தமிழ்திரைப்பட உலகை எதார்த்தமான உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கும் இளம் இயக்குநர்களில் ஒருவரான மீராகதிரவனிடம் ஒரு நேர்காணல்:

தங்களின் திரைத்துறை பிரவேசம் எளிதாக இருந்ததா?

சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் சொக்கம்பட்டி கிராமம். படித்து வளர்ந்ததெல்லாம் புளியங்குளம் என்கிற ஊர்ல. என் அப்பா ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் அம்மா இல்லத்தரசி. எனக்கு இரண்டு சகோதரிகள், நான்கு சகோதரர்கள். என்னோட குடும்பத்தில் சினிமாத் துறைக்கு வந்த முதல் நபர் நான் மட்டும்தான். எந்த பின்புலமும் இல்லாமல் வந்தேன்.

meerakathiravan_400சினிமாவுக்கென்று வந்தது 1998ல். 2001 வரைக்கும் நான்கு ஆண்டுகள் கடுமையான போராட்டம். யாருகிட்டேயும் ஒர்க் பண்ண முடியல. சிறுகதை எழுதலாம் என்று நினைச்ச போதுதான். நிழல் திருநாவுக்கரசு மூலம் அ.ஜ.க அறிமுகம். அதன் மூலம் காலக்குறி காலண்டிதழில் முதல் சிறுகதை வெளிவந்தது. கவிஞர் யுகபாரதி ஆசிரியராக இருந்தபோது கணையாழியில் இரண்டாவது சிறுகதை வெளிவந்தது. அதை படிச்சிட்டு இயக்குநர் வ. கௌதமன் இயக்குநர் தங்கர்பச்சானிடம் அறிமுகம் செய்தார். அவர் என்னோட சிறுகதை விமர்சனங்களையெல்லாம் படிச்சிட்டு உதவி இயக்குநராக சேர்த்துக்கிட்டாரு . கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் அவர்கிட்ட வேலை பார்த்தேன்.

இந்த காலகட்டங்களில் மலையாளத்திலிருந்து அடூர், எம்.டி வாசுதேவன், பத்மராஜன் அவர்களுடைய திரைக் கதைகளை தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்தேன். அவைகள் கனவுபட்டறை வெளியீடாக வந்தது. அதே சமயம் கல்கியில் நான் எழுதின மழைவாசம் சிறுகதையை படிச்சிட்டு இயக்குநர் பாலுமகேந்திரா அவர்கள் என்னோட கதைநேரம் சீரியலில் அந்த கதையை எடுத்திட தேர்வு பண்ணியிருப்பதாக சொல்ல அவரோட அறிமுகம் கிடைச்சது. அப்போதுதான் மலையாள இயக்குநர் லோகிதா தமிழில் படம் பண்ண போறதா கேள்விப்பட்டு அவரை சந்தித்தேன். என்னோட மலையாள மொழி பெயர்ப்பு விஷயங்கள் தெரிஞ்சுகிட்டு அவர் பண்ண கஸ்தூரிமான் படத்திலே ஒர்க் பண்ண வச்சாரு.

பிறகு தனியே படம் பண்ண முயற்சி செய்தேன். 5 வருடங்களுக்கு முன்பே நான் வச்சிருந்த திரைக்கதையை ஒரு டிரைலர் சூட்டும் பண்ணி அதை மோசர் பேர் தனஞ்செயன் சாருக்கு அனுப்பி வைச்சேன். அவர் அதை பார்த்திட்டு
தான் அவள் பெயர் தமிழரசி பட வாய்ப்பு கொடுத்தாரு.

முதல் படமே இயக்குநருக்கான படமாக  வெளிப்பட முடிந்தது எவ்வாறு?

தமிழ்சினிமாவில் இன்றைக்கு இயக்குநருக்கான சினிமா எடுப்பதே சவாலான விஷயம். இயக்குநருக்கான ஆளுமை படமா இருக்கணும்னு நினைக்கிற எல்லாருக்குமே, அப்படி படம் எடுத்து ஜெயிச்ச எல்லா இயக்குநருக்கும் இது ஒரு சவாலான விஷயம்தான்.

