1910 – ஆம் ஆண்டில் டோகியோ நகரில் பிறந்த அகிரா குரோசவா ஜப்பானில் பிரபலமான 'சமுராய்' (கட்டுப்பாடான மறவர்) வழி வந்தவர். மூன்று தலைமுறைகளாக அவரது குடும்பம் டோகியோவில் நிலைத்திருந்த காரணத்தால் 'எடக்கோ' (டோகியோவின் உண்மையான குடிமகன்) என்னும் தகுதி பெற்றிருந் தார்.

இவரது தந்தை படை ப்பயிற்சிப் பள்ளியில் கல்வி கற்று படையில் சேவை செய்தவர்; ;  படை ஊழியத்திலிருந்து வெளியேறிய பிறகு ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்பள்ளியில் உடற்பயிற்சி, விளையாட்டுகளில் சிறப்புப் பயிற்சியும் கல்வியும் கொடுத்து வந்தனர். கட்டுப்பாடும் கடமை உணர்வும் மிக்கவரான அவர் பொது வாழ்விலும் அக்கறை கொண்டு உழைத்து வந்தவர். அகிராவின் தாய் மிகவும் அமைதியான குணமுடையவர். அவ்விருவரின் ஏழாவது குழந்தையாக பிறந்தவர் அகிரா குரோசவர்  அண்ணன்மார் மூவர், தமக்கையர் மூவர்.

பள்ளிப் பருவத்தில் குரோசவா மென்மையான குணமும் அடக்கம் கொண்ட சிறுவனாகவும் இருந்தார். அக்காலத்தில் அவருக்கு நெருங்கிய நண்பனாக இருந்தது கெயிநொசுகெ உகுச என்னும் பள்ளித் தோழன். (பிற்காலத்தில் புகழ் பெற்ற திரைக்கதைப் படைப்பாளன் என பெயர் பெற்றவர்). அப்பள்ளியில் குரோசாவின் ஆசிரியராக இருந்த தசிகவ, அகிராவின் மீது பெரும் செல்வாக்கைச் செலுத்தியிருந்தார். அசிகவ மிகவும் முற்போக்கு உள்ளம் கொண்டவராக விளங்கி தம் மாணவர்களுக்கு கலைகளில் கல்வி கொடுப்பது பற்றி பெரும் அக்கறை காட்டினார். அகிராவும் கலைகளில், குறிப்பாக ஓவியத்தில் மிகுந்த அக்கறையும், ஆர்வமும் கொண்டு கற்று வந்தார். ஆனால், மேல்நிலைப் பள்ளிக்கு போனபோது அங்கு படைக்கல்வியில் மட்டுமே சிறப்பான அக்கறை காட்டி பயிற்றுவித்து அகிரவிற்கு சோர்வை ஏற்படுத்தியது.

பள்ளிப் பருவத்தில் ஓவியத்தில் அதிக நாட்டம் செலுத்தி வந்த அகிரா குரோசவா பள்ளிப்படிப்பு முடிந்தபின்பு 1927ல் மேற்கத்திய ஓவியக்கலையைக் கற்பிக்கும் கலைக்கூடம் ஒன்றில் மாணவனாகச் சேர்ந்தார். அங்கு அவரது திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. பரிசுகளும் பாராட்டுக்களும் கிடைத்தன. தந்தையின் வருவாய் மிகவும் குறைவாக இருந்ததினால் அக்காலத்திலேயே குடும்ப சுமையை ஏற்க ஆங்காங்கே ஓவியம் வரைந்து கொடுத்து ஓரளவு வருவாய்க்காக உழைக்க வேண்டி இருந்தது. அவரது ஏராளமான ஓவியங்கள் ஓவியக்காட்சிகளில் இடம் பெற்றன் மிகச் சிறந்த ஓவியராக அவர் அறியப்படத் துவங்கினார். (இந்த ஓவியத்திறன், பின் நாளில் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது.

