பாரிஸ் நகரத்தில் 1895 ஆம் ஆண்டு இருந்த கிராண்ட் கபே எனும் அரங்கில் கைகளில் மதுக்கோப்பைகள் வழிய கோட்டும், சூட்டுமாய் கூடி இருந்தது ஒரு கூட்டம். அடுத்து வரும் நூற்றாண்டுகளை தலைகீழாக புரட்டிப்போடப்போகும் ஒரு மாபெரும் கலையின் பிறப்பை முதன்முறையாக தரிசிக்கப்போகிறோம் என்றெல்லாம் அங்கு கூடி இருந்த கனவான்களுக்கு தெரியாது. பாரிஸ் போன்ற நகரங்களில் அடிக்கடி நடத்தப்படும் ஏதோ ஒரு சில கண்டுபிடிப்புகளின் விளம்பரக் காட்சி போன்றதொரு வழக்கமான காட்சிதான் இதுவும் என்று அவர்கள் சுவாரசியம் ஏதும் இன்றி இருந்திருக்கக்கூடும்.

இழுத்துக்கட்டப்பட்ட அகன்ற வெள்ளைத்திரையில் தாங்களே உருவாக்கியிருந்த ஒரு கருவியின் துணையோடு உலகின் முதல் சலனப்படத்தை திரையிட்டார்கள் அகஸ்த் லூமியே, லூமி லூமியே என்ற அந்த அபூர்வ சகோதரர்கள். வெள்ளைத்திரையில் புகையை கக்கியபடி வந்து.. நின்று.. புறப்பட்டுப்போனது ஒரு புகைவண்டி. இந்தப் “புகைவண்டியின் வருகை” (Arrival of a train) யோடுதான் உலகின் சினிமா சகாப்தம் துவங்கியது. சில நிமிடங்களே ஓடிய அந்த சின்னஞ்சிறிய துண்டுப் படத்துடன் துவங்கிய சினிமா என்னும் புதிய கலை இன்று உலகையே கட்டி ஆளுகிறது.

18ஆம் நூற்றண்டின் இறுதியில் பறக்கத்துவங்கிய சினிமாவின் ஜெயக்கொடி இன்னமும், கனகம்பீரமாக பறந்துகொண்டே இருக்கிறது. சினிமா என்கிற இந்த மகத்தான கலைவடிவம் நூற்றாண்டுகளின் இடையறாத ஓட்டத்தில் நமது வாழ்வில் ஊடுருவி நமது மூளை அடுக்குகளில் நிரந்தரமாக நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டுவிட்டது. இப்போதெல்லாம் சினிமாவை தவிர்த்துவிட்டு எதையுமே யோசிக்க முடியாது போல் ஆகிவிட்டது. நமது காதல் தொடங்கி கல்யாணம் வரையிலும் எதுவும் சினிமாவின் பாதிப்பில் இருந்து தப்பமுடியவில்லை. நமது பண்டிகைகளும், திருவிழாக்களும் புதிய சினிமா இல்லாமல் நகர மறுக்கின்றன. நமது அரசியலில் சினிமாவின் கை இருந்து கொண்டேதான் இருக்கிறது.

ஆனாலும் சினிமாவை நாம் எப்படி புரிந்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்வி இன்னமும் தொடரத்தான் செய்கிறது. ஒரு நல்ல இசையை எப்படி ரசிப்பது... ஒரு நல்ல கதையை எப்படி அறிந்து கொள்வது.. ஒரு நல்ல கவிதையை எப்படி புரிந்து கொள்வது... என்றெல்லாம் சொல்லித்தரப்பட்ட நமக்கு... ஒரு நல்ல சினிமாவை எப்படி அடையாளம் கண்டுகொள்வது.. ? மோசமான சினிமா எது.. ? நல்ல சினிமா எது..? என்றெல்லாம் எந்த இடத்திலும் சொல்லித்தரப்படவில்லை. சினிமா பற்றி பாடப்புத்தகத்தில் வைக்க வேண்டுமென்று சொன்னாலே நமது கல்வியாளர்களுக்கு அலர்ஜி வந்து விடுகிறது.. ஆ... ஊ... என்று வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறார்கள். ஆனால் இந்த கேள்விகளையெல்லாம் மென்று விழுங்கியபடியே நமது சமூகம் சினிமாவை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

இப்படி சினிமா பார்த்துக்கொண்டு இருக்கும் நமது சமூகத்திற்கு.... குறிப்பாக இளைஞர்களுக்கு நல்ல சினிமாக்களை அறிமுகப்படுத்துவதுதான் இந்த தொடரின் நோக்கம். உலக சினிமா வரலாற்றில் தடம் பதித்த சினிமாக்கள்.. உலகை புதிய விதத்தில் காட்டிய திரைப்படங்கள்.. உலக சினிமாக்கள்... உள்ளூர் சினிமாக்கள்.. மாற்று திரைப்பட முயற்சிகள்.... சினிமா மொழி.. சினிமா ஆளுமைகள்... என சினிமாவின் சகல விஷயங்களையும் இந்த தொடர் உங்களுடன் பேசும்..

