Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

சமீபத்தில் நமது நீதிபதிகள் கொடுக்கும் அறிவுரைகள் பெண்ணிய சிந்தனையாளர்களால் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. பாலியல் வன்புணர்ச்சி செய்த இளைஞனுடன் பாதிக்கப்பட்ட பெண் சமரசம் செய்து கொள்ளலாம் என்று மதிப்பிற்குரிய நீதிபதி அவர்கள் கொடுத்த அறிவுரை கடும் கண்டனத்திற்குள்ளானது. அதன் பிறகு, கணவனுடன் வாழ மறுத்து விவகாரத்து கேட்ட பவித்ரா என்கிற பெண்ணிடம், விவகாரத்து என்ன கடையில் கிடைக்கும் சரக்கா? என்று ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார் மற்றொரு நீதிபதி. சனநாயகம், பெண்உரிமை குறித்து எல்லா தளங்களிலும் எல்லா தரப்பினரும் விவாதிக்க கூடிய ஒரு களம் தற்போது அமைந்திருக்கிறது. இந்த தருணத்தில் நீதிபதிகளின் ஆணாதிக்க உளவியலைக் கண்டித்து பல்வேறு கண்டனங்கள் வருகின்றன. ஆனால் இந்த மனநிலை என்பது இன்றைய சமூகத்தில் படித்தவர், படிக்காதவர் என அனைத்து தரப்பிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பொதுபுத்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

puthiya pathaiசட்டப் புத்தகமும், அரசியல் சட்ட அமைப்பும் என்ன சொல்லித் தந்ததோ, அதை விட அதிகமாக இந்த சமூகம் கற்பித்த கற்பிதங்கள்தான் நீதிபதிகளின் மூளையிலும் ஏறியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

. இந்தத் தீர்ப்புகளை கேட்கும் பொழுது நம் தமிழ் சினிமா காட்சிகள்தான் நினைவிற்கு வருகின்றன. தமிழ் சினிமா பெண்களைப் பற்றி எத்தகைய சித்திரத்தைத் தீட்டியிருக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்ணின் உடலானது அவளிற்கானது அல்ல; அவளின் கணவன் நுகர்வதற்கானது; அவன் பயன்படுத்துவதற்கானது; அவன் பயன்படுத்தும்வரை அந்தப் பொருளை வேறு யாரும் பயன்படுத்தியிருக்க கூடாது. இப்படி ஒரு புனிதத்தை பெண் உடலுக்கு, நம் தமிழ் சினிமா கற்பித்து அதை தன் வணிக நலனிற்குப் பயன்படுத்தி வருகிறது .கற்பு என்கிற வார்த்தைக்குப் புனிதம் கற்பித்து, அதனை மக்களிடத்தில் மீண்டும் மீண்டும் கொண்டு சேர்த்ததில் தமிழ்த் திரையினர் பழமைவாதிகளையே விஞ்சிவிட்டனர்.

80களின் தொடக்கத்தில் கமலஹாசனின் கதாநாயகப் பிம்பத்தை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் சகலகலா வல்லவன். தன் தங்கையை பாலியல் வன்புணர்ச்சி செய்தவனை வற்புறுத்தி தன் தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதுதான் அந்தப் படத்தின் கதை. அதற்காக கதாநாயகன் வில்லனின் தங்கையை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்கிறார். அதாவது என் வீட்டுப் பொருளை நீ பத்திரமாக பார்த்துக் கொள்ளாவிடில் உன் வீட்டுப் பொருள் சேதாரமாகிவிடும் என்று மிரட்டுகிறார். இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடியது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த வில்லனின் அதிகார மமதையை ஏழை கதாநாயகன் அடக்குகிறான் என்கிற வர்க்க உணர்வையும் இத்திரைப்படம் ஊட்டுகிறது.

குமரிக்கோட்டம் என்கிற படத்தில் பணக்காரரான ஜெயலலிதாவின் அப்பா ஏழையாக இருக்கும் எம்ஜிஆரின் அப்பாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறுகிறார். அப்பாவின் சத்தியத்தை காப்பாற்றுவதற்காகவும், பணக்காரத்தனத்திற்கு சவுக்கடி கொடுப்பதற்காகவும், ஜெயலிலதாவிடம் பணக்காரர் போல் நடித்து ஏமாற்றுவார் எம்ஜிஆர். அது மட்டுமல்ல குடிகாரராக இருக்கும் அசோகனை திருத்துவதற்காக அவரது மகள் லட்சுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ய எம்.ஜி.ஆர் முயற்சி செய்வார். தன் மகளின் கற்பு பறி போக காரணமாகி விட்டோமே என்று மனம் வருந்தி அசோகன் தன் குடிப்பழக்கத்தைக் கைவிடுவார். பெண்ணின் கற்பை முன்னிறுத்தி எப்பேர்பட்ட மது விலக்குப் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது!!