கதைக்கேற்ப சரியான பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்தாலே பாதிபடம் எடுத்த மாதிரி தான். அதுவே ஒரு திரை எழுத்தாளனுடைய வெற்றியா பார்க்கிறேன். நான் படிச்ச புத்தகங்கள், என்னை பாதித்த உலக சினிமாக்கள், வேலை பார்த்த இயக்குநர்களின் ஆளுமைகள், மொத்தத்தில் வாழ்க்கையை பார்க்கும் நுணுக்கம்தான் ஒவ்வொரு கலைஞனையும் வேறுபடுத்துகிறது அதுதான் ஒரு படைப்பாளியை ஆளுமை செய்கிறது.

தோல்பாவை கூத்து கலையும் -கலைஞர்களின் பாடும் கதையில் உயிர் பெற்றது எவ்வாறு?

பொதுவாக எல்லா கலைகளுக்கும் அடிப்படை நாதம் நாட்டுப்புற கலைகள் தான். கர்நாடக இசைக்கும் அடிப்படை நாட்டுப்புற இசைதான். 2000 வருஷம் 3000 வருஷம் பழைமையானது நாட்டுப்புற கலைகள். ஆனால் சினிமாவை எடுத்துக்கிட்டிங்கன்னா ஒரு 100 ஆண்டுகள் ஆயுசுதான் அதற்கு, இதனோட வீரியம், பவர் அதிகம். இதனாலேயே மற்ற கலைகள் பின்னுக்கு தள்ளப்படுவது. மற்ற நாடுகள்ல கலையின் ஊற்றுக் கண்ணான நாட்டுப்புற கலைகளுக்கு முதலிடம் உண்டு.

meera_kathiravan_560

கேரளாவிலும் ஆண்டுக்கு ஒரு படமாவது நாட்டுப்புறக் கலையை மையப்படுத்தி வரும் தமிழ் சினிமாவில் மட்டும் அது மற்ற நடிகர்களுக்கு பின்னாடி ஆடக்கூடிய கலையா மாறிப் போச்சு எனக்கு தெரிஞ்சு தமிழ்ல நாசர் அவர்களின் அவதாரம் படம் தான் நாட்டுப்புற கலைஞர்களின் தெருக் கூத்தை அதன் நிலைமையை அதிகமா பேசிச்சு.

நானும் எனக்கு நெருக்கமான நாட்டுப்புற கலையை எனது மூதாதையர் கலையான தோல் பாவை கூத்துக் கலையை சொல்லணும்னு முடிவு செஞ்சேன். அதற்காக நிறைய தகவல்கள் சேகரிச்சு அதை கொண்டு வந்தேன்.

வட தமிழ்நாட்டுல மகாபாரதமும், தென் தமிழ் நாட்டுல இராமாயணமும், தெரு கூத்துல முக்கிய பங்கு வகிக்கும். தோல் பாவை கூத்தை பொருத்தவரை இராமாயணம்தான் அதிகம் பயன்படுத்துவாங்க. அப்புறம் நல்ல தங்காள், வானவராயன் கதைகள் தான் முக்கியமா பயன்படுத்துவாங்க. எனது ஊரைச் சுற்றி கோவில்பட்டி, சாயல் குடி போன்ற இடங்கள்ல அவர்கள் நிறையபேர் இருக்காங்க. எனக்கு நினைவு தெரிஞ்சு, அதனோட நிலை அருகிப் போயிருந்தது. இதை குன்னாங்குரர் செல்வம், கதாபாத்திரமா நடிச்சிருந்த தோல்பாவை கூத்து கலைஞர் கள்ளிக்குடி முருகன் ராவ் அவர்கள், உதவிகரமாக இருந்தார்கள். அ.க. பெருமாள் புத்தகங்கள் நல்ல பயனளிச்சது.

