டைன் கார்ப் என்ற தனியார் ராணுவ நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் விட்டது. தங்கள் மக்களைக் காக்கும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்ப்பது பற்றி பாஸ்னியா மக்களிடமோ, பிரதிநிதிகளிடமோ எந்த கலந்துரையாடலும் செய்யப்படவில்லை.

 கேத்தரின் போல்கோவாக் என்ற அமெரிக்கப் பெண்மணி டைன்கார்ப் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து பாஸ்னியா சென்றார். இவர் ஏற்கனவே அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் காவல்துறை அதிகாரியாக இருந்தவர். அமைதி ஒப்பந்தத்தை யாரும் மீறாமல் பார்த்துக் கொள்வதும், காவல் துறை செய்யும் வேலைகளை செய்வதும் பாஸ்னியா காவல் துறையினருக்குப் பயிற்சியளிப்பதும் டைன்கார்ப் செய்யவேண்டிய வேலைகள். கேத்தரின் பாஸ்னியாவில் ஒரு பாலியல் விடுதியில் நாட்டின் பல பாகங்களிலிருந்து கடத்திவரப்பட்ட பெண்களும், சிறுமிகளும் இரும்புக் கூண்டுகளில் அடைத்து வைத்திருப்பதைக் கண்டார். தொடர்ந்து விசாரிக்க இது போன்ற பல விடுதிகள் அங்கேயிருப்பதைக் கண்டுபிடித்தார். அவற்றில் உக்ரேன் போன்ற கிழக்கு ஐரோப்பிய முன்னாள் சோஷலிச நாடுகளிலிருந்து பெண்களும் , சிறுமிகளும் கடத்திவரப்பட்டு அடித்து சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடும்படி வற்புறுத்தப்பட்டனர். மேலும் விசாரித்த போல்கோவாக் இன்னும் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையை கண்டுபிடித்தார். இந்த விடுதிகளை நடத்தி வந்தது டைன்கார்ப்பைச் சேர்ந்தவர்கள்தான்.

 நேட்டோ படையினர் ஐநா அதிகாரிகளின் கண்முன்னே இந்த கொடுமைகள் நடந்து வந்தன. உக்ரேனிலிருந்து பெண்களைக் கடத்தி வருவது ஒரு தொழிலாகவே மாறிவிட்டிருந்தது. எப்படியோ மீட்கப் பட்டு தப்பிச் சென்ற பெண்கள் கூட திரும்பவும் பிடிக்கப்பட்டு பாஸ்னியாவுக்கு கொண்டுவரப்பட்டனர். இந்த விடுதிகளுக்கு அமைதிகாக்கும் படையினரே பெரும் அளவுக்கு வாடிக்கையாளராக இருந்தனர்.

 போல்கோவாக் விடுதிகளின் முகவரி அதை நடத்துபவர்களின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களோடு இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். டைன்கார்ப் நிறுவனம் அவரை வேலைநீக்கம் செய்தது. அமெரிக்கா திரும்பிய போல்கோவாக் தன்னை வேலைநீக்கம் செய்த டைன்கார்ப்பின் மீது வழக்குத் தொடர முயன்றார். டைன்கார்ப் தலையிலிருந்து கால் வரை அமெரிக்க நிறுவனம் என்றாலும் சட்டப்படி அதன் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடரமுடியாது. இங்கிலாந்தில் தான் தொடரமுடியும் என்று நீதிமன்றம் கூறிவிட்டது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் பலரின் உதவியோடு போல்கோவாக் லண்டன் சென்று வழக்குத் தொடர்ந்தார். அங்கே நீதிமன்றம் அவருக்குக் இழப்பீடு வழங்கியது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட எந்த அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை.

 கேத்தரின் போல்கோவாக்கின் வழக்கு மிகவும் பிரபலமடைந்தது. ’த விசில் ப்ளோவர்’ திரைப்படம் அவரது பாஸ்னியா அனுபங்களை ஒட்டி எடுக்கப்பட்ட்து. மற்ற குப்பை ஹாலிவுட் படங்களையெல்லாம் படு மோசமாக மொழிபெயர்த்து சந்து சந்தாக திரையிடும் பன்னாட்டு திரை விநியோக நிறுவனங்கள் இந்தப் படத்தைக் கண்டுகொள்ளவேயில்லை. இதைத் தவிர கேத்தரின் தனது அனுபவங்களை சுய சரிதையாகவும் எழுதியுள்ளார்.

