நேற்றிரவு கண்டிப்பாக சொல்ல முடியும்.... அதிகாலை 4 வரை நான் தூங்கவில்லை.. அதன் பிறகு எப்போது தூங்கினேன் என்று தெரியாது. ஆனால் காலை 7 மணிக்கு எழுந்து கொண்டேன்.... உயிருக்குள் ரயில் போகும் ஓசை... கனவுக்குள் பெருங்காற்று... காட்சிகளின் பாரம் தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமலே போய்விட்ட பாதங்கள் என....... இனம் புரியாத துக்கத்துக்குள் என் மனம் சமீபமாக இப்போது தான் பரபரத்துக் கிடக்கிறது என்பதை நான் யோசிக்கத் தொடங்கினேன்..... ஒரு கதை, ஒரு சினிமா... உயிரின் ஆழம் வரை சென்று உணர்வுகளின் தீவிரம் கரைத்து வாழ்வியலோடு தொடர்பு படுத்தி... காதலாய் தீபம் ஆகும் என்பதில் ஐயம் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை....

kayal 399இந்த அற்புதமான மனிதப் பிறப்பை காரணமே இல்லாமல் யாரோ போட்டு விட்ட முகமூடிக்காக ஒரு குறைந்த பட்ச நியாயம் கூட இல்லாமல் கிழித்து சிதைத்து ஒன்றுமே இல்லாமல் ஆக்குவதில் எந்தப் பரிணாமம் மீசை முறுக்குகிறது என்று தெரியவில்லை என்று சாட்டையால் அல்ல, அன்பால் அடித்து புரிய வைத்தது..... அவள் கண்கள்........ அந்த கண்களைத் தேடும்.. ஓர் அற்புத ஒளி..... தெரியாத தெரியாத உன்னத ஆத்மா.... நம்மைச் சுற்றி ஒரு நரிக்கூட்டம் தான் இந்த மனித கூட்டம்... என்றே சொல்லி சொல்லி பழக்கப் படுத்தியதில் ஆரோன் மாதிரி.... சாக்ரடிஸ் மாதிரி.... கயல் மாதிரி.... கயலின் பாட்டி மாதிரி.... தப்பிக்க விடும் போலிஸ் மாதிரி...... ஆட்களை நாம் தொலைத்துக் கொண்டே இருக்கின்றோம்.... தொலைப்பதில் கை தேர்ந்தவர்கள் நாம் என்பது போல....

பணம் சேர்த்து வைக்கவா இந்தப் பிறப்பு....... இந்த ஒரே கேள்வியில் இன்னொரு முறை மானுடம் பிறப்பதை சற்று தள்ளி நின்று, நானே என்னை பார்த்தேன்... பார்க்கிறேன்... பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.....

பணம் தேவை..... பணம் மட்டுமா தேவை.... இந்தப் பணத்தின் பின் சென்ற மனித மனம் நிஜமாக எப்போதாவது வாய்விட்டு சிரிக்கின்றதா....... மனம் விட்டு அழுகின்றதா...? இங்கு ஒவ்வொரு பக்கத்து வீடுமே குட்டி பாகிஸ்தான் தானே.... நம்மில் எத்தனை பேர் நம்மை உணர்ந்திருக்கின்றோம்..... நம் பிறப்பு எதற்கு என்று யோசித்திருக்கின்றோம்.... வாழ்க்கை ஒரு குதிரைப் பந்தையம்.... வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தானே கண்ணைக் கட்டிக் கொண்டு ஓடுகின்றோம்..... .... நம் சொந்த பந்தங்கள் வீட்டுக்கு எவ்வித ஈகோவும் இல்லாமல் போய் வந்திருக்கிறோமா... புது கார் வாங்கினால் தான் சொந்த கிராமத்துக்கே போவேன் என்பது எவ்வித லட்சியம்..... இந்த மரணம் மட்டும் இல்லை என்றால் மனிதனை மனிதன் சுவைக்கத் தொடங்கி இருப்பான்.. அந்தக் காலமும் வரும் என்று விவிலியம் சொல்கிறது.....

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.... கொஞ்சம் கருப்பாக, குண்டாக இருந்தால் அவன் கெட்டவனா.... சிவப்பு என்பது நல்லவர்களின் குறியீடா.... ஒரு கூட்டம் ஆள வேண்டும்.. ஒரு கூட்டம் சமைத்துக் கொண்டே இருக்க வேண்டும்... எந்த மாதிரியான கட்டமைப்பு இந்த வாழ்வு முறை..... இதில் சாதியும் மதமும்.. பாதி வாழ்வை பறித்துக் கொள்கிறது என்றால்.. மீதி வாழ்க்கையை அறியாமையிலும்... மூட நம்பிக்கைகளிலும்.... போட்டுக் கொண்ட வட்டங்களிலும் நாமே குழி பறித்து மூடிக் கொள்கிறோம்....

இத்தனைக் கேள்விகளையும் தாண்டி.......... காதல்... எனக்குள் மிகப் பெரிய பதிலாய்.. தாவணியோடு, மூக்குத்தியோடு, அரும்பு மீசையோடு.. சற்று தள்ளிய வயிறோடு, தொப்பையோடு, மார்புகளோடு,... பாதங்களோடு, நிர்வாணத்தோடு, கடற்கரை சுவடுகளோடு, நட்போடு, நிஜத்தோடு, உண்மையோடு.... என் முன்னே அல்லது எனக்குள் அல்லது நானாகவே... எப்படி எப்படியோ என்னை சூழ்ந்து நின்று... மௌனமாய் விக்கித்து பார்க்கையில் நான் கேள்வியாவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்...!

