கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி கோவையில் "கோணங்கள்"என்ற இலக்கிய அமைப்பின் சார்பாக"தி சைக்கிளிஸ்ட்" என்ற ஈரானிய திரைப்படம் திரையிடப்பட்டது. உலக மற்றும் இந்தியாவின் சிறந்த படங்களைத் தொடர்ந்து திரையிட்டு சினிமா பற்றிய விழிப்புணர்வையும், ரசனையையும் மேம்படுத்துகிற வகையில் "கோணங்கள்" அமைப்பு செயல்பட்டுவருகிறது.

 

உலக அளவில் பல விருதுகளைப் பெற்ற இயக்குநர் "மோசென்மகபல்பப்" அவர்களின் திரைப்படமே "தி சைக்கிளிஸ்ட்". ஈரானுக்கு வரும் ஒரு ஆப்கான் அகதியின் குடும்ப சூழலை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட இப்படம் பாசம், தனிமனித உழைப்பு, அதைச்சுரண்டும் சூதாட்ட, இடைத்தரகுக் கும்பல், நட்பு, அரசியல் என மொத்த சமூகத்தின் எல்லா குணங்களையும் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது.

தனது மனைவியின் மருத்துவச் செலவுக்குப் பணமின்றி திருட்டு வழிகளில் எல்லாம் செல்ல மனமின்றித் தவிக்கும் கதாநாயகன் தொடர்ந்து இரவும், பகலும் சைக்கிள் விடுகிற தனது திறமையின் மூலமே மனைவியைக் காப்பாற்ற முயற்சிக்கிறான். இதற்கு உதவுபவன் மரணக் கிணற்றில் பைக் ஓட்டும் அவனது நண்பன்.

முஸ்லீம்கள் குடும்பத்தின் மீதும், குடும்ப உறுப்பினர்கள் மீதும் பற்றோ, பாசமோ இல்லாதவர்கள் என்பதாக கூறப்படுவதை இத்திரைப்படம் முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது. தனது மனைவிக்காக உயிரையே பணயம் வைக்கிற அளவுக்கு கடும் உழைப்பைக் கொடுக்கிறான் நாயகன்.

இரவும் பகலும் சைக்கிள் ஓட்டுகிற சிரமத்திற்கு கூட ஒரு இடைத்தரகன் மூலமே ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்வதற்கு முன்பாக எண்ணெய்க்கிணறு தோண்டுவதற்குக் கூலி வேலைக்குச் செல்கிறான் நாயகன். அங்கு கிடைக்கிற கூலி எந்த வகையிலும் மருத்துவ மனைக்கு போதாததாக உள்ளது. பணம் கட்டாவிட்டால் மருத்துவ உதவிகளைத் தொடங்கக்கூட மருத்துவமனை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. வெறும் முப்பது ரூபாய் என்கிற அளவிலான கூலிக்கே அடிதடி நடக்கிறது. அவ்வளவு அகதிகள். அப்படி சிரமப்படும் வேளையில் முதியவர் ஒருவர் லாரிக்கு அடியில் படுத்துத் தற்கொலைக்கு முயற்சிப்பதை நாயகன் பார்க்கிறான். ஆனால் அவனும் தற்கொலைக்கு முயற்சிக்கிறான். ஆனால் இக்காட்சியில் மிக முக்கியமான ஒரு சமூக ஏற்றத்தாழ்வை முரண்பாட்டை மிக அழகாக இயக்குநர் விவரிக்கிறார். ஒரு மணல் மேட்டின் இந்தப் பக்கம் தற்கொலைக்கு முயற்சிக்கிற மனிதர்கள் மறுபுறமோ குதிரையின் மீது சவாரி செய்து கொண்டே ஆட்டிறைச்சியை ஒருவரிடமிருந்து மற்றொருவர் கைப்பற்றுகிற பந்தயம் நடைபெறுகிறது.

அதாவது ஒருபுறம் உயிர்வாழ்வதற்கான போராட்டம் மறுபுறம் மனிதத்தன்மையற்ற விளையாட்டு. இது சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான குறியீடாக அக்காட்சி அமைந்துள்ளது.

ஒரு மனிதனுக்கு சமூகம் உருவாக்குகிற நிர்பந்தம், அவனது திறமை, உழைப்பு போன்றவை எப்படி காசாக மாற்றப்படுகிறது. அது எப்படி சுரண்டப்படுகிறது. அதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிற முயற்சிகளே படத்தின் அடிநாதம். நாயகன் மகனாக வருகிற கதாபாத்திரத்தில் காணப்படும் யதார்த்தம், ஒரு சிறுவனின் உணர்வுகள் போன்றவற்றை இயக்குநர் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். அப்பாவின் உழைப்பு, சிரமம் இவற்றிற்கிடையே தாயின் உடல்நிலை போன்றவைகளின் தாக்கத்தையும் தாண்டி ஒரு சிறுவனாகவே அச்சிறுவனை வாழ வைத்துள்ளார் இயக்குநர்.

