இந்திய விடுதலைப் போராட்டம் 1905 ஆம் ஆண்டுதான் மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக வடிவெடுத்தது. அதற்குக் காரணம் வங்கப் பிரிவினை. அடிமைப்பட்ட இந்தியாவில் ஒரு மொழி பேசும் ஒரு தேசிய இன மக்களின் தாயகத்தை மத வேறுபாட்டிற்காகவோ அல்லது நிர்வாக வசதிக்காகவோ பிரிக்கக் கூடாது என்பதற்கான சான்றுகள்தாம் மேலே நாம் பார்த்தவை.
 
ஏனெனில், உலகத்தில் பெரும்பாலான நாடுகள் தேசிய இனத் தாயக அடிப்படையில்தான் அமைந்துள்ளன. நாடுகளின் எல்லை, படை வலிமையைக் கொண்டு தீர்மானிக்கப்பட்ட முறை மாற்றப்பட்டு, தேசிய இனத் தாயக அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஜனநாயகக் கோட்பாடு ஐரோப்பாவில் 18-19ஆம் நூற்றாண்டுகளில் செயல்படுத்தப்பட்டது. ‘தேச அரசு உருவாக்கம்’ (Nation State Formation) என்று இக்கோட்பாடு அழைக்கப்பட்டது.
 
ஓட்டோமான் பேரரசு, ஆஸ்திரியப் பேரரசு ஆகியவற்றில் ஒடுங்கிக் கிடந்த ஐரோப்பிய தேசங்கள் தனித்தனித் தேசிய அரசுகளாக உருவாயின. பிரிந்து கிடந்த ஜெர்மானியச் சிற்றரசுகள் ஒரு தேசமாக இணைக்கப்பட்டன. இதைச் சாதித்த பிஸ்மார்க் இந்தியாவின் பாடநூல்களில் பாராட்டப்படுகிறார்.
 
வெவ்வேறு தேசிய இனச் சிற்றரசுகளை இந்தியாவுடன் இணைத்ததற்காக வல்லபாய் படேலை ‘இந்தியாவின் பிஸ்மார்க்’ என்று முரண்பட்ட வகையில் ஒப்பிடுகின்றனர். ஜெர்மானிய பிஸ்மார்க், ஒரு மொழி பேசும் ஜெர்மானிய இனத்தவரை ஒரு நாட்டுக்குள் கொண்டு வந்தார். வல்லபாய் படேலோ வெவ்வேறு மொழி பேசும் வெவ்வேறு சிற்றரசுகளை ஒரு துணைக் கண்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். முன்னது தேச ஒருங்கிணைப்பு. பின்னது தேச மறுப்பு இணைப்பு. அதுவரை வங்காளம் ஒரே மாநிலமாக இருந்தது. விடுதலைப் போராட்ட வீச்சு மற்ற மாநிலங்களைவிட வங்காளத்தில் கூடுதலாக இருந்தது.
 
அவ்வெழுச்சியைச் சீர்குலைப்பதற்காக வெள்ளை ஏகாதிபத்திய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டது. மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்குக் கிழக்கு வங்காளமென்றும், இந்துக்களுக்கு மேற்கு வங்காளமென்றும் இரண்டாகப் பிரித்தது. அவ்வாறு இரண்டாகப் பிரித்ததை எதிர்த்து, ஒருங்கிணைந்த வங்கத்தின் இந்து மக்களும் இஸ்லாமிய மக்களும் போர்க்கோலம் பூண்டனர்.

அந்த வங்காள எழுச்சி வெள்ளையர்கள் ஆதிக்கத்துக்கு எதிரான விடுதலைக் கிளர்ச்சியாக வளர்ச்சி அடைந்தது. வங்கத்தில் மட்டுமின்றி இந்தியாவெங்கும் வங்கப் பிரிவினையை எதிர்த்து மக்கள் திரள் போராட்டம் பற்றிக் கொண்டது.
 
1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனாவும் போட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு மாநிலத்தையும் கிழக்கு மாநிலத்தையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது என்று கூறப்பட்டது. அதன்படியே வடக்கும் கிழக்கும் ஒரே மாநிலமாக ஆக்கப்பட்டது. பின்னர் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கை இரண்டாகப் பிரிக்க விரும்பினர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அவ்வாறே இரண்டாகப் பிரித்தனர்.
 
இன்றைக்கும் 1) தொடர்ச்சியான தாயக நிலம், 2) பொது மொழி, 3) பொதுப்பண்பாடு, 4) பொதுப் பொருளியல் வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றில் நிலைத்துள்ள சமூகத்தை ஒரு தேசம் என்று அளவிடும் வரையறுப்பு நடைமுறையிலுள்ளது. அந்த அடிப்படையில்தான் புதிய புதிய தேசங்கள் பிறந்து கொண்டுள்ளன. அவை உலக நாடுகளின் ஏற்பிசைவை பெற்றுக் கொண்டுள்ளன. சோவியத் ஒன்றியம் பதினைந்து நாடுகளாகப் பிரிந்தது. யுகோஸ்லோவியா, செக்கோஸ்லோவோகியா ஆகியவை தேசிய இன அடிப்படையில் பல நாடுகளாகப் பிரிந்தன. ‘எரித்திரியா’, ‘கிழக்கு திமோர்’ ஆகிய நாடுகள்; புதிதாகப் பிறந்தன.

இப்பொழுது ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ‘தெலங்கானா’ மாநிலம் தனியே பிரிக்கப்படுவது தேசிய இனத் தாயக அடிப்படையில் அல்ல. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ் தெலங்கானா மாநிலத்தைப் பிரிக்கக் கோரி சாகும் வரை பட்டினிப் போராட்டம் 2009 நவம்பர் 29ஆம் நாள் தொடங்கினார். அவர் உடல் நலம் மிகவும் மோசமடைந்ததையொட்டி தெலங்கானா பகுதி முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.
 
