இராசராச சோழனின் நினைவிடத்தில் சீமான் மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினர்

கடந்த 25-10-09 அன்று குடந்தையில் நாம் தமிழர் இயக்கம் சார்பாக அரங்கக் கூட்டம் நடைப்பெற்றது.

முன்னதாக காலை 12 மணி அளவில் உடையாளூரில் உள்ள பொன்னியின் செல்வன், அருண்மொழி வர்மன் என்றெல்லாம் அழைகின்ற ராசராசனின் நினைவிடத்தில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். நினைவிட வாசலில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நாம் தமிழர் இயக்கத்தின் குடந்தை கிளை சார்பாக அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. முன்னதாக கும்பகோணம் நான்கு வழி சாலைப்பகுதியில் தொடங்கப்பெற்ற வாகன ஊர்வலத்தினை சீமான் துவக்கி வைத்தார். 150 வாகனங்கள் தொடர குடந்தை நகர பிரதான வீதிகளின் வழியாக நடைப்பெற்ற அந்த ஊர்வலத்தில் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க... எங்கள் முப்பாட்டன் ராசராசனுக்கு வீரவணக்கம் என கோஷங்கள் நாம் தமிழர் இயக்கத்தினரால் முழங்கப்பட்டன. ஊர்வலத்தில் தேசிய தலைவர் பிரபாகரனின் படங்கள் உயர்த்தி பிடிக்கப்பட்டு, புலிக் கொடிகளோடு ஊர்வலம் நடந்தது. ஊர்வலப்பாதை முழுவதும் சாலை இருபுறத்திலும் திரளாக மக்கள் நின்று சீமானை வரவேற்றனர். 10 கி.மீக்கு மேலாக நீண்ட அந்த ஊர்வலம் ராசராசனின் சமாதி அமைந்துள்ள உடையாளூரில் முடிவடைந்தது. 

அங்கு வந்து இறங்கிய செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நாம் தமிழர் இயக்கத்தின் குடந்தை கிளை சார்பாக முழு ராணுவ ஒழுங்குடன் இயக்கத்தின் புலிக் கொடியுடன் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பில் தூய தமிழ்ச் சொற்களே பயன்படுத்தப்பட்டன.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள உடையாளூரில் எவ்வித கவனமும் இன்றி, கேட்பார் இன்றி அமைந்துள்ள ராசராசனின் சமாதி ஓர் ஓலைக்கீற்றின் கீழ் கிடப்பதைக் கண்டு சீமான் கண் கலங்கினார். அங்கு கூடி இருந்த பெரும் திரள் இளைஞர் கூட்டமும் உணர்ச்சி வயப்பட்டு எங்கள் இனத்தின் மூதாதை ராச ராசனுக்கு வீர வணக்கம் என்று கோஷங்கள் இட்டனர். இன்றைய ஈழம் போல சிதைந்து கிடக்கும் எம் இன மூதாதை துயிலுமிடம் என சீமான் உணர்வுப் பொங்கக் கூறினார். ஈழம் வெல்வோம், நம் முன்னோர் பெருமையைக் காப்போம் என முழங்கினார் சீமான். அங்கு பேட்டி கண்ட பத்திரிக்கையாளர்களிடம் எங்கள் முப்பாட்டனின் நினைவிடத்தினை மற்றவர்கள் போல நாம் தமிழர் இயக்கமும் விட்டு விடாது. எங்கள் இனப் பெருமை அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது எங்கள் பணியாக நாங்கள் நினைக்கிறோம். உடையாளூரில் வீழ்ந்து கிடக்கும் உலகை ஆண்ட தமிழன் ராசராசனின் துயிலுமிடத்தினை நாம் தமிழர் இயக்கம் செம்மைப்படுத்தியே தீரும் என்றும், அதற்கான வேலைகளில் இன்றே நாம் தமிழர் இயக்க குடந்தை கள வீரர்கள் இறங்கி விட்டனர் என்றும் உணர்வு பொங்கப் பேசினார்.

பிறகு மீண்டும் ஊர்வலம் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் பாடிய கோஷங்களோடு உடையாளூரில் துவங்கி குடந்தை நான்கு சாலையில் முடிவடைந்தது.