இடைத்தரகனின் நிர்பந்தத்தால் இதற்கு முன்பு மூன்று நாட்கள் மட்டுமே இடைவிடாது சைக்கிள் ஓட்டிய நாயகன் தற்போது ஒரு வாரம் சைக்கிள் ஓட்ட ஒப்புக்கொள்கிறான். அவ்வாறு சைக்கிள் ஓட்டுவதை விளம்பரமாக்கவும், வியாபாரம் ஆக்கவும் பணக்காரர் ஒருவரின் உதவியை நாடுகிறான் இடைத்தரகன். அந்தப் பணக்காரரின் உதவியால் விளம்பரம் பெருகுகிறது.

அதே சமயம் அப்பணக்காரர் வேறொரு இடத்தில் ஒரு வாரம் நில்லாமல் சைக்கிள் ஓட்டுகிற காரியத்திற்காக பந்தையம் கட்டி சூதாடுகிறார். எனவே அவரைத் தோற்கடிப்பதற்காக சைக்கிள் ஓட்டுவதை நிறுத்த வேண்டுமென பந்தயத்தின் எதிர்த்தரப்பு முடிவு செய்து தொல்லைகளைத் தருகிறது. ஆனால் ஆதரிக்கிற பணக்காரரோ அரசு உயர் அதிகாரியின் உதவியோடு தொல்லை இல்லாத ஒரு இடத்திற்கு இந்தப் போட்டியை மாற்றி அமைக்கிறார்.

போட்டி நடந்து கொண்டிருக்கும் வேளையில் கிடைக்கிற தொகையை அவ்வப்போது மருத்துவமனையில் கட்டி மனைவிக்கு சிகிச்சை நடக்கிறது.

இடையில் ஒரு நாள் இரவில் தூக்கமும் களைப்பும் தாங்க முடியாமல் கீழே விழுந்துவிடுகிறான் நாயகன். அப்போது அருகில் இருக்கும் நாயகனின் நண்பன் விடியும்வரை சைக்கிள் ஓட்டி சமாளிக்கிறான். ஆனால் மறுநாள் அந்நண்பன் மரணக்கிணற்றில் பைக் ஓட்டும்போது தூக்கமின்மையால் விபத்துக்காளாகிறான்.

எவ்வளவுதான் நேர்மையானவனாக ஒருவன் இருந்தாலும், திறமையாளனாக இருந்தாலும் அவனையும் இச்சமூகம் ஒரு கட்டத்தில் தோற்கடித்தே தீருகிறது என்பதை இக்காட்சியின் மூலம் நமது மனதில் அழுத்தமாகப் பதிவுசெய்கிறார் இயக்குநர்.

சைக்கிள் ஓட்டுகிற நாயகனுக்கு எப்படியாவது மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நிர்பந்தம். அவ்வாறான நிர்பந்தத்தை எவ்வாறு சூதாடிகளும், சுரண்டல்காரர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது, அப் பெரும் பணக்காரர் லட்சக் கணக்கான ரூபாயை பந்தையத்தில் பெற்றுக் கொண்டு கதாநாயகனின் சைக்கிள் ஓட்டத்தை ஒரு வாரத்திற்கு முன்பே நிறுத்திக் கொள்வதாகக் கூறுவதிலும், அதற்காக ஏற்கெனவே நாயகனைப் பராமரிக்க அனுப்பிய மருத்துவர் மூலமே அவனை தூங்க வைக்க மருந்து கொடுக்கச் சொல்வதிலும் வெளிப்படுகிறது.

இறுதியில் இன்னும் சில மணித் துளிகளில் ஒருவாரக் காலக்கெடு முடிவடையும் என்கிற தருணத்தில் வசூலான முழுத் தொகையையும் எடுத்துக் கொண்டு, அக்கூட்டத்தில் பிழைப்பு நடத்த வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு இடைத்தரகன் ஓடிவிடுகிறான். பந்தயத்தில் வெற்றி பெற்ற நாயகனின் சைக்கிள் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிற நிலையில் படத்தை முடித்துவிடுகிறார் இயக்குநர்.

தனது குடும்பத்திற்காக சைக்கிள் ஓட்ட வேண்டிய நிர்பந்தமுள்ள நாயகனைப் போலவே, உயிர்வாழ்வதற்காக தங்களது திறமையையும், உழைப்பையும் ஒவ்வொருவரும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதையும், அவ்வாறு நிர்பந்த்தின் விளைவை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு எவ்வித மூலதனமுமின்றி, பிறரது உழைப்பையே மூலதனமாக்கிச் சுரண்டும் சூதாட்டக்காரர்களைப் போலவே இச் சமூகத்தின் சுரண்டும் வர்க்கங்கள் உள்ளன என்பதையும் ஒரு குறியீடாக இப்படத்தில் தெரியப்படுத்துகிறார் இயக்குநர்.