இதனால் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் 9.12.2009 அன்று தெலங்கானாவைத் தனியே பிரிக்க ஒத்துக் கொண்டனர். இந்திய அரசின் உறுதிமொழிக்குப் பிறகு 11ஆம் நாள் சந்திரசேகரராவ் தமது உண்ணாப் போராட்டத்தைக் கைவிட்டார். ஆனால் ஆந்திரப் பிரதேசத்தின் இதரப் பகுதிகளில் மாநிலப் பிரிவினையை எதிர்த்துப் போராட்டம் தீவிரமாகியது.
 
ஆந்திரப் பிரதேசம் நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் தமிழ்நாட்டை விடப் பெரிய மாநிலம். மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

1. இராயல சீமா
2. தெலங்கானா
3. கடலோர ஆந்திரா

தெலங்கானா பகுதி ஐதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்தது. இராயல சீமாவும், கடலோர ஆந்திராவும் வெள்ளையரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தன. அவை சென்னை மாகாணத்தில் இணைந்திருந்தன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு நிஜாம் ஆட்சி நீக்கப்பட்டது. 1953ல் ஆந்திரப் பிரதேசம் மொழிவாரி மாநிலமாகத் தனியே ஒருங்கிணைக்கப்பட்டது.
 
1970களிலிருந்தே தெலங்கானா பகுதியைத் தனி மாநிலமாக்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகிறது. அதற்கு அப்பகுதி மக்கள் கூறும் காரணம், இராயல சீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதிகளைக் கவனிப்பது போல தெலங்கானா பகுதியை ஆட்சியாளர்கள் கவனிப்பது இல்லை. முதலமைச்சர்களும் தெலங்கானாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
 
அரிதாக நரசிம்மராவ் தெலங்கானா பகுதியிலிருந்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெலங்கானா பகுதி மக்கள் வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள். மேலும் தெலங்கானா பகுதியில் பேசப்படும் தெலுங்கிற்கும் கடலோர ஆந்திராவில் பேசப்படும் தெலுங்கிற்கும் பேச்சு வழக்கில் வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

தனித் தெலங்கானா மாநிலத்துக்குத் தில்லி ஆட்சியாளர்கள் பச்சைக் கொடி காட்டியதைக் கண்டதும் தமிழ் நாட்டை இரண்டாக, மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிலர் தமிழகத்தில் முன் வைக்கின்றனர்.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ‘செந்தமிழ் நாடு’ என்ற தனி மாநிலம் வேண்டுமென மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் மரு.சேதுராமன் கேட்கின்றார். வடதமிழ் நாட்டைத் தனிமாநிலமாக அமைக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மரு.இராமதாசு கேட்கின்றார்; கொங்கு மண்டலத்தைத் தனி மாநிலமாக்க வேண்டுமென்று கொங்கு நாடு முன்னேற்றப் பேரவைத் தலைவர் பெஸ்ட் இராமசாமி கூறுகின்றார்.
 
தென்தமிழ் நாடு புறக்கணிக்கப்படுகிறது; வடதமிழ்நாட்டுக்கு நிகராகப் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்று சேதுராமனும் மற்றும் சிலரும் கூறுகின்றனர். சிறு மாநில அமைப்புகள்தான் வளர்ச்சிக்கு உகந்தவை என்கிறார் இராமதாசு.
 
பெரிய கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழகத்தைப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை எதிர்க்கின்றன. இந்தப் பிரிவினைக் கோரிக்கைக்கு தெற்கு வடக்கு மேற்கு தமிழக மக்களிடையே ஆதரவில்லை. பிரிவினைக் கோரிக்கை வைத்திருக்கும் மரு. சேதுராமன், மரு. இராமதாசு, பெஸ்ட் இராமசாமி ஆகிய மூவருக்குமிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. இம்மூவரும் சாதி அடிப்படையிலான அமைப்புகளை நடத்தி வருகின்றனர்.

அவரவர் சாதி சார்ந்த மக்கள் அவரவர் கோரும் ‘மாநிலங்களில்’ திரட்சியாக வாழ்கின்றனர். அவர்கள் கூறுவது போல் தமிழகம் மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டால் தனிப்பெரும் மக்கள் தொகை கொண்ட தங்கள் சாதி அமைப்பு மாநில ஆட்சியைப் பிடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்குமென்று கருதுகிறார்கள். அதை நேரடியாகச் சொல்லாமல் சிறிய மாநில நிர்வாகம் வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமென்று கூறுகிறார்கள்.
 
மொழிவாரி மாநிலங்களைச் சிறுசிறு நிர்வாக மாநிலங்களாகப் பிரிக்க வேண்டுமென்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் பெருவிருப்பமாகும். வெவ்வேறு மொழி பேசக் கூடிய பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து நிர்வாக வசதிக்கேற்ப ஒரே மாநிலமாக்க வேண்டும் என்பதும் அவர்களின் கருத்தாகும். இவ்வாறு இந்திய ஆளும் வர்க்கம் கருதக் காரணம் என்ன? மொழி வழித் தேசிய இனத் தாயக மாநிலங்கள் இந்தியத் தேசியத்தின் எதிர்மறையாகும்; அவை இந்திய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும்; மைய அரசின் அதிகாரங்களுக்கு சவாலாக இருக்கும் என்பவையே அக்காரணங்கள்.