திரைப்படத் தயாரிப்பில்    படப்பிடிப்பிற்கு முன்பாக முன் தயாரிப்பு வேலையாக கணக்கற்ற கோட்டுப்படங்களையும் ஓவியங்களையும் வரைந்து கொள்வார். அவை அவர் எண்ணியுள்ள சினிமா விளைவுகளை காட்சிப்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருந்தன).அதே காலத்தில் அகிராவும் அவரது இளமைத் தோழரான உகுசவும் ஜப்பான் பாட்டாளி வகுப்புக் (புரொலிடேரியெட்) கலைஞர்கள் கழகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அத்தொடர்பினால் குரோசவாவிற்கு உருசியாவின் 19-ஆம் நூற்றாண்டு இலக்கியங்களில் நாட்டம் ஏற்பட்டது. அவ்விலக்கியங்களைப் படிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். நிறைய படிப்பது, அவைகள் குறித்து கருத்துப் பரிமாறிக் கொள்வது ஆகியவை அவரது அன்றாட அலுவல்களாயின. டால்ஸ்டாய், துர்கனீஃப்,தாஸ்த்தாவஸ்கி முதலான படைப்பாளர்கள் அவரின் மனதைக் கொள்ளை கொண்டவராவார். தாஸ்த்தாவஸ்கி இவர்களில் அகிராவுக்கு மிகவும் பிடித்தமான படைப்பாளர். அகிராவின் மீது பெரும் பாதிப்பை இறுதிநாள் வரை ஏற்படுத்திக் கொண்டிருந்தவர். 

இளம் பருவத்திலும் இளைஞனாக இருந்தபோதும் அகிராவின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி செல்வாக்கைச் செலுத்திய மற்றொருவர் அவரது அண்ணனான ஹெயிகோ. அண்ணனுக்குக் கலைகளிலும் இலக்கியத்திலும் பெரும் நாட்டமும் திறனும் இருந்தது. அவர்தந்தையின் விருப்பத்திற்கு மாறாக திரைப்பட அரங்கில் 'பென்சி'யாக (திரைப்படங்கள் பேசாப்படங்களாக வந்த காலத்தில், அவற்றைத் திரையிடும்போது திரைக்கு முன்னால் நின்றுகொண்டு படத்தின் காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் சுவைபட விவரித்து சொல்பவர்களை 'பென்சி' என்பர்) சேர்ந்துகொண்டார். அதுவுமல்லாமல், அவர், தான் விரும்பிய பெண்ணையே பிடிவாதமாக மணந்துகொண்டு, தனியாக வாழ்ந்து வந்தார். அகிரா குரோசவா தன் தந்தைக்குத் தெரியாமல் அடிக்கடி அண்ணனை சந்தித்து வந்தார்; அண்ணணுடன் நாடக நிகழ்ச்சிகள், கதாகாலட்சேபங்கள், திரைப்படங்கள் முதலியவற்றை பார்த்து வந்தார். இருவரும் கலை இலக்கியங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்வர். மிகவும் நெருங்கிய தோழனாக இருந்த அந்த அண்ணன் ஒருநாள் மலையிலிருந்து கீழே உருண்டு தற்கொலை செய்துகொண்டபோது, அந்நிகழ்ச்சி குரோசவாவின் வாழ்க்கையையே மிகவும் கலக்கிவிட்டது.

1936-ஆம் ஆண்டில் அவர் தம் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அக்காலத்தில் அவர் திரைப்படங்களில் ஈடுபாடு கொண்டு நிறைய படங்கள் பார்த்திருப்பினும், அத்துறையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் ஆர்வமேதும் கொண்டிருக்கவில்லை. ஆனால், வேலை தேடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக, 'பி.சி.எல்'. படத்தயாரிப்பு நிலையத்தின் ஒரு விளம்பரத்தைச் செய்தித்தாளில் கண்டார். துணை இயக்குநர்களின் வேலைக்காக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது அந்த விளம்பரம் இவரும் விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த ஐநூறு பேரில் இறுதியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அறிந்து அகிராவுக்கு அளவிலா வியப்பு!

