‘பொதுமக்கள்’ என்கிற சொல்லுக்கு உதாரணம் காட்ட முடியாத அளவிற்கு இன்று இந்திய தேசமெங்கும் அரசியல் கட்சிகளும், சாதி அமைப்புகளும், மத மாச்சர்யங்களும் மக்களை பல நூறாகக் கூறுபோட்டு வைத்திருக்கின்றன.

பரந்துபட்ட மனதோடு மக்கள் கூடிவாழ்ந்த காலம் போய், தன் சாதி, தன் இனம், தன் கட்சி என ஏதேனும் ஒரு சார்பு நிலைக்கு ஆட்பட்டு பிரிந்துபட்ட மனதோடு வாழத் துவங்கி விட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை.

இந்தச் சூழலில் - ‘புத்தகம்’ என்கிற ஒன்றை வார்த்தை மந்திரத்தின் மூலம் பல்வேறுபட்ட மக்களையும் ஒரே சிந்தனையின் கீழ் ஒருங்கிணைத்து கொங்கு மண்டல அளவில் ஒரு ஆரோக்கியமான அறிவுப்புரட்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது ஈரோடு புத்தகத் திருவிழா.

2005 ல் தொடங்கி, இதுவரை நான்காண்டுகள் வெற்றிகரமாக நடத்திய அனுபவத்தோடு, 5 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை ஜூலை 31 முதல் ஆகஸ்டு 11 வரை மொத்தம் 12 நாட்களுக்கு நடத்துகிறது.

மக்கள் சிந்தனைப் பேரவை. தமிழகம் மட்டுமின்றி வட இந்தியாவில் இருந்தும் பெங்களூர், அகமதாபாத் போன்ற நகரங்களில் இருந்தும் இந்திய அளவில் புகழ்மிக்க புத்தக நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கின்றன. பல குறுந்தகடுகளுக்கான அரங்குகள் உட்பட மொத்தம் 164 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

5 ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா என்பதால், புத்தகம் வாங்க வரும் பொது மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலும், விற்பனையை அதிகரிக்கச் செய்வதிலும் முத்திரை பதிக்கும் வண்ணம் வழக்கத்தை காட்டிலும் விரிவான முன்னேற்பாடுகள், பிரச்சாரங்கள், விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஈரோட்டின் முக்கியப் பிரமுகர்களைக் கொண்ட குழு, ஆட்டோ, தொழிற்சங்கப்பிரதிநிநிகள் அடங்கிய குழு, மாவட்ட அளவிலான ஆசிரியர் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்களைக் கொண்ட குழு உட்பட பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ரூ 250/- க்கு மேல் நூல்கள் வாங்கும் மாணவர்களுக்கு ‘நூல் ஆர்வலர்’ என்கிற சிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம் இந்த ஆண்டும் தொடர்ந்து நடைமுறைப் படுத்தப்படுகிறது.

மாணவர்களிடையே சேமிப்பு ஆர்வத்தை உருவாக்கி, அவர்கள் சேமித்த தொகையைக் கொண்டு அவர்களே நூல்களை வாங்கத் தூண்டும் வகையில் ‘மாணவர் புத்தகச் சேமிப்பு உண்டியல்’ என்கிற புதிய திட்டம் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 11 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மொத்தம் பத்தாயிரம் உண்டியல்களுக்கு மேல் மாணவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அதன் வீச்சு இந்த 5 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று நம்பலாம்.

“இல்லந்தோறும் நூலகம், நூலகம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்; நல்ல நூல்களே நல்ல நண்பர்கள், கொங்கு மண்டலம் அறிவுக் களஞ்சியம்’’ என்கிற முத்திரை முழக்கங்களை ஆண்டுதோறும் முன்வைத்து மக்களிடையே ஈரோடு புத்தகத் திருவிழாவை எடுத்துச் சென்றதன் பலன், கொங்கு மண்டல அளவில் ஆயிரக்கணக்கான இல்லங்களில் புதிதாக நூல்களுக்கான அறைகள் உருவாகியிருப்பதும், அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் புத்தக வாசிப்பு ஆர்வம் வளர்ந்திருப்பதும் இந்த ஆண்டு புத்தக விற்பனையின் அளவை நிச்சயம் அதிகரிக்கும்....

மேலும் கொங்கு மண்டல அளவில் பள்ளி-கல்லூரிகளுக்கான புத்தகத் தேவைகளுக்கு ஈரோடு புத்தகத் திருவிழா பெரும்பங்காற்றும் என்பதிலும் ஐயமில்லை.

அதே போல் ஈரோட்டில் உள்ள பொருளாதார பலம் கொண்ட பொது அமைப்புகளும், நல்லுள்ளம் கொண்ட செல்வந்தர்களும் ஈரோடு புத்தகத் திருவிழாவின் நோக்கம் புரிந்தும் அதன் தாக்கம் உணர்ந்தும், தமது சொந்த செலவில் அரசுப் பள்ளிகளில் நூலகம் அமைத்துக் கொடுக்கவும், அதற்கான நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வாங்க முடிவெடுத் திருப்பதும் இந்த ஆண்டின் மொத்த விற்பனைக் குறியீட்டின் அளவை வெகுவாக உயர்த்தும்.

நாட்டுக்கு உழைத்த நல்ல தலைவர்களின் வாழ்க்கையை பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்துவது ஈரோடு புத்தகத் திருவிழாவின் ஒரு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. 2007 ஆம் ஆண்டு பெரியார் சிந்தனைக் கூடம், 2008 ஆம் ஆண்டு பாரதி சிந்தனைக் கூடம். அந்த வரிசையில் இந்த ஆண்டு, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி யின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் வரலாற்றுக் கூடம் அமைக்கப்படுகிறது.

புத்தகம் வாங்க வருபவர்களை கருத்தாழம் மிக்க சொற்பொழிவு கேட்க வைப்பதும், சொற்பொழிவு கேட்கவைப்பதற்கென்றே வரும் ஆயிரக்கணக்கான மக்களை புத்தகத்தின்பால் ஈர்த்து வாசிக்கத் தூண்டுவதும் ஈரோடு புத்தகத்திருவிழாவைப் பொறுத்தவரை இரண்டு கண்கள் போலக் கருதிச் செயல்படுவதால் மாலை நேர இலக்கியக் கருத்தரங்கிற்கு இந்த ஆண்டும் சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜூலை 31 அன்று தொடங்கும் ஈரோடு புத்தகத் திருவிழாவை, சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் துவக்கி வைக்கிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஆகஸ்டு 11 அன்று நடைபெறும் நிறைவு விழாவில் கலந்துகொண்டு நிறைவுரை நிகழ்த்துகிறார்.

ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 5 லட்சம்..... இந்த ஆண்டு மேலும் 1 லட்சம் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போலவே இந்த ஆண்டும் அனுமதி இலவசம்!

ஒரு மாவட்டத் தலைநகரில் நடத்தப்பட்டாலும் ஈரோடு புத்தகத் திருவிழாவைப் பொறுத்தவரை மாநிலத் தன்மை கொண்ட தேசியத் தரத்திலான புத்தகத் திருவிழாவாகவும், எதிர்காலத்தில் இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருந்தும் புத்தகப் பிரியர்கள் வந்து சங்கமிக்கும் அறிவுச் சந்தையாக விளங்கச் செய்ய வேண்டும் என்பதுமே நோக்கம்!.

 

Pin It