இதே காரணங்களை மனதில் வைத்து, இந்தியா விடுதலை அடைந்தபின் மொழி வாரி மாநிலம் அமைப்பதை காங்கிரஸ் கட்சியும் ஜனசங்கமும் (இப்போது பா.ஜ.க) எதிர்த்தன. விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சி மொழி வாரி மாநிலம் அமைப்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி வந்தது. 1920 ஆம் ஆண்டு நாகபுரியில் கூடிய இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநாடு காங்கிரஸ் மாநிலக் குழுக்களை மொழிவழி மாநில அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானத்தின் படி அமைக்கப்பட்டதுதான் ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’.
 
அப்பொழுது சென்னை மாகாணத்தில் ஆந்திர கர்நாடக கேரளப் பகுதிகள் இருந்தன. ஆனால் காங்கிரஸ் மாநில கமிட்டிகள் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. விடுதலை அடைந்த பின் மொழி வாரி மாநிலம் அமைப்பதை அதே காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. பண்டித நேரு மொழி வாரி மாநிலம் அமைப்பதை விரும்பவில்லை. இந்தியத் தேசியத்தை வலியுறுத்திய அனைத்திந்தியத் தலைவர்கள் மொழி வாரி மாநிலப் பிரிவினையை எதிர்த்தனர்.

இந்துத் தேசியம் பேசிய ஜனசங்கம் மொழி வாரி மாநிலம் அமைப்பதை எதிர்த்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் பின்வருமாறு கூறினார், “சுயாட்சி உரிமையுள்ள மொழி வழி மாநிலங்களை அமைப்பது பிராந்திய வாதத்தை வளர்த்து இறுதியில் அபாயகரமான பிரிவினைக்கு வழிவகுத்துவிடும். இதற்குப் பதில் கிராம, மாவட்ட, வட்டார, பிராந்திய மட்டங்களில் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். பல மாவட்டங்களை இணைத்து அமைக்கப்படும் ஜனபாத அமைப்புகள் இப்போதுள்ள மாநில அரசுகளை விட மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும்”.(ChristopheJafferelet, Hindu Nationalist Movement and Indian Politics, உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்துப் பாசிசமும் - பழ.நெடுமாறன் பக்.693)

ஜனசங்கத்தின் பொதுச் செயலாளர் தீனதயாள் உபாத்தியாயா ஜனபாத நிர்வாக அமைப்பு பற்றிய திட்டத்தை வெளியிட்டார். இந்தியாவிலுள்ள மாநில எல்லைகளை அழித்துவிட்டு நிர்வாக வசதியை மட்டுமே முன்னிறுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களை இணைத்து ஒரு ஜனபாத அமைப்பு உருவாக்க வேண்டும்.
 
அப்படி இந்தியா முழுவதிலும் நூறு ஜனபாத அமைப்புகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்த ஜனபாத அமைப்புகள் இயங்கும். மொழி வழி மாநிலங்களும் அரசுகளும் அடியோடு ஒழிக்கப்பட்டு விடும். இக்கருத்தை 1950களின் தொடக்கத்தில் தனது தேர்தல் அறிக்கையில் ஜனசங்கம் வெளியிட்டது. (மேற்படி நூல் - பழ.நெடுமாறன், பக்;. 693)
 
அனைத்திந்திய பெருமுதலாளிகளும் மொழி வாரி மாநிலம் அமைப்பதை எதிர்த்தனர். மும்பை மாநிலத்தை மராட்டியம், குஜராத் என்று மொழி அடிப்படையில் பிரிப்பதை குஜராத்தி, மார்வாடி, பார்சி முதலாளிகளும் வணிகர்களும் எதிர்த்தனர். அவர்களில் 69 முக்கியப் புள்ளிகள் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை மொழி வாரி மாநிலம் அமைப்பது குறித்து அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட தார் குழுவிடம் அளித்தனர்.
 
1952 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் போராடினர். விடுதலைப் போராட்ட வீரரான பொட்டி ஸ்ரீராமுலு இக்கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை பட்டினிப் போராட்டம் சென்னையில் தொடங்கினார். 56ஆம் நாள் உயிர்துறந்தார். இதனால் ஆந்திரப் பிரதேசம் போர்க்களமானது. அதன் பிறகு 1952 டிசம்பர் 19ஆம் நாள் ஆந்திரப் பிரதேச மாநிலம் அமைப்பதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி 1953ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் அமைக்கப்பட்டது.

அடுத்தடுத்து பல்வேறு தேசிய இன மக்கள் போராடி மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. எனவே இப்பொழுது உள்ள மொழி வாரி மாநிலங்களை வளர்ச்சி அடிப்படையில் சிறுசிறு நிர்வாக மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. போன்ற இந்தியத் தேசிய வெறிக் கட்சிகளுக்கு இனிப்பானதே. இருந்தாலும் அந்தந்த மாநிலத்திலுள்ள தங்கள் கட்சிக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக இப்பிரிவினைகளை இந்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் சற்றுக் காலம் தள்ளி அரங்கேற்றுகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலக் கோரிக்கையை காங்கிரஸின் தலைமையிலான இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. பா.ஜ.க. அக்கோரிக்கையை ஆதரித்தது.

இப்பொழுது கடலோர ஆந்திரப்பிரதேசம், இராயலசீமா ஆகிய பகுதிகளிலுள்ள காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தெலங்கானா பிரிவினையை ஏற்காததால் அப்பிரிவினையை நிலுவையில் வைத்துள்ளது இந்திய அரசு. ஆந்திரப் பிரதேசம் தெலுங்கு தேசிய இன மக்களின் தாயகமாகும். நிர்வாக வசதி, வளர்ச்சி என்ற காரணங்கள் கூறி அதைப் பிரிப்பது சரியல்ல என்பதே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிலைபாடு. அதற்கு மேல் நாம் அதில் தலையிட விரும்பவில்லை.

