தென்னிந்திய நடிகர் சங்க வெப்சைட்டில் (www.nadigarsangam.org) உறுப்பினர்கள் பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் 232 என்ற எண் எழுதப்பட்டிருந்தது.

TKS NATARAJANஅவர் முகத்தை என்னால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. எம்ஜிஆர் நடித்த 'மீனவநண்பன்' படத்தில் துவக்க காட்சியில் வி.கே.ராமசாமி வீட்டில் சப்பாத்தி, கோழிக்கறி ஆகியவற்றை பசிக்கொடுமையால் அந்த முதியவர் திருடி விடுவார். அதைப் பார்த்த சமையல்காரன் பிடித்து அடிக்கவும், வில்லன் நடிகர் கண்ணன், திருடிய நபரை அடித்து தெருவில் தள்ளி விடுவார்.

அப்போது அந்த முதியவரை கர்ச்சீப் கட்டிய கை தூக்கி விடும். அதாவது கதாநாயகன் அறிமுக காட்சி. எம்ஜிஆர் கை தான் அது. டெண்ட் கொட்டகையில் விசில் பறக்க, கிழித்து வைத்த பேப்பரை திரையை நோக்கி ஒரு கும்பல் வீசியெறிய, கண்ணனை எம்ஜிஆர் புரட்டி எடுப்பார். அடிபட்டுக் கிடக்கும் அந்த சப்பாத்தி திருடிய நபரை தோளில் போட்டுக் கொண்டு செல்வார். இந்த படம் வந்தது 1977ம் ஆண்டு.

அது ஒரு ஸ்டார் ஹோட்டல். விக்ரம் தர்மா உள்ளிட்ட வில்லன் கோஷ்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும். ஒரு முதியவர் அங்கு வந்து பசிக்கிறது என்பார். ஒரு கோழி சப்பையைத் தூக்கி வீசும் விக்ரம் தர்மா, அதை கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு மொட்டி போட்டவாறு வந்து சாப்பிட வேண்டும் என்பார்.

பசி மயக்கத்தில் இருக்கும் அந்த முதியவரும், அதே போல செய்வார். வில்லன் கோஷ்டி சிரிக்கும். அப்போது கீழே விழும் அந்த முதியவரை ஒரு கரம் பற்றித் தூக்கும். வழக்கம் போல தியேட்டரில் விசில் சத்தம். பேப்பர் கிழிசல் திரை நோக்கி வீசப்படுகிறது. அந்த முதியவரை தூக்கும் கரத்திற்கு சொந்தக்காரர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 'தம்பிக்கு எந்த ஊரு' என்ற இந்த படம் வந்தது 1984ம் ஆண்டு.

இந்த 2 படங்களிலும் அடிபட்ட முதியவர் தான் நடிகர் சங்கத்தில் 232 ஆக இருப்பவர். அடிபடுபவரை காக்க மக்கள் கூட்டத்தில் இருந்து யாரும் வரமாட்டார்கள். கதாநாயகன் தான் வரவேண்டும் என்ற கதை இலக்கணப்படி எம்ஜிஆரும், ரஜினியும் காப்பாற்றும் கேரக்டர்களில் நடித்தவரின் நடிப்பு பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 21.8.1967ம் ஆண்டு நடிகர் சங்கத்தில் உறுப்பினரான அந்த நடிகர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் இல்லை.

கறுப்பு வெள்ளை காலம் முதல் வண்ணப்படம் வரை அவர் கோயில் பூசாரி, நடத்துநர், காவலாளி, பாகவதர், வாத்தியார், போலீஸ்காரர், சேட், வண்டிக்காரன், தபால்காரர் என பல வேஷம் போட்டிருக்கிறார்.

கடந்த 23.7.1933ம் ஆண்டு பிறந்த அந்த நடிகர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட் கால உறுப்பினர். சினிமா, தொலைக்காட்சி, மேடை நாடகங்களில் நடித்தாலும் அவர் இன்றளவும் பேசப்படுகிறார் என்றால், அவரின் குரலை வைத்து தான்.

'என்னடி முனியம்மா, உன் கண்ணில மையி' என்ற தெம்மாங்கு பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான டிகேஎஸ்.நடராஜன் தான் அவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விபி.நடராஜன் தான்

தமிழ் நாடகத்துறையில் புகழ்பெற்ற டிகேஎஸ் கலைக்குழுவில் பாலகனாக சேர்ந்து அதன் மூலம் டிகேஎஸ்.நடராஜனாக மாறினார்.

