விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக எழுந்த பிரச்சனைகளை நாம் அறிவோம். இதன் தொடர்ச்சியாக கடல், டேவிட், ஆதிபகவன் என்று பல திரைப்படங்களுக்கும் பிரச்சனைகள் நீள்கின்றன. இதை ஒட்டி தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் பல்வேறு விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன. இந்த விவாதங்களிலும் கருத்துப் பரிமாற்றங்களிலும் முன்வைக்கப்பட்ட ஒரு சில கோட்பாடுகள், கற்பிதங்கள் குறித்த சில சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

1. படைப்பாளியின் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது

அதிக அளவில் விவாதிக்கப்பட்ட கருத்து இதுவாகத்தான் இருக்கும். படைப்பாளி என்பவர் தான் விரும்பிய கருத்துகளைத் திரைப்படம் வாயிலாகச் சொல்வதற்கான வாய்ப்பை மறுப்பது என்று இது புரிந்து கொள்ளப்படுகிறது. இது ஒன்றும் புதிய அனுபவமல்ல. உலகெங்கிலும் உள்ள பல்வேறு படைப்பாளிகள் இப்பிரச்சனையை எதிர்கொண்டுதான் வருகிறார்கள். படைப்பாளியின் கருத்துரிமை, எதிர்ப்பாளர்களின் செயல்பாடுகள் என்பன ஒரு புறம் இருக்க, கருத்துச் சுதந்திரத்திற்கான சமதளம் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

kamal_viswaroopam_640

குறும்படங்கள், ஆவணப்படங்கள் தவிர்த்து, பொழுதுபோக்குப் படங்களாக உருவாகும் திரைப்படங்களுக்கு மிகப் பெரிய பொருளதாரப் பின்புலம் அவசியம். ஒரு படைப்பாளியோ, அவருக்குப் பின்னணியாக இருக்கும் தயாரிப்பு நிறுவனமோ பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்து ஒரு திரைப்படம் உருவாக்கப்படுகிறது. முன்பெல்லாம், ஒரு மாநிலத்துக்குள்ளோ, ஒரு நாட்டுக்குள்ளோ திரைப்படங்கள் வெளியாயின. இன்றைக்கு கடல் கடந்து பல்வேறு நாடுகளில், குறிப்பாக அந்தப் படம் சுட்டும் மொழிக்குரிய மக்கள் வாழும் நாடுகளில் திரைப்படங்கள் வெளியாகின்றன. ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடும் போக்கும் இப்போது அதிகரித்துள்ளது. மேலும், டி.டி.எச். வழியாக தொலைக்காட்சியில் படம் வெளியாவதால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களைத் திரைப்படம் சென்று சேரும் வாய்ப்பும் இப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் பிரம்மாண்ட வலிமையைச் சுட்டிக் காட்டுகிறது. இதை வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், படைப்பாளி முன்வைக்கின்ற கருத்து ஒரே நாளில் கோடிக்கணக்கான மக்களைச் சேர்ந்து விடுகிறது. இதனால், அந்தப் படைப்பாளி மிகப் பெரிய ஊடக வலிமை வாய்ந்தவராக இருக்கிறார். இந்த வலிமைதான் நாம் கவனத்தில் கொள்ளத் தக்கது.

விஜய் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் அஜீத்திற்கு எதிராக ஒரு வசனமோ, காட்சியோ வைக்கப்பட்டிருந்தால், அடுத்த அஜீத் படத்தில் இதற்கான பதில் இருக்கும். சிம்புவுக்கு எதிராக ஒரு காட்சியோ, வசனமோ தனுஷ் படத்தில் வைக்கப்பட்டிருந்தால், அடுத்த படத்தில் சிம்பு பதிலடி கொடுப்பார். அ.தி.மு.க.விற்கு ஆதரவான படைப்பாளிகள் தி.மு.க.விற்கு எதிரான கருத்துகளை தங்கள் படத்தில் சொன்னால், தி.மு.க. ஆதரவுப் படைப்பாளிகள் இதற்குத் தங்கள் படத்தில் பதில் கொடுப்பது மட்டுமின்றி, ஆளும் கட்சியின் ஆட்சியை விமர்சனமும் செய்வார்கள். இவற்றில் சம்பந்தப்பட்ட அனைவரும் திரைப்படத்தை பரப்புரை செய்யும் ஓர் ஆயுதமாக எடுத்துக் கொண்டு ஒரு கருத்தை வெளிப்படுத்தவோ, அதற்குப் பதிலடி கொடுக்கவோ பயன்படுத்துகிறார்கள். இங்கே கருத்துச் சுதந்திரத்திற்கான தளம் என்பது ஏறக்குறைய சமமானது. இங்கே யாரும் கருத்துச் சுதந்திரம் பற்றிக் கேள்வி எழுப்புவது கிடையாது.