 இப்படத்தை இயக்கிய லாரிஸ்ஸா கொண்ட்ராகி உக்ரேனிய வம்சாவழியில் வந்த ஒரு கனேடியர். மாணவராக இருக்கும்போதே பாலியல் தொழிலுக்குப் பெண்களைக் கடத்துவதை அடிப்படையாக் கொண்டு ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அப்போதே போல்கோவாக்கின் கதையைக் கேள்விப்பட்டிருந்தார். இதைத் தான் படமாக எடுத்து விடுவது என்று முடிவு செய்தார். ஆம்ஸ்டர்டாம் சென்று கேத்தரின் போல்கோவக்கைச் சந்தித்தார். வெறும் நூறு டாலருக்கு போல்கோவாக் தன் கதையைத் திரைப்படம் எடுக்கும் உரிமையை லாரிஸ்சாவுக்குக் கொடுத்து விட்டார். “இச்சம்பவம் வெளியான போதே பலர் படமெடுப்பதற்காக போல்கோவாக்கை அணுக்கியிருக்கிறார்கள். ஆனால் அவருக்கும் டைன் கார்ப்புக்கும் இடையேயான வழக்கு நடந்து கொண்டிருந்தது. எனவே அவரால் போஸ்னிய சம்பவங்கள் குறித்துப் பேச முடியவில்லை. ஆனால் இரண்டாண்டுகளில் நான் படித்து குடித்து வரும்போது அவரை மற்றவர்கள் மறந்து விட்டார்கள் நல்லவேளையாக” என்று சிரிக்கிறார் லாரிஸ்ஸா. அவரும் அவரது நண்பர் கிர்வான் என்பவரும் இந்த படம் எடுப்பதற்கு ஏற்ற தயாரிப்பாளர்களைத் தேடி ஹாலிவுட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் அலைந்து திரிந்தார்கள்.

 எட்டு ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு லாரிஸ்ஸா தானே பணம் திரட்டி இந்த படத்தைத் தயாரித்தார். படம் சர்வ தேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. லாரிசா சில விஷயங்களை திரையில் காட்டவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். உதாரணமாக கடத்தப்படும் பெண்கள் மூன்று வாரங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வழிக்குக் கொண்டுவரப்படுவார்கள். அப்போது நடக்கும் சித்ரவதைகள் படத்தில் இடம் பெறவில்லை. ஆனாலும் கூட பல காட்சிகளில் அதீத வன்முறை காட்டப்படுகிறது என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்ட்து. லாரிஸ்ஸா படத்தில் காட்டப்படுவது பாஸ்னியாவில் உண்மையாக நடந்ததில் ஒரு சிறு பகுதி தான் என்றார்.

 விசில் ப்ளோவர் பல விருதுகளை வென்றது. ஐ.நா. செயலர் பான் கி மூன் இந்த படத்திப் பார்த்துவிட்டு மேற்கொண்டு இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்பு ஹாலிவுட்டுக்கு நேரடியாகச் சென்று ஐ.நா.வின் பணிகளை நல்ல்படியாக காட்டும்படி வேண்டுகோளும் விடுத்தார். இந்த படத்தை நாம் பார்ப்பதை ஐ.நா. விரும்பவில்லை. இது வரை வந்த படங்களிலேயே ஐ.நா.வை மிக மோசமான ஒளியில் காட்டும் படம் இதுதான் என்று ஃபாரின் பாலிசி.காம் என்ற இணைய தளம் கூறுகிறது. படத்தில் பன்னாட்டு தனியார் ரானுவ நிறுவ்னமான டைன் கார்ப் இண்டர்நேஷனலின் பெயர் சற்றே மாற்றப்பட்டு டெமோக்ரா செக்யூரிட்டி என்று அழைக்கப்படுகிறது. இனி படத்தின் கதை கொஞ்சம்-

 ரேயாவும் லூபாவும் பதினைந்து பதினாறு வயதே ஆன உக்ரேனிய இளம்பெண்கள். இவர்கள் ஒரு உறவினரால் போஸ்னியாவில் பாலியல் விடுதிகளை நடத்தும் ஒரு குழுவிற்கு விற்கப்படுகின்றனர்.

