may17_marina_620

“மறக்க மாட்டோம் மன்னிக்க மட்டோம்! தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! ஐ.நா. சபையே தமிழீழத்தில் பொது வாக்கெடுப்ப நடத்து!” சென்னை மெரினா கடற்கரையில் மே 20 ஞாயிறு அன்று மாலை விண்ணதிர எதிரொலித்த முழக்கங்கள் இவை.

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும், தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் மே-20 அன்று வீரவணக்க ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி, இன்று எழுச்சியுடன் ஒன்றுகூடல் நடைபெற்றது.

may17_marina_621

மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில் நடைபெற்ற ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமை வகித்தார். முன்னதாக, ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் ஈகச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, லோக் சனசக்தி கட்சித் தலைவர் திரு. இராம் விலாஸ் பாஸ்வான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசு, ம.தி.மு.க. தென் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன், பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, புதிய பார்வை இதழாசிரியர் திரு. ம.நடராஜன், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் மற்றும் உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

may17_marina_622

போர் குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் இயக்கம் சார்பில், தமிழீழத்தில் வாக்கெடுப்பு நடத்தக் கோரி 1 கோடி கையெழுத்துகள் பெறுகின்ற கையெழுத்து இயக்கம் மெரினா வந்த மக்களிடம் நடத்தப்பட்டது. திரு. இராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பெருந்திரளானோர் இதில் கையெழுத்திட்டனர்.

“இலங்கை அரசு இனப்படுகொலை அரசு! சர்வதேச விசாரணையை உடனே நடத்து!”, “இந்திய அரசின் துரோகத்தை மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்” உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு, மெழுவர்த்தி ஏந்தியபடி சிறுவர்களும், பெண்களும் என பொதுமக்கள் பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.