உலகளாவிய மற்றோர் சான்றைப் பார்ப்போம். ஹாலிவுட் என்பது உலகின் மிகப் பெரிய அமெரிக்கத் திரைப்படத் துறை. பல கோடி பில்லியன் டாலர்கள் முதலீடாக்கப்பட்டு, அதைவிடப் பலமடங்கு லாபமீட்டும் பொருளியல் வலிமை வாய்ந்த அமைப்பு அது. அதன் வணிக வலிமை ஒரு புறம் இருக்க, அதன் படைப்புகள் உலகின் எந்த மூலையிலும் ஊடுருவிச் செல்லும் ஆற்றல் படைத்தவை. ‘ஹாலிவுட்’ என்ற பெயரே முன்மாதிரியாக அமைந்து விடுவதால், இங்கேகூட கோலிவுட், டாலிவுட், பாலிவுட் என்று ‘ஈயடிச்சான் காப்பி’ பெயர்களைப் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதும் வழக்கம் உள்ளது. ஹாலிவுட் திரைப்படத்தில் நடிப்பது என்பது நம்மூர் நடிகர்களுக்கு மிகப் பெரிய கனவாக இருக்கிறது. ஹாலிவுட் திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது தலைகாட்டுவது சில இந்திய நடிகைகளின் இலட்சியமாக இருக்கிறது. முன்பெல்லாம் ஆங்கிலத்தில் பேசி வந்த ஹாலிவுட் திரைப்படங்கள், இப்போது டப்பிங் முறையில் அந்தந்த வட்டார மொழிகளிலேயே பேசுகின்றன. இதனால், எந்த மொழிபெயர்ப்பு வசதியுமின்றி, அமெரிக்காவின் கருத்தியல் எளிதாக எல்லா நாடுகளையும் ஊடுருவிச் செல்கிறது. இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், ஹாலிவுட்டின் ஊடக வலிமை!

இந்த ஹாலிவுட்டின் அமெரிக்கக் கருத்தியல் ஒன்றைப் பார்ப்போம். பொதுவாக, தனக்கென ஒரு பொது எதிரியைக் கட்டமைத்துத் தன்னை வலுப்படுத்திக் கொள்வதுதான் வல்லரசுகளின் அணுகுமுறை. அந்த எதிரியைப் பற்றிய கருத்தியலை வெகுமக்கள் சிந்தனையின் பதிய வைப்பது ஹாலிவுட்டின் வேலை. அந்த வகையில் 1990 வரை, பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்கள் கம்யூனிச நாடுகளையும் பொதுஉடைமைவாதிகளையும் வில்லன்களாகச் சித்தரித்து வந்தன. ஏனென்றால், அமெரிக்க முதலாளித்துவத்தின் எதிர்ப்புக் கருத்தியலாக பொதுஉடைமைத் தத்துவம் விளங்கியது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவிற்குப் புதிய எதிரி தேவைப்பட்டது. இதனால், அமெரிக்க எதிரிகளாகக் கட்டமைக்கப்பட்டவை இஸ்லாமிய நாடுகளும் இஸ்லாமியத் தீவிரவாதமும். இதன் விளைவாக, கடந்த பல ஆண்டுகளாக, ஹாலிவுட் திரைப்படங்களில் வில்லன்கள் யார் என்று கவனித்தால், அவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாகவே இருப்பார்கள்.

ஹாலிவுட்டின் கருத்தியலை உள்வாங்கி ஜால்ரா அடிக்கும் ஏனைய நாட்டுப் படைப்பாளிகளும், இந்தக் கருத்தியலுக்கு வலிமை சேர்க்கிறார்கள். இத்தகைய ஜால்ராவை கருத்துச் சுதந்திரம் என்றே வைத்துக் கொள்வோம். பொதுஉடைமைவாதிகளையும், இஸ்லாமியர்களையும் வில்லன்களாகச் சித்தரிப்பது ஹாலிவுட்டின் கருத்துச் சுதந்திரம் என்றால், ஹாலிவுட்டுக்கு இணையான, வலிமை வாய்ந்த ஒரு திரைப்பட அமைப்பைக் கொண்டிராத பொதுஉடைமைவாதிகளையும் இஸ்லாமியர்களையும் எந்தத் தளத்தில் வைத்துப் பார்ப்பது? அத்தகைய ஹாலிவுட் கருத்தியலை எதிர்க்கின்ற, ஹாலிவுட்டுக்கு இணையான ஊடக வலிமையற்ற பொதுஉடைமைவாதிகளையும் இஸ்லாமியர்களையும் கலாச்சாரத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தலாமா? கவிஞர் காசி. ஆனந்தனின் சொற்களில் சொல்ல வேண்டுமென்றால், ‘தராசை எடை போடாமல்’ கருத்துச் சுதந்திரத்தை நிறுத்துப் பார்க்க முடியாது. கருத்துச் சுதந்திரத்திற்கான தளம் இங்கு சமமாக இல்லை என்பதே பிரச்சனையின் மையம்.

