குழந்தைகளுக்காக பாடுதல், கவிதை இயற்றுதல் ஒருவகை. குழந்தையையேப் பாடுபொருளாக்கி எழுதுