படப்பிடிப்பு துவங்கிய நாட்களிலிருந்தே ‘அன்னக் கொடியும் கொடிவீரனும்’படம் குறித்த எதிர்பார்ப்பு என்னிடம் ஏற்பட்டுவிட்டது.சமீபகாலமாகஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளால் பாரதிராசா மீது இருந்த பழைய நம்பிக்கை சற்று குறைந்திருந்தது.ஆனால் இந்த படம் பாரதிராசா மீது இருந்த விமர்சனத்திற்கு சற்று ஆறுதலாக இருந்தது என்று சொல்லலாம்.

ஆரம்ப காலத்திலிருந்தே தென் தமிழக கிராமப்புற மக்களின் வாழ்க்கை எதார்தத்தை படம் பிடிக்கும் பாரதிராசா அந்த மக்களின் வக்கிர வன்முறை எண்ணங்களை அம்பலப்ப்படுத்த தவறுவதில்லை.

annakodi_636

குறிப்பாக தேனி மாவட்ட பிரான்மலை கள்ளர்களின் வாழ்வியலை அதிக படங்களில் படம் பிடித்து காட்டிருக்கிறார்.பிரான்மலை கள்ளர் சமூகத்தையும் பெண்கதாபாத்திரத்தையும் முன்னிலைப்படுத்திய கிழக்குச் சீமையிலே,கருத்தம்மா,பசும்பொன் திரைப்படங்களின் வரிசையில் அன்னக்கொடியை சேர்க்கலாம்.

சமீபகாலமாக முக்குலத்தோர் சமூகத்தை மய்யமாக வைத்து கதாநாயக பிம்பத்தை உருவாக்கிய சண்டைக் கோழி, திமிரு, சுந்தரபாண்டியன் போன்ற தப்பான திரைப்படங்கள் வணிக சந்தையாகி கொண்டிருக்கின்றன.இந்த நேரத்தில் பிரான்மலை கள்ளர் சமூகத்தின் எதார்தத்தை, அதன் இருத்தலை எந்த வித மிகை குறை உணர்வில்லாமல் அப்படியே பதிவு செய்திருக்கும் திரைப்படம் அன்னக் கொடி.

கள்ளர் சமூகத்தை ஆதிக்க சாதியாகவும்,பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலை சமூகமாகவும் பெரும்பாலான திரை இயக்குனர்கள் தங்களின் சந்தை நலனுக்காக பதிவு செய்து வரும் இச்சூழலில் கார்ப்பரேட் உலகத்திலும் நிலம் சார் பழங்குடிகளாக அந்த மக்கள் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் என்கிற உண்மையை இத்திரைப்படம் பதிவு செய்திருப்பது ஆரோக்கியமான விசயம்.

பெரியாரியம், மார்க்சியம் போன்ற எந்த வித முற்போக்கு தத்துவங்களும் பிரான்மன்கலை கள்ளர் சமூகத்தை சென்று சேர்ந்துவிடாத வண்ணம் இன்றைய இந்துத்துவ சக்திகள் அரசியல் செய்து வருகின்றன.இந்துத்துவ பண்பாட்டிற்கு கிஞ்சித்தும் பொருத்தமில்லாத பிரான்மலை கள்ளர் சமூக பெண்ணிற்கும் செருப்பு தைக்கும் தாழ்த்தப்பட்ட கதாநாயகனுக்கும் இடையே நடக்கும் காதல் போராட்டம்தான் இந்த அன்னக் கொடி. கள்ளச்சராயம் காய்ச்சி காவல்துறையினரிடம் நாயடி,பேயடி வாங்கும் ஒரு உதிரி பெண்ணிற்கு கூட இந்த சமூகத்தில் சாதி அடையாளமாய் இருக்கிறது என்பது திரைப்படம் உணர்த்தும் உண்மை.

கிராமங்களில் கல்வி,சமூக மற்றும் வாழ்வியல் தரத்தில் ஒரே நேர்கோட்டில் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிரான்மலை கள்ளர் சமூகத்தினருக்கும் இடையே சாதி மிகப்பெரிய சுவராய் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதை இன்றைய சமூக மாற்றத்திற்கு பாடுபடும் அனைவரும் உணர வேண்டும். பெண்ணின் இருத்தலை, ஆளுமையை, கனவுகளை சிதைப்பதில் சாதியும் திருமணமும் முக்கிய வினையாற்றுகின்றன என்பதை இயக்குனர் ஆழமாக பதிவு செய்துள்ளார்.