இப்பிரச்சனை பற்றி விவாதிக்கின்ற திரைப்படத்துறை அல்லாத இதர ஊடகங்கள், இப்படி கருத்துச் சுதந்திரத்தை நடுநிலையோடு நிறுத்துப் பார்ப்பதில்லை. அவை எப்போதும் எதிர்வினையைத்தான் அதிகம் பதிவு சென்றனவே தவிர, வினையைப் பற்றி பேசுவதில்லை. 1992இல் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் தொடங்கி கடந்த 20 ஆண்டுகளாக, இஸ்லாமியத் தீவிரவாதம் சார்ந்த கதைகளை அரைத்து அரைத்து புளிப்பேற்றியது தமிழ்த் திரையுலகம். ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறான்’ என்கிற மனநிலையை இந்தப் படைப்பாளிகள் எப்போதும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக, அரைத்த மாவையே அரைத்த படைப்பாளிகளின் கையலாகத்தனத்தையோ, வெகுமக்களின் சிந்தனையில் ஒரு கருத்தியல் அழுத்தமாகப் பதியவைக்கப்பட்ட வினையைப் பற்றியோ மற்ற ஊடகங்கள் விமர்சிப்பதில்லை. எவ்வளவு அடிச்சாலும் தாங்கியவன் திரும்பிப் பார்த்து முறைக்கும்போது, அந்த எதிர்வினையை கலாச்சாரத் தீவிரமாக்குகின்றன. ‘இப்படி எங்களை எதிர்த்தால், நாங்கள் எதைத்தான் படமாக்குவது?’ என்று கண்ணீர் வடிக்கும் கேவலமான கதைப் பஞ்சத்தை, படைப்பாற்றல் வறட்சியைக் கேள்விக்கு உட்படுத்தத் தயங்குகின்றன.

தாங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதாகப் போராடும் சமூகங்களுக்கோ, மக்கள் அமைப்புகளுக்கோ மேலே குறிப்பிடப்பட்ட ஊடக வலிமை இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். இத்தகைய ஒரு வலிமை இல்லாத வரை கருத்துச் சுதந்திரத்திற்கான தளம் சமமாக இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டும். ஓர் அடித்தட்டு மக்கள் சமூகம் தான் இழிவாகத் திரைப்படத்தில் சித்தரிக்கப்படுவதற்குப் பதிலடியாக, பல கோடி செலவில் படம் தயாரித்து அக்கருத்துக்குப் பதில் சொல்ல முடியுமா? ஒரு படைப்பாளியின் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுபவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அந்தத் தளம் இல்லாத, சமத்துவமற்ற எதார்த்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். ஊடக வலிமையக் கொண்டிருக்கும் ஒருவரின் கருத்துச் சுதந்திரமானது, நிராயுதபாணி மீது நடத்தப்படும் தாக்குதலாக இருக்கிறது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட சூழலில், அரசும் சட்டமும் சரியான வழிகாட்ட வேண்டுமே தவிர, பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது சமூகம் எப்போது, எத்தகைய வடிவில், எந்த அளவில் தங்கள் பதில் கருத்தைச் சொல்ல வேண்டும் என்று படைப்பாளிகள் தீர்மானிக்க முடியாது.

கருத்துச் சுதந்திரம் குறித்து அனைருக்கும் அக்கறை வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், மேலே குறிப்பிட்ட சமத்துவமற்ற, ஒருதலைப்பட்சமான கருத்துச் சுதந்திரச் சூழலில், மிகப் பெரிய வலிமை வாய்ந்த ஊடகத்தைக் கையில் வைத்திருக்கும் படைப்பாளிகளுக்கு பொறுப்புணர்வு அதிகம் இருக்க வேண்டும்.

2. திரைப்படத்தைத் திரைப்படமாகப் பார்க்க வேண்டும்

இது போன்ற பிரச்சனைகள் எழுகிறபோதெல்லாம், ‘கலை கலைக்காகவே’ என்பதன் நீட்சியாக, 'திரைப்படத்தைத் திரைப்படமாகப் பார்க்க வேண்டும்' என்ற சிந்தனை முன்வைக்கப்படுகிறது. அதாவது, ஒரு திரைப்படத்தை எந்தச் சமூகச் சூழலின் பின்புலத்துக்கும் உட்படுத்திப் பொருள் கொள்ளக் கூடாது என்பதே இந்தச் சிந்தனையின் உள்ளடக்கம். இதன் விளைவாக, பெரும்பாலான மக்களைச் சென்றடையக் கூடிய மசாலா பத்திரிகைகளில் வரும் திரைவிமர்சனங்கள் இந்த வரையறைத் தாண்டி விமர்சிப்பது கிடையாது. தங்கள் விமர்சனங்களில் பொழுதுபோக்கு அம்சங்களையே முன்னிறுத்துகின்றன.

