தமிழக நடிகர் கமல்ஹாசன், தானே எழுதி, இயக்கி, நடித்து அண்மையில் வெளியாகியுள்ள விஸ்வரூபம் எனும் திரைப்படம், பல்வேறு சிக்கல்களிலிருந்து விடுபட்டு உலக நாடுகளின் திரையரங்குகளில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. நேரடியாக வீடுகளுக்கே கொண்டு செல்லும் டி.டி.எச். தொழில்நுட்பத்தில் முதலில் வெளியிடுவதாக அறிவித்த கமல், திரையரங்க உரிமையாளர்களின் நெருக்குதல்களுக்குப் பணிந்து, தனது வியாபாரம் நட்டமாகி விடக்கூடாது என்பதற்காக தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
 
kamal_vishwaroopam_380பிறகு இஸ்லாமிய அமைப்புகளின் தீவிர எதிர்ப்பின் காரணமாக இத்திரைப்படம் பெரும் நெருக்கடிக்கு ஆளானது. படத்தில் வரும் பல்வேறு காட்சிகள் இஸ்லாத்தை கேவலப்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்தப் பின்னணியிலிருந்து 'விஸ்வரூபம்' திரைப்படத்தை அலசி ஆராய வேண்டியுள்ளது.
 
உலகத்தின் அண்ணனாக உருவெடுத்திருக்கும் அமெரிக்கா, தனக்கு சாதகமான கருத்தியலை மக்களிடம் திணிக்கின்ற பல்வேறு முயற்சிகளில் ஒன்றாகத்தான் அங்கிருந்து வெளியாகும், இஸ்லாமியர்களுக்கு எதிரான ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். தன்னை மற்றொரு அண்ணனாக உருவகித்துக் கொண்டிருக்கும் இந்தியா, அமெரிக்க சிந்தனையை ஒட்டியே தனக்கேற்ற கருத்தியலை உலகம் முழுக்க உருவாக்க முனைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இஸ்லாமிய எதிர்ப்புச் சிந்தனைகள். இந்திய மாநிலங்களில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் இது போன்றதொரு சிந்தனை வெளிப்பாட்டை நாம் அவதானிக்கலாம். தமிழ்த் திரையுலகும் அதே சிந்தனைப் போக்கில் தன் பயணத்தைத் தொடங்கி பல ஆண்டுகளாகின்றன. கமலின் விஸ்வரூபத்தில் அச்சிந்தனை பேருருக் கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.

உலக நாடுகளில் வாழும் பல்வேறு இனங்கள் தங்களின் இருப்பிற்காகவும், மண் மீட்பிற்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன. அவ்வினங்களின் தேசிய அடையாளங்களை மறைத்து, போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, அதனை உலகத் தீவிரவாதமாக அனைவரையும் ஏற்கச் செய்து, போராடும் இனங்களை ஒடுக்கி அங்குள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
 
அப்படியொரு இன ஒடுக்குமுறைக்கு ஆளான நாடுகளுள் முதன்மையானது ஈராக். அழிவு ஆயுதங்களை ஈராக் தயாரிக்கிறது என்ற பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, அந்நாட்டின் மீது போரைத் திணித்த அமெரிக்கா, இறுதியில் வென்று, அந்நாட்டின் அதிபராய்த் திகழ்ந்த சதாம் உசேனை பன்னாட்டு நீதிமன்றில் நிறுத்தி மிகக் கேவலமான முறையில் தூக்கிலிட்டது. இப்போது ஈராக்கின் எண்ணெய் வளம், அமெரிக்காவின் பொருளாதார மேம்பாட்டிற்குக் கைகொடுக்கிறது.

அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு வர்த்தக மையத்தின் இரட்டைக் கட்டிடத்தைத் தாக்கினார்கள் எனக் குற்றம்சாட்டி, ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்து, அந்நாட்டை ஆண்ட தாலிபான்களை ஒடுக்கி, அதன் தலைவர்கள் பலரைக் கொடூரமாகக் கொன்று குவித்தது. தாலிபான்களின் முக்கியத் தலைவர்கள் ஒசாமா பின்லேடன் மற்றும் முல்லா ஓமர் ஆகியோரைத் தேடி ஆஃப்கானிஸ்தானுக்குள் புகும் நேட்டோ படைகள் அங்கே கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துகின்ற காலத்திலும், பிறகு ஒசாமா கொல்லப்படும் நேரத்திலும் நடைபெறுவதாக விஸ்வரூபத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது.
 
இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று இஸ்லாத்துக்குள் இருக்கின்ற வெகு சில தீவிரவாத இளைஞர்களை காட்சிப்படுத்தினார்கள். தற்போது கமல், இஸ்லாத்தையே தீவிரவாத மார்க்கமாகக் காட்டுவதற்கான கோலத்தில் முதல் புள்ளியை இட்டிருக்கிறார். இது தான் விஸ்வரூபம். அமெரிக்காவின் மிக உயரிய திரைப்பட விருதாகக் கருதப்படும் ஆஸ்காரை நோக்கி நடிகர் கமல் நீண்ட நெடுங்காலமாக பயணம் செய்து கொண்டிருக்கிறார். எப்படியாவது அதை அடைந்தே தீருவது என்ற அவரது பயணத்தில் இறுதியாய்க் கடந்திருப்பது விஸ்வரூபம்.
 
அமெரிக்காவைப் பொருத்தவரை இஸ்லாத்தைக் காயப்படுத்தி, அதன் கண்ணியத்தைக் குலைக்கின்ற கருத்தியலுக்கு பொதுவாகவே முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதனைச் சரியாகப் புரிந்து கொண்டு, தனது ஆஸ்கார் பயணத்திற்கும், ஹாலிவுட்டை நோக்கிய நகர்வுக்கும் மிகச் சரியான செயல் திட்டத்தோடு களம் இறங்கியிருக்கிறார் கமல். இந்தத் துணிச்சலின் காரணமாகத்தான் 'தமிழகத்திலிருந்து வெளியேறி வேறு மதச்சார்பற்ற மாநிலத்திலோ, நாட்டிலோ குடியேறுவேன்' என்று தனிப்பட்ட திரை வணிகத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பீட்டிற்காக ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் அவதூறு பூசி, சில முற்போக்கு முகமூடிகளை தன் பால் இழுக்க முயற்சி மேற்கொண்டார். இதற்காகவே காத்திருந்ததுபோல், அவரது திரையுலக நண்பர்கள் மற்றும் பிற தளங்களைச் சேர்ந்தோர் கமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.
 
இங்கே யாருக்கும் வணிகம் செய்ய உரிமை உண்டு. ஆனால் அந்த வணிகம் எப்படிப்பட்டது? குறிப்பிட்ட தரப்பாரை அல்லது நுகர்வோரை காயப்படுத்துவதாகவோ, அப்பொருள் கலப்படம் கொண்டதாகவோ இருப்பின் அதற்கான சட்ட முறைமைகளுக்குக் கண்டிப்பாகப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இது கமல் என்ற திரைப்பட வியாபாரிக்கும் பொருந்தும். அவரின் 'விஸ்வரூப' வணிகம் இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளைப் பாதிப்பதாக இருந்தால், காயப்படுத்துவதாகக் கருதப்பட்டால் அதற்கு உரிய பதிலைச் சொல்ல வேண்டியது அவரின் கடமையல்லவா? படைப்பாளியின் உரிமையும், பொறுப்புணர்வும் சமூகத்தின் சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை மதிப்பதிலும், அதன் கண்ணியத்தைக் காப்பதிலும் அல்லவா இருக்கிறது? இதில் எங்கே 'கலாச்சார தீவிரவாதம்' வந்தது?
 
காலங்காலமாய் தமிழ்த் திரையுலகம் நடத்தும் 'கருத்தியல் பயங்கரவாதத்தை' விட இந்தக் கலாச்சார தீவிரவாதம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்து. கமலோடு சேர்ந்து, அவரது நண்பரும், தொழில் போட்டியாளருமான இரஜினிகாந்த்தும் இணைந்து ஒரு தலைமுறையையே பாழடித்து, அவர்களை வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாய் மாற்றி வைத்திருப்பதைவிடவா, விஸ்வரூபத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கலாச்சார தாக்குதலை நடத்திவிட்டன? தேவர்மகன் மற்றும் விருமாண்டி திரைப்படங்கள் தென்மாவட்ட சாதிக் கலவரங்களுக்கு தூபம் இட்ட படைப்புகள் என்பதை நடிகர் கமலால் மறுக்க முடியுமா? அதுபோன்ற அச்சத்தின் காரணமாய்த்தான் விஸ்வரூபம் திரைப்படத்தை இஸ்லாமிய அமைப்புகள் கூர்மையாகக் கண்டிக்கத் தொடங்கின. இதிலென்ன பிழையிருக்க முடியும்?
 