 அங்கிருந்து ரேயா, இர்க்கா என்ற பெண்ணுடன் தப்பிச் செல்கிறாள். அவர்கள் தப்பி வந்தவர்களுக்கான விடுதியில் தங்க வைக்கப் படுகின்றனர். இந்த வழக்கை விசாரிக்கும் கேத்ரின் பால்கோவாக் பாச்னியாவின் விடுதிகளில் ஏராளமான கிழக்கு ஐரோப்பியப் பெண்களைக் கடத்தி வந்து அடைத்து வைத்து பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதைக் கண்டுபிடிக்கிறார். அவர் ரேயாவையும் இர்க்காவையும் தங்களைக் கடத்தியவருக்கு எதிராக சாட்சியம் அளிக்க ஒப்புக் கொள்ளச் செய்கிறார். ஆனால் ஒரு ஆணவமான ஐ.நா. அதிகாரி ரேயாவை பாஸ்னியா செர்பியா எல்லையில் கொண்டுபோய் விடுகிறார். ஊழலில் ஊறிய ஒரு அமைதிகாக்கும் படைவீரன் அவளை மாஃபியாவிடம் காட்டிக் கொடுக்கிறான். ரேயா திரும்பவும் பிடிக்கப்பட்டு கொடூரமாகச் சித்ரவதை செய்யப்படுகிறாள்.

 கேத்ரின் இர்க்காவை காட்டிலிருந்து காப்பாற்றினாலும் அவள் பயந்து வாக்குமூலம் அளிக்க மறுத்துவிடுகிறாள். இதுபற்றித் தொடர்ந்து விசாரிக்கும் கேத்ரின் இந்த கடத்தல்களுக்குப் பின்னணியில் இருக்கும் பணம் கொழிக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கண்டுபிடிக்கிறார்.

 இந்த உண்மைகள் வெளியான பிறகு பல படையினர் வீட்டுக்கு அனுப்பப் பட்டாலும் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அமெரிக்க அரசு தொடர்ந்து டைன்கார்ப்புக்கு ஒப்பந்தங்களை வழங்கி வருகிறது என்ற அப்பட்டமான உண்மையோடு படம் முடிவடைகிறது.

 பல காட்சிகள் பார்க்கமுடியாத அளவிற்கு கொடூரமானவை. குறிப்பாக ரேயா திரும்பப் பிடிக்கப்பட்டு சித்ரவதை செய்ய்ப்படும் காட்சிகள். லாரிசா இளம் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்வையாளர்களின் மனம் பார்க்க அனுமதிக்கும் எல்லைவரை காட்டிவிடுவது என்று முடிவு செய்ததாக கூறுகிறார். ஐ.நா. சம்மந்தப்பட்ட காட்சிகள் டொராண்டோவில் எடுக்கப்பட்டன. பகல் நேரக் காட்சிகள் வெறுமையூட்டும் சாம்பல் நிறத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இது படத்திற்கு ஒரு ஆவணப்படத் தன்மையை அளித்தாலும் போல்கோவாக்காக நடித்த வெய்சி இது முற்றிலும் ஒரு கதையைச் சுற்றி நகரும் திரைப்படம் என்ற எண்ணத்தை அழுத்தமாக நமது மனங்களில் பதிய வைக்கிறார்.

 ராட்டன் டொமாட்டோஸ் படம் கலைத் தன்மையில்லாமல் எல்லாவற்றையும் நேரடியாகக் காட்டுகிறது என்ற விமர்சனம் எழுதியுள்ளது. ஆனால் கிறிஸ்டியன் ஹமேக்கர் என்ற விமர்சகர் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் சுத்தியலால் தாக்கப்பட்டதைப் போல் உணர்கிறார்கள் என்று கூறுகிறார்.