இவ்வாறான ஒரு சூழலை விளம்பரம் மற்றும் சூதாட்டத்தின் மூலம் பரபரப்பாக்கி மக்களைக் கவர்வது இன்றைய சமூகத்தின் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. அதற்க ஒரு சிறந்த உதாரணம் கிரிக்கெட் விளையாட்டு. உடல் உழைப்பைக் கோருகிற பண்டைக்காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிற பல விளையாட்டுக்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு கிரிக்கெட் எவ்வாறு முதலிடம் பிடித்தது என்பதை இப்படத்தோடு பொருத்திப் பார்க்கும் பொழுது எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

அரசியல் அதிகாரத்தை வாக்களிப்பதன் மூலம் யார்யார் கையிலோ கொடுத்துவிட்டு தொடர்ந்து சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிற அப்பாவிப் பொது மக்களின் மேல் பந்தயம் கட்டிக் கொண்டிருக்கிற அரசியல்வாதிகளையும், அவர்களது குதிரை பேரங்களையும் இப்படத்தின் சம்பவங்களோடு பொருத்திப் பார்ப்பது மிகவும் அவசியமானது.

இவ்வளவு சமூக அவலங்களையும் சொல்கிற இயக்குநர், நாயகனின் மகனும், அக்கூட்டத்தில் பிழைப்புத் தேடிவருகிற ஒரு பெண்ணின் மகளும் நட்புக் கொள்வதன் மூலம் எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் நமக்குள் விதைக்கிறார்.

இப்படத்தின் பல காட்சிகளும், பின்னணி இசையும் தமிழ்த் திரைப்படங்களை ஞாபகப்படுத்துகின்றன. குடும்பம் என்பதன் இறுகிய வடிவங்களை எல்லா மதங்களும் காப்பாற்றி வருகின்றன. அதன் விளைவான உணர்ச்சிகரமான காட்சிகள் எல்லா ஆசிய மொழித் திரைப்படங்களிலும் பொதுவானதாகக் காட்சியளிக்கின்றன. இளகிய தன்மையோடு குடும்பத்தை அமைத்திருக்கிற ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்கப் பண்பாடுகளில் இருந்து மாறுபட்ட உணர்ச்சிகரமான காட்சி அமைப்புகள் ஆசிய திரைப்படங்கள் பெற்றிருக்கின்றன என்பதை இப்படம் பல இடங்களில் உறுதிப்படுத்துகின்றது.

முற்போக்கு, இடதுசாரிக் கலைஞர்கள் கூற நினைக்கிற ஒரு பெரும் சமூகப் பொருளாதார உறவுகளை, அதன் ஏற்றத் தாழ்வுகளை, சுரண்டலை, குடும்ப அமைப்பை, மனித உறவுகளை ஒரேபடத்தில் இவ்வளவு சிறப்பாக சொல்லிவிட முடியுமா என்கிற ஏற்படுத்தி விடுகிறார் இயக்குநர். கதையும், சம்பவங்களுமே முழுமையாகப் படத்தை ஆக்கிரமித்துக் கொள்வதால் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பு வெகுவாக கவனத்தை ஈர்ப்பதில்லை.

ஒரு தனிமனிதனின் அசாத்திய உழைப்பின் விளைவாக அவனைச் சார்ந்த அகதிகளுக்கு கூலி நினைத்துப் பார்க்க முடியாதபடி உயர்வதை காட்சிப் படுத்தியிருக்கும் இயக்குநர், அச்சூழல் முடிவடைந்த உடன் மீண்டும் அவர்களின் வாழ்வை திட்டமிட்டு வறுமைக்குள் அழுத்திவிடுவார்கள் சுரண்டல்க்காரர்கள் என்பதை நமக்குள் பதியச் செய்கிறார். உலகமயத்தில் கணினித் தொழிலாளர்களுக்கு, மெத்தப்படித்த அடிமைத் தொழிலாளர்களுக்கு ஏறிக்கொண்டே போகும் கூலியின் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதையும் இத்தோடு பொருத்திப் பார்ப்பது காலத்தின் தேவை. உலகமயம் முழுவீச்சோடு வருவதற்கு முன்பே வந்த இப்படம் அதன் ஒரு பகுதியையும் கலைத்தன்மையோடு தொட்டுக்காட்டிப் போயிருக்கிறது. இப்படிப்பட்ட படத்தைத் தந்த இயக்குநரும் அதை எதிர்பார்ப்புகள் இன்றி மக்களிடம் எடுத்துச் சொல்லும் கோணங்கள் அமைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது.

 

Pin It