1954ல் வெளியான ஸ்ரீதர் வசனம் எழுதிய 'ரத்தபாசம்' படத்தின் மூலம் அறிமுகமான டிகேஎஸ், நாடோடி, நீதிக்குத் தலைவணங்கு, பொன்னகரம், தேன்கிண்ணம், கண்காட்சி, பகடை பனிரெண்டு, ராணி தேனீ, ஆடு புலி ஆட்டம், பட்டம் பறக்கட்டும், மங்களவாத்தியம், உதயகீதம், ஆனந்த கண்ணீர் , இதோ எந்தன் தெய்வம், காதல் பரிசு என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உதயகீதம் படத்தில் தேங்காயில் பாம் வைத்து விட்டார்கள் என கவுண்டமணி சொல்ல, அர்ச்சகர் வேடமிட்டிருக்கும் டிகேஎஸ், 'தேங்காயில் சட்னி வைக்கலாம்... பாம் வைக்கலாமா?' என கேட்கும் காமெடி இன்று வரை பேசப்படுகிறது. கவுண்டமணியோடு சேர்ந்து பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

'வருஷம் 16' படத்தில் குஷ்பு பரத நாட்டியமாடும் பாடலுக்கு ஜதி சொல்லும் காட்சியில் நடித்தவர் டிகேஎஸ் தான். அவரைத் தூக்கி விட்டு அந்த இடத்தில் நடிகர் கார்த்திக் அமர்ந்து 'கங்கைக் கரை மண்ணனடி' பாடலைப் பாடுவார். ஆனால், முறையாக பரத நாட்டியம் கற்றவர் டிகேஎஸ்.

தமிழ் சினிமாவில் தெம்மாங்கு பாடலாக சங்கர் கணேஷ் இசையில் 'வாங்க மாப்பிள்ளை வாங்க' படத்தில் டிகேஎஸ்.நடராஜன் பாடிய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' என்ற பாடல் தான் அவரைத் தமிழகம் முழுவதும் அடையாளப்படுத்தியது. "கொட்டாம்பட்டி ரோட்டிலே " என்ற அடுத்த பாடல் வெளியூர் மோட்டல்களில் தேசிய கீதமானது.

இசைஞானி காலத்திற்கு முன்பே தெம்மாங்குப் பாடல்கள் திரையில் ஒலிக்க ஆரம்பித்து விட்டன. சின்னகுட்டி நாத்தனா , சில்லரைய மாத்தினா,வெரசா போடுது தூறல் அடி மேலே பறக்குது சாரல், மானத்திலே மீன் இருக்க மதுரையிலே நீ இருக்க, ஏரியில எலந்தை மரம் தங்கச்சி வச்ச மரம்,ஏறாத மலை மேலே - எலந்தை பழுத்து இருக்கு,ஓடுகிற தண்ணியில், ஒரசி விட்டேன் சந்தனத்தை , ஒத்த ரூவா தாரேன் ஒரு ஒனப்புத் தட்டும் தாரேன் என எண்ணற்ற பாடல்கள் இன்றளவும் தெம்மாங்கின் சாட்சிகளாக உள்ளன.

கிராமத்து வயலில் நாத்து நடும் போது பாட்டுக் கற்றுக் கொண்ட டிகேஎஸ்.நடராஜனிடம் எண்ணற்ற பாடல்கள் மனப்பாடமாய் இருந்தன. 'என்னடி முனியம்மா' பாடலையடுத்து அவர் பெயர் தமிழகம் முழுவதும் தெரிய ஆரம்பித்தது. இதற்குக் காரணம் இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் தான்

இதனைத் தொடர்ந்து டிகேஎஸ் தெம்மாங்கு கச்சேரிகளுக்குச் செல்ல ஆரம்பித்தார். அவர் பாடிய என்னடி முனியம்மாவை நடிகர் அர்ஜீன் நடித்த 'வாத்தியார்' படத்தில் ரீமிக்ஸ் செய்திருந்தார்கள். அந்த பாடலிலும் டிகேஎஸ் நடித்திருந்தார் என்பது தான் சிறப்பு..

இவரின் தெம்மாங்குப் பாடல்கள் ஒலித்த காலத்தில் தான் சிங்கம்புணரி தங்கராஜன், பரவை முனியம்மா, புஷ்பவனம் குப்புச்சாமி, என பலர் கச்கேரிகளில் தெம்மாங்கு கீதங்களை வழங்கினர்.

டிகேஎஸ்.நடராஜன் தனது ஒட்டு மொத்த பாடல்களையும் 'நாட்டுப்புற தெம்மாங்கு' என்ற கிராமிய இசைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். தமிழ் திரையிசை உலகில் அச்சு அசல் கிராமத்துக் குரலைக் கொண்டு வந்தவர் டிகேஎஸ்.நடராஜன்.

- ப.கவிதா குமார்

Pin It