 படத்தின் கலைத்தன்மை, படைப்புத் திறன் எழில் குறித்தெல்லாம் விமர்சகர்கள் சண்டை போட்டுக் கொள்ளட்டும். படம் உண்மையை நேரடியாகச் சொல்கிறது. அயோக்கியர்களை அவர்கள் யாராக இருந்தாலும் ஆயோக்கியன் என்று சொல்கிறது. பல்வேறு ஜிம்னாஸ்டிக் கோணங்களில் இருந்து பார்த்தால் ஒரு குறிப்பிட்ட காட்சியின் கலைத்தன்மை தெரியும், இதை இந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும், இந்தப் பரிமாணத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பம்மாத்துக் காட்டுவதில்லை. மிக உயர்ந்த கலைத்தன்மை என்பது இதுவாகத்தானிருக்கும்.

 எல்லாவற்றுக்கும் மேலாக படம் சம்பவங்களுக்குப் பின்னிருக்கும் அரசியலைப் பற்றிப் பேசுகிறது. அதுவும் உலகமயமாக்கல், தாரளமயமாக்கலின் உச்சகட்டமாக ராணுவம் உள்ளிட்ட பணிகள் தனியார் மயமாக்கப் படும்போது அது எந்த எல்லை வரை செல்கிறது என்பதை வெளிப்படையாகவே சொல்கிறது. நடந்த நடக்கும் கொடுமைகளுக்கு தனிநபர்கள் எப்படிக் காரணமோ அதைவிட பலமடங்கு பின்பற்றப்படும் அரசியல் காரணம் என்று ஆழமாக, கூர்மையாக, சமூக உணர்வுடன் பேசுகிறது.

   --------------------------------------------------------

 எண்பதுகளில் சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறியதும் பனிப் போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனிலிருந்து தோன்றிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி யிருந்தன. போர் அபாயம் குறைந்ததால் தற்காலிகமாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ராணுவ செலவுகளைக் குறைத்தன. முழுப் படைப்பிரிவுகளே கலைக்கப்பட்டன. சோவியத் யூனியனின் ஆல்ஃபா என்ற அதிநவீன பயிற்சி பெற்ற சிறப்பு அதிரடிப் பிரிவு கலைக்கப்பட்டதும் வீரர்கள் அப்படியே ஒரு குழுவாக இருந்து தங்களை ஒரு கம்பெனியாக மாற்றிக்கொண்டனர். தென்னாப்பிரிக்காவின் முப்பத்திரண்டாவது படைப்பிரிவும் இப்படி ஒரு தனியார் ராணுவமாக மாறியது.

 ஆயுதச் சந்தை திறந்து விடப்பட்டது. சோவியத் யூனியனிலும் மற்ற நாடுகளிலும் குவித்து வைத்திருந்த ஆயுதங்கள், மெஷின் கன்கள், டாங்கிகள், போர் விமானங்கள் பணம் உள்ளவர்களுக்கு சர்வ சாதாரணமாகக் கிடைத்தன. எனவே அதிநவீனப் பயிற்சி பெற்ற ஆட்களும், ஆயுதங்களும் சந்தையில் குவிந்து கிடக்க அவற்றைப் பயன்படுத்தவேண்டிய தேவை மட்டுமே மீதியிருந்தது. விரைவில் அந்தத் தேவையும் உருவாகியது.

the whistleblower 600

 போட்டிக்கு சோவியத் யூனியன் இல்லாததால் அனைத்தையும் தனியார் மயமாக்கு என்ற கோஷம் ஒரு மந்திரம் போலவே பிரச்சாரம் செய்யப்பட்டது. கல், மண்ணிலிருந்து காற்று, கடல் வரை அனைத்துமே நுகர்வுக்கு, வளர்ச்சிக்கு என்ற புதிய கொள்கை நடைமுறைக்கு வந்தது. பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் முழுவதும் விரிந்து பரவின. காடுகளை அழித்தன. காடுகளிலிருந்து மக்களை விரட்டின. விளைநிலங்களையும் கிராமங்களையும், கடற்கரைகளையும் ஆக்கிரமித்து இரும்பும் பாஸ்பேட்டும், மாங்கனீஸும், நிலக்கரியும், பெட்ரோலியமும், தோண்டியெடுக்கத் தொடங்கின. இவற்றின் ஈவிரக்கமற்ற சுரண்டலை சகித்துக் கொள்ளமுடியாமல் இந்த நிறுவனங்கள் சென்ற வழியெல்லாம் கெரில்லாப் போராட்டங்களும், கலகங்களும் வெடித்துக் கிளம்பின.