மொழி, தாயகம், பண்பாடு, வாழ்முறை ஆகியவற்றால் தனித்தன்மையுடன் விளங்கும் கூர்கா மக்கள் மேற்கு வங்கத்திலும், கூர்க் இன மக்கள் கர்நாடகத்திலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். இவர்கள் தங்கள் தேசிய இனத் தாயகத்தைத் தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி போராடுகிறார்கள். இவர்கள் தனித்தேசிய இனத்தவர் என்பதால் தங்கள் தாயகத்தை தனிமாநிலமாகப் பெற அனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள் ஆவர்.
 
இவர்களுடைய தனிமாநிலக் கோரிக்கையை த.தே.பொ.க. ஆதரிக்கிறது. தெலுங்கானா சிக்கலும், இவையும் ஒன்றல்ல. தெலங்கானா மாநிலம் ஏற்கப்பட்டதைக் காரணமாக வைத்துத் தமிழ் நாட்டை மூன்று பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் என்று சிலர் கோருவதை த.தே.பொ.க. வன்மையாக எதிர்க்கிறது.

தனித்தனி நாடுகளாக விளங்குவதற்குரிய மக்கள் தொகை, நிலப்பரப்பு, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் கொண்டுள்ள தமிழ்நாடு போன்ற தேசிய இனத் தாயகங்களைப் பிரித்தால் அது இந்தியத் தேசிய வெறியர்களுக்குக் கொண்டாட்டமாகும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாற்று உரிமைகளைத் தமிழகத்திற்கு மறுக்கும் அண்டை மாநிலங்களுக்கு இப்பிரிவினை பெரும் மகிழ்வைத் தரும்.

தமிழ்நாட்டைத் துண்டாடுவதை நாம் ஏன் எதிர்க்கிறோம்?

1. தமிழர்களின் நிலப்பரப்பும், மக்கள் தொகையும் பிளவு படுவதால் இப்பொழுது தமிழகத்திற்கு இருக்கின்ற அரசியல் வலு குறைந்து விடும்.

2. இதனால் அன்றாடம் மாநில உரிமைகளைப் பறிப்பதில் குறியாக உள்ள நடுவண் அரசை நிர்ப்பந்தித்துத் தமிழக உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாது போகும்.

3. பிரித்தாளும் சூழ்ச்சி அடிப்படையில் தமிழக மாநிலங்கள் இடையே இந்திய அரசு பகையை வளர்த்துவிடும்.
 
4. அயல் இனத்தவர் இப்பொழுதே மிகை எண்ணிக்கையில் தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். தமிழகம் சிறு மாநிலங்களாகப் பிரிந்து கிடந்தால் இன்னும் மிகை எண்ணிக்கையில் பிற மாநிலத்தவர் தமிழகத் தொழில், வணிகம், கல்வி, வேலை ஆகியவற்றைக் கைப்பற்றுவர். மண்ணின் மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகிவிடுவர். புதுச்சேரி மாநிலம் இதற்கு எடுத்துக்காட்டாக இப்போது உள்ளது.

5. தமிழ்நாட்டில் தமிழ் மொழிதான் ஆட்சி மொழி என்று இன்று உள்ள நிலை மாறி பிற மொழிகளும் ஆட்சி மொழிகள் ஆகக் கூடிய சூழல் உருவாகும். இப்பொழுதே உரியவாறு தமிழைக் கல்வி மொழி ஆக்க முடியாத சூழலில் தமிழகம் பிளவுபட்டால் தமிழ் வழிக்கல்வி என்பது கைகூடாமலே போய்விடும்.

6. அயல் இனத்தவர் அதிகமாகக் குடியேறக் குடியேற வாக்காளர் விகிதத்தில் அயலாரின் தாக்கம் அதிகமாகும். மண்ணின் மக்களின் மாநிலக் கட்சிகள் வலுக்குறைந்து அனைத்திந்திய கட்சிகளே ஆதிக்கம் பெறும். இதற்கும் இப்பொழுது உள்ள எடுத்துக்காட்டு புதுச்சேரி மாநிலமே.

7. தமிழ்த் தேசிய இனம் என்ற தனித்தன்மையும் அதன் வலுவான இருப்பும் சிதறி, தமிழர்கள் தமிழ்நாட்டுக் குள்ளேயே பத்தோடு பதினொன்றாகி விடுவர். இவையே தமிழகத்தைச் சிறு மாநிலங்களாகப் பிரிப்பதை நாம் ஏற்க மறுப்பதற்கான முதன்மைக் காரணங்கள்.

உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் அகிய இந்தி மாநிலங்களில் புதிதாக உத்திராஞ்சல், சட்டீஸ்கர், ஜார்கண்ட் என்று சிறு மாநிலங்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தி மாநிலங்களின் தன்மை வேறு தமிழகத்தின் தன்மை வேறு. புதிதாகப் பிரிக்கப்பட்ட மேற்படி மாநிலங்களில் இந்திதான் ஆட்சி மொழி மற்றும் கல்வி மொழி.

இந்தி மாநிலங்களில் வெவ்வேறு பழங்குடிச் சார்புகள் இருந்தாலும் அங்கு தமிழர்களைப் போன்று வளர்ச்சியடைந்த ஒரு தேசிய இனம் உருவாகவில்லை. இந்தியை அலுவல் மொழியாகவும் கல்வி மொழியாகவும் கொண்டுள்ள அம்மாநிலங்களில், இந்தி யாருக்கும் தாய் மொழி இல்லை. அவர்களுக்குப் போஜ்பூரி, அவதி, மைதிலி, கல்யாணி, ராஜஸ்தானி போன்ற பல மொழிகள் தாய்மொழியாக இருக்கின்றன.
 
