மரணதண்டனைக்கு எதிரான கருத்தியல் விவாதங்கள் தமிழகத்தை மய்யம் கொண்டிருக்கும் இச்சூழலில் எந்தவித பிரச்சார நெடியும் இல்லாமல் மரணதண்டனைக்கு எதிரான குரலை கலைவடிவில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் வசந்தபாலன். இன்றைய மதுரை மாவட்டம் மற்றும் அதனருகில் இருக்கும் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை மய்யப்படுத்தி கதை நகருகிறது. பிரான்மலைகள்ளர்களின் 250 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குனர். பிரான்மலைகள்ளர் சமூகம் இன்றளவும் குலத்தெய்வ வழிபாட்டின்படியே ‘பங்காளி’, ‘மாமன்’ ‘மச்சான்’ உறவை வகுத்துக் கொள்கிறது. கதாநாயகன் ஆதியிடம் 'நீ என்ன சாமி கும்பிடுற?' என்று பசுபதி கேட்பது போன்ற காட்சியை உசிலம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இன்றும் நாம் கேட்கலாம்.

aravaan_560

ஒச்சாயி, கொத்தளம், பெரியாம்பிளை என இப்படத்தில் வரும் பெயர்கள் அனைத்தும் கருமாத்தூர், செக்கானூரணி பகுதிகளில் குலதெய்வங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. களவிலிருந்துதான் காவல் பிறக்கிறது என்பது இத்திரைப்படம் கூறும் செய்தி மட்டுமல்ல வரலாறு கூறும் உண்மையும் கூட. களவின் பரிணாம வளர்ச்சியே காவல். களவுச் சமூகமாக அறிவிக்கப்பட்ட பிரான்மலைகள்ளர், கொண்டைய கொட்ட மறவர் போன்ற சமூகங்கள் காவல் சமூகமாக இருப்பது நடைமுறை உண்மை.

மற்றபடி, மேல்தட்டுவர்க்க பெண்கள், ஆண்களின் அடிமைகளாக போகப் பொருளாக இருந்ததையும் கள்ளர் கூட்டத்தில் பெண்கள் வீரத்துடனும், தன்துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையுடனும் இருந்த வரலாற்றை கதைபோகிற போக்கில் பதிவு செய்யும் வசந்தபாலன் பாராட்டுக்குரியவர்.

250 ஆண்டுகளுக்கு முன்னால் அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு, சனாதனப் படிநிலையில் கீழ் நிலையிலிருந்த பிரான்மலைகள்ளர் சமூகம் இன்று ‘சாதி இந்து’ மனநிலையுடன் இருப்பதன் காரணத்தை பகுத்தறிவாதிகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மராத்திய மாநிலத்தில் களவைத் தொழிலாகக் கொண்ட ஒரு சமூகத்தை தண்டிக்காமல், அவர்களுக்கு கல்வி கொடுத்து அவர்களை நெறிபடுத்திய வரலாற்றை அம்பேத்கர் பதிவு செய்கிறார். பிரான்மலைகள்ளர் போன்ற குற்றப்பரம்பரை சமூகங்களையும் ‘இந்துத்துவத்தால்’ பாதிக்கப்பட்ட பிரிவில் சேர்த்து அவர்களுக்காகவும் போராடி உள்ளார் அம்பேத்கர். பெரியாரையும், அம்பேத்கரையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்ட சமூகமாக ‘பிரான்மலை கள்ளர்களை’ மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களோடு இணைந்து பிரான்மலைகள்ளர்களும் இந்துத்துவத்திற்கு எதிரான சமரில் ஈடுபடவேண்டும். அப்போதுதான் வரலாற்றில் தமிழர்களுக்கான இடம் முக்கியத்துவம் பெறும்.

ஆண்டாண்டு காலமாக அரசபயங்கரவாதத்திற்கு பலியாகி வருகிறது அடிமைகளின் உயிர் என்பது தான் கதையின் கரு. தன் இறுதி நாளை நோக்கிக் காத்திருக்கும் மரண தண்டனைக் கைதியின் மனநிலையை இத்திரைப்படம் வலியுடன் பதிவு செய்கிறது. சமூகத்திற்குப் பயன்பட வேண்டிய ஒருவன் மரணத்தை நெருங்கும் காட்சிகள் பேரறிவாளன் உட்பட மூவரை நமக்கு நினைவுப்படுத்துகிறது. தன் தாய் சொந்தங்களை களவிலிருந்து காவல் சமூகமாக மாற்றிவிட்டு கழுவிலேறும் கதாநாயகனின் செயல், சிறையில் பலருக்கு கல்வி அளித்துக் கொண்டிருக்கும் நம் பேரறிவாளனை கண் முன் நிறுத்துகிறது. ஏடறிந்த வரலாற்றுக் காலம் முதல் மரணதண்டனை என்பது அதிகாரவர்க்க நலன் சார்ந்தே அமைந்திருக்கிறது. மனுநீதியின் படி பார்ப்பனர்கள், சூத்திரர்களுக்கு மரண தண்டனை வழங்கியிருக்கிறார்கள். நிலவுடைமைச் சிந்தனையில் ஆண்டைகள், அடிமைகளுக்கு தீர்ப்பு தந்திருக்கிறார்கள்.