 கூடவே பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டைப் பெற ஆட்சியாளர்களிடையே கடும் போட்டிகளும், போர்களும் தோன்றி நிலைமையை மோசமாக்கின. ஆனால் ராணுவச் செலவைக் குறைத்த அமெரிக்கா அதைத் திரும்பவும் அதிகரிக்கவில்லை. நேரடியாகப் போரிடும் வேலையைத் தவிர ராணுவம் தொடர்பான அனைத்து வேலைகளையும், துறைகளையும் தனியார் மயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அங்கே வலுப்பெற்று வந்தது. கூடவே அமெரிக்க அரசு இன்னொரு நெருக்கடியையும் சந்தித்தது. தாராளமயத்திற்குப் பிறகு வெடித்துக் கிளம்பிய போர்களில் தான் தலையிடாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தது. இல்லாவிட்டால் தான் விரும்பும் ஆட்சிமுறையை ஏற்றுக் கொள்ளாத ஏதாவது அமைப்பு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு இருகிறது. அதே நேரம் தங்கள் வீரர்கள் கண்காணாத ஊர்களில் கொல்லப்படுவதை சாதாரண மக்கள் வெறுக்கும் நிலையும் இருந்து வந்தது. இந்த இரண்டையும் சமாளிக்க அரசு கண்டுபிடித்த வழிதான் தனியார் ராணுவக் கம்பெனிகள்.

ராணுவ வீரர்கள் போர் புரிய வேண்டும். பின்னணி வேலைகள் அனைத்தையும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் பிரதேசங்களுக்கு வந்துள்ள ஆட்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு பார்முலாவை அமெரிக்க ராணுவ அமைச்சராகவும், பின்பு துணை ஜனாதிபதியாகவும் இருந்த டிக் செனி உருவாக்கினார். டிக் செனி தனது பதவிக் காலத்தில் ஹாலிபர்ட்டன் கிளை நிறுவனமான ப்ரௌன் அண்ட் ரூட்டிடம் ராணுவ வீரர்களின் லாண்டரி, உணவு இருப்பிடம் அனைத்தையும் எப்படி தனியார் மயப்படுத்தலாம் என்று ஒரு அறிக்கை தயாரிக்கும்படி உத்திரவிட்டார். தனியார் ரணுவ நிறுவனங்களைப் பயன்படுத்தும் திட்டம் உருவானது. இந்தத் திட்டத்தால் மிகப் பெரிய பலனடைந்தது ஹாலிபர்ட்டன்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை அல்லவா? ஹைதி, சோமாலியா, கொசாவோ, ருவாண்டா ஆகிய நாடுகளில் பணியாற்றி ஹாலிபர்ட்டன் கொள்ளை லாமம் அடைந்தது. இன்னொரு விஷயம். டிக் செனி பதவிகாலம் முடிந்ததும் ஹாலிபர்ட்டனில் சேர்ந்து அதன் தலைவரும் ஆகிவிட்டார்.

 இந்த வழியில் தனியார் ராணுவ நிறுவனங்கள் உலகம் முழுவதும், பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களைக் காக்கும் போர்களிலும், நட்பு அரசுகளைக் காக்கும் போர்களிலும் முக்கியமான இடத்தைக் கைப்பற்றிக் கொண்டன. கலகங்களை அடக்க ராணுவ உதவி தேவைப்பட்ட சிறிய நாடுகளின் அரசுகள் வேறு வழியில்லாமல் தனியார் ராணுவ நிறுவனங்களை நாடத் தொடங்கின. தனியார்மயம் உச்சகட்டத்தை எட்டியது. கல்வி, போக்குவரத்து, மருத்துவம், சிறைத்துறை எல்லாம் தனியார்மயப் படுத்தும்போது ராணுவம் மட்டும் ஏன் தனியார்மயமாகக் கூடாது?.