படத்தின் முன்பாதி மண் சார்ந்த வாழ்வியலோடும், பின்பாதி இலக்கிய நயத்துடனும் இருக்க, முடிவு பகுதி மட்டும் சினிமாத்தனமாக இருப்பதாக கருத தோன்றுகிறதே?

என்னைப் பொருத்தவரை முதல் படம் என்கிறதால சில வரையறைக்கு உட்பட்டு எடுக்க வேண்டியிருக்கு, சினிமா துறையின் 24 கூறுகளையும் சார்ந்தியங்க வேண்டிய நிலை கதையின் முடிவு அவசர கதியில் இருப்பதற்கும் அதுதான் காரணமாக இருக்க முடியும். சினிமாத்தனம் என்றால் அது ஒரு மெலோடி டிராமா  ஒரு நாடகத் தன்மை தான். யதார்த்த படம் என்றாலே அவ நம்பிக்கையில படம் முடியணும்ங்கிற ஒரு தப்பான பார்வை நம்ம தமிழ் சினிமாவில் இருக்கு உன்னதமான இலக்கியங்களிலும், உலக சினிமாக்களிலும் அப்படி எதுவும் சொல்லப்படவில்ல. மஜித் மஜிதி, குரோசவா படங்கள் ஆகட்டும் எல்லா படங்களிலும் வாழ்க்கையைப் பற்றி ஒரு நம்பிக்கையை அளிக்கக் கூடிய முடிவாதான் இருக்கும் இருக்க முடியும்.

8 வருட தேடலுக்குப்பின் தனது காதலின் நிலையைப் பார்த்து, அவள் மறுக்கிறாள் என்பதற்காக, அவளை விட்டு போகிறவன் மனுஷன் கிடையாது. தேடலின் முடிவு நம்பிக்கையில் தான் முடியவேண்டும்.  அது சினிமாத்தனம் கிடையாது. அவசரகதியில் வேணும்னாலும் முடிந்திருக்கலாம். எனது அடுத்தடுத்த படைப்புகளில் அந்த சார்ந்திருத்தலும் குறைந்து விடும். அப்போது நான் என்ன நினைக்கிறேனோ அது முழுமையாக வெளி வரும்.

படத்தில் குறியீட்டு காட்சிகளின் முக்கியத்துவம் குறித்து கூறுங்களேன்?

சினிமா என்பது அடிப்படையில் விஷூவல் ஆர்ட். வசனங்கள்ல சொல்றத காட்சிகளில் சொல்லும் போது அது அழுத்தமா மாறும். என்னை பொருத்தவரை ஒரு விஷயத்தை காட்சி ரீதியாகவோ வசனரீதியாகவோ வெளிப்படுத்த முடியாத இடங்களில், அதாவது மனிதனின் உள்ளுணர்வுகளை குறியீடாக மாற்றுகிறேன். சொல்லி புரியவைக்கிறத விட ஆடியன்ஸை சிந்திக்க தூண்டுகிற விஷயமாகத் தான் அதை நான் பார்க்கிறேன்.

உதாரணத்திற்கு, தாத்தா பேரனை ஊரைவிட்டு கூப்பிட்டு போகிறப்ப, (நாயகியின் சக வாசகம் வேண்டாமென்று) அந்த மேளம் நமக்கு தேவையில்லையின்னு டயலாக் சொல்லி தூக்கி போட்டுட்டு போவாரு. அந்த மேளம் அப்படியே கீழே தரையில் கிடக்கும் இதை வெளிப்படையா ஒப்பனா சொல்லாம, ஆடியன்ஸோட அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அதேப்போல நாயகியின் அம்மா தற்கொலைக்கு ஊரே கூடி, கதறி ஓடி வருவாங்க, அதில ஒரேயொரு பொண்ணு தனது இடுப்புல இருக்கிற குழந்தையை கீழே இறக்கி விட்டுட்டு ஓடுவா, தன்னுடைய குழந்தையை ஒரு தாய் பூமியில தனியா இறக்கிவிட்டுட்டு ஓடிபோயிட்டா தனிமையில விடப்பட்ட குழந்தை என்ன செய்யறதுன்னு தெரியாம, தேம்பி, தேம்பி கதறி அழ ஆரம்பிச்சதுன்னு அந்த தாயின் மரணத்தால் ஒரு பொண்ணு தனியாளா அப்படி குறியீடா காட்டியிருப்பேன்.