எந்த ஒரு திரைப்பட உருவாக்கமும் வெற்றிடத்தில் நிகழ்வது கிடையாது. எந்த ஒரு திரைப்படமும் குறிப்பிட்ட சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழலில்தான் உருவாக்கப்படுகிறது. அப்படி எந்தச் சூழலுக்கும் உள்படாமல் ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறதா என்பதே கேள்விக்குறி. ‘இது சும்மா ஒரு பொழுதுபோக்குப் படம்தான்’ என்ற சொல்லப்படும் படங்கள்கூட ஏதாவது ஒரு கருத்தியலை முன்வைக்கவே செய்கின்றன. பெண்ணின் தொப்புளில் பம்பரம் விடுவது என்பது படைப்பாளிக்குப் பொழுதுபோக்குக் காட்சியாக இருக்கலாம். பெரும்பாலான ரசிகர்கள் அந்த ரசனைக்குப் பழக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அக்காட்சியில் பெண் மீதான உடலரசியல், பெண்ணுக்கெதிரான ஆணாதிக்கப் பண்பாட்டு மனோபாவமும் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்ணைப் பற்றிய ஆணாதிக்கச் சித்தரிப்பு என்ற விமர்சனத்தோடு பெண்விடுதலையாளர்கள் அக்காட்சியை அணுகக் கூடாது என்று எந்தச் சட்டமுமில்லை. எனவே, ஒரு திரைப்படம் கருத்தியல் பேசினால், அந்தக் கருத்தியலை விவாதிப்பதற்குப் பார்வையாளருக்கு உரிமை உண்டு. ஒரு திரைப்படம் அரசியல் பேசினால், அந்த அரசியலை விவாதிப்பதற்குப் பார்வையாளருக்கு உரிமை உண்டு.

Jayam_ravi_aadhi_bhagavan_400

பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலான ரசிகர்கள், இந்த விவாத்தில் ஈடுபடுகிறார்களா என்பதே கேள்விக்குறி. பெரும்பாலான ரசிகர்கள் இதில் ஈடுபடவில்லை என்பதற்காக, யாருமே அதைச் செய்யக் கூடாது என்பது நியாயமல்ல. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், குறிப்பிட்ட கருத்தியலால், அரசியலால் எந்தச் சமூகம், இனக்குழு பாதிக்கப்படுகிறதோ, அவர்களைப் பார்த்து, "திரைப்படத்தைத் திரைப்படமாகத்தான் பார்க்க வேண்டும்” என்று அறிவுறுத்துவதே ஒரு மனித உரிமை மீறல். தமிழக அரசியலுக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள நெருக்கத்தை, தமிழ்ப் பண்பாட்டிற்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள நெருக்கத்தை, தமிழகத்தின் சாதியத்திற்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள நெருக்கத்தைப் புரிந்துகொண்டால், "திரைப்படத்தைத் திரைப்படமாகத்தான் பார்க்க வேண்டும்” என்ற ஆலோசனை மிகப் பெரிய மோசடியாகவே தோன்றகிறது.

மேலும், திரைப்படத்தைத் திரைப்படமாகத்தான் பார்க்க வேண்டும் என்று சொல்லும் படைப்பாளிகளே, ‘நாங்கள் நாட்டில் நடப்பதைத்தான் காட்டுகிறோம்’ என்றும் சொல்லி விடுகிறார்கள். சமூகம் - பொருளாதாரம் - பண்பாடு - அரசியல் - சமயம் - சாதியம் என்ற எந்தப் பரிமாணத்திற்கும் உட்படாத நாட்டு நடப்பு எங்கே இருக்கிறது?

படைப்பாளி எந்த அணுகுமுறையில் ஒரு திரைப்படத்தை எடுத்தாரோ, அந்த அணுகுமுறையில்தான் அனைவரும் அதைப் பார்த்தாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பதுதான் இந்தப் பிரச்சனையின் மையம். ‘சிறுபான்மையினருக்கு எதிராக நான் இந்தப் படைத்தை எடுக்கவில்லை’ என்று படைப்பாளி சொல்லிவிட்டால், அதை சிறுபான்மையினர் அப்படியே நம்பிவிட வேண்டும். உண்மையில், ஒரு படைப்பு வெளியாகிற வரைதான் அது படைப்பாளியின் பார்வைக்கு உரியது. அது வெளியான பிறகு, அதை எந்தக் கோணத்திலும் அணுகுவதற்கும் பார்வையாளருக்கு முழு உரிமை உண்டு.