உலக சினிமா என்றால்.. அதற்கு என்ன இலக்கணம்? அதற்கு என்ன வரையறை? அதில் என்னவெல்லாம் இருக்கும்? இப்படி நிறைய கேள்விகள் தொடர் வண்டியாய் நீளும், கண்டம், தேசம், இனம், மொழி, கலாசாரம், பண்பாடு என உலகின் கட்டி அமைக்கப்பட்டுள்ள எல்லா எல்லைக்கோடுகளையும் தாண்டி... ஒரு படம் உங்களை பாதிக்குமெனில்.. அதை உலக சினிமா என தைரியமாக புரிந்து கொள்ளலாம். மொழி புரியாமல் போனாலும்... ஒரு சினிமா உங்களுக்குள் இறங்கி... உங்கள் அமைதியை குலைத்துப் போட்டு... உங்களை என்னமோ செய்கிறதென்றால்... அது உலக சினிமா பட்டியலில் இடம் பிடித்துவிடும். உங்கள் மன அழுக்குகளை கரைந்து போகச் செய்கிற... உங்கள் மனிதாபிமானத்தை தட்டியெழுப்புகிற.... எந்த சினிமாவும்... உலக சினிமாதான்.. படம் பார்க்கிற அந்த ரெண்டு மணி நேரமோ.. ஒன்றரை மணி நேரமோ.. உங்களை உங்களில் உணரவைத்து.... அதே சமயம் வேறெங்கோ கொண்டு செல்கிற ரஸவாத வித்தையை ஒரே நேரத்தில் செய்கிற எல்லா சினிமாக்களுமே உலக சினிமாக்கள்தான்.

அத்தகைய உலகின் மிகச்சிறந்த பத்து படங்களை யார் பட்டியலிட்டாலும் அதில் நிச்சயம் ஒரு படம் இடம்பெறும். அதுதான் “போர்க்கப்பல் பொடம்கின்”, “மான்டேஜ்” உத்தியின் தந்தை என்றறியப்படும் செர்கய் ஐஸன்ஸ்டீன் இயக்கிய திரைக்காவியம் இது. ஜார் மன்னனுக்கு எதிரான புரட்சிப் போரால் ரஷ்யா சிவந்தமண் ஆகிக்கொண்டிருந்த நேரம் அது. சீறி எழும் அலைகளின் பின்னணியில் “புரட்சி என்பது போர். வரலாற்றில் அறியப்படும் எல்லா போர்களிலும் புரட்சி ஒன்றுதான் நீதிமிகுந்தது... உரிமைக்கானது. இதுதான் உண்மையிலேயே மிகச்சிறந்த போர். ரஷ்யாவில் அத்தகையப் போர் அறிவிக்கப்பட்டு துவங்கியும் விட்டது” என்ற புரட்சித்தலைவர் லெனின் வரிகளுடன் படம் துவங்குகிறது. போர்க்கப்பலான பொடம்கின் நடுக்கடலில் நங்கூரமிறக்கி நிற்கிறது. அதன் மாலுமி ‘வாக்குலின்சுக்’ கிடம், தொழிலாளர்களின் புரட்சிப் போருக்கு நாமும் ஒத்துழைப்பு தர வேண்டுமென சக மாலுமி கேட்கிறார். அதை ஏற்கும் வாக்குலின்சுக், அன்றிரவு கப்பல் தொழிலாளர்களிடம் அதைப்பற்றி ஆவேசமாக பேசுகிறார். “ஒட்டுமொத்த ரஷ்யாவும் எழுகிறது. நாம் ஏன் காத்திருக்க வேண்டும். நாமும் குரல்கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்கிறார்.

எல்லோரும் சம்மதிக்கிறார்கள். போரைத் தொடங்கக் காரணம் வேண்டுமே.. அழுகிப் போன மாமிசத்தின் வழியே பிரச்னையைக் கிளப்புகிறார்கள். புழுக்கள் நெளியும் மாமிசத்தை சாப்பிட மறுத்து குரல் எழுப்புகிறார்கள். ஆனால் கப்பலின் மருத்துவ அதிகாரியோ, “ஒன்றும் பாதகமில்லை... கழுவிவிட்டு சாப்பிடலாம்” என திமிராக பதிலளித்துவிட்டுப் போகிறான். கொதிக்கிறார்கள் தொழிலாளர்கள். அந்த மாமிசத்திலேயே தயாரிக்கப்படும் சூப்-ஐ சாப்பிட மறுக்கிறார்கள். இதனால் கப்பல் அதிகாரிகள் கோபமடைகிறார்கள்.