மத குருமார்களின் கட்டளைப்படி, இயேசுநாதருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. வைதீக வெறியர்கள் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றினார்கள். மத அடிப்படைவாத சட்டங்களால் விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டார். பழமைவாதிகளின் தீர்ப்பால் சாக்ரடீசு கொல்லப்பட்டார். அமெரிக்க விரிவாதிக்கத்திற்கு உடன்படாத நாடுகளின் அதிபர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்திய அரசு வழங்கும் தண்டனைகளுக்குப் பின்னால் சாதியும், வர்க்கமும், மதமும் முக்கிய வினையாற்றுகின்றன. இதுநாள் வரை பார்ப்பனரோ, மார்வாடியோ குற்றவாளிக் கூண்டில் நின்றதில்லை. போபால் விஷவாயுவிபத்துக்கு காரணமான ‘ஆண்டர்சன்’ என்னும் முதலாளி இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறான். என்கவுண்டர் என்கிற பெயரில் அரசு செய்யும் கொலைகளுக்கு பலியானவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இன மக்களே. ‘அரவான்’ காலம் தொட்டு பேரறிவாளன் காலம் வரை, அடக்குமுறைகளுக்கு எதிரானவர்களையும் அரசை எதிர்க்கத் திராணியற்றவர்களையும் பலி கொடுக்கத் துடிக்கிறது அரசு பயங்கரவாதம். 

aravaan_3602500 ஆண்டுகளுக்கு முன்பே இப்ராஹீம் நபி அவர்கள் உயிர்ப்பலியிடுதலை தவிர்த்ததாக குரானும், பழைய ஏற்பாடும், யூதர்களின் நம்பிக்கை நூலான தவராத்தும் கூறுகிறது. (பக்ரீத் பண்டிகைக்கான காரணம் அக்கதையில் விளக்கப்பட்டுள்ளது). ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் உரக்கப் பேசிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மரண தண்டனை நடைமுறையில் இருப்பது வெட்கக்கேடான ஒன்றாகும். மூடநம்பிக்கையின் அடிப்படையில் உருவான உயிர்ப்பலி, அறிவியலின் உச்சத்தில் நிற்கும் இக்காலகட்டத்திலும் தொடர்கிறது என்றால் நாம் இன்னும் வளரவே இல்லை என்றுதானே பொருள். மரணதண்டனைக்கு எதிரான இக்காவியத்தை நாம் பிரச்சாரமாக்க வேண்டும். ஆனால் சில அறிவுஜீவிகள் இத்திரைப்படத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தர்க்காதியாக இல்லை என்றும் புலம்புகிறார்கள். சென்னை வாழ் அறிவுஜீவிகளே, இணையத்தில் (குறிப்பாக Face Book) உட்கார்ந்து கொண்டே உலக அரசியலைப் பேசி முடித்து விடும் உங்களுக்கு, தென் மாவட்டங்களைப் பற்றியோ, மதுரை வரலாறு குறித்தோ, சாதியப் படிநிலை குறித்தோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால் தான் உங்களுக்கு ‘அரவான்’ அந்நியனாகி விடுகிறான்.

சமூக பொறுப்புணர்வு கொண்ட எந்தவொரு மனிதனாலும் இப்படத்தின் கடைசி இருபதுநிமிடம் அழாமல் இருக்க முடியாது. அர்ப்பணிப்பும், காதலும் இணைந்த ‘ஆதி’யின் கதாபாத்திரம் நெகிழச் செய்கிறது. தாய் ஊரின் மானம் காப்பாற்றுவதற்காக ‘உயிரையே’ விலையாகக் கொடுக்க சம்மதிக்கிறான் சின்னா. இது போன்ற அதி அற்புதமான மனிதர்களின் உயிரைத்தான் மரணதண்டனை என்கிற பேரில் நாம் காவு கொடுத்து வந்திருக்கிறோம். இனியும் இந்த அவலம் தொடர அனுமதிக்கக் கூடாது. புரட்சிக்கான ஒரு ஆயுதமே சினிமா ‘தொழில் நுட்பம்’ என்கிற லெனினின் வாசகத்திற்கேற்ப மரண தண்டனைக்கெதிரான ஆயுதமாக அரவான் பயன்பட்டிருக்கிறான். அதற்கான கருவை உருவாக்கிய காவல் கோட்டம் சு.வெங்கடேசனுக்கும், வசந்தபாலனுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கப் போவதில்லை. என் தமிழ்சமூகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மரண தண்டனையை மாண்டொழியட்டும்!
மனிதநேயம் மலரட்டும்!

Pin It