ஆனால் அத்தாய்மொழிகள் பொது மொழி (Standard language) என்றளவுக்கு வளர்ச்சியடையாத கிளை மொழிகளாகவே (Dialect languag) இருக்கின்றன. இம்மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் உருது பேசும் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். இந்தியும் உருதும் கிட்டத்தட்ட ஒரே மொழிதான். வடமொழி வரிவடிவத்தில் எழுதினால் இந்தி என்றும் அரபி வரி வடிவத்தில் எழுதினால் உருது என்றும் அறியப்படுகிறது.

இக்காரணங்களால் இந்தி பேசும் மாநிலங்களில் வலுவான அடையாளங்களோடு ஒரு தேசிய இனம் உருவாகவில்லை. உ.பி. , ம.பி. , பீகார் போன்ற இந்தி மாநிலத்தவர்க்கு ‘இந்தியன்’ என்ற இல்லாத தேசிய இனமே அடையாளமாக உள்ளது. அவர்களுக்கென்று தனித்தன்மையுள்ள தேசிய இனம், தமிழ்த்தேசிய இனம் போன்று எதுவும் இல்லை. ஆகவே அம்மாநிலங்களை நிர்வாக வசதி கருதி சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்தாலும் அங்கு தேசிய இனப் பாதிப்பும் பொது மொழிப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

விரிந்து பரந்து கிடக்கும் இந்த இந்தி மண்டலத்தின் மக்கள் தொகை, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 40 விழுக்காட்டுக்கும் மேல் உள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 225 பேர் இந்த இந்தி மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியன் என்ற பொது அடையாளத்தையும், இந்தி என்ற பொது மொழியையும் ஏற்றுள்ள இக்கூட்டத்திலிருந்துதான் இந்தியப் பெருமுதலாளிகளும் பார்ப்பன சக்திகளும் தங்களுக்கான மக்கள் அடித்தளத்தை அடையாளம் கண்டுள்ளன. இங்கு அவை ஆழக் கால் பதித்துள்ளன.
 
அதற்கு இந்து மதம் பேருதவி புரிகிறது. இம்மண்டலத்திலிருந்துதான் பெரும்பாலும் பிரதமர்களும் மெய்யான அதிகாரம் படைத்த ஆட்சியாளர்களும் உருவாகிறார்கள். எனவே நடைமுறையில் இந்தி மண்டலம் ஓர் உறுப்பாக செயல் வடிவம் பெற்றுள்ளது. அம்மாநிலங்களுக்குள் சிறுசிறு வேறுபாடு இருப்பது இந்த ஒரு மண்டல உணர்வைப் பாதிப்பதில்லை.
 
மேற்கண்ட கூறுகளைக் கவனத்தில் கொள்ளாமல் தமிழ் நாட்டையும் இந்தி மண்டலத்தில் சிறுசிறு மாநிலங்கள் உருவாவது போல் பிரிக்க நினைத்தால் அது தமிழினம் தன்னைத் தானே சிதைத்துக் கொண்டு வீழ்த்திக் கொள்ளும் முயற்சியாக முடியும்.
 
இந்தி மண்டலத்தில் காலூன்றி நிற்கும் பெருமுதலாளிய - இந்துத்துவா சக்திகள் தமிழ்நாடு வளர்ப்பதற்காகவே பிரிவினை கோருவதாகக் கூறுகிறார்கள். இவர்கள் வரையறுப்பில் வளர்ச்சி என்பது என்ன?
 
வடநாட்டு மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பெரும் பெரும் தொழிற்சாலைகள், இந்திய அரசின் பெரும் பெரும் ஆலைகள், விண்முட்டும் கட்டடங்கள் போன்றவைதாம் வளர்ச்சியின் அடையாளங்களா? இவ்வளர்ச்சி சமூகத் திலுள்ள மிகச் சிறுபான்மையான பெருமுதலாளிகள், பெருவணிகர்கள், உயர் நடுத்தர வர்க்கத்தினர் போன்றோர் வளர்ச்சியே ஆகும். ஒட்டு மொத்த சமூக வளர்ச்சியாகாது.
 
இவை கூவம், அடையாறு போன்ற பல தூயநீர் ஆறுகளை சாக்கடைகளாக மாற்றியிருக்கின்றன. இதே போல் காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆறுகளும் போன்ற வடமொழி சாராத தேசிய இனத்தாயகங்களைச் சிறுசிறு நிர்வாக மாநிலங்களாகப் பிரிக்கும் சூழ்ச்சித் திட்டத்தில் ஏற்கெனவே இருக்கின்றன. இதன் வளர்ச்சிப் போக்கில், அடுத்தடுத்துள்ள வெவ்வேறு மொழி பேசுகின்ற பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு நிர்வாக மாநிலம் அமைக்கும் திட்டத்திலும் அவர்கள் இருக்கிறார்கள்.

எடுத்துக் காட்டாக வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களை அவற்றை அடுத்துள்ள சித்தூர் மற்றுமுள்ள ஆந்திர மாவட்டங்களோடு சேர்த்து ஒரு மாநிலமாக்குவது. மருத்துவர் இராமதாசு போன்றோர் கோரும் தமிழகப் பிரிவினை மேற்படி தமிழின எதிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாகவே அமையும்.
 
இந்திய அரசு இன்னொரு 'மாநிலங்கள் சீரமைப்புக் குழுவை” உருவாக்கி, புதிய மாநிலக் கோரிக்கைகள் குறித்து ஆராயப் போவதாக செய்திகள் வருகின்றன. அப்போது இராமதாசு போன்றவர்கள் தமிழ்நாட்டைத் துண்டாட கோரிக்கை வைப்பார்கள். அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தில்லி ஆதிக்கவாதிகள் கணக்குப் போட்டிருப்பார்கள்.
 
