சீனு ராமசாமியின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில், பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், ரகு நந்தனின் இசையமைப்பில், வைரமுத்துவின் பாடல் வரிகளில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'நீர்ப்பறவை' திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். திரைவிமர்சனம் செய்யும் அளவுக்கு சினிமா குறித்த ஆழ்ந்த பார்வையோ, ஆழ அகலமோ எனக்குத் தெரியாது என்றாலும் 'நீர்ப்பறவை'யை பார்த்த உடனேயே அதுபற்றி சில விசயங்களை எழுத வேண்டும் என்று தோன்றியது.

நூற்றாண்டை நெருங்கும் தமிழ் சினிமா வரலாற்றில், இம்மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களைப் பற்றி, அவர்களுக்கு பொதுச்சமூகத்தின் மீது இருக்கும் பேரன்பைப் பற்றி, அவர்களின் சமூக அரசியல் பற்றி இவ்வளவு கூர்மையாகவும் நேர்மையாகவும் பதிவு செய்த ஒரு படம் இதுவரை வந்ததில்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு 'நீர்ப்பறவை' படத்தின் முஸ்லிம் பாத்திரம் மிக நேர்த்தியுடன் சித்திரிக்கப்பட்டுள்ளது.

samuthirakani_neerparavai_640

பாவமன்னிப்பு படத்தில் சிவாஜியும், பாரத விலாஸ் படத்தில் வி.கே.ராமசாமியும், படிக்காதவன் படத்தில் நாகேசும், மேலும் சில படங்களில் சில நடிகர்களும் முஸ்லிம் வேடமிட்டு வந்து சென்றுள்ளனர். ஆனால் பெரும்பாலான படங்களில் வில்லன்களாகவும், கடத்தல்காரர்களாகவும், 'நிம்பள் பொண்ணு தர்றான்..நம்பள் தங்கம் தர்றான்' என்று சொல்லி பெண்களை மேய வரும் அரபு ஷேக்குகளாகவுமே முஸ்லிம்கள் சித்திரிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, சாம்பிராணி போடும் முஸ்லிம், கறிக்கடை நடத்தும் முஸ்லிம் என சில பாத்திரங்களை நிரந்தரமாகவே முஸ்லிம்களுக்கு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்த அளவில் சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவில் மணிரத்னத்தின் 'ரோஜா' படம் புதிய பயங்கரத்தை விதைத்தது. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்; முஸ்லிம்கள் இந்திய தேசியத்துக்கு எதிரானவர்கள்; அவர்கள் அந்நிய நாடுகளின் கைக்கூலிகள் என்றெல்லாம் இப்போது தமிழ் சினிமாவில் செய்யப்பட்டு வரும் பரப்புரைக்கு 'ரோஜா' திரைப்படமே வழிவகுத்தது.

ரோஜாவில் ஒரு காட்சி வரும். அதாவது முஸ்லிம் வேடத்தில் இருக்கும் தீவிரவாதி ஒருவர் இந்திய தேசியக் கொடியை எரிப்பது போலவும், பார்ப்பன வகுப்பைச் சார்ந்த கதாநாயகன் எரியும் கொடியின் மீது படுத்து தீயை அணைப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது. இந்த ஒற்றைக் காட்சியின் மூலம் முஸ்லிம்கள் என்றால் இந்திய தேசியத்துக்கு எதிரானவர்கள் என்ற கருத்தையும், பார்ப்பனர்கள் என்றால் தேசியத்தைக் காக்க உயிரையே பணயம் வைப்பவர்கள் என்ற கருத்தையும் ஒரே சமயத்தில் பதிவு செய்து விட்டார் மணிரத்னம். 1992 இல் எடுக்கப்பட்ட இந்தக் காட்சி அந்தக் காலத்தோடு காலாவதியாகி விடவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட இப்போதும் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தேசிய நாட்களின்போது தொலைக்காட்சிகளில் சிறப்புத் திரைப்படம் என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 1992 இல் ரோஜா வந்தபோது பிறந்த ஒரு குழந்தை இன்று 20 வயது இளைஞனாக இருப்பான். அப்போது படத்தைப் பார்க்காதவன் இப்போது டிவியில் பார்க்கிறான். ஆக, காலங்களைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் சினிமாவின் மூலம் வெகுமக்களிடம் சென்று சேர்க்கப்படுகிறது.

ரோஜாவுக்குப் பின் பம்பாய், பம்பாய்க்குப் பின் அதே பாணியில் விஜயகாந்தின் பல படங்கள், அர்ஜுனின் படங்கள், கமலஹாசனின் படங்கள் என முஸ்லிம் விரோத படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. அந்த வரிசையில் சமீபத்திய வரவு விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம்.

