trichy mozhipor meeting

இப்போதைய உலகமய சூழல் இந்திய அரசினுடையப் பிற்போக்குத்தனத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. ஒருபுறம் ஏகாதிபத்திய அரசுகளால் மூலதனம் இடப்படக் கூடிய இந்தியா போன்ற சார்பு நாடுகள், உலக நிதிமூலதன சக்திகளாலும் அதனுடைய சர்வதேச முகாமைகளாலும் அரசியல் பொருளாதார விவகாரங்களில் இறையாண்மையற்றதாக மாற்றப்படுகின்றன. மறுபுறம் அந்த  சார்பு நாடுகளுக்குள் இருக்கின்ற பல்தேசியங்களை ஒடுக்கி ஒற்றையாட்சி அமைப்பைத் தீவிரப்படுத்துவதாகவும் அனைத்து விவகாரங்களிலும் அதிகாரத்தை மையத்தை நோக்கிக் குவிப்பதாகவும் சீர்திருத்தங்கள் தீவிரப்பட்டு வருகின்றன. இந்த வகையில்தான் சமகாலத்தில் இந்திய அரசியலில் நிதி, நிர்வாகம், கல்வி, நீதித் துறை, தேர்தல் முறை,  வரி விதிப்பு என அனைத்து விவகாரங்களிலும் இந்திய அரசின் தீவிர மையப்படுத்தலை எதிர்கொண்டு வருகிறோம்.

இத்தகைய மையப்படுத்தும் அதிகாரத்திற்கு எதிராக மக்கள் இனங்களின் உரிமைக் கோரிக்கை வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு மட்டங்களில் இந்தியா முழுவதும் எழுந்து வருகின்றது. பல நேரங்களில் அது இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான மோதலாகக்கூட வெளிப்படுகிறது. ஆளும் வர்க்கங்கள் இம்மோதலை மக்களுக்கு இடையிலான மோதலாக மாற்றுவதற்கான மத வெறுப்பு, பிராந்திய வெறுப்பு, இனக்குழு வெறுப்பு என அனைத்துவகையான பிற்போக்குத்தனங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த முரண்பாடுகள் மதவழித் தேசியமாக, பிற மக்களை வெறுக்கின்ற இனவழி தேசியமாக, வட கிழக்கு மாகாணங்களில் இனக்குழு மோதலாக, சனநாயகமற்றப் பிற்போக்குத் தேசிய வடிவங்கள் உருப்பெறுகின்றன. இதற்கு மாற்றாகத்தான், சனநாயக வகைப்பட்ட அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நவீன தேசியக் கோரிக்கைகளைக் கட்டமைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  

தமிழ்நாட்டுக்கு கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக, இனங்களின் தேசிய உரிமை குறித்த விழிப்பு நிலை இருந்து வருகிறது. தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தொடங்கி வகுப்புவாரி உரிமை, இந்தி திணிப்பு எதிர்ப்பு, திராவிட நாடு, மாநில சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, சுதந்திர தமிழ்நாடு, தனித்தமிழ்நாடு, தமிழ்த் தேசிய விடுதலை என ஒவ்வொரு பத்தாண்டுகளாக இக்கோரிக்கை வளர்ச்சிப் பெற்று வருகிறது. இந்தியாவில் வடகிழக்கு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் இந்திய அரசுக்கு எதிரான தேசிய உணர்வுநிலை தனிநாட்டுக் கோரிக்கையாகவும் விடுதலைப் போராகவும் வளர்ச்சியடைந்துள்ளன. அத்தகைய வளர்ச்சி இல்லாவிட்டாலும் இச்சனநாயகக் கோரிக்கையை இந்திய அரசியலில் எதிரொலிப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகித்து வந்திருக்கிறது. அந்த வகையில் சம காலத்தில் தமிழகத்தில் எழுந்து வரக்கூடிய அரசியல் கோரிக்கைகள் வெகுசன தன்மைப் பெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த கோரிக்கைகளால் ஈர்க்கப்பட்டு வருகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்புலத்தில், இன்றைய தமிழக அரசியலில் சனநாயக உள்ளடக்கம் கொண்ட தேசிய அரசியலை முன் வைக்கக் கூடிய போக்கும் சனநாயக மறுப்பைக் கொண்ட குறுந்தேசிய, இனச்சுருக்கவாத, குருதிவழிப்பட்ட மரபின அரசியல் போக்கும் வெளிப்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில், தேசிய விவகாரத்தில் இந்திய அளவிலான முன்னோடியாக திகழ்ந்த மரபு நமக்கு உண்டு. ஒற்றையாட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரப்பட்டிருக்கும் சமகாலத்தில், கடந்த காலத்தின் தொடர்ச்சியாக தேசிய சிக்கலில் பங்களிக்க வேண்டிய கடமையும் வரலாற்று வழிவந்த வாய்ப்பும் நமக்கு உண்டு.

இந்நிலையில், தேசியத்தின் பெயரால் எழுந்துள்ள சனநாயக மறுப்பு குறுந்தேசிய போக்குக்கும் சனநாயக உள்ளடக்கம் கொண்ட தேசியப் போக்குக்கும் இடையிலான போராட்டத்தில் சனநாயக உள்ளட்டக்கம் கொண்ட தேசிய போக்கை வளர்த்தெடுத்து முன்செல்ல வேண்டிய கடமை நமக்குண்டு.

சனநாயக உள்ளடக்கம் கொண்ட தேசியத்திற்கானப் போராட்டத்தின் வழியாக, சரியானப் போக்கு எதுவென்பதை அரசியல் முன்னணிகளிடமும் அதற்கான அரசியல் அணிசேர்க்கை எத்தகையது? என்பதை வெகுமக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும். இதன்வழிதான், இந்திய அரசமைப்பையும் இந்திய ஆளும் வர்க்கத்தையும் வீழ்த்தி தேசிய ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியும். மாறாக, சனநாயக மறுப்பு குறுந்தேசியப் போக்கின் வளர்ச்சி என்பது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு துணை செய்வதில் போய் முடியும். ஓடுக்கப்பட்டோர் அனைவரையும் உள்ளடக்கிய(inclusive) சனநாயக அரசியலாக வளர்த்தெடுக்கப்படும் தேசிய அரசியலே வலுவான அடித்தளத்துடன், எவ்வித அரசியல் பொருளாதார ஆதிக்கத்தையும் எதிர்கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதை வரலாறு பலமுறை மெய்ப்பித்துள்ளது.

சனநாயக உள்ளடக்கம் கொண்ட தமிழ்த்தேசிய அரசியலை வளர்த்தெடுக்கும் நோக்கில் பல்வேறு அரசியல் ஆற்றல்களும் பங்களித்துவரும் நிலையில், அதே நோக்கத்துடன் எமது முன்னெடுப்பாக இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம். ஒடுக்கப்பட்டோர் அனைவரையும் உள்ளடக்கிய தமிழ்த்தேசிய சனநாயக அரசியலை வளர்த்தெடுக்க உறுதி ஏற்போம். அந்த வகையில் இது குறித்த விவாதத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு விரிவான விவாதக் களத்தைக் கட்டமைக்க கரம் கோர்க்க வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

- கம்யூனிஸ்ட் கட்சி (மா- லெ) மக்கள் விடுதலை