'வேட்டிய கட்டிய ஒருவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வர வேண்டும்' என்று சொல்வதற்காக நடிகர் கமலுக்கு வழங்கப்பட்ட கருத்துச் சுதந்திரம்தான், என் மதத்தைத் தவறாக உருவகம் செய்துள்ளாய் என்று சொல்வதற்கும், அதற்காகப் போராடுவதற்கும் இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. கமலின் கருத்துச் சுதந்திரம் எப்படி சரியானதோ அதைப் போன்றதுதானே இஸ்லாமிய நண்பர்களின் போராட்டச் சுதந்திரமும்.
 
கருப்புத்துணியால் கண் கட்டப்பட்டிருக்கும் இஸ்லாமிய சிறுமியொருத்தி தன் முன்னே கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கிகளையும், குண்டுகளையும் தடவிப் பார்த்து மிகச் சரியாகச் சொல்கிறாள் என்ற காட்சிப்படுத்துதலின் வாயிலாக கமல், இஸ்லாத்தைப் பின்பற்றுவோர் கருவிகளைக் கையாள்வதில் வல்லவர் என்ற கருத்தியலையும், இதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு துணை போகிறவர்கள் என்ற ஆபத்தான விசமத்தையும் அல்லவா ஒவ்வொரு மனதிலும் பதிய வைக்கிறார். 'ஆஃப்கானிஸ்தானத்து முஸ்லீம்களைத்தான் சொல்கிறேனே தவிர, இந்திய முஸ்லீம்களை அல்ல' என்று அவர் முன் வைக்கும் வாதம், நகைப்பிற்குரியதாகத்தான் இருக்கிறது. எந்த முஸ்லீம்களைச் சொன்னாலும் இருவருக்கும் பொதுவானது தானே இஸ்லாம் மார்க்கம். இது கூடத் தெரியாதவரா கமல்?
 
nasser_viswaroopam_380'உன்னைப் போல் ஒருவன்' படத்திலும் இது போன்ற பல்வேறு காட்சிப்படுத்துதல்களைக் கமல் செய்திருக்கிறார். அப்போது அவர் குறிப்பிட்டுச் சொன்னது ஆஃப்கானிஸ்தானத்து முஸ்லீம்களையா... அல்லது இந்திய முஸ்லீம்களையா..? இதற்கு கமலின் பதிலென்ன..? படைப்பாளியின் படைப்புரிமையில் தலையிடுவது மிகவும் தவறு என்று சொல்லும் பொதுப்புத்திக்கு, அப்படைப்பாளியின் ஏகாதிபத்தியக் கருத்தியலையும், இரண்டக சூட்சுமத்தையும் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால், தமிழ்ச்சமூகம் திரைப்படத்தால் வீழ்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. நல்லவேளையாக இஸ்லாமியச் சொந்தங்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள்.
 
புறங்கைகள் கட்டப்பட்டு தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், கடத்தி வந்த நபர்களிடம் வேண்டுகோள் விடுத்து நமாஸ் செய்த பின்னர், வெறும் பத்தே நொடிகளில் மிகக் கொடூரமான முறையில் கடத்தியவர்களைக் கொன்று பதம் பார்க்கும் காட்சியில் பார்வையாளனின் மனதில் எதைப் பதிய வைக்க முயற்சி செய்கிறார் கமல்? சக உயிர்களிடம் அன்பைப் போதிக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் புனித திருக்குரான் வசனத்தை உச்சரித்த பின்னர், விஷாம் காஷ்மீரி அகமத் என்ற முஸ்லீம் செய்கின்ற செயலா அது? அல்லது திருக்குரான் அப்படியொரு வன்மத்தைப் போதிக்கிறது என்பதாகக் காட்டுகிறாரா?
 