புதிதாக மாநிலக் கோரிக்கையாக எழுந்தால் அதுபற்றி தொடர்புடையவர்களோடு பேசி தீர்வு காண வேண்டுமே தவிர, இவ்வாறு மேலும் ஒரு மாநில சீரமைப்புக் குழுவை ஏற்படுத்துவது நயவஞ்சகத்திட்டமாகும். தமிழகத்தைத் துண்டாட விரும்புவோர் தமிழ்நாட்டில் வளர்ச்சி குன்றியுள்ள வட்டாரங்களை சாக்கடைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. கூவம், அடையாறு சாக்கடை ஆறுகளின் கரை நெடுக குடிசை போட்டு வாழும் இலட்சக்கணக்கான குடிமக்கள்தாம் சென்னைக் கோபுரங்களின் அஸ்திவாரங்கள். இப்படிப்பட்ட குடிசைகள் தமிழ்நாடு முழுவதும் பரவவேண்டும் என்பதுதான் தமிழக மாநிலப் பிரிவினையாளர்களின் இலட்சியமா?
 
‘பசுமைத் தாயகம்’ அமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் குறித்து இயக்கம் நடத்தி வரும் மருத்துவர் இராமதாசு சென்னை போன்ற இயற்கைக்கு முரணான வளர்ச்சியைத் தமிழகமெங்கும் விரிவாக்க விரும்புகிறாரா? வேளாண் நிலங்களைச் சாகடித்து அவற்றின் மேல் விண்முட்டும் கான்கிரீட் கல்லறைகள் எழுப்புவதுதான் வளர்ச்சியா? இவ்வாறு ஐரோப்பாவில் முதலாளியம் ஏற்படுத்திய இயற்கைக்கு முரணான வளர்ச்சியினால் உண்டான தீய விளைவுகளை நீக்கிடவே அந்நாடுகளில் பசுமை இயக்கங்கள் வளர்ந்துள்ளன.

‘வளர்ச்சி’ குறித்து அடிப்படைக் கோட்பாடுகள் இல்லையெனில், ஒருவரை விழுங்கி இன்னொருவர் வளர்வது, இயற்கையை அழித்துச் செயற்கையைப் புனைவது என்ற முதலாளிய இலாப வெறிப் போட்டியும், தனி நபர் நுகர்வு வெறித் தணிப்பும்தான் வளர்ச்சி என்றாகிவிடும்.

குறிப்பிட்ட சில சிறப்புப் பொருளியல் மண்டலங்களை எதிர்ப்பது, அரசுத் துறை தொழிற்சாலைகளை எதிர்ப்பது என்ற அளவில் தமது சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வேளாண் பாதுகாப்புக் கொள்கையை மருத்தவர் இராமதாசு சுருக்கிக் கொள்ளக்கூடாது. சென்னை - திருப்பெரும்புதூர் மண்டலம் போன்ற வளர்ச்சியைத் தான் பொதுவில் அவர் விரும்புகிறார் எனில் அவரது கொள்கைகள் ஐயத்திற்கு இடமாகி விடும்.

உலகமய முதலாளியம் தேசிய இனத் தாயகங்களைக் கலைத்து விட்டு அவற்றை வெறும் சந்தைத் திடலாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. முதலாளியத்திற்கு தேசிய இனம், தேசிய இனமொழி என்பவை ‘தடைக் கற்களாகவே’ தெரிகின்றன. முதலாளிகளுக்கு மக்கள் வெறும் வாடிக்கையாளர் கூட்டமாக இருந்தால் போதும். முதலாளியத் தேர்தல் கட்சிகளுக்கு மக்கள் வெறும் வாக்காளர்களாக இருந்தால் போதும். இந்த வகையில் மக்கள் தேசிய இனம், தேசிய மொழி, தேசியத் தாயகம் கடந்த உதிரிக் கூட்டமாக இருப்பதையே முதலாளிகள் விரும்புகின்றனர்.

கையில் ஒரு கைபேசி, பையில் ஒரு கைபேசி, குடிசைக்குள் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி - இவைதான் வளர்ச்சியின் அடையாளமா? அந்தக் குடிசைக்குள் கழிவறை கிடையாது. சமையலறை கிடையாது. படுக்கையறை கிடையாது. மூன்று வேளை உணவு கிடையாது. விருந்தினர் வந்தால் எடுத்துப் போட இரண்டு நாற்காலி கிடையாது. இதுதான் வளர்ச்சியா?
 
வளர்ச்சி என்பது சமூகத்தில் சில செல்வந்தர்களின் செங்குத்தான வளர்ச்சி அன்று. சமூகம் முழுமையும் வளர்கின்ற கிடைநிலை வளர்ச்சியாகும். இயற்கைச் சமன்பாட்டுக்கும் சுற்றுச் சூழலுக்கும் சக மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் உணவு, உடை, உறையுள், சமூக உறவு ஆகியவற்றில் தன்னிறைவு காண்பதே மெய்யான வளர்ச்சியாகும்.

ஒரு சமூகத்தில் தன்தேவை நிறைவு என்ற அடிப்படையில் உற்பத்தியும் வழங்கலும் இருக்கும்போதுதான் இந்த வளர்ச்சி ஏற்படும். முதன்மையாக இலாப நோக்கு, வெளிநாட்டு வணிகம் போன்றவற்றை இலக்காகக் கொண்டு உற்பத்தியும் வழங்கலும் நடைபெறும் போது செங்குத்தான வளர்ச்சிதான் ஏற்படும்.
 