meerakathiravan_300இன்னொரு காட்சியில, ராஜகுமாரன் தன்னைத்தேடி வருவான்னு கூத்துல கதை சொல்ற நாயகி, தாடியில்லாம தான்பார்த்த இளம்வயது நாயகனை, இப்போ தாடியோட இருப்பான்னு ராஜகுமாரன் படத்தின் மீது தாடிவரைஞ்சி கதை சொல்லும் நாயகி இதுவும் ஒரு குறியீடு. அத்தோட இன்னும் அவள் அவனை காதலிச்சுக் கொண்டு தான் இருக்கிறாள் என்பதும் அதுலே வெளிப்படுற குறியீடு.

மழையும் அது போலவே ஒரு குறியீடு. நீரால் ஆனது உலகம், நமது உருவாக்கமும் நீரிலிருந்து தான், மரணத்திற்கு அப்புறமும், பாரம் சகமனிதனின் கண்ணீராக மாறுகிறது. கதையிலும் அவளது பலாத்காரத்திற்கு பிறகு துக்கமாகவும், எனக்கு சந்தோசத்தை கொடு என்று அவள் சொல்லும் போது சந்தோசத்தின் குறியீடாகவும் காட்சிப் படுத்தினேன். இதுபோன்று சர்க்க லைட், மெழுகுவர்த்தி வெளிச்சம், எரிந்த காகித சருகு போன்றவையும் குறியீட்டு காட்சியின் வெளிப்பாடே.

படம் வெளிவருமுன்பே வெளிநாட்டு விருது விழாக்களுக்கு தேர்வு பாராட்டுகள் விமர்சனங்கள் எதிர் கொண்டது குறித்து?

இதுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்குத்தான் நன்றி சொல்லணும் அவர்தான் படம் ரிலீஸிற்கு முன்பே ஃபெடிவலுக்கு அனுப்பி வைச்சாரு. என்னை பொறுத்தவரை எல்லா இயக்குநர்களும் ஒரு தடவையாவது உலக திரைப்பட விழாவிற்கு நிச்சயம் செல்ல வேண்டும். அது ஒரு அனுபவம். விழுந்து, விழுந்து எந்திரிக்கிற நமக்கு அது ஒரு அங்கீகாரம். அடையாளம். சிவப்பு கம்பள வரவேற்பு. அத்தோடு மீடியா  அட்டென்சன் எல்லாம் படத்தின் ஓப்பனிங்கிற்கு உதவிகரமா இருந்தது. கூடவே விமர்சனங்கள் என்பதும் ஆரோக்கியமான விஷயமாகத்தான் கருதுகிறேன். ஆனால், விமர்சனங்கள் என்ற பெயரில் ஆத்மார்த்தமில்லாம, முன்னோக்கு பார்வை இல்லாம இருப்
பதை நான் ஏற்றுக் கொள்வதில்லை எதற்காக, எந்த நோக்கத்திற்காக என்பதை பொறுத்து விமர்சனங்களை வரவேற்கிறேன்.

ஆளுமை மிகுந்த இயக்குநர்களிடம் பணியாற்றியிருக்கிறீர்கள். அதன் அனுபவம் குறித்து?

வாழ்க்கை, கலை, சினிமா என்கிற மீடியா ஒரு நல்ல படைப்பாளிக்கு சமூகத்தில் கிடைத்திருக்கிற அங்கீகாரம் இவைகள் என்னை முதலில் சிந்திக்க வைத்தது. இவைகளை வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக கொண்டு சென்று படைக்கக் கூடிய சக்தியை லோகிதா, தங்கர்பச்சான், பாலுமகேந்திரா எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் எனக்கு கற்று கொடுத்தது இரண்டு. வாழ்க்கையைப் பற்றிய அறிவு, அனுபவ அறிவு இவைகள் தாம் என்னை ஆளாக்கின.

