அந்த நாட்களில் தமிழ் சினிமாவில் சீர்காழி கோவிந்தராஜன் நடத்திக் கொண்டிருந்தது வெங்கலக் குரல் கச்சேரியென்றால் டி.எம். சௌந்தரராஜன் தன் குரலின் வழியே நல்ல தமிழ் ஆண் மகனின் கம்பீரத்தை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார். இந்த இருவரிடையே தனது மோகனக் குரலின் காந்த ஈர்ப்பின் வழியே செவிமடுப்போரிடத்தில் ஒரு மதுர சுகானுபவத்தையே தோற்றுவித்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ். தாழ்விசையில் வாசிக்கப்படும் குழலின் சாயலைத் தனது குரலில் கொண்டவராயிருந்த ஸ்ரீநிவாஸ் அந்நாளைய சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர். என்னும் இரண்டு இமயங்களுக்குச் சமதையாகக் கொடியுயர்த்திக் கொண்டிருந்த முன்னணிக் கலைஞர்களின் பின்னணிக் குரலாகிப் போனார்.

ஆமாம், அந்நாளில் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு மட்டும் சில நூறு பாடல்களைப் பாடியிருக்கிறார் ஸ்ரீநிவாஸ். தமிழில் ஜெமினிக்குத்தான் அவர் அதிகப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றாலும் முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த் போன்ற நட்சத்திரங்களின் கானக் குரலாகவும் அவர் இருந்திருக்கிறார். மிகமிக அரிதாக அவர் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கும் பாடியிருக்கிறார். பி.பி.ஸ்ரீநிவாஸ் தமிழில் மட்டுமல்லாமல் மொத்தம் எட்டு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? அவருக்குத் தாய் மொழி தெலுங்கு. அவரது தாய் மொழியில் ஏராளமான கஜல் பாடல்களை எழுதியிருக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, உருது, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய எட்டு மொழிகளில் சரளமாகப் பேசவும், எழுதவும் திறன் பெற்றவர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது. தமிழில் அவர் எழுதிய கவிதைகள் அவரது மொழித்திறனை என்றும் பறைசாற்றும்.

1930 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஆந்திராவின் கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவுக்கு அருகிலொரு சிற்றூரில் பணிந்திர சுவாமி - சேஷகிரியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பிரதிவாதி பயங்கர ஸ்ரீநிவாஸ் என்னும் இயற்பெயர் கொண்ட பி.பி.ஸ்ரீநிவாஸ். வணிகவியல் இளங்கலைப் பட்டதாரியான ஸ்ரீநிவா° 1952 ல் ஜெமினி நிறுவனம் இந்தியில் தயாரித்த மிஸ்டர் சம்பத் படத்தில்தான் முதன்முதலாகப் பாடத் துவங்கினார். அவர் பாடிய முதல் பாடலில் அவருடன் இணைந்து பாடியவர் அந்நாளைய பிரபலப் பெண் பாடகர் கீதா தத். அந்தப் பாடல் வடநாட்டில் மிகப் பிரபலமான பாடலானது. 1953 ல் ஜாதகப் பலா என்னும் கன்னடப் படத்தின் மூலமாகக் கன்னடத் திரையில் நுழைந்தார் பி.பி.ஸ்ரீநிவாஸ். அதே படம் பின்னர் தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டபோது அந்தந்த மொழிகளில் அவருக்கு வாய்ப்புகள் கிட்டின.

ஸ்ரீநிவாஸ் பன்மொழி கான வித்தகராகத் திகழ்ந்திட்டபோதிலும் கன்னடத்தில்தான் அவர் அதிகப் பாடல் களைப் பாடியிருக்கிறார். அதிலும் குறிப்பாக கன்னடத்தின் சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமாருக்குத்தான் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இத்தனைக்கும் ராஜ்குமார் தனது சொந்தக் குரலில் பாடி நடித்தவர் என்றபோதிலும் அவருக்குத்தான் அதிகம் பாடிய சாதனை. கன்னடத்தின் இன்னொரு பெரிய நட்சத்திரமான விஷ்ணுவர்த்தனுக்கும் அவர் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். கன்னடத் திரைத்துறையில் மட்டும் மூன்று தலைமுறைகளாக அவர் கோலோச்சியிருக்கிறார். 1955 ல் மலையாளப் படமான ஹரிச்சந்திராவில் பாடினார்.

தமிழில் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? பாவமன்னிப்பு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி இசையில், கண்ணதாசனின் கற்பனை வளத்தில் உருவாகி அவர் பாடிய காலங்களில் அவள் வசந்தம் பாடலுக்கு இணையான ஒரு பாடலை இன்று வரையில் காட்டமுடியுமா எவராலும்? காதலிக்க நேரமில்லை படத்தில் உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா - உதவிக்கு வரலாமா? என்று அவர் பாடுகிறபோது பாடல் வரிகளின் பொருளை உணர்ந்து, கேள்வி கேட்கிற தொனியிலேயே அவரது குழைவு அழகாக வெளிப்படும். காத்திருந்த கண்கள் படத்தில் கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா? உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா? எனும் வரிகளை பி.பி.ஸ்ரீநிவாஸ் உச்சரிக்கிறபோதே ஒரு ஆணின் பதைபதைப்பை உணர்த்துவதாக அதன் மெட்டை அவர் கையாண்டிருப்பார்.

வீரத்திருமகன் திரைப்படத்தில் வரும் ரோஜா மலரே ராஜகுமாரி பாடலில் வரும் வரிகளிலும் அதே போலத்தான் அவரது பாங்கு அமைந்திருக்கும். அருகில் வரலாமா ஹோய்... வருவதும் சரிதானா... உறவும் முறைதானா..? என்கிற இடத்தில் அந்த வரிகளின் உணர்வை அப்படியே கேட்போர் இதயங்களில் பி.பி.எஸ். இறக்குவார் கொஞ்சம் சோகமும் லேசான கிரக்கமும் குழைத்து. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... வாரிவாரி வழங்கும்போது வள்ளலாகலாம்... என்ற வரிகளின் உயிரை அவரது உச்சரிப்பு பொத்திப் பாதுகாப்பதாக இருந்தது. உருகும்போதும் மெழுகுபோல ஒளியை வீசலாம் என்கிற இடத்தில் உருக்கம் அவரது குரலில் வழிந்தோடியது. இந்தியாவின், தமிழின் புகழ்மிக்க பின்னணிப் பாடகிகள் அனைவரோடும் இணைந்து பாடிய பி.பி.எஸ். டி.எம்.எஸ்.ஸுடன் இணைந்து பாடிய பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை பாடல் பாலிலே பழத்தை இட்ட ரகம். அதுபோலத்தான் தவப்புதல்வனில் இதே ஜோடி பாடும் உலகின் முதல் இசை தமிழிசையே பாடலும். இந்தப் பாடலில் ஸ்ரீநிவாஸ் இந்தி மொழியில், இந்துஸ்தானி சாயலில் பாடி அசத்தியிருப்பார். அவரது எத்தனையோ பாடல்களில் மயக்கமா தயக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா? பாடல் தனியிலும் தனி ரகம். அந்தப் பாடலின் முடிப்பில் உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்கிற இடம் துயரப்படுகிற எல்லா மனித மனங்களுக்கும் என்றென்றும் ஆறுதல் ஒத்தடம் தரும். எண்ணிலடங்காத அவரது பாடல்களின் தனித்துவம் குறித்து இன்னும் எவ்வளவோ சொல்லலாம்... இடம்தான் பிரச்சனை.

செவ்விசையின் நுட்பங்களை உட்கிரகித்துக்கொண்ட ஒரு மேதையாகவே அவர் திகழ்ந்தார். இறுதிவரையில் அவரது தன்னடக்க குணம் அவரது மேதைமையை பொத்திப் பாதுகாத்தே வந்துள்ளது. எவரோடும் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் வீணான வாதங்களை, முரண்பாடுகளை முன்வைத்ததே இல்லை. இசையும் மொழியும் மட்டுமே அவருக்கு மூச்சு. இந்திய மொழிகள் பலவற்றிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள், அந்தந்த மொழிகளை அறிந்து, பாடல்களின் பொருள் புரிந்து பாடிய பாங்கு. அவர்தான் பி.பி. ஸ்ரீநிவாஸ்.

எப்போதும் குழந்தைபோன்ற சிரித்த முகம், ஜிப்பா- ஜரிகைக் குல்லா சகிதம் சென்னையில் வலம் வரும் அவரது எளிமை, (குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் நானே பலமுறை அவர் நடந்துசெல்வதைப் பார்த்திருக் கிறேன்) மொழிகளைத் துவேசமில்லாமல் ஆக்கப்பூர்வமாக அணுகிய அவரது ஆழ்ந்து நோக்கத்தக்க முன்னுதாரண பாணி என்று அந்த இசை மேதை பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். தனது 84 வது வயதில் (14 - 4 - 2013) சென்னையில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார் பி.பி.ஸ்ரீநிவாஸ், இந்திய சினிமா இசை ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டு.

 - சோழ.நாகராஜன்