இதில் படைப்பாளிகளின் இரட்டை நிலையை நாம் மனதில் கொள்ள வேண்டும். பிரச்சனை எழுகிறபோது, ‘இது சும்மா ஒரு பொழுதுபோக்கு’ என்று சமாளிப்பதும், யாராவது அவர்களைப் பாராட்டிவிட்டால், ‘நடப்பதைத்தான் காட்டினேன்’ என்று புளகாங்கிதம் அடைவதும் இந்த இரட்டை நிலையை விளக்கும். மேலும், எதிர்ப்பு வலுக்கிறபோது, எத்தனை கோடி செலவழித்துப் படம் எடுக்கப்பட்டது என்ற பொருளியல் புள்ளிவிவரக் கணக்கைக் காட்டி படைப்பாளிகள் அனுதாபம் தேடுவார்கள். அதாவது, பிரச்சனைக்குரிய கருத்தியலைப் பின்னுக்குத் தள்ளி, வணிக முதலீட்டை அனுதாபத்தோடு முன்னிறுத்துவார்கள். இந்தத் அனுதாபத் தேடலில் படைப்பாளி பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஒரு வியாபாரி முன்னிறுத்தப்படுகிறார். அப்படிப்பட்டச் சூழலில் சினிமா ஒரு வணிகப் பண்டமாகிறது. அந்த வணிகப் பண்டத்தை நுகர்வோர் உரிமையோடு பார்வையாளர் அணுகுவதில் எந்தத் தவறும் இல்லை. சுருங்கக் கூறின், ஒரு திரைப்படத்தைத் திரைப்படமாகப் பார்க்க வேண்டும் என்று மென்மையாகச் சொல்வது, கருத்துச் சுதந்திர மறுப்பாகும்.

3. பெரும்பாலான மக்களும் ரசிகர்களும் தீர்மானிக்கட்டும்

ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்கு எதிராக ஒரு சமூகமோ, குழுவோ குரல் எழுப்பும்போது, ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அதாவது பெரும்பான்மையான ரசிகர்களும் மக்களும் படத்தைத் தீர்மானிக்கட்டும் என்பதாகும். "படம் வெற்றி அடைந்தால், படத்தில் சொல்லப்பட்ட பிரச்சனைக்குரிய கருத்து வெற்றி பெற்றதாகக் கொள்ள வேண்டும். படம் தோல்வி அடைந்தால், அக்கருத்தை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று கொள்ள வேண்டும்."

மேலாட்டமாகப் பார்த்தால், இது ஒரு குடியாட்சி அணுகுமுறையாகத் தோன்றும். ஆனால், இதில் சில சிக்கல்கள் உண்டு. முதலாவதாக, பெரும்பான்மை அரசியல். பெரும்பான்மை மக்களின் முடிவே சரியான முடிவு என்பது ஒருவேளை தேர்தல் அரசியலுக்குப் பொருந்தலாம். ஆனால், இதுபோன்ற படைப்பாற்றல் மற்றும் கருத்துச் சுதந்திரம், கருத்துப் புலப்பாட்டுச் சிக்கல்களில் இது பொருந்துமா? இரண்டாவதாக, பெரும்பான்மையான மக்கள் எடுக்கின்ற முடிவு எப்போதும் சரியான முடிவாகத்தான் இருக்குமா? பெரும்பான்மையோடு ஒத்துப்போகாத சிறுபான்மையின் அல்லது சிறு சமூகத்தின் பார்வை எப்போதும் தவறாகத்தான் இருக்குமா?

இக்கேள்விகளை ஓர் எடுத்துக்காட்டோடு புரிந்து கொள்வோம். தமிழ் சினிமாவில் பன்னெடுங்காலமாக, வக்கிரமாகவும், கொச்சையாகவும், கேலிப் பண்டமாகவும் சித்தரிக்கப்பட்டு வந்தவர்கள் திருநங்கையர். இந்தச் சித்தரிப்பை பெரும்பான்மையான ரசிர்களும் மக்களும் பல காலமாக ரசித்து வந்தார்கள். திருநங்கையர் மீதான வக்கிரப் புனைவுகளை ‘எதார்த்தமாகவே’ எடுத்துக் கொண்டார்கள். அல்லது திருநங்கையர் ஒரு கேலிப் பண்டமே என்று வெகுமக்களின் பொதுச் சிந்தனையில் திரைப்படத் துறை தொடர்ச்சியாக விதைத்து வந்தது. அப்படியானால், திருநங்கையர் என்ற சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிரான பெரும்பான்மையின் ரசனை நியாயம்தானா? திருநங்கையருக்கு எதிரான சித்தரிப்பை அறிந்தோ, அறியாமலோ ஏற்றுக்கொண்டு விட்ட பொதுமக்களின், ரசிகர்களின் தீர்ப்பு சரியானதா? இந்தப் படங்களின் வெற்றி எல்லாமே, திருநங்கையருக்கு எதிரான ‘நியாயத் தீர்ப்பு ’ என்று முடிவு கட்டலாமா? ‘அப்பாடா, நாங்கள் திருநங்கைகள் இல்லை’ என்ற மனோபாவத்தை இந்தப் பெரும்பான்மையின் ரசனை உறுதிப்படுத்திக் கொண்டதா?