அதனால் இயற்கைச் சமன்பாடும் சுற்றுச் சூழலும் சக மனிதர்களும் பாதிக்கப்படவே செய்வர். முதலாளியத்தின் இருப்பு தனிநபர் இலாப வெறியில் உள்ளது. அது சமூக உறுப்பினர்களையும் தன்னைப் போலவே உதிரிகளாக மாற்றியிருக்கிறது. ஒரு வேறுபாடு, அது தன் கையில் பெரும்பெரும் தொழில் வணிக நிறுவனங்களை வைத்துக் கொள்கிறது; சமூக உறுப்பினர்களை அந்நிறுவனங்களின் கூலிக்காரர்களாக ஆக்கிவிடுகிறது. அதை மூடி மறைப்பதற்காக குடிமக்கள் என்ற பட்டத்தைச் சூட்டி விடுகிறது. அதிலும் ஒரு மாற்றம் செய்து நுகர்வோர் குடிமக்கள் என்று அவர்களை வாடிக்கையாளர்களாக வகைப்படுத்தியுள்ளது.
 
இவ்வாறான முதலாளிய வளர்ச்சி குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைபாடு என்ன? உண்மையில் அது பாட்டாளி மக்களுக்கான கட்சிதானென்றால் முதலாளிய வளர்ச்சி முறையை மறுத்து சமூக வளர்ச்சி முறையை முன்மொழிய வேண்டும். அவ்வாறு சமூக வளர்ச்சி நோக்கில் சிந்தித்தால் தமிழ்நாட்டைத் துண்டு போடுவதை ஏற்காமல் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கு உரிய தமிழ்த் தேசிய நிகரமை அரசியலை - பொருளியலை முன்வைக்க வேண்டும்.

அடுத்து, “மக்களுக்கு நெருக்கமாக நிர்வாகம் இருக்கவேண்டும். எனவே தமிழ்நாட்டைச் சிறுசிறு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் இராமதாசு. எல்லா அதிகாரங்களையும் எங்கோ இருக்கிற தில்லி குவித்து வைத்துள்ள ஏகாதிபத்திய நடுவத்திலிருந்து மாநிலங்களுக்கு அதிகாரத்தைப் பெறப் பாட்டாளி மக்கள் கட்சி என்ன கோரிக்கை வைத்திருக்கிறது? அதற்காக இதுவரை அக்கட்சி நடத்திய போராட்டங்கள் யாவை? நிர்வாகம் மக்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமென்று மெய்யாகவே நினைத்தால் முதலில் கைவைக்க வேண்டிய இடம் தில்லி அதிகார மையமே.
 
அதை விடுத்து அதிகாரங்களையும் உரிமைகளையும் இழந்து புதிய காலனியாக ஆக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்குள் நிர்வாகத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு போவதாகச் சொல்வது வெறும் பசப்பல் ஆகும். தில்லி ஏகாதிபத்திய அதிகார மையத்தின் பா.ஜ.க. தலைமையிலும், காங்கிரஸ் தலைமையிலும் பங்கெடுத்த கட்சிதான் பா.ம.க. வருங்காலத்திலும் வாய்ப்புக் கிடைத்தால் அந்த அதிகார ஏகபோகத்தில் மூழ்கித் திளைக்கத் தயங்காத கட்சிதான் பா.ம.க. நகராட்சிக்குச் சற்று மேற்பட்ட அதிகாரம் படைத்த தமிழக மாநில நிர்வாகத்தைத் தமிழகத்தைத் துண்டாடுவதன் மூலம் மக்களுக்கு நெருக்கமாக்குவதாகச் சொல்வதில் எந்தத் தர்க்கமும் இல்லை; எந்த ஞாயமும் இல்லை.
 
நிர்வாகம் மக்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதும் மக்களால் இயக்கப்படவேண்டும் என்பதும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் முதன்மையான கொள்கைகளில் ஒன்று. அதை நிறைவேற்ற முதல் தேவை, தில்லி ஏகாதிபத்திய அதிகார மையத்திலிருந்து தமிழ்நாடு விடுதலை பெறுவதாகும். அடுத்து விடுதலை பெற்ற தமிழ்த் தேசக் குடியரசு, ஒரு கூட்டாட்சிக் குடியரசாகச் சீரமைக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசக் கூட்டாட்சியில் தமிழகம் 4 மாநிலங்களாகப் பிரிக்கப்படலாம். 4 சட்ட மன்றங்கள் வைத்துக் கொள்ளலாம். தமிழ்த் தேசத்திற்கு ஒரு நாடாளுமன்றம் இருக்கும்.

பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி உண்டாக்கிய வருவாய் மாவட்டங்கள் கலைக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றியங்கள் அடிப்படை நிர்வாக அமைப்பாக மாற்றப்படும். அவை சிறு சட்டப்பேரவை போல் அதிகாரம் பெற்றிருக்கும். அதன் கீழ் ஊராட்சி மன்ற நிர்வாகம் மெய்யான மக்கள் நிர்வாகமாக இயங்கும். அதற்குரிய அதிகாரங்களை ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பெற்றிருக்கும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் கைதூக்கிகளாக இல்லாமல் சட்டம் இயற்றுவதுடன் அதைச் செயல்படுத்தும் நிர்வாகப் பொறுப்பும் உள்ளவர்களாக இருப்பர். இவ்வாறான தமிழ்த் தேசிய மக்கள் நிர்வாகம் குறித்து வேறொரு வாய்ப்பில் விரிவாகவும் நுணுக்கமாகவும் விளக்கலாம்.

மக்களுக்கு நெருக்கமாக நிர்வாகம் இருக்க வேண்டுமென்று கூறுகின்ற பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு மற்றும் மருத்துவர் சேதுராமன், பெஸ்ட் இராமசாமி ஆகியோர் தமிழகத்தைத் துண்டாடுவதைத் தவிர்த்து வேறு வகைத் திட்டங்கள் எதுவும் வைத்திருக்கிறார்களா? அவ்வாறிருந்தால் அதையும் அவர்கள் விளக்க வேண்டும்.