சென்ற புதிதில் அவருக்கு அங்குள்ள வேலைமுறை மிகவும் சோர்வு தருவதாகவே இருந்தது. அதை விட்டுவிட்டுப் போய்விட எண்ணிக்கொண்டிருநதபோது அவரது நண்பர்கள் தடுத்து நிறுத்தினர். சிறிது காலத்திற்குள்ளாகவே, புகழ்பெற்ற இயக்குநர் கஜிரொ யமமொடொவின் குழுவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதன்பிறகுதான் படத்தயாரிப்பில் மிகுந்த உற்சாகமும் ஆர்வமும் ஏற்படத் துவங்கியது. படத்தயாரிப்பு நிலையத்தில் துணை இயக்குநர்கள் நாள்தோறும் கடுமையாக உழைக்க வேண்டிய நிலைமை. ஆயினும் யமமொடொவின் கீழ் பணிபுரிவுது மிகவும் உற்சாகமாகவே இருந்தது. யமமொடா மிகச் சிறந்த இயக்ககுநர். உடன் உழைப்போரையும் நட்போடும், ஆதரவோடும் நடத்துவார்; அவரது உற்சாகமான, ஆதரவான மேற்பார்வையில் குரோசவா மேலும் மேலும் உற்சாகமாக பணியாற்றவும் திரைப்பட நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளவும் முடிந்தது. 'படத்தயாரிப்புக் கலையை படிப்படியாக கற்பித்துத் தன்னை முழுமையான கலைஞனாக உருவாக்கிய முழுப் பொறுப்பும் யமமொடொ கஜிரொவையே சேரும்' என்று அகிரா குரோசவாவிடம் இருந்தது என்று யமமொடொவும் நினைவு கூறுவார்... அதேபோன்று, 'உண்மையல்லாததிலிருந்து உண்மையைப் பிரித்தறிவதில் முழுமையாக ஆழ்ந்துவிடும் தனித்தன்மை, அன்றே அகிரா குரோசவாவிடம் இருந்தது' என்று யமமொடொவும் நினைவு கூறுகின்றனர். யமமொடொவின் ஒரு படத்தை (குதிரைகள்) குரோசவாவே பெரும்பகுதி இயக்கித் தந்தார். 

kkira

இதற்குள்ளாக குரோசவாவிடம் திரைப்படத் தயாரிப்பு குறித்த ஆர்வமும் திறமையும் வளர்ச்சி பெற்றிருந்ருந்தன. நிறைய திரைக்கதைகளை எழுதி படத்தயாரிப்பு நிலையங்களுக்குக் கொடுத்து இயக்குநராகும் வாய்ப்புக்காகக் காத்திருந்தார். இக்காலகட்டத்தில்தான் இவருடைய இளமைக்கால நண்பனான உகுசவும் இவருடன் வந்து திரைக்கதையாசிரியராக சேர்ந்துகொண்டார். இதன் பிறகு இருவரும் சேர்ந்தே உழைக்கத் தொடங்கினர். ஆறேழு ஆண்டுகள் துணை இயக்குநர்களாக உழைத்த பிறகு கடைசியாக (அவரே எழுதியிருப்பதுபோல் யமமொடொ கற்றுத் தந்தது மற்றும் தன் நல்வினை ஆகியவற்றின் காரணமாக) அவர் தானே திரைப்பட இயக்குநராகி தன் முதல் திரைப்படமான 'சான்ஷ்ரோ சுகாதா'வை (1943) தயாரித்துத் தர முடிந்தது. 'உண்மை-உண்மையல்லாதது' குறித்த அவரது ஆழ்ந்த அக்கறை இம்முதல் படத்திலேயே காட்சியளிக்கத் தொடங்கியது. இப்படத்திலும் அவரதுபிற படங்களிலும், 'உண்மை-உண்மையல்லாதது'  என்னும் முரண்நிலை 'மெய்மைத் தோற்றம்-மாயத் தோற்றம்' என வடிவெடுத்திருப்பதைக் காணலாம்.