துப்பாக்கி திரைப்படம் ஏற்படுத்திய சர்ச்சைகளும், அதனால் நிகழ்ந்த பிரச்சனைகளும் ஒருவழியாக ஓய்ந்திருக்கும் இவ்வேளையில் 'நீர்ப்பறவை'யின் வரவு முக்கியத்துவம் பெறுகிறது. துப்பாக்கிக்கு எதிராக முஸ்லிம் சமூகம் திரண்டு தெருவுக்கு வந்து போராடி, தம் தரப்பு நியாயத்தை பொதுச்சமூகத்தின் மத்தியில் பதிய வைத்திருக்கும் இந்நேரத்தில், தெருவில் அல்லாமல் திரையிலேயே முஸ்லிம்களின் நியாயத்தைச் சொல்கிறது நீர்ப்பறவை.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், மிகச் சிறந்த நடிகருமான சமுத்திரக்கனி நீர்ப்பறவையில் முஸ்லிமாக வருகிறார். அவர் தோன்றும் காட்சிகளையெல்லாம் மிகுந்த சமூகப் பொறுப்புணர்வுடன் சீனு ராமசாமி எடுத்துள்ளார். உதுமான் என்ற பெயரில் உலாவரும் சமுத்திரக்கனியின் முஸ்லிம் தோற்றம் மிக இயல்பாக அமைந்துள்ளது. அந்தப் பாத்திரத்தின் உடல் மொழியோ, உடையோ, உச்சரிப்போ எதுவுமே பார்வையாளர்களை உறுத்தவில்லை. வழக்கமான தமிழ் சினிமாக்களில் வரும் முஸ்லிம் பாத்திரத்தின் உடையும், உச்சரிப்பும் அவர்களை வேற்றுக்கிரகவாசிகளைப் போலவே காட்டும். அந்த அந்நியத்தன்மை நீர்ப்பறவையில் இல்லை. முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்; இந்த மண்ணோடும் மக்களோடும் பின்னிப் பிணைந்தவர்கள் என்பதை நீர்ப்பறவை உரக்கச் சொல்கிறது.

seenuramasamy_samuthirakani_640

முஸ்லிமாக வரும் சமுத்திரக்கனி மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் செய்துதரும் பட்டறையை நடத்துகிறார். உழைத்து முன்னேறி சமூக அந்தஸ்தைப் பெற்றவராக காட்சி தருகிறார். முஸ்லிம் என்றாலே கடத்தல்காரர்கள்; தவறான வழியில் பொருளீட்டுபவர்கள்; இளம்பெண்கள் நடனமாடுவதை மதுக் கோப்பையுடன் ரசிக்கும் தொழிலதிபர்கள் என்றெல்லாம் இதுவரை காட்டிவந்த தமிழ் சினிமாவுக்கு நீர்ப்பறவையின் இந்தக் காட்சி சரியான சவுக்கடி.

உதுமான் [சமுத்திரக்கனி] பிற சமூகத்தவருக்கு உதவி செய்பவராகவும், அவர்களுக்கு ஆறுதல் அளிப்பவராகவும், ஆலோசனைகள் கூறுபவராகவும், துயரத்தில் பங்கேற்கும் தோழராகவும் வருகிறார். இந்த மண்ணில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் இடையில் காலங்காலமாக இருந்து வரும் உறவையும் நல்லிணக்கத்தையும் இந்தக் காட்சிகளின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

கிறித்தவ சமூகத்தைச் சார்ந்த மீனவராக வரும் கதைநாயகனை எல்லோருமே வெறுத்து ஒதுக்கும்போது, அவனுக்கு படகு செய்து கொடுக்க உதுமான் முன்வருவதும், அந்தப் படகுக்கு உரிய பணம் அவனிடம் இல்லை எனும்போது, தவணை முறையில் பணம் கட்டச் சொல்லி உதவுவதும் மிகச் சிறப்பு.

நீர்ப்பறவையில் உதுமான் தீர்க்கமான அரசியல் பேசுகிறார்; பொதுப் பிரச்சனைகளைப் பற்றி கருத்துச் சொல்கிறார்; மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுவது குறித்து கவலை கொள்கிறார்; அவர்களை அரசுகள் கண்டுகொள்ளாமல் கைவிடுவது ஏன் என்பதற்கான காரணத்தைச் சொல்கிறார். ஆக, முஸ்லிம்கள் பொதுப் பிரச்சனைகளில் அக்கறை அற்றவர்கள், தமது வேலையை மட்டும் பார்த்து விட்டு நைசாக நழுவி விடக்கூடியவர்கள், அரசியல் பார்வை அற்றவர்கள் என்றெல்லாம் வரையப்பட்டிருக்கும் சித்திரத்தை தகர்க்கிறது இந்தக் காட்சிகள்.

'நீங்க பெரிய கூட்டம் போட்டா, அது போராட்டம்; ஆனா, நாங்க நாலு பேர் கூடினா, அதுக்குப் பேர் தீவிரவாதமா?' என்று பொதுப்புத்தியை நோக்கி கேள்வி எழுப்புகிறார் உதுமான். 1947களில் பிரிவினைவாதிகளாகவும், பின்னர் வன்முறையாளர்களாகவும், இப்போது தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டு வருகின்ற கோடானு கோடி இந்திய முஸ்லிம்களின் சார்பில், இந்த ஒற்றை வசனத்துக்காக சீனு ராமசாமிக்கும், நீர்ப்பறவை குழுவினருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்.

முஸ்லிம்களின் குரலாக, அன்று தெருவெங்கும் முழங்கினார் ஈ.வே.ராமசாமி; இன்று திரையில் முழங்கியிருக்கிறார் சீனு ராமசாமி.

பெரியார் தொடங்கி வைத்தது; அவரது, கொள்கைப் பிள்ளைகளால் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

- ஆளூர் ஷாநவாஸ்

Pin It