ஒரு நாட்டில் உள்ள மக்களின் சராசரி வயது அதிகரிப்பது அந்த நாட்டில் வளர்ச்சியைக் காட்டுகின்றது. இந்தியாவில் சராசரி வயது அதிகரித்துள்ளதால் வயதானோர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது என சமீபத்தில் நடைபெற்ற சர்வேயில் தெரியவந்துள்ளது.

ஐ.நா., சபையின் சார்பில் இந்த சர்வே நடத்தப்பட்டது. ஐ.நா. சபைக்காக அதன் பொருளாதார சமூக கமிஷன் இந்த சர்வேயை நடத்தியுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கை மையமாகக் கொண்டு இந்த பொருளாதார சமூக கமிஷன் செயல்பட்டு வருகின்றது.

தெற்கு ஆசிய நாடுகளில் இந்த கமிஷன் நடத்திய சர்வேயில் இலங்கையைத் தவிர இந்தியாவில் மட்டும்தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

நவீன மருத்துவ வசதிகள், தொற்று நோய் தடுப்பு முறைகள், அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பரவலாக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றின் உதவியால் இந்தியாவில் இறப்பு வீதம் குறைகின்றது. இறப்பு வீதக் குறைவே வயதானோர்களின் எண்ணிக்கை அதிரிப்பதற்கான முக்கிய காரணம் என நம்பப்படுகிறது.

வயதானோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மருத்துவ வளர்ச்சியினைக் காட்டுகின்றது என்றாலும் இந்தியாவின் சமூக, பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த சர்வேயில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மனித வளம் இதனால் குறையும் என்றும் பணிபுரிவோர், எண்ணிக்கை குறையும் என்றும் அந்த சர்வே கணக்கிடப்படுகின்றது.

வயதானோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் இந்திய மருத்துவ உலகம் வயதானவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆரோக்கியத்திட்டங்கள் இனி விரிவாக்க வேண்டும். மேலும் இந்தியாவில் எடுக்கப்படும் பொருளாதார, சமூக திட்டங்களில் வயதானோர்கள் காரணிகளாக கொள்ளப்படவேண்டும் என சமூக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)

Pin It