சேதுபதி ஜபிஎஸ் என்கிற திரைப்படத்தில் தீவிரவாத குழுவிடம் மாட்டிக் கொண்ட விஜயகாந்தின் தங்கையை, மீனா சுட்டுக் கொன்று விடுவார். தீவிரவாதிகள் அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்து கற்பிழந்து அவர் வாழ்வதை விட, சாவதே மேல் என்று புரட்சிகர வசனத்தை மீனா பேசுவார். தேசபக்தி, கற்பு, இந்த இரண்டு கருத்தியலையும் ஒரு சேர மார்க்கெட் செய்த இயக்குனர் பி.வாசுவை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

பார்த்திபன் இயக்கிய புதிய பாதை திரைப்படத்தில் தன்னை பாலியல் வன்புணர்ச்சி செய்த ரவுடியான பார்த்திபனைக் கண்டுபிடித்து அவனைத் திருத்தி அவனையே திருமணம் செய்துகொள்கிறார் சீதா. ஏனென்றால் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்கிற பழமொழிக்குப் பதிலாக, கெடுத்தவன் அயோக்கியனாக இருந்தாலும் அவனே உனக்கு அரசன் என்கிற புதுமொழி சொல்லிக் கொடுத்த படம்தான் புதிய பாதை. இது போதாதென்று, முறைதவறி பிறந்த ஆண் குழந்தைகள்தான் தவறான வழிக்குப் போகிறார்களாம். இப்படி ஒரு அபார கண்டுபிடிப்பை கண்டுபிடித்துச் சொன்னவரும் பார்த்திபன்தான்.

ஆக பொறுக்கிகளாகவும், ரவுடிகளாகவும் ஆண்கள் இருப்பதற்கு முழு முதற்காரணம் அவனைப் பெற்ற தாய் மட்டுமே. இப்படி ஒரு கருத்தைச் சொன்ன பார்த்திபன்தான் ‘உள்ளே வெளியே’ படத்தில் இரட்டை வசனம், ஆபாச காட்சிகள் என பட்டையைக்(!) கிளப்பியிருப்பார். இந்தப் படத்தில் தொழிற்சங்கப் போராளியின் மகன் அவர். இருப்பினும் பெண்களிடம் உள்ளே வெளியே விளையாடும் கில்லியாக இருப்பார். முறை தவறி பிறந்தாலும், நல்ல தாய் வயிற்றில் பிறந்தாலும் ஆண் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம், பெண் என்பவள் அறிந்தோ அறியாமலோ கெட்டுப்போகாமால் இருக்க வேண்டும்.

பெரும்பாலும் நமது கதாநாயகர்கள் வர்க்கப் புரட்சி செய்த திரைப்படங்களில் கூட பெண்களின் பணக்கார திமிரைத்தான் அடக்கியிருக்கிறார்கள். ரஜினிகாந்தின் பெரும்பாலான படங்களில் அவரின் தொழிலாளர் ஆதரவுப் போக்கும், ஆணாதிக்க சிந்தனையையும் சேர்த்தே கதாநாயக பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கும். மன்னன் படத்தில் விஜயசாந்தி என்கிற முதலாளியை எதிர்த்து ரஜினிகாந்த் போராடுகிறார். அதே சமயம் தனக்கு மேலாதிகாரியாகவே இருந்தாலும், விஜயசாந்தி ஒரு பெண் என்பதையும், தனக்கு கட்டுப்பட்ட மனைவி என்பதையும் ஒரு சேர உணர்த்தியிருப்பார். மாப்பிள்ளை, படையப்பா, தம்பிக்கு எந்த ஊரு என அவருடைய அனைத்துப் படங்களிலும் படித்த, பணக்காரப் பெண்களின் ஆளுமை எதிர் குறியீடாகவே காட்டப்பட்டிருக்கும். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜீத் உட்பட எல்லா பிரபலங்களுக்கும் ஆணாதிக்க கருத்தியலை தமிழ் மண்ணில் பரப்பியதில் பங்கு உண்டு.

