ஆனாரூனா என்று அன்புடனும் மதிப்புடனும், தமிழ் மொழிப் பற்றாளர்களால் அழைக்கப்பட்ட தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனத் தலைவரும்,மாணவர் நகலகம் நிறுவனருமான அய்யா நா. அருணாச்சலம் அவர்கள் இன்று (23.05.2016) மாலை, சென்னையில் தமது இல்லத்தில் காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி அறிந்து வேதனையுற்றேன். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் அய்யா அவர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

anaruna 3501990களின் பிற்பகுதியில் தமிழறிஞர்களையும் தமிழின உணர்வாளர்களையும் ஒருங்கிணைத்து, ”தமிழ்ச் சான்றோர் பேரவை” என்ற துடிப்புமிக்க குடை அமைப்பை நிறுவி, மொழி உணர்வையும் இன உணர்வையும் தட்டியெழுப்பியவர் ஆனாரூனா. தமிழ்நாடெங்கும் தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் கருத்தரங்குகளும், பரப்புரைகளும், மாநாடுகளும் நடத்தி, தமிழ் மொழிக் காப்புணர்ச்சியை தக்க நேரத்தில் வளர்த்தார்.

1999 ஆம் ஆண்டு - ஏப்ரல் 25ஆம் நாள், தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்கிட வலியுறுத்தி, தமிழறிஞர் தமிழண்ணல் தலைமையில் 102தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினார்கள். பல்வேறு தமிழ் அமைப்புகளையும் தனித்தனி உணர்வாளர்களையும் இணைத்துக் கொண்டு, தமிழ்ச் சான்றோர் பேரவை முன்னெடுத்த மாபெரும் போராட்டம் இது!

அப்போராட்டத்தின் பயனாக, அன்றைய தி.மு.க. ஆட்சி, 5ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் அல்லது தாய்மொழி மொழிப்பாடமாக இருக்க வேண்டும், பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று ஆணையிட்டது. அது சட்டமாக்கப்படாமல், ஆணையாக இருந்த காரணத்தால்,ஆங்கிலவழிப் பள்ளி முதலாளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, எளிதில் அந்த ஆணையை தள்ளுபடி செய்ய வைத்தனர். ஆனாலும், உச்ச நீதிமன்றத்தில் தம் சொந்த செலவில் மேல்முறையீடு செய்தார், ஆனாரூனா.

தமிழ்வழிக் கல்விக்காக, தமிழ் இன உணர்ச்சிகாக தம் சொந்தப் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்து நிகழ்ச்சிகள் நடத்தினார்.

தஞ்சையில் தமிழ்ச் சான்றோர் பேரவையின் தமிழ்நாடு தழுவிய ஆண்டு மாநாட்டை நடத்தும்பொழுது, அதற்கான பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். யாரிடமும் நன்கொடை கேட்க வேண்டாம், மற்ற இடங்களில் நடத்தியபோல் தஞ்சையிலும் இம்மாநாடு என் சொந்த செலவில் நடக்கட்டும் என்றார். அதன்படியே நடத்தி, வரவு – செலவுக் கணக்கை அவரிடம் ஒப்படைத்த போது, அவர் மகிழ்ச்சியடைந்த, அவரிடம் இருந்த பழைய அம்பாசிடர் காரை எமது இயக்கத்திற்கு வழங்கினார்.

ஒரு குறிப்பிட்டக் காலத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இன வரலாற்ற முன்னோக்கிய ஒரு நகர்வை ஏற்படுத்திய, ஆனாரூனா அவர்கள்,என்றென்றும் தமிழர் நெஞ்சில் பதிந்திருப்பார்.

- பெ.மணியரசன், தலைவர்தமிழ்த் தேசியப் பேரியக்கம்