இந்தச் சித்தரிப்புகளுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக திருநங்கையரும் அவர்களது ஆதரவாளர்களும் வெளிப்படையாகக் குரல் கொடுத்துப் போராடி வருவதையும், சமீப காலமாக திரைத்துறையில் அவர்களது சித்தரிப்பு குறித்து ஏற்பட்டுள்ள ஆரோக்கியமான மாற்றத்தையும் நாம் அறிவோம். அவர்களது மனித உரிமைப் போராட்டம் ஓரளவு வெற்றி பெற்று வருகிறது என்றே சொல்ல வேண்டும். அப்படியானால், பெரும்பான்மை ரசிகர்களின் ரசனையோடு ஒத்துப்போகாத, இந்தச் சிறுபான்மையின் எதிர்ப்புக் குரல் தவறானதா? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று பழைய நிலைக்கேத் திரும்பி விடலாமா? அல்லது பெரும்பான்மையான மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டு, தங்கள் ரசனையை மாற்றிக்கொள்ளும் வரை, திருநங்கையர் பொறுமையோடு காத்திருக்க வேண்டுமா?

மக்கள் விரும்புவதைத்தான் படமாக எடுக்கிறோம் என்கிற படைப்பாளிகள் உண்டு. Demand and Supply என்கிற ‘நுகர்வோரின் தேவைக்கேற்ப பொருளை உற்பத்தி செய்து தள்ளும்’ வியாபார நுணுக்கமே இது. எனவே, மக்கள் விரும்புவதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்பதில்லை. மக்கள் ரசனையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்று, மேம்படுத்துபவரே சமூக அக்கறையுள்ள படைப்பாளி. திருநங்கையர் குறித்து திரைத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், பொதுமக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில், ஒரு வேளை திருநங்கையரோ, அவர்களது ஆதரவாளர்களோ இப்படி ஒரு போராட்டக் குரல் எழுப்பவில்லையென்றால், என்ன நடந்திருக்கும்? திருநங்கையருக்கான எதிரான வக்கிரமான, மனித உரிமை மீறல் சித்தரிப்புகள் எல்லாம் மக்கள் தீர்ப்பு என்று அமைதி காக்க வேண்டியிருக்கும்.

சமூக அக்கறை, பொது விழுமியம், மனித உரிமை போன்ற செயல்களில் பெரும்பான்மை அரசியலோ, பெரும்பான்மை ரசனையோ, படத்தின் வெற்றி, தோல்வியோ தீர்மானிக்க முடியாது. சமயச் சார்பற்ற, மக்களாட்சித் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட இந்நாட்டில், பாதிக்கப்படுபவர்கள் ஒருவராக இருந்தாலும், அக்குரலுக்குச் செவிமடுக்க வேண்டும். ஒரு வியாபாரியின் வியாபாரப் பாதிப்பு தலைப்புச் செய்தியாகவும், ஓர் அடித்தட்டுச் சமூகத்தின் குரல் பெட்டிச் செய்தியாகவும் போய்விடுகின்ற அவலம் மாற்றப்பட வேண்டும்.

4. தணிக்கைக் குழுவின் முடிவே இறுதி முடிவு

திரைப்படம் ரசிகர்களும் பொதுமக்களும் பார்ப்பதற்கு உகந்ததாக இருக்கிறதா, பொதுநலனைப் பாதிக்காத வகையில் உள்ளதா என்பதை மதிப்பீடு செய்வதும், வரையறைகளுக்கு உட்படாத காட்சிகளைத் தணிக்கை செய்வதும், எத்தகையப் பார்வையாளர்கள் பார்க்க இயலும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப சான்றிதழ் வழங்குவதும்தான் தணிக்கைக் குழுவின் பணி. பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள். எனவே, பிரச்சனைகள் எழுகின்றபோது தணிக்கைக் குழுவின் முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, போட்டிகளில் குறிப்பிடப்படுவது போல, ‘நடுவர் தீர்ப்பே இறுதியானது’ என்ற சிந்தனை முன்வைக்கப்படுகிறது.