மாலை 4 மணிக்கு குடந்தை காந்தியடிகள் சாலையில் அமைந்துள்ள இராயா திருமண மண்டபத்தில் ஈழ உணர்வுப் பாடல்களையும், தமிழ் தேசியப் பாடல்களையும் இயக்கப் பாடகர் தங்கம் தலைமையிலான இசைக்குழு இசைத்தனர். மாலை 5 மணி அளவிற்கு அரங்கிற்குள் வந்த சீமான் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு நாம் தமிழர் இயக்க நகர ஒருங்கிணைப்பாளர் புகழ்மாறன் தலைமையிலான தற்காப்புக் கலை அணியின் சார்பாக சிலம்பாட்டமும், தற்காப்புக் கலையும் நிகழ்த்திக் காட்டியபோது கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது. நாம் தமிழர் இயக்க தேவனாம் படுகை பறையாட்டக் குழு சார்பாக நடந்த உணர்வு தெறிக்கும் பறை இசை நிகழ்வு அரங்கத்தினை கட்டிப் போட்டது. அதன் பிறகு நாம் தமிழர் இயக்கம் குடந்தை கிளை தயாரித்த ஈழ அவலப்படங்களோடு ‘குருதி வழியும் நிலம்’ எனும் ஆவணப்படம் அரங்கத்தில் உள்ளோரை கண்ணீரில் ஆழ்த்தியது.

பிறகு மாலை 6 மணி அளவில் கூட்டம் துவங்கியது. கூட்டத்தினை நாம் தமிழர் இயக்க இணையத்தள பொறுப்பாளரும், ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வழக்கறிஞர் மணி செந்தில் @ திலீபன் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் நகர ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வினோபா @ வீரக்குமரன், இளஞ்செழியன் , பேராசிரியர் ஆரா, ஆரூர் நீதிதாசன், தென்றல் சந்திரசேகர், கல்லூர் செம்மொழியான், கல்லூர் முருகானந்தம், ஆதித்தசோழன், மணிகண்டன், நாம் தமிழர் இயக்க சான்றோர் பேரவை தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ச. மணி, மூத்த வழக்கறிஞர் நல்லதுரை ஆகியோர் பேசினர். தமிழ் வேந்தன் நன்றி கூறினார்.

இறுதியாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன எழுச்சி உரை ஆற்றி பேசியபோது, உலகம் முழுவதும் தமிழினத்திற்கு எதிராக உள்ளது எனவும், தமிழர்களுக்கான அரசியலை இனி தமிழர்கள்தான் நிறுவ வேண்டும் எனவும், நடந்த முடிந்த ஈழப் போரில் இறந்த பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற இலங்கை அரசினை எதிர்த்து சர்வதேச சமூகம் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்காதது வலிக்கிறது எனவும், விடுதலைப்புலிகள் மீதான தடைகளை உலக நாடுகள் உடனடியாக நீக்க வேண்டும் எனவும், கடைசித் தமிழன் இந்த பூமியில் இருக்கும் வரை ஈழப் போர் ஒயாது எனவும், நம் முன்னோனான ராசராசனின் நினைவிடம் மிகவும் அவலமான சூழலில் உள்ளது எனவும் இது குறித்து யாருக்கும் அக்கறையில்லை எனவும், ஆனால் நாம் தமிழர் இயக்கம் எப்படியாவது தனது முப்பாட்டானின் நினைவகத்தினை கட்டியே தீரும் எனவும், உலகை ஆண்ட தமிழினம் இன்று உள்ளங்கை அளவிற்கு நாடு இல்லாமல் தவிப்பதாகவும், சமீபத்தில் இலங்கை சென்ற எம்பிக்கள் குழு அறிக்கை இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் தரும் ஒரு அறிக்கை எனவும், இனி மேலும் தமிழன் சாதியால், மதத்தால், கட்சியால் பிளவுப்பட்டு கிடந்தால் அவனைக் காப்பாற்ற யாரும் இல்லை எனவும் , தமிழ் வீதிகளில் தமிழ், தமிழ் திரைப்படங்களில் தமிழ் என்ற நிலை உருவாக வேண்டும் எனவும், இந்திப் போராட்டங்களில் பங்கெடுத்த தலைவர்களின் வாரிசுகள் தங்கள் திரைப்பட நிறுவனங்களின் பெயரை ஆங்கிலத்தில் வைத்திருப்பது வேதனை எனவும், தனக்கு 2 தலைவர்கள் மட்டும் தான் ஒன்று இனத்தினைக் காட்டிய தந்தை பெரியார், மற்றொன்று இனத்தினைக் காத்த என் அண்ணன் பிரபாகரன் எனவும் உணர்வுப் பொங்க பேசினார்.

அரங்கம் முழுக்க நிரம்பி வழிந்த மக்கள் கூட்டத்தினை தாண்டி அரங்க வளாகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான தொலைக்காட்டி பெட்டியின் முன்னரும் ஆயிரக்கணக்கான மக்கள் நின்றவாறே சீமான் பேச்சினைக் கேட்டனர். இந்தப் பெரும்திரள் கூட்டத்தினால் அந்தப் பகுதி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திரண்டு கூடிய மக்கள் எழுச்சி குடந்தை மாநகரை திகைக்க வைத்தது என்றால் அது மிகையல்ல..

கும்பகோணத்தில் இருந்து : மணிசெந்தில்@ திலீபன்