இதன்பிறகு குரோசவா தன் வாழ்க்கை முழுவதையும் திரைப்படத் துறைக்கே-திரைப்படம் தயாரிப்பதிலேயே அர்ப்பணித்துக் கொண்டார். 1943 முதல் 1993 வரை ஏறக்குறைய 40 ஆண்டுகளில் அவர் 31 திரைப்படங்களைத் தயாரித்தார்;  பிற இயக்குநர்களுக்குத் திரைக்கதையை எழுதிக் கொடுத்தார்.

திரைப்படத் தயாரிப்புச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிய அதிகமான விவரங்கள் செய்திகள் கிடைக்கவில்லை. கலைஞர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றிய தேவையற்ற ஆர்வம் காட்டும் பத்திரிக்கையாளர்கள் போன்றவர்கள் பற்றி அவர் மிகவும் ஆத்திரம் கொள்வார். விளம்பரம் தேடிக்கொள்வது பற்றி அவருக்கு ஏதோ ஒருவகையான வெறுப்பு இருந்தது என்று தெரிகிறது. தொலைக்;காட்சியில் காட்சி கொடுப்பதற்கு கடைசிவரை மறுத்துவந்த ஜப்பானின் ஒரே பிரபலமான திரைப்படத் துறை சார்ந்தவர் - என்று சமூக நல்லுறவுக்கு எதிரானதும் பல நேரங்களில் மனிதத் தன்மைக்குப் புறம்பானதுமான வதந்திகளை கிசுகிசுக்களை பரப்புவதில் ஆர்வம் காட்டும் பத்திரிக்கைகளை குறித்த அவரது வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதற்காகவே ஸ்கேண்டல் 1950 என்னும் அவரது திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக ஒரு கருத்து உண்டு. இருந்தபோதும் ஜப்பானில் அவரது சொந்த வாழ்க்கையைக் குறித்து பல்வேறு வாந்திகள் வந்துகொண்டே இருந்தன. அவர் நடிகை ஒருத்தியை விரும்பி ஒருதலைக் காதலில் வாடுகின்றார் என்னும் செய்தி நீண்ட காலம் உலவிவந்தது. வதந்தியைப் பரப்பும் மோசமான ஆர்வம் குறித்து அவருக்கு வெறுப்பு வளர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

திரைப்பட தயாரிப்பு நேரங்களில், தயாரிப்பு நிறுவனத்தையே தனது நோக்கத்திற்கேற்றார்போல் ஆட்டிவைப்பதோடு அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்வார் என்றும், புகழ்பெற்ற பிறகு எப்போதுமே திரைப்படத் தயாரிப்புக்கான தோராயமான செலவுக்கு மேல் இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே செலவழித்து தயார்ப்பாளர்களையும் சிக்கலுக்குள்ளாக்குவார் என்றும் கூறி, இப்படிப்பட்ட அவரது எஜமானத் தனத்திற்காக அவரை சர்வாதிகாரி என்று அடைமொழியிட்டு திரைப்படத்துறையினர் அழைத்து வந்ததும் உண்டு. ஆனால் அவரது குழுவில் பணியாற்றியவர்களெல்லாம் அவரது கட்டுப்பாடுகளை மகிழ்ச்சியுடனும் அன்பாகவும் ஏற்றுக்கொண்டே பணியாற்றி வந்தனர். அந்த அடைமொழியை நையாண்டியாக பயன்படுத்தி அவரை கேலிசெய்வது பத்திரிக்கையாளர்களுக்கு வழக்கமாகிப் போயிருந்தது.