அடுத்து பெரும் எண்ணிக்கையிலுள்ள தங்கள் வகுப்பினர் முதலமைச்சர்களாக வரவேண்டும் என்று கருதினால் அதில் தவறு எதுவும் இல்லை. அவர்கள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர்களாக வர உரிமையுடையவர்கள்தாம். அதற்காகத் தமிழ்நாட்டைத் துண்டு போட்டால், தங்களது அப்பத்தைச் சமமாகப் பங்கிட்டுத் தரும்படி குரங்கிடம் பஞ்சாயத்துக்குப் போன கதையாகிவிடும். அப்பத்தை இரண்டு துண்டாக்கிய குரங்கு, ஒன்று இன்னொன்றை விடக் கூடுதலாக இருப்பதாகச் சொல்லிச் சொல்லி அதைச் சமன்படுத்துவதற்காக அப்பத்தின் துண்டைச் சிறிது சிறிதாகப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டது. இப்படியாக இரண்டு துண்டுகளையும் குரங்கே சாப்பிட்டு விட்டது. அதைப் போல் இரண்டு துண்டுத் தமிழ் நாட்டின் உரிமைகளையும் அதிகாரங்களையும் தில்லி கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துக் கொள்ளும்.

அந்த நிலையில் முதலமைச்சராக இருப்பவருக்கு என்ன அதிகாரமும் உரிமையும் இருக்கப் போகிறது? அதைக் கொண்டு அந்த முதலமைச்சர் தன் வகுப்பு மக்களுக்கும் இதரத் தமிழ் மக்களுக்கும் என்ன வளர்ச்சியைக் கொடுக்க முடியும்? பிரித்தானியக் காலனி ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்ட சிற்றரசர்கள் தாங்கள் முடிசூட்டிக் கொள்ளலாமே தவிர மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முழு இறையாண்மையும் அதிகாரமும் பெற்றவர்களாக இல்லை. அதைப் போல் துண்டாகிப் போன தமிழ்ப் பகுதிகளின் முதலமைச்சர்கள் என்ற பட்டத்தைச் சுமக்கலாமே தவிர இப்போதுள்ள குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட இருக்காது.
 
இன்னொரு முகாமையான செய்தியை கவனிக்க வேண்டும். துண்டுபட்டுப் போன தமிழ் மாநிலங்களில் அயல் இனத்தார் வரத்து இன்னும் அதிகமாகும். அப்பொழுது மண்ணின் மக்களிடம் உருவான மாநிலக் கட்சிகளை அயலார் ஏற்க மாட்டார்கள். தங்கள் பணத்தைக் கொண்டு தமிழர் வாக்குகளையும் விலைக்கு வாங்கி காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தில்லி ஏகாதிபத்தியக் கட்சிகளையே மாநில ஆளுங்கட்சியாக அல்லது எதிர்க்கட்சியாகக் கொண்டு வருவார்கள்.

இதற்குச் சரியான எடுத்துக்காட்டு இப்போதுள்ள புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம். அது தமிழர்களின் தாய் மண்ணாகும். அங்கு தமிழர்கள், குறிப்பாக வன்னிய மக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற போதும் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. வன்னியர் அடித்தளத்தைக் கொண்டுள்ள பா.ம.க.வும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. சட்டப் பேரவையில் கணிசமான இடங்களைக் கூட பா.ம.க.வால் கைப்பற்ற முடியவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் வெளிமாநிலத்தவர் மிகையாகப் புதுச்சேரியில் குடியேறியதுதான்.

தமிழ்நாட்டைத் துண்டாடக் கோருவோர் அதைக் கைவிட்டு தில்லி ஏகாதிபத்திய நடுவத்தில் கட்டுண்டு கிடக்கும் தமிழ்நாட்டு உரிமைகளை மீட்கப் போராடுமாறும், தமிழ் நாட்டுக்குள் உண்மையான சமூக வளர்ச்சியும் மக்களுக்கு நெருக்காமான நிர்வாகமும் கிடைக்கச் சரியான திட்டங்களை வைத்துப் போராடுமாறும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஈழத்தில் வடக்கு கிழக்கு மாநிலங்களைத் தனித்தனியே பிரித்தது தவறு. அவற்றை ஒரே மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டைத் துண்டாட நினைப்பது முரண்பாடான நிலைபாடு என்பதை உணர்ந்து தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். மொழிவாரி மாநிலப் பிரிப்பின் போது ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றிடம் தன்னுடைய தாயகப் பகுதிகள் பலவற்றை இழந்துள்ளது தமிழ்நாடு. இழந்த தமிழ்ப் பகுதிகள் சிலவற்றைத் தமிழகத்தின் வடக்கிலும் தெற்கிலும் மீட்பதற்காக சிறைப்பட்ட தமிழர்களை, சிறையில் உயிர் நீத்த தமிழர்களை, துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான தமிழர்களை, தடியடி பட்ட தமிழர்களை, சொத்துகளை இழந்த தமிழர்களை எண்ணிப் பார்த்து தமிழகத்தைத் துண்டாடும் கோரிக்கையை அவர்கள் கைவிட வேண்டும்.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து தமிழகத்தைத் துண்டாட ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று அனைத்துத் தமிழர்களும் உறுதி பூண வேண்டும்.

அடுத்து இன்றைய அரசியல் கட்டமைப்புக்குள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதியையும் சொந்தத் தாய் மண்ணாகக் கருதி சமமாக நடத்தி அதிகாரத்தில் சமபங்கு வகிக்கக் கூடிய புதிய நிலைமைகளைத் தோற்றுவிக்க ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும்.

- பெ.மணியரசன் 

Pin It