eelam london agitation 1

இலங்கை சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டம் :-

கடந்த பிப்ரவரி 4 அன்று இலங்கை சுகந்திர தினத்தைப் புறக்கணித்தும், தாயகத் தமிழர்களின் நலன் வேண்டி பல கோரிக்கைகளை முன்வைத்தும் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பும், லண்டன் காமன்வெல்த் நாடுகளின் சபை முன்பும் "தமிழ் சாலிடாரிட்டி" மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் முன்னெடுத்த போராட்டத்தில் பங்கேற்று, சிங்கள அரசுக்கு எதிராக அறம் சார்ந்த முறையில் கருத்தியல் ரீதியாக சீறிய தமிழர்களைப் பார்த்து ஏளனமாய் சிரித்தும், ராணுவ உடையில் வந்தும், அந்த ராணுவ சீருடையில் உள்ள இலங்கையின் கொடியை நம் மக்களை நோக்கிக் காட்டியும், நான் உங்கள் கழுத்தை அறுத்து விடுவேன் என்று பகிரங்கமாகவே கொலை மிரட்டல் தொடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாடோ என்ற சிங்கள ராணுவ அதிகாரி கடும் கண்டனத்திற்கு உரியவர் .

யார் இவர்?

இந்த சிங்கள அதிகாரி தமிழ் ஈழத்தில் நடந்த இறுதி கட்டப் போரில் இலங்கை ராணுவத்தின் கட்டளை அதிகாரியாய் இருந்தவர். இவர் தலைமையில் ராணுவம் மருத்துவமனை மீது குண்டு வீசிய போது பல தமிழர்களும், குழந்தைகளும் மாண்டு போயினர். இன்னும் போரில் தமிழ்ப் போராளிகளை கழுத்தை அறுத்த குற்றத் தொடர்பினை கொண்டவர். இவர் மீதான போர்க் குற்ற விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. ஒரு போர்க் குற்றவாளி என்று சேர்க்கப்பட்டு இருக்கும் இவர், இலங்கைக்கான லண்டன் தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கபட்டு, இங்கு போராடும் தமிழர்களைப் பார்த்து நேரடியாகவே கொலை மிரட்டல் விடும் அளவிற்கு இன வெறி கொண்டவர். இன்னொரு நாட்டிற்கு வந்து, அங்கு வசிக்கும் மக்களை நோக்கி இவர் விடுத்த கொலை மிரட்டல் மற்றும் இன வெறி செயல், பல்வேறு தமிழ் தளங்களிலும் ஒளிபரப்பாகி உலகத் தமிழர்களால் கண்டிக்கப்பட்டு, இவரைக் கைது செய்து விசாரிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் மிகப் பலமான கோரிக்கை மனு ஒன்றை முன்வைத்து நமது தமிழ் அமைப்புகள் முன் நகர்ந்தன. பிரிட்டனின் சோசியல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரிட்டன் பாராளுமன்றத்தில் இவரைக் கண்டித்தனர். இவரை இந்த அநாகரிக கொலை மிரட்டல் செய்கைக்காக பிரிட்டன் சட்டப்படி கைது செய்ய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

eelam london agitation

இலங்கை அரசின் இரட்டை நாடகம்:

இங்கும், தமிழகத்திலும் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் இவருக்கு வந்த எதிர்ப்பினைக் கண்டு விளங்கிக் கொண்ட இலங்கை அரசு இவரை உடனடி பணி இடை நீக்கம் செய்தது, அத்துடன் நிறுத்தாமல் பதவி நீக்கம் செய்யப்பட்ட நான்கு மணி நேரத்தில் மீண்டும் மைத்திரி பால சிறிசேனவின் இலங்கை அரசு இவரை லண்டனில் தங்கி பணி செய்ய அனுமதித்து, தமிழர் மீதான இன விரோதப் போக்கினை சிங்கள அரசு மீண்டும் நிலை நிறுத்தியது., சிங்கள மக்கள் மற்றும் அரசியல் பெருந்தலைகள் இந்த இனப்படுகொலை அரசின் அதிகாரியைத் தூக்கிக் கொண்டாடியும் புகழ்ந்தும் பேசினர். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே இவரின் செயலுக்குப் புதிய விளக்கம் கொடுத்ததும், சிங்கள பௌத்த பிக்குகள் 'ஆமாம் செய்தோம்' என்றும் நேரடியாகப் பேசினார்கள்.

வெடித்தது புரட்சித் தீ:

இந்த இலங்கை அரசின் அறிவிப்பை எதிர்த்து தமிழ் அமைப்புகள் மீண்டும் அவசர நிலைப் போராட்டத்தை அறிவித்தனர். குறுகிய நாளில் அறிவித்த போராட்டம் தமிழ் மக்களை வெகு வேகமாய் சென்று சேர்ந்தது. கடும் குளிர் மற்றும் மழை இடையே தமிழ் மக்கள் கூடினர். அன்று நூறு, இருநூறில் வந்த மக்கள் நேற்று (பிப்ரவரி 9, 2018) பல்லாயிரத்தில் வந்தனர். அதிகாரிக்கு எதிராக பறை இசை ஒலிப்பிற்கு இடையே முழங்கினர்.

புலிக் கொடி ஏந்தியும், கோரிக்கை பதாகை ஏந்தியும் மக்கள் முழக்கங்களை இட்டனர். பிரியங்கா பெர்னாடோவின் புகைப்படத்திற்கு தீயிட்டும், அவரைப் போல் வேஷமிட்டு செருப்படி வழங்கியும், லண்டன் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று லண்டன் காமன்வெல்த் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தும் போராட்டத்தை முடிவு செய்தனர்.

தமிழ் மக்களின் மறு எழுச்சி:

இறுதி கட்டப் போருக்குப் பின்பு மீண்டும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் போராட்டமாக இதைப் பார்க்க முடிகிறது. தமிழர்களை ஒன்றிணைந்த மக்களாய் மாற்றிய இந்தப் போராட்டம் சிறப்பானது. மீண்டும் ஒரு முறை தமிழர்கள் உரிமைக்காக சேரும் காலம் வந்து விட்டது. அதற்கான முன்னோட்டம் தான் இந்தப் போராட்டம். போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மக்களுக்கு நன்றி போராட்டத்தை ஒருங்கிணைத்த

தமிழ் சாலிடாரிட்டி
நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம்
தமிழர் இளைஞர் அமைப்புக்கும் நன்றி

- கபிலன் சிங்காரவேலு