விதிவிலக்காய் கற்பு கத்தரிக்காய் போன்ற விசயங்களை தூக்கியெறிந்த திரைப்படங்களும் வந்திருக்கின்றன. ‘ஆராரோ ஆரிராரோ’ படத்தில் தன்னுடைய மனைவி இன்னொருவனின் கருவை சுமக்கிறாள் என்று தெரிந்தும் பாக்யராஜ் திருமணம் செய்து கொள்வார். ‘கை கொடுக்கும் கை’ திரைப்படத்தில் கண்ணிழந்த தன் மனைவியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவனை தண்டித்து வி்ட்டு தனது மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வார் ரஜினிகாந்த். ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் நாசரின் ஆசை நாயகியாக இருக்கும் மனிசா கொய்ராலாவுடன் தன் வாழ்வைத் தொடங்குவது போல் கமல் நடித்திருப்பார். இது போன்ற சின்ன சின்ன ஆரோக்யமான மாற்றங்கள் தமிழ் சினிமாவில் நடைபெற்றிருந்தாலும், கற்பு என்கிற கற்பிதத்தை ஊதிப் பெருக்கி உபரி ஈட்டியிருக்கிற தமிழ் சினிமாக்களே அதிகம்.

ஆணவம் பிடித்த பெண்களுக்கு தாலி கட்டியும், படித்து நல்ல வேலையில் இருக்கும் பெண்களை ‘தான் ஒரு பெண்’ என்பதை உணர வைத்தும்தான் நமது கதாநாயகர்கள் வர்க்கப் புரட்சி செய்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படங்களின் பாதிப்பு சமூகத்தின் அனைத்து தளங்களிலும் இருக்கும்பொழுது நீதிபதிகளுக்கு மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன?

- ஜீவசகாப்தன்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 சிவக்குமார் 2015-07-27 20:57
அருமையான கட்டுரை. இன்னும் நீளமாக இருந்திருக்க வேண்டியது.

ஆராரோ ஆரிராரோவில் புரட்சி செய்த பாக்யராஜ், அந்த ஏழு நாட்களில் தாலிப் பெருமையிருக்கிற ார். மகாநதி படத்தில் விபச்சாரத்தில் சீரழிக்கப்பட்ட கமலஹாசனின் மகளை ராஜேஷின் மகன் திருமணம் செய்வது, கௌதம் படங்களில் தொடர்ந்து வரும் இரண்டாவது திருமணம் செய்யும் நாயக, நாயகியர். அறை எண் 302 - இல் கடவுள் படத்தில் காதலித்த பெண் விலைமாது என்று தெரிந்து அதிர்ந்து பின்னர் சந்தானம் திருமணம் செய்வது என்று இன்னும் நிறைய எடுத்துக்காட்டு கள். ஆனால் அப்படி நடித்த சந்தானம்தான் பின்னர் தான் நடித்த எல்லாப் படத்திலும் பெண்களை படு கேவலமாக இழிவு படுத்தியிருப்பா ர். சந்தானம், தனுஷ், சிம்பு, விஷால், கார்த்தி என எல்லா மொக்கைகளின் படங்களிலும் பெண்களைக் கிண்டல் செய்வதைத்தான் நகைச்சுவை, பாடல் என்று படத்தை எடுக்கிறார்கள். இதையெல்லாம் பெண்களும் சிரித்துக் கொண்டே ரசிக்கிறார்களே ! என்ன எழவு !

அச்சம், மடம், நாணம், கற்பு, பயிர்ப்பு தொடங்கி தாலியின் பெருமை வரை தமிழ்நாட்டுக்கு க் கற்பித்தவர்கள் திரைப்படக் காரர்களே. வசனங்கள், பாடல்கள், காட்சிகள் மூலமாக பெண்ணடிமைத்தனத் தை வெவ்வேறு வழிகளில் விதைத்தனர். ஒரு பக்கம் அவிழ்த்துப் போட்டு ஆட வைத்து ஆண்களுக்கு விருந்தாக்கி அவர்களுக்கு அவிசாரிப் பட்டமும் பெறவைத்தும், பொம்பளன்னா இந்த மாதிரி இருக்கக்கூடாது அந்த மாதிரி இருக்கணும் என்று அறிவுரை கூறி அவர்களுக்கு ஒழுக்கமும் கற்பித்து ஆண்களுக்கு எந்த விதக் கட்டுப்பாடும், ஒழுக்கமும் தேவையில்லை என்பதை நேராகவும், மறைமுகமாகவும் சொல்லிச்சென்றவை திரைப்படங்களே.
Report to administrator
0 #2 தமிழ்செல்வன் 2015-08-02 19:46
தமிழ் திரைப்படங்கள் ஆண்களுக்கும் ஒழுக்கங்களை கற்பித்து உள்ளன. ஒழுக்கமற்றவன் வீழ்தபடுவன் என கூறிய படங்களும் உள்ளன. மிருகம், பூம்புகார், ரத்தகண்ணீர், போன்றவை...
Report to administrator
0 #3 SUNDAR 2015-10-27 10:58
GOOD ARTICLE
Report to administrator

Add comment


Security code
Refresh