கணம் ஒன்றில் காதலா...?..........நகைக்கும் நண்பர்களே.... காதலுக்கு கணத்துக்கும் குறைவான பொழுது போதும்.. அப்போது ஒரு தேஜஸ்.. மனமெங்கும் புது ஒளியாய் பிறக்கும்.. அது அந்தக் கணமே இல்லாமல் போனாலும் கூட அது தான் நீங்கள் வாழ்த்த வாழ்வின் அர்த்தம்........ நிஜமான அர்த்தம்.... வருடக் கணக்கில் காதலோடு இருந்து விட்டு கண்டும் காணாமல் குரோதத்தோடு....... போகும் எத்தனையோ காதலைக் காண்கிறோம்... சத்தியமாக அது காதலாய் இருக்க முடியாது.. இங்கு காதலுக்கும் காதல் போல இருக்கும், காதலுக்கு எதிரான ஒரு தோற்றத்துக்கும் உள்ள இடைவெளியை மனிதன் தானாக நிரப்பிக் கொள்கிறான்.. அவனின் தேவைக்கேற்ப... ஆறுதல் ஒரு போதும் காதலாகாது.. அது உயிரைப் பறிக்கும் ஒரு பிடி மூளையின் ஆழம்.... சாத்தனுக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளியைக் கடக்க வேண்டுமே தவிர நிரப்பக் கூடாது......

எதையாவது நிரப்பியே பழக்கப்பட்ட வாழ்வு முறை நமது... மாற்றி யோசித்ததில் இயக்குனர் பிரபு சாலமன்.... பாதங்களில் வீழ்ந்திடத் தோன்றுகிறது.........உயிருக்குள் உயிர் தேடும் உன்னதத் தேடல் அது என்று காதலை கண் முன்னே ஆரோனாகவும் கயலாகவும் வீசி ஏறிந்து இந்த வாழ்வுக்கான ஆதியைப் படித்துக் காட்டி விட்டதாக எனக்குள் உணரப்பட்டது.....

ஒரு பார்வை... சில நொடி... போதும்.. முழுக் காதலை உயிருக்குள் சுமந்திட... ஆரோன் பிரிந்த பிறகு.. அவன் நினைப்பில் கயல் படும் பாடும்.. அழுகையும்... மரபுக்கவிதைக்குள் புதுக்கவிதையின்... சாரல்மழை... எதிர்கால புது வடிவமென அவளின் தேடல் அவனை நோக்கி... அந்த கண்களில் தான்.. எத்தனை மொழி... எத்தனை தனிமை... எத்தனை காதல்.... கிடைத்த அவனது ஒரு துண்டு சட்டைத் துணிக்குள் அவள் சுமந்து கிடப்பது ஒரு ஜென்மக் காதல்... தேக்கி வைத்த காதலில் கரைந்து அழத் துடிக்கும் நொடியில்....

சுனாமி....

அது ஒரு கோர தாண்டவம்... வார்த்தை வராமல் வீரியம் புரியாமல் .. நான் எதோ ஒரு அலைக்குள் அடித்து செல்லப் பட்டேன்... தயவுசெய்து எனக்கு நினைவுகள் திரும்ப வேண்டாம் என்றே வேண்டியது உள் மனம்....... ஆள் மனதின் அலைக்குள் ரீங்காரமாய் கயலின் அழுகை... என்னை மொத்தமாக ஒரு மாபெரும் கடல் நீரையும் குடித்து விட்டு வெளியே வந்து அவளைத் தேடி ஆரோனிடம் சேர்த்து விடு என்று தள்ளியது......... நான் வானற்ற வீதியில் ஒரு துளி பால் வீதியை சமைத்து கிடப்பது போல பிரமையில் என் பறவைகள்... கண்ணீர் விட்டு கதறும் காட்சியில் நான் மரணித்து விட்டேன் என்று நம்பினேன்.....

இரைச்சலின் இசையோடு..... நம்மை சுற்றி இருக்கும் நல்ல மனங்களின் சிரிப்பும் அழுகையும் ஆற்றாமையும்.. தேடலும்.. நம்பிக்கையும்.. மொத்தமாக காதலும் என்னை ஒரு புயலாக்கி, இல்லாமல் செய்து ஆரோனின், கயலின் காதலோடு ஒரு நிழலாக இணைத்துக் கொண்டு இரவோடு பெரும் அழுகை ஒன்றை சுமக்க நான் காதல் வெறுத்து திரும்பி ஓடினேன்..... உள் வாங்கும் பெருங் கடலென....

நட்பின் புனிதம்... காதலின் தனிமை.... கதாபாத்திரத்தில் பாதி வெற்றியை கொண்டு விட்ட இயக்குனர்.. மிச்சத்தை நம் மனங்களில் அன்பாய்ப் பொழிகிறார்... நான் அன்பை மட்டுமே நம்பத் தொடங்கிய இரவு நேற்றைய இரவு..... விட்டுச் சென்ற காதல் இனி ஒரு போதும் தேவை இல்லை.... நிஜக் காதல் விட்டுச் செல்லாது.... நியந்தாவைப் போல... அவள் வருவாள் என்று இன்னும் தீர்க்கமாக நம்பத் தொடங்கினேன்.....

உயிரைப் பிசையும் இவள் கண்களில்.... நானும் ஓர் கனவோ....

- கவிஜி

Pin It