மெரினா திரைப்படம் ஒரு பார்வை

பசங்க ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் மெரினா திரைப்படத்தில் - இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் நாயகன், உள்ளிட்டோர் அறிமுகம் என்பதே முதலில் ஆச்சர்யத்தை அளிக்கும் செய்தியாகும். தனது கதையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, சினிமாவின் வெற்றி சூத்திரங்களாக அறியப்படும் குத்துப்பாட்டு, சண்டை எதையும் படத்தில் வலிந்து திணிக்காமல், படத்தை சொந்தமாகத் தயாரிக்க முன் வந்த தைரியம் தமிழ் சினிமாவில் எத்தனை பேரிடம் உள்ளது? இதற்காக முதலில் இயக்குனரைப் பாராட்டுவோம்.

marina_575

நாயகி, நாயகன், அவருடைய நண்பனாக வருபவர், அம்பிகாபதியாக வரும் சிறுவன், அவனுடைய நண்பனாக வரும் சிறுவர்கள், தபால்காரர், பாட்டு பாடி பிழைக்கும் மனிதர், அவருடைய மகள், மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரம், குதிரைக்காரர் என படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு 100 விழுக்காடு நேர்மை செய்திருக்கிறார்கள்,

நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் ஒப்பனையில்லாமல் நாம் அன்றாடம் பார்க்கும் சக மனிதர்களின் பிரதியாக தோன்றியிருக்கிறார். பக்கோடாவாக முந்தைய படமான பசங்க படத்தில் அறியப்பட்டு இப்படத்தில் அம்பிகாபதியாக நடித்துள்ள சிறுவன், இரண்டாவது படத்திலேயே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறான். மகன் மற்றும் மருமகளால் கைவிடப்பட்ட நிலையில் அவர்களைப் பழிவாங்க பிச்சை எடுக்கும் பெரியவர் நெகிழ வைக்கிறார். வசனமே இல்லாமல் வந்து போகும் குதிரைகாரரின் அற்புதமான நடிப்பு, கடற்கரையை வாடகைக்கு விட்டுள்ளதாக அவ்வப்போது கூறிக்கொண்டு திரியும் மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரமாக நடித்திருக்கும் நண்பர் மற்றும் லந்து பட்டாசு வசனங்களால் திரையரங்கில் சிரிப்பலையால் முழ்கடிக்கும் நாயகனின் நண்பர் ஆகியோர் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

அந்த சிறுவர்களிடையே இயல்பாய் எழும் மோதல்கள், புரிதலுக்குப் பின்னால் தோன்றும் தோழமை, அவர்களுக்கே உண்டான சிறுசிறு கேளிக்கைகள் என திரைக்கதையை சிறுவர்களின் ஊடாக பயணிக்கச்செய்திருக்கும் இயக்குநர், ஒவ்வொரு பாத்திர படைப்பிலும், மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு, அந்தந்த பாத்திரங்களின் சொந்த வாழ்க்கையினூடாக சமூக சூழல்கள் மற்றும் அவலங்களை அலசியிருக்கிறார்.

marina_601

மெரினா என்பது காதலர்களின் ரகசிய சந்திப்பிற்கான இடமாகவும், மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் கேளிக்கை தளமாகவும், பணிச்சூழல் மிகுந்து விட்ட சென்னை மக்களின் மனதை ஆற்றுப்படுத்தும் பகுதியாகவும் மட்டுமே தமிழ் சினிமாவால் இதுவரை கட்டமைக்கப்பட்டு வந்த ஒரு பிம்பம் இப்படத்தால் உடைபட்டிருக்கிறது. சென்னை வரும் சுற்றுலா பயணிகளின் பயனத்திட்டத்தில் முக்கியமாக பார்க்க வேண்டியன பட்டியலில் முதலிடம் வகிக்கும் பகுதி எனவும் நம்முடைய பொதுப்புத்தியில் உரையவைக்கப்பட்டுள்ள வழமையான எண்ணத்தை மாற்றும் விதமாக, விளிம்பு நிலை மனிதர்களாக அறியப்படும் சென்னையின் சாலையோர சிறுவர்கள், ஆதரவற்றோர், சுண்டல், தண்ணீர் பை விற்கும் சிறுவர்கள் என விளிம்பு நிலை மனிதர்களாக அறியப்படுவோரின் வாழ்க்கையிலும் ஒரு பொழுதுபோக்கு தலமான மெரினா முக்கிய பத்திரம் வகிக்கிறது என்பதை ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தன்னுடைய குழுவினரின் பங்களிப்போடு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

இயல்பான கதையோடு, எளிய பத்திரங்களைக் கொண்டு, தனது ஒவ்வொரு படமும், தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாக பதிவு செய்யப்படவேண்டும் என்ற உத்வேகத்தோடு பணியாற்றும் இயக்குநர், தமிழ் சினிமாவை அடுத்த தளம் நோக்கி உயர்த்தும் தமிழின் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் தன்னுடைய இருப்பை மீண்டுமொருமுறை பதிவுசெய்துள்ளார். 

- பண்ரூட்டி காமராஜ் ([email protected]. com)

Pin It