ஸ்ரீராஜகாளியம்மன் மீடியாஸ், மோகன் நடராசன் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் “தெய்வத் திருமகள்”. ஐந்து வயது சிறுவனுக்குரிய மனவளர்ச்சியைக் கொண்ட கிருஷ்ணாவுக்கும், அவனிடமிருந்து பிரிக்கப்படும் அவனது குழந்தைக்குமான உறவும் - உணர்ச்சியும் கலந்த பாசப் போராட்டமே ‘தெய்வத் திருமகள்’.

மனவளர்ச்சி குன்றிய ஒருவனும், அவனுக்குப் பிறக்கும் குழந்தையும் அவர்களுக்கான வாழ்க்கையும் என அழகான ஒரு கதையை, யூகிக்க முடியாத வகையில் அருமையான ஒரு சினிமாவாக இயக்குநர் விஜய் படைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்களை நடத்தும் தாளாளருக்கு இரண்டு மகள்கள், மூத்த மகள் செல்வச்செழிப்பை விட்டுவிட்டு சமூக சேவை செய்யப் போய்விடுகிறாள். போன இடத்தில் மனவளர்ச்சிக் குன்றிய கிருஷ்ணாவை சந்தித்து காதலித்து திருமணமும் செய்து கொள்கிறாள். பெற்றோர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலா எனும் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து, குழந்தையின் முகத்தைப் பார்க்காமலே இறந்தும் போகிறாள்.

மனவளர்ச்சிக் குன்றிய கிருஷ்ணா குழந்தையை சீராட்டி வளர்க்க பள்ளி செல்லும் வயதை அடைகிறாள் நிலா. பள்ளிக்கூடத்து நிர்வாகியான ஸ்வேதா, நிலாவின் தோழியாக பழகுகிறாள். ரொம்பவும் சுட்டியான நிலாவை ஸ்வேதாவிற்கு ரொம்பவும் பிடித்துப் போகிறது சில நாள் கழித்துத்தான் தெரிகிறது. நிலா இறந்து போன தனது அக்கா பானுமதியின் மகள் என்று.

தாளாளரும், இரண்டாவது மகளும் நிலாவைத் தங்களுடன் அழைத்துச் செல்ல, தனது செல்ல மகளை மீட்க கிருஷ்ணா, தனது சொந்த ஊரான ஊட்டிக்கு அருகிலிருக்கும் கிராமத்திலிருந்து சென்னை வருகிறான். அவனுக்கு வக்கீல் அனுஷ்கா, சந்தானம், ப்ரியா என எல்லோரும் உதவுகிறார்கள். தாளாளர் மூத்த வழக்கறிஞரான நாசரின் துணையோடு நிலாவை கிருஷ்ணாவிடம் ஒப்படைக்க மறுக்க, நீதிமன்றத் தீர்ப்பும், கிருஷ்ணா எடுக்கும் முடிவுமே இறுதியான காட்சிகள்.

விக்ரம் மிகச்சிறந்த நடிப்பின் மூலம் வாழ்ந்து காட்டியுள்ளார். உணர்வை மட்டுமல்ல, அறிவைக்கூட விலை பேசும் சமூகத்தில் எதுவொன்றும் அறியாத கிருஷ்ணாவும், நிலாவுக்குமான பாசப்பிணைப்பு எல்லோரையும் நெகிழ வைத்து விடுகிறது. பின்னணி இசை, பாடல், ஒளிப்பதிவு, திரைக்கதையின் வேகம் என நல்ல சினிமாவை எல்லோருக்கும் கொண்டு போக முடியுமென நிருபித்துள்ளது தெய்வத் திருமகள்.

நிலாவும், கிருஷ்ணாவும் ஆடும் நடனம் நல்ல கதையை மட்டுமே மனதில் பதிக்கும். கிருஷ்ணாவை முதலில் இல்லை என்றாலும் படிப்படியாக புரிந்து கொள்ளும் சக மனிதர்கள் என மனதின் நெஞ்சைத் தொடும் காட்சிகள் பொதிந்து கிடக்கிறது. தெய்வத் திருமகளின் தத்திச் செல்லும் குழந்தையை வாரி அணைக்க வேண்டும். எல்லாக் குழந்தைகளையும், எல்லா மனிதர்களையும் நேசிக்க வேண்டும் என்று சொல்கிறது தெய்வத்திருமகள்.

இப்படியான நல்ல சினிமாக்கள் மூலமாக அரிவாள், ரத்தம், வெட்டு, குத்து, கதறல் சினிமாக்களுக்கு நிரந்தர விடுமுறை அளிக்க வேண்டும்.

(இளைஞர் முழக்கம் ஆகஸ்ட் 2011 இதழில் வெளியானது)

Pin It