 எக்ஸிகியூட்டிவ் அவுட்கம்ஸ் என்பது ஒரு தென்னாப்பிரிக்க தனியார் ராணுவ நிறுவனம் ஆகும். ஆப்பிரிக்காவில் பெரும்பாலான வைரச் சுரங்கங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் டீ பீர்ஸ் என்ற வைரக் கம்பெனிக்கு பாதுகாப்பு அளித்துவருகிறாது. டீ பீர்ஸ் இதைப் போன்ற நூறு நிறுவனங்களை விலைக்கு வாங்கக் கூடியது. எனவே எக்ஸிகியூட்டிவ் அவுட்கம்ஸ் பாதுகாப்பு அளிப்பதோடு நிறுத்திக் கொள்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் இந்த தனியார்படை வேறு ஒரு முகத்தைக் காட்டுகிறது. தங்கம், பெட்ரோலியம், வைரம் கிடைக்கும் பகுதிகளின் பாதுகாப்பை காண்ட்ராக்ட் எடுக்கும் எக்ஸிகியூட்டிவ் அவுட்கம்ஸ் தோண்டி எடுக்கப்படும் பொருட்களை தானே வைத்துக் கொள்வதாகவும் வதந்திகள் உலாவுகின்றன. இந்த கம்பெனிக்குச் சொந்தமாக உகாண்டாவின் தங்க சுரங்கங்களும், எத்தியோப்பியாவில் எண்ணெய் கிணறுகளும் உள்ளன.

 இந்த நிலையில் அமெரிக்க தனியார் ராணுவ நிறுவனமான ஆர்ம்ஸ்ஹோல்டிங்ஸ் பல சிறிய பாதுகாப்பு நிறுவனங்களை வாங்கி பிரம்மாண்டமான படையாக மாறியிருக்கிறது. இந்த நிறுவனங்கள் அதிநவீன விமானங்கள், டாங்கிகள் உட்பட எல்லாவிதமான் ஆயுதங்களையும் வைத்திருக்கின்றன. ஈராக், ஆப்கானிஸ்தா போன்ற இடங்களில் ராணுவ வீரர்கள் அளவிற்க்கே இந்தக் கூலிப் படையினரும் செயல்பட்டு வருகின்றனர்.

 தனியார் ராணுவ நிறுவனங்கள் அமெரிக்கா, ஐரோப்பாவில் தங்கள் தலைமையகங்களைக் கொண்டிருந்தாலும் உலகின் எல்லாப் பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் தங்கள் படைகளில் சேர்த்துக் கொண்டன. ஒரே ஒரு நிபந்தனை அவர்கள் ராணுவத்திலிருந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இப்படி வந்து சேர்பவர்கள் ராணுவ வாழ்க்கையில் ஊறிப்போய் சாதாரண மக்களை உருட்டியும், மிரட்டியும் பழகியவர்கள். ஆயுதம் இல்லாமல் தூங்க முடியாது என்ற நிலைக்கு வந்தவர்களே இந்த கூலிப் படைகளில் சேருகின்றனர். அதுவும் சிலியின் பினோசெட் போன்ற பாசிச சர்வாதிகாரிகளின் படைகளில் இருந்து சித்திரவதை செய்வதில் தேர்ந்தவர்களுக்கு தனி மரியாதை அளிக்கப்பட்டது. உலகின் எந்த நாட்டின் மீதும் பற்றொ, பாசமோ இல்லாத இந்த ஆட்களும் இந்த படைகளின் தலைமைகளும் எங்கே சென்றாலும் அங்கே பிரச்சினைகளைக் கொண்டு வரத்தானே செய்வார்கள்.