உண்மையில் நடப்பது என்ன ? தணிக்கைக் குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கும் நெறிமுறைகளும், அது கடைப்பிடிக்கும் வழிமுறைகளும் நிலையானதாக, ஒரே மாதியாக, எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக இருந்ததில்லை. சமூக - அரசியல் சூழலுக்கேற்ப அதன் நெறிமுறைகளும் வழிமுறைகளும் மாற்றத்திற்கு உட்பட்டே வந்திருக்கின்றன. நெறிமுறைகளைப் புரிந்துகொள்ளும் விதமும் தணிக்கைக் குழு உறுப்பினர்களிடையே மாறுபட்டிருக்கின்றன. சமூக - அரசியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களும் அழுத்தங்களும் தணிக்கைக் குழுவின் தீர்மானங்களை மாற்றியிருக்கின்றன. ஓர் எடுத்துக்காட்டைக் காண்போம். 1930, 40களில் வெளியான சில தமிழ்த் திரைப்படங்களில் ‘பறையர்’ என்று சொல் இழிவாகவும் கொச்சையாகவும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உரையாடல்களில் மட்டுமல்ல, பாடல்களிலும் இச்சொல் இப்படங்களில் இழிவாக இடம்பெற்றுள்ளது. 1942இல் வெளியான நந்தனார் திரைப்படத்தை ஒரு சான்றாகக் கொள்ளலாம். இக்காலத்தில் வந்த இதரப் படங்களிலும் இச்சொல்லாடல் உண்டு. இந்தப் போக்கை எப்படிப் புரிந்துகொள்வது?

maniratnam_250அக்காலத்தில் இச்சொல் அந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சினிமாவில் ‘எதார்த்தமாக’ச் சித்தரிக்கிறோம் என்ற பார்வையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். திரைக்கதையின்படி, அச்சமூகத்தின் தாழ்த்தப்பட்ட நிலையை ஆதிக்கச் சாதியினரின் பார்வையில் உணர்த்துவதாகவும் அமைந்திருக்கலாம். அந்தச் சமூகத்திடமிருந்து அது குறித்த விமர்சனம் எழாமல் இருந்திருக்கலாம். எனவே, தணிக்கைக் குழு அக்காலத்தில் இச்சொல்லை ஒரு பிரச்சனையாகப் பார்த்திருக்க அவசியமில்லை. ஆனால், இன்றைக்கு திரைப்படத்தில் இச்சொல்லை இழிவாகப் பயன்படுத்தத் தணிக்கைக்குழு அனுமதிக்குமா? அனுமதிக்காது என்பதே உண்மை. இதற்குக் காரணம், தணிக்கைக் குழுவிடம் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு அல்ல. அந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்திடம் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும் அரசியலாக்கமுமே இந்த மாற்றத்திற்குக் காரணம்! அடிக்க அடிக்க அம்மியே நகரும்போது, தணிக்கைக் குழு நகராதா என்ன?

இன்றைக்கும் தமிழ்த் திரைப்படத்தில் ‘சண்டாளன்’ என்ற சொல் இழிவாக, பரவலாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பேசும் தமிழ்சினிவாவின் 82 ஆண்டுகால வரலாற்றில், அதிக எண்ணிக்கையில் இழிவாக உச்சரிக்கப்பட்ட சொல் இதுவாகத் தான் இருக்கும். தணிக்கைக் குழுவும் அதை அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறது. அரசு வெளியிட்டுள்ள தாழ்த்தப்பட்ட சாதிகள் பற்றிய பட்டியலில் சண்டாளன் என்ற பெயரும் உண்டு என்று எத்தனை பேருக்குத் தெரியும்? சண்டாளர் என்ற சமூகம் எழுந்து குரல் கொடுக்கும் வரை, ‘நடுவர் தீர்ப்பு இறுதியானது’ அப்படித்தானே! 82 ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் அடிவாங்கிய இச்சமூகம், "இந்நிலை தொடருமானால், சாதிச் சார்பற்ற வேறு மாநிலத்துக்கு, வேறு நாட்டுக்குச் சென்று குடியேறுவோம்” சொல்கிற அளவுக்கு, அதற்கு அடையாளமும் இல்லை, வசதியும் இல்லை, ஆதரவும் இல்லை. அவர்கள் சார்பாக நா தழுதழுக்கக் குரல்கொடுக்க யாரும் இல்லை. இச்சொல்லாடலைத் தெரிந்தோ, தெரியாமலோ கையாண்ட, கையாள்கிற படைப்பாளிகளுக்கும் அதை ரசிக்கின்ற பார்வையாளர்க்கும் மட்டும் ‘நடுவர் தீர்ப்பு இறுதியானது’!