தசாவதாரம் என்ற படத்தில் 'முகுந்தா... முகுந்தா...' என்ற பஜனைப் பாடலையும், விஸ்வரூபத்தில் 'உன்னைக் காணாது நானிங்கு நானில்லையே' என்ற பாடலையும் உலகம் முழுக்கக் கொண்டு செல்லும் துணிச்சல், கமலின் பகுத்தறிவுச் சிந்தனைக்கு மட்டுமே வெளிச்சம். 'வைதீகப் பார்ப்பானைக் காட்டிலும், லௌகீகப் பார்ப்பான் மிக மோசமானவன்' என்று பெரியார் சொன்ன சொல்லின் பொருளுக்கு கமலும் ஓர் உதாரணம்தான் போலும்!
 
நேட்டோ தாக்குதலில் வெள்ளைக்கார பெண் மருத்துவச்சி ஒருவர் இறந்து போனதை காட்சிப் படுத்தியிருந்த கமலுக்கு, சிங்கள பயங்கரவாதத்தால் இறந்து போன ஒன்றரை இலட்சம் தமிழ்ச் சொந்தங்கள் குறித்தும், அங்கே மருத்துவப் பணியாற்றிய மருத்துவர்கள் சிங்கள போர்ப்படையால் கொல்லப்பட்டது குறித்தும், கண்ணியமிக்க விடுதலைப் போரை நடத்திய விடுதலைப் புலிகள் குறித்தும் வெளியுலகுக்குச் சொல்ல எந்த படைப்புரிமை தடுத்தது என்று சொல்ல முடியுமா..? தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று விஸ்வரூபத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்காக ஊடகங்களிலெல்லாம் கூவிக் கூவி பேட்டியளித்த கமலுக்கு, ஈழத்தில் இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் தமிழனுக்கு இழைக்கப்பட்ட பயங்கரவாதம் குறித்து கொஞ்சமும் கவலை இல்லாமல் போனது ஏன்? போர் நடைபெற்ற காலத்தில் 'தெனாலி' என்றொரு திரைப்படத்தின் மூலம் ஈழத்தமிழனை கோமாளியாகச் சித்தரித்த கமலிடம் இதனை எதிர்பார்ப்பது மிகவும் பிழையானதுதானே!
 
அன்பிற்குரிய கமல், திரைத்துறையில் உங்களின் உழைப்பு, உங்கள் தொழிலின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை, எங்கு பொருளீட்டினீர்களோ, அங்கேயே அதனை முதலீடு செய்கின்ற உங்களின் நேர்மை பாராட்டிற்குரியதுதான். ஆனால்..., அதனால் தமிழ்ச் சமூகத்திற்கு விளைந்தது என்ன? 'வேறு நாட்டில் குடியேறுவேன்' என்று நீங்கள் சொன்ன வசனத்தை, உங்களை வைத்துப் படமெடுத்து, ஓட்டாண்டியாகி, தற்கொலைக்கு முயற்சி செய்து, நடுத்தெருவில் அலைகின்ற தயாரிப்பாளர்கள்தான் சொல்லியிருக்க வேண்டும். உங்களுக்காக, உங்கள் நண்பர் இரஜினி இலவசமாக நடித்துத் தருகிறேன் என்று முன் வந்ததைப் பார்த்தபோது, இருவரின் தொழில் நட்பு எங்களுக்கு புல்லரிப்பைத் தந்துவிட்டது! தமிழ் மக்களின் எந்தப் பிரச்சனையிலாவது இப்படியொரு முன்னெடுப்பை நீங்களோ அல்லது உங்கள் நண்பரோ மேற்கொண்டிருப்பீர்களா? தமிழன் இளித்தவாயனாய் இருக்கின்ற காரணத்தால்தான், இன்றைக்கும் உங்களின் நாடகங்களை வாய் பிளக்க பார்த்துக் கொண்டிருக்கிறான்.
 
இறுதியாக ஒன்று... கமல் அவர்களே..! உங்களுக்கு ஒன்றென்றால், கருணாநிதியைப் போல் நீங்களும் தமிழனாவீர்கள்! மற்ற நேரங்களில் இந்தியம் பேசி உணர்வுள்ள தமிழர்களை எள்ளி நகையாடுவீர்கள்! நீங்கள் யாரென்றும் புரிகிறது... எப்பேர்ப்பட்ட தீயென்றும் தெரிகிறது... எவன் எப்படிப் போனாலும் உங்களின் ஆஸ்கார் பயணம் நில்லாமல் தொடரட்டும்! வாழ்த்துகள் கமல்!
 
- இரா.சிவக்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It