 தங்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் அவர்கள் நூறு சதவீதம் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியாதுதானே. சியோரா லியோன நாட்டில் அரசு தனது உதவிக்காக இன்டர்நேஷனல் சார்ட்டர்ஸ் என்ற தனியார் ராணுவம் ஒன்றை அழைத்தது. ஆனால் கூலிப்படையினர் அரசை எதிர்த்த உள்ளூர் தளபதியோடு சேர்ந்து கொண்டு அரசைக் கவிழ்த்து விட்டன. அங்கோலா, பாப்புவா நியூகினியா, சியோரா லியோன் நாடுகள் தனியார் ராணுவ நிறுவனங்களை அழைத்துவிட்டு அவற்றுக்கு பணம் கொடுக்க முடியாமல் மக்களுக்கு பயன்பட வேண்டிய இயற்கை வளங்களை கொண்ட சுரங்கங்களை இவற்றுக்கு விற்ற கதைகளும் உண்டு. பொதுவாக பன்னாட்டு தனியார் ராணுவ நிறுவனங்கள் கலகக் குழுக்கள் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தாலொழிய அவற்றிற்கு பணி செய்வதில்லை. ஆனால் இந்த எல்லைகளை மீறிய சில ரவுடி நிறுவனங்களும் உண்டு. ஹோட் ஹஹாரிட் என்பது ஒரு இஸ்ரேலிய தனியார் படை. இது இடது சாரி கெரில்லாக்களை எதிர்த்துப் போராடும் கொலம்பியா நாட்டு வலது சாரி குழுக்களுக்கு பயிற்சி அளித்தது. இந்த குழுக்கள் தங்களை உருவாக்கிய அரசுக்கே எதிராகத் திரும்பி இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களைக் கொன்று ஒரு சிவிலியன் விமானத்திற்கு குண்டும் வைத்தன.

 இந்த வரலாற்றுப் பின்னணி இல்லாமல் ஒரு டைன்கார்ப் நிறுவனமோ, பிளாக்வாட்ட்ர் (இப்போது அகாடமி) நிறுவனமோ உருவாகியிருக்க முடியாது. ஒரு ஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்பும், அமெரிக்கா போன்ற நாடும் இந்தகைய கொடுமைகளைக் கண்டு கொள்வதில்ல என்றால் அவர்கள் அந்த அமைப்புகள் நின்று நிலவுவதையும் மேலும் மேலும் வளர்வதையும் விரும்புகிறார்கள் என்பதுதான் பொருள்.

 கேத்தரின் போல்கோவாக்கின் நூல் வெளிவந்தது. விசில்புளோவர் படம் உலக அளவில் கவனம் பெற்றது. இவ்வளவும் நடந்த பிறகு டைன்கார்ப் திருந்தியிருக்கும் அல்லது அரசு தலையிட்டு அதை ஏதாவது செய்திருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அதற்கு பதிலாக டைன்கார்ப்புக்கு ஈராக்கில் கொழுத்த லாபம் தரும் பணி ஒன்று வழங்கப்பட்டது. ஈராக்கில் ஒரு தனியார் படையினர் ஏராளமான ஈராக்கிய்ர்களைச் சுட்டுக் கொன்று அதை வீடியோப்படமாக்வும் எடுத்து யூ டியூபில் பதிவேற்றவும் செய்தனர். கேத்தரின் போல்கோவாக்தான் அமெரிக்கா திரும்பாமல் ஆம்ஸ்டர்டாமில் குடியேறிவிட்டார். இந்த இடத்தில்தான் விசில்புளோவரின் முக்கியத்துவம் இருக்கிறது.

 பிரச்சினைகளைத் தனிநபர் விவகாரங்களாக குறுக்குவது, நல்லதற்கும் கெட்டதற்கும் இடையிலான போராட்டமாகச் சித்தரிப்பது அல்லது ஆழ்மன விவகாரங்களை நம்மீது திணித்து பிரச்சினையை உளவியல் சிக்கலாக்குவது என்றில்லாமல் பறவைப் போல சம்பவங்களை முழுமையாக objective ஆகப் பார்ப்பதாலேயே, உண்மையை அதன் முழுப்பரிமாணத்துடனும் நேரடியாகப் பேசுவதாலேயே தி விசில் புளோவர் தனித்துவமான படமாக நிற்கிறது.

(இக்கட்டுரை நிழல் ஏப்ரல் 2015 இதழில் வெளியானது)