‘ஓர் அடிமைக்கு அவன் என்பதை உணர்த்து. அவன் எழுந்து கிளர்ச்சி செய்வான்’ என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். அவர் குறிப்பிடும் உணர்த்துதல் ஒரு நாள் நிகழ்வல்ல. அது தலைமுறைப் பயிற்சியாகக்கூட இருக்கலாம். காலம் காலமாக, ‘பொழுதுபோக்கு’ என்ற பார்வையிலேயே திரைப்படத்தைப் பார்க்கப் பழக்கப்பட்ட பாமர மக்களுக்கு, அதைச் சமூக மாற்றத்திற்கான விமர்சனத்தோடு அணுகுவது எளிதானதல்ல. அது பயிற்றுவிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் திரைப்படம் என்ற ஊடக வலிமையைக் கொண்டிராத சமூகங்கள் தாங்கள் எப்படிச் சித்தரிக்கப்படுகிறோம் என்ற நிலையை உணர்வதற்கும், அதை வெளிப்படுத்துவதற்குமே பல ஆண்டுகள் பிடிக்கும். அதே நேரத்தில், ஊடக வலிமையைக் கொண்டிருக்கும் ஆதிக்கச் சமூகங்களின் குரலுக்கு படைப்பாளிகளும் தணிக்கைக் குழுவும் உடனடியாகப் பணிந்துவிடுவதை நடைமுறையில் காண்கிறோம். படம் வெளியாவதற்கு முன்பே, ‘தெய்வத் திருமகன்’, ‘தெய்வத் திருமகள்’ ஆனது. தனுஷ் கதாநாயகனாக நடித்த உத்தமபுத்திரன் வெளிவந்த பிறகு, ஏற்படுத்தப்பட்ட அழுத்தத்தின் கராணமாக, ‘முட்டாள் கவுண்டன், முரட்டுக் கவுண்டன்’ என்ற சொற்கள் படத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டன.

இதில், நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஊடக வலிமையைக் கொண்டிராத சமூகங்கள் தங்கள் சித்தரிப்பைப் பற்றிக் குரல் எழுப்பும்போதெல்லாம், அது சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையாக, கலாச்சாரத் தீவிரவாதமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை, இச்சமூகங்கள் தங்கள் கோரிக்கையை படைப்பாளிகள் எதிர்பார்க்கிற ‘மென்மையான வழி’களில் வெளிப்படுத்தினால், அது ஊடகங்களில் பெட்டிச் செய்தியாகவோ, துணுக்குச் செய்தியாகவோ இடம் பெறும். அக்கோரிக்கைக்குப் பின்னிருக்கும் கருத்தியல் ஒருபோதும் விவாதத்திற்கு உள்ளாகாது. எந்த ஒரு போராட்டமும் கவனத்தை ஈர்க்கிறபோதுதான், அதன் கருத்தியல் கவனத்தில் கொள்ளப்படுகிறது. எது எப்படி இருப்பினும், தணிக்கைக் குழுவின் பார்வையும் அணுகுமுறையும் நெறிமுறைகளும் மாற்றத்திற்கு உட்பட்டவையே. எனவே, ‘நடுவர் தீர்ப்பு இறுதியானது’ என்பது தற்காலிமானதே!

மேலும், தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கிய பிறகு, அதை எந்தச் சமூகத்தினரிடமும் அல்லது தனிநபர்களிடமும் போட்டுக்காட்ட வேண்டிய அவசியமில்லை என்பதுதான் பொதுவான நடைமுறை. ‘தவறான முன்னுதாரணம்’ என்று இப்போது புலம்பும் படைப்பாளிகள், ஒரு நியாமான, பொதுவான அளவுகோலை கடைப்பிடிக்கின்றனரா என்பதே கேள்விக்குறி! பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, மும்பையில் ஏற்பட்ட தாக்குதலை கதைக்களமாகக் கொண்ட படம் 1995ல் வெளியான பம்பாய். இத்திரைப்படம் வெளியாகும் முன் அத்திரைப்படத்தை பால் தாக்கரேக்குத் திரையிட்டுக் காட்டிவிட்டு, அத்திரைப்படம் அவருக்கோ, அவருடைய கட்சிக்கோ எதிரானதல்ல என்பதை உறுதிப்படுத்திவிட்டுத்தான் இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். ஆக, முன்னுதாரணம் எப்போதோ உருவாக்கப்பட்டுவிட்டது.

பால் தாக்ரே தணிக்கைக் குழுவுக்கு மேலானவரா என்ற கேள்வியை எத்தனைப் படைப்பாளிகள் எழுப்பினார்கள்?

ஓர் அரசியல்வாதியிடம் சரணடைந்த மணிரத்னத்திற்கு எதிராக படைப்பாளிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

பால் தாக்ரேக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

ஆக, ‘நடுவர் தீர்ப்பு இறுதியானது இல்லை’ என்ற கருத்து ஒவ்வொரு கட்டத்திலும் வலுப்பட்டே வந்திருக்கிறது. இனியும் இது தொடரும் என்றே தொடர்கிறது.