வில்லனாக அறிமுகமாகியிருக்கும் மனோஜ் கந்துவட்டிக்காரனாக,கையலாகதாவனாக, கொலைகாரனாக அசல் உசிலம்பட்டி மைனராக வாழ்ந்திருக்கிறார்.ராதா மகள் கார்த்திகாவின் விடலைப் பருவ காதல் காட்சி அமைப்புகள் பழைய பாரதிராசா திரைப்படங்களை மீண்டும் கண் முன் நிறுத்துகின்றன. கஞ்சிக்கு தொட்டுக்க கதாநாயகியின் விரலை சப்பும் காட்சியை நாடோடி தென்றல் படத்திலிருந்து நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்;பாரதிராசாவும் தொடர்ந்து காட்டி கொண்டிருக்கிறார்.காதல் காட்சிகளை சிலாகித்து படம் பிடிக்கும் பாரதிராசா கொஞ்சம் புதுமையாகவும் எடுக்க வேண்டும்.

மாற்று சாதி காதலனை கைப்பிடிக்க முடியாமல் சொந்த சாதியில் மணம் முடித்துக் கொள்கிறாள் அன்னக் கொடி. கணவனின் கொடுமை உச்சத்திற்கு செல்ல தாலியை கழட்டி எறிந்து விட்டு காதலனிடம் தஞ்சம் அடைகிறாள்.காதலனிடமிருந்து அவளைப் பிரிக்கும் சாதிய சமூகத்தையும் குடும்ப உறவுகளையும் எதிர்த்து தகர்த்தெறிந்துவிட்டு வரும் கிராமத்து பெண்தான் இந்த அன்னக்கொடி.

கிராமங்களில் வாழும் கந்துவட்டிக் காரனின் குடும்பம் எந்த அளவிற்கு வக்கிரமாகவும் தங்களையே சிதைத்துக் கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது என்பதை இயக்குனர் கண் முன்னே நிறுத்துகிறார். மேட்டுக்குடி சமூக பெண்களிடம் இருக்கும் அளவிற்கு தாலி குறித்த புனிதமோ மறுமணம் குறித்த தயக்கங்களோ எளிய மக்களிடம் கிடையாது என்பதே அன்னக்கொடி போன்ற திரைப்படங்கள் நமக்கு உணர்த்தும் உண்மை.பெண்களின் மறுமணம், தாலி அறுப்பு போன்றவை கள்ளர் சமூகப் பெண்களிடம் சாதாரணமே என்று கூறிய கிழக்குச் சீமையிலே,பசும்பொன் போன்ற திரைப்படங்களின் வரிசையில் அன்னக் கொடியையும் நாம் பாராட்டலாம்.

நம் சாதிப் பொண்ணை கட்டுனா,அவன வெட்டு என்று தாழ்த்தப்பட்ட இளைஞர்களை குறிவைத்து பேசிவரும் இச்சூழலில் அன்னக் கொடி போன்ற திரைப்படங்கள் வரவேற்கத்தக்கவை.அதுவும் பாரதிராசா போன்ற படைப்பாளிகள் தன் சாதியின் பிற்போக்குத்தனத்தையும், வக்கிர பண்பாட்டையும் நேர்மையுடன் விமர்சிப்பது பாராட்டப்பட வேண்டிய ஓன்று.

இடைநிலை சாதிகளை சமூக காவலர்களாக சித்தரித்து வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் எதார்த்தங்களை சொல்லி, வெட்டிப் பெருமைகளை வேரோடு சாய்த்திருக்கிறாள் இந்த அன்னக் கொடி.

இந்தப் படம் நல்ல படம் என்பதற்கு இன்னொரு சாட்சி ஒன்று இருக்கிறது. தேவர் பாசறை என்கிற அமைப்பு இப்படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறது.இது போதுமே இந்தப் படம் இன்றைய காலகட்டத்திற்கு தேவை என்பதை நமக்கு உணர்த்த. காதலுக்கு சாதி பார்க்கத் தெரியாது என்கிற கருத்தோடு இத்திரைப்படம் நிறைவடைகிறது. ஏற்கனவே பலமுறை சொன்ன கருத்தாக இருந்தாலும் மீண்டும் இச்சூழலுக்கு தேவைப்படுகிற கருத்தாகவே இருக்கிறது.

Pin It