இன்று தமிழ் திரையில் படைப்பு- படைப்பாளி பார்வையாளன் இந்த முக்கூட்டின் நிலை என்னவாக இருக்கிறது?

இந்த மூன்றும் சமூகத்தின் அங்கம் படைப்புகளை வைத்து ஒரு நாட்டையே தீர்மானிக்கலாம். இங்கு பார்வையாளனின் ரசனை தரம் ஒரு படைப்பாளியை பெரிதும் பாதிக்கிறது. அதுவே ஒரு படைப்பாளியின் படைப்பிலும் வெளிப்படுகிறது. அவ்வாறே படைப்பும் பார்வையாளனை பெரிதும் பாதிக்கவே செய்கிறது. இந்த மூன்றின் இணைப்புச் சங்கிலி நேசம் மட்டுமே. மூன்றும் அன்பை மட்டுமே போதிக்க வேண்டும்.

கூடுவிட்டு கூடு பாய்கிற மாதிரி இந்த அன்பை ஒரு படைப்பாளி தனது படைப்பின் மூலம் சக மனிதனின் ஆன்மாவுக்குள் செலுத்துவதே கலை. அதுதான் சமூகத்திற்கும், நாம் சார்ந்திருக்கும் மொழி, இனம், கலாச்சாரத்திற்கும் நல்லது. அப்போது தான் அது காப்பற்றப்படவும் செய்யும்.

உலக அரங்கில் தமிழ் சினிமாவின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது?

மலையாளம், வங்காள சினிமாக்கள் அவை தம் மக்களைப் பற்றி, அவர்கள் பண்பாட்டைப் பற்றி பேசிய மண்ணாக இருக்கிறது. அங்கு பார்வையாளர்களிடையே பகுத்தறிவு, பொதுவுடமை- சமூக பின்புலம் விடுதலைக்கு பிறகு அதிகமாக இருந்தது. இதனால் உலக சினிமாக்களில் அதன் பங்களிப்பும் இருந்து வருகிறது. அதுபோல் இங்கு மாறிட வேண்டும். படைப்பாளி திசையை மட்டுமே காட்ட முடியும், பாதையை மக்கள் தான் போட வேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.

இன்றைய கனவு தொழிற்சாலையில் தங்களின் கனவு என்னவாக இருக்கிறது?

தொடர்ந்து நல்ல படைப்புகளை உருவாக்கவேண்டும். என்னுடைய மரணத்திற்கு பிறகும், எனது படைப்புகள் வழியாக நான் மக்களிடம் உயிர் வாழ வேண்டும். அதை தவிர எந்த கனவும் எனக்கு இல்லை. இது ஒரு சுயநலமும் கூட.

இலக்கிய உலகில் உங்களின் பிணைப்பு எப்படி?

கதைகள், மொழிபெயர்ப்பு செய்திருந்தாலும் ஆரம்பகால வாசிப்பாளனாகவே என்னை நான் எப்போதும் கருதுகிறேன். வாசித்த அனுபவம் பெரிய பாக்கியம். கிடைக்காத வாழ்க்கையை பிறரின் அனுபவத்திலிருந்து புத்தகம் வாசிப்பது மூலம் தரிசிக்க முடியும். பிறரின் அனுபவங்களை புத்தகங்கள் புதையலாக வைத்துள்ளது. வாசிப்பது ஒரு கலா தரிசனம். இலக்கியத்தைப் பொருத்தவரை நான் எல்லா கலை வடிவங்களின் ஆன்மாவாக பார்க்கிறேன். பக்கத்திலுள்ள கேரளா, பிற நாடுகளில் இலக்கியத்திலிருந்து சினிமாவாக இருந்து வருகிறது. இங்கேயும் அப்படி வர வேண்டியுள்ளது ஆரோக்கியமான விஷயம்.

சந்திப்பு: பாரதி கண்ணன்

(தீக்கதிர் தீபாவளி மலரில் வெளியானது)

Pin It