அரசியல் சமூக பிரச்சனைகளில் அவர் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாவிட்டாலும் இடதுசாரிக் கருத்துக்கள் கொண்ட இயக்கங்களில் அவர் பற்று கொண்டிருந்ததை அவரது படங்களில் காணலாம். மாறாக அவரது வரலாற்றுப்படங்களில் நிலவுடைமை காலகட்டத்தை சிறப்பித்துக் காட்டியுள்ளார் என்று சில திறனாய்வாளர்கள் கருதுவதுண்டு டோஹொ நிறுவனத்தில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது அவர் முதலாளிகளுக்கு எதிராக நின்று வேலை செய்தார். 1971-இல் ஒருமுறை அவர் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அதன் காரணம் தெளிவாகத் தெரியவில்லையென்றாலும் அது ஒரு பெரிய செய்தியாகப் பரவிற்று.

கருப்பு – வெள்ளை படங்களில் மட்டுமே திரைப்படத்தின் மாபெரும் சிறப்பு மகத்துவம் அடங்கியிருப்பதாக கூறி பிடிவாதமாக வண்ணப்படங்கள் தயாரிப்பதையே தவிர்த்து வந்த அகிரா குரோசவா தன் முதல் வண்ணப்படமான தெரடெஸ்கடென் ஐ 1970-இல் நண்பர்களின் வற்புறுத்தலுக்காகத் தயாரித்தார். மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் குடிசைவாழ் மக்களின் கனவுகளையும் நிஜவாழ்க்கையையும் சித்தரிக்கும் அதீத கற்பனை கதை கொண்டதாகும்.

1975-ஆம் ஆண்டில் சோவியத் ரஷ்யாவுடன் கூட்டாக தயாரித்தார். ரஷ்யாவின் சைபீரிய வெளிப்புறங்களிலேயே முழுவதுமாக படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ரஷ்ய நடிகர்களே முதன்மை கதை மாந்தர்களாக நடித்தனர்.

உலகெங்கும் பெரும்புகழ் பெற்றுத்தந்ததும் வசூலில் பெறும் சாதனையைப் படைத்ததுமான காகெமுஸா நிழல்மறவன் என்னும் திரைப்படத்தை 1980-இல் அமெரிக்காலின் டிவென்டியத் சென்சுரிஃபாக்ஸ் திரைப்பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வெற்றி கண்டார்.

அதேபோன்று 1985-இல் நான் கொந்தளிப்பு படத்தை பிரான்சின் புகழ்பெற்ற தயாரிப்பாளரான செர்கெ சில்பென்மேனுடன் இணைந்து தயாரித்து அதை ஒரு திரைப்படக் காவியமாக்கினார்.

முதன்முதலில் உலகளவில் அறியப்பட்டதும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட விழையும் புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும் இன்றும்கூட இலக்கணமாக விளங்குவதுமான ரஷோமான் (1950)இக்ரூ (1952) ஏழு சமுராய்கள் (1954) சேக்ஸ்பியரின் நாடகமான மாக்பெத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட ரத்த அரியணை குமொநொசு – ஜோ – (1957), செந்தாடி (1965), கனவுகள் (1990) ஆகஸ்ட் ராப்ஸ்சடி (1991) போன்ற 30க்கும் மேற்பட்ட மகத்தான திரைப்படங்களைத் தயாரித்து சோர்வில்லாமல் பணியாற்றிய அகிரா குரோசவாவிற்கு 1991-ஆம் ஆண்டில், வாழ்நாள் முழுமையும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி ஆஸ்கார் அவார்ட் அளித்து கௌரவித்து உலகத் திரைப்படத் துறையே பெருமை அடைந்தது. 1998-ஆம் வருடம் செப்டம்பர் 5-ஆம் தேதி டோகியோவில் காலமானார்.

(பேசும் படம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)

Pin It