கப்பலின் மேல்தளத்தில் மாலுமிகள், ஊழியர்கள் எல்லோரையும் நிறுத்தி, சூப் குடிக்காதவர்களையும் மாமிசம் சாப்பிடாதவர்களையும் சுட்டுத் தள்ள காவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. துப்பாக்கிகளுடன் காவலர்கள் சுடத் தயாராகும் போது.. “சகோதரர்களே யாரைச் சுடப் போகிறீர்கள்..? ” என மனசாட்சியை உலுக்கும் கேள்வியை எழுப்புறார் வாக்குலின்சுக். காவலர்கள் சுடத்தயங்கி துப்பாக்கிகளை கீழிறக்கும் போது, ஆத்திரமடையும் அதிகாரி, தானே துப்பாக்கியைப் பிடுங்கி சுடுவதற்குத் தயாராக.. விழித்துக் கொள்ளும் மாலுமிகள் அதிகாரிகளைத் தாக்க கப்பலுக்குள் வெடிக்கிறது கலவரம்.

அந்த மோதலின் இறுதி வெற்றி தொழிலாளர்களுக்குத்தான். அந்த சந்தோஷத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, அடிபட்டுக் கிடந்த அதிகாரி ஒருவன் வாக்குலின்சுக்கின் பின்னந்தலையில் சுட்டுவிடுகிறான். இதில் வாக்குலின் சுக் உயிரிழக்கிறார். அவரது உடலை அருகிலிருக்கும் ஒடேசா நகருக்கு கொண்டு வந்து துறைமுக கூடாரத்தில் வைத்து... “ஒரு கரண்டி கஞ்சிக்காகக் கொல்லப்பட்டவர்” என்று எழுதிவைத்து, ஊரின் திசை நோக்கி உடல் வைக்கப்படுகிறது.

இரவின் திரை விலக்கி மெல்ல விடிகிறது அந்த பனிக்காலை. சூரியனின் கதிர்களைப் போலவே ஊருக்குள் பரவுகிறது வாக்குலின்சுக்கின் மரணச் செய்தி. அவருக்கு அஞ்சலி செலுத்த மக்கள் வருகிறார்கள். ஒன்று .. பத்து... நூறு.. ஆயிரமென திரள்கிறது மனிதக்கூட்டம். துறைமுகத்திற்கு வரும் எல்லாப் பாதைகளிலும் மனிதர்கள்... மனிதர்கள் சக மனிதர்கள்தான். வாக்குலின்சுக்கின் உடலைப் பார்த்து சிலர் கண்ணீர் விடுகிறார்கள். பெண்கள் கதறி அழுகிறார்கள். ஒரு பெண் அவரது கைகளில் கண்ணீர் முத்தமிடுகிறாள். சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணீர் ஆவேசமாக மாறுகிறது. குமுறுகிறது கூட்டம்... கோபம் கொப்பளிக்கிறது. இந்த அநியாய கொலைக்கு பழி தீர்க்க வேண்டுமென ஒடேசா நகர மக்களை அழைக்கிறான் ஒரு கோபக்கார இளைஞன். இளைஞர்கள் கைகளை மடக்கி ஆவேசத்துடன் குரல் கொடுக்கின்றனர். மக்கள் வெள்ளத்திடையே எழுச்சியும், ஆவேசமும் பரவுகிறது. கப்பல் தொழிலாளிகள் துறைமுகத்தில் கூடுகிறார்கள். ரஷ்யத் தொழிலாளிகளோடு சேர்ந்து போராடுவோம் என்கிறார் ஒருவர். ஒடேசா நகர மக்களின் ஆவேசங் கொண்டு போராடுவோம்.... வெற்றிபெறுவோம்.. என்ற முழக்கத்திற்கிடையே கப்பலில் ஏற்றப்படுகிறது செங்கொடி...

போர்க்கப்பல் பொடம்கினை நோக்கிப் படகுகளில் தொழிலாளிகள் செல்கிறார்கள். மக்கள் கையசைத்து உற்சாகமாக அனுப்புகிறார்கள். கப்பலில் இருக்கும் மாலுமிகள் அவர்களை வரவேற்கிறார்கள். எங்கும் உற்சாகம் ஒடேசா நகரத்தின் துறைமுகப் படிக்கட்டுகளில் கூடி நின்று மக்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கும் போது.. ஜார் மன்னனின் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அணி அணியாக வந்து மக்களை சுடத் துவங்குகிறார்கள். மக்கள் கூட்டம் படிக்கட்டுகளில் சிதறியோடுகிறது. பலர் குண்டடிபட்டு படிக்கட்டுகளில் சாய்கிறார்கள். ஆனாலும் சுடுவது நிற்கவில்லை. குழந்தைகள், சிறுவர், பெண்கள், முதியோர் என எந்த சலுகையும் காட்டாமல் சுட்டுத்தள்ளுகிறது ஜார் மன்னனின் துப்பாக்கிப்படை.

இதற்கு பதிலடி கொடுக்கத் தயாராகிறது போர்க்கப்பல் பொடம்கின். அந்த நேரத்தில் அரசுப் படைகள் சூழும் தகவலறிந்து அதை எதிர்கொள்வதென முடிவெடுக்கிறார்கள். அமைதியான அந்த இரவு முடிந்தபின், அதிகாலையில் அரசு கப்பல்கள் வருவதை அறிந்தவுடன் பொடம்கின் எதிர்த்தாக்குதல்களுக்கு தயாராகிறது. பீரங்கிகள் தயராகிறது. குண்டுகள் அடுக்கப்படுகிறது. கப்பலுக்குள் வருவதற்கான ஏணிகள் மடக்கப்படுகிறது. கரும்புகையை கக்கிக் கொண்டு முன்னேறுகிறது பொடம்கின்.

அரசுப்படைக் கப்பல்களும், போர்க்கப்பல் பொடம்கின்னும் அருகருகே நெருங்குகின்றன. சுடுவதற்கு தயாராகி நெருங்கும்போது.. அரசு கப்பலில் இருக்கும் வீரர்கள் “சகோதரர்களே...” என கூவி அழைத்து புன்னகை புரிகிறார்கள். மகிழ்ச்சியில் தங்கள் தொப்பிகளை உயர்த்தி காட்டி கையசைக்கிறார்கள்.

புரிந்து விட்டது.. எல்லோருக்கும்தான் .. செங்கொடி பறக்க அரசுப் படையின் கப்பல்களும் புரட்சிக்காரர்களுடன் இணைந்துவிட்டன. பொடம்கின் முன் செல்ல அவற்றின் பின்னே மற்ற கப்பல்கள் பின்தொடர வெற்றிக்கான பயணம் தொடர்கிறது. பொட்டம்கின் கப்பலின் தோழர்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கையசைக்க.. ஆரவாரக் கூச்சலுடன் நிறைவடைகிறது படம்.

ரஷ்யாவில் நடந்த கிளர்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தை உலகின் சினிமாக்களின் சிகரம் எனலாம். துண்டு துண்டான காட்சிகளை அடுத்தடுத்து இணைப்பதன் மூலம் காட்சியில் ஒரு தீவிரத்தன்மையை ஏற்படுத்தும் மான்டேஜ் என்ற முறையை பயன்படுத்தி இப்படத்தில் எடுக்கப்பட்ட ஒடேசா படிக்கட்டு காட்சிகள் இன்றைக்கும் திரைப்படம் பயில்பவர்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கிறது. இறந்த வாக்குலின்சுக்கிற்கு அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டுவரும் காட்சிகளும், போருக்குத் தயாராகும் பொடம்கின் கப்பல் காட்சிகளும் மான்டேஜ் உத்தியின் அற்புத விளையாட்டுக்கள்தான்.

ரஷ்யாவில் எடுக்கப்பட்ட இந்த மௌனப்படம் 1925 ஆம் ஆண்டில் வெளியாளது. இப்படத்தை இந்தியாவில் திரையிட தடைவிதிக்கப்பட்டது. போல்ஷ்விக் புரட்சியை ஆதரிக்கும் இப்படம், ஒரு புரட்சிப் படம் என்று நன்றாகவே தெரிகிறது என்ற குறிப்பை எழுதி பம்பாய் போலீஸ் கமிஷனர் இப்படத்திற்கு தடை விதித்தார். பின்னர், நாடெங்கும் தடை நீட்டிக்கப்பட்டு, சுதந்திரத்திற்கு பிறகுதான் அந்தத்தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இப்படத்தின் இயக்குநரான செர்கய் ஐஸன்ஸ்டீன், 1917ல் நடந்த புரட்சியின்போது செம்படையில் பொறியாளராக இருந்தவர். மான்டேஜ் எனப்படும் படத்தொகுப்பு உத்தியை சினிமாவுக்கு வழங்கி திரைப்பட மொழிக்கு பங்களிப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்களையும். ... போர்க்கப்பல்களையும்... பார்க்காதவர்கள் இந்தப்படத்தைப் பார்த்தால் அந்தப்போர் தருணங்களை உணர முடியும்....

பயணம் தொடரும்...

(இளைஞர் முழக்கம் செப்டம்பர் 2011 இதழில் வெளியானது)

Pin It