FAW

தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், அரசியல்- சமூகப் பொருளாதார- சமத்துவ மேம்பாட்டிற்காகவும் ,ஒரு தேசம் ஒன்றை நிர்மாணம் செய்வதற்கான கட்டுமானங்களை நடைமுறைப்படுத்தி தன்வாழ்வை எமக்காக அர்பணித்து வாழ்ந்த டேவிட் ஐயா அவர்கள் பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ம் திகதி ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணியிலிருந்து பிற்பகல் 8 மணிவரை பாரீசில் பின்வரும் முகவரியில் ந டைபெற இருக்கிறது.

இடம்: SALLE SANT BRUNO
9 , RUE SANT BRUNO
75018 PARIS
Métro : LA CHAPELLE


இந் நிகழ்வில் பி.ஏ காதர் அவர்களின் ‘இலங்கை தேசிய இனப் பிரச்சனையும் டேவிட் ஐயாவும்’ என்ற தலைப்பிலான உரையும், ‘அர்ப்பண வாழ்வில் வலிசுமந்த மனிதன் ‘எனும் டேவிட் ஐயா பற்றிய நூல் வெளியீடும், அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது.

காந்திய - சமூக செயற்பாட்டாளர் இ.பூபாலசிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தோழமையோடு அழைக்கின்றோம்.

டேவிட் ஐயா (சொலமன் அருளானந்தம் டேவிட்) - நம் சுதந்திரத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மனிதன்...

இலங்கையின் வடக்கே கரம்பன் என்ற ஊரில் 24 ஏப்ரல் 1924 ம் ஆண்டு பிறந்தார். கரம்பனில் இருந்த கொன்வென்டிலும், பின்னர் இளவாலை புனித கென்றிஸ் கல்லூரியிலும் கல்வி கற்றார். வரைவாளர் படிப்பை முடித்துக் கட்டடக் கலைஞர் ஆனார். இலங்கைப் பொதுப்பணித் துறையில் கட்டடக் கலைஞராகப் பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டில்ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து தனது அரசுப் பதவியைத் துறந்து வெளிநாடு சென்றார்.

லண்டனிலும், நைஜீரியாவிலும் நகரத் திட்டமிடல் கற்கையை முடித்தார். கென்யாவின் மொம்பாசா நகரத் திட்டமிடலில் முதன்மைக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றினார்.

1972 ஆம் ஆண்டில் சேவை நோக்கோடு இலங்கை திரும்பினார். இலண்டனில் இருந்து திரும்பிய மருத்துவர் ராஜசுந்தரம் அவர்களுடன் இணைந்து 'காந்தீயம்’ என்ற அமைப்பை 1976 ம் ஆண்டு வவுனியாவில் தொடங்கினார் இலங்கையின் தமிழர் வாழ் மாவட்டங்கள் அனைத்திலும் மாவட்ட மையங்களை அமைத்தார்.
வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 450 தொடக்கப் பாடசாலைகளையும் வவுனியா ,திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 12 மாதிரிப் பண்ணைகளையும் அமைத்தார்.

அத்துடன் பெண்களுக்கான பயிற்சி நிலையங்கள், சிறுவர்களுக்கான பால், மா விநியோகம், ஆசிரியர்கள் பயிற்சி நெறி, நடமாடும் வைத்திய நிலையம் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

மலையகத்தில் இருந்து ஏதிலிகளாக வந்த 25.000 குடும்பங்களைக் தமிழ்ப்பிரதேசங்களில் குடியமர்த்தினார் .

டேவிட் ஐயா, மருத்துவர் இராஜசுந்தரம் அவர்களுடன் இலங்கை இரகசியப் பொலிஸ் பிரிவினரால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் 1983 ஏப்பிரல் 7ஆம் திகதி கைது செய்யப்பட்டு பனாகொடைத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.. பின்னர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

யூலை 1983 இல் கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் போது வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற படுகொலைகளை நேரில் கண்டவர். இவருடன் கைது செய்யப்பட்ட மருத்துவர் ராஜசுந்தரம் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டார். டேவிட் ஐயா உயிர் தப்பினார்.

பின் வெலிக்கடையிலிருந்து மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் . மட்டக்களப்பு சிறைச்சாலை உடைக்கப்பட்டு அரசியல் கைதிகள் மீட்கப்பட்ட போது அவர்களுடன் டேவிட் ஐயா வெளியேறினார். .

1983 ஆம் ஆண்டில் இருந்து சென்னையில் வாழ்ந்த டேவிட் ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் Periyar Era என்ற ஆங்கில இதழுக்கு மாதந்தோறும் இலங்கை நிலவரத்தை எழுதி வந்தார் . அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து Tamil Eelam Freedom Struggle (An inside Story நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

தனது வாழ்வின் இறுதிப் பகுதியை ஈழத்தில் கழிப்பதற்காக 2015 யூன் மாதத்தில் இலங்கை வந்து கிளிநொச்சியில் வாழ்ந்து வந்த டேவிட் ஐயா 2015 அக்டோபர் 11 அன்று தனது 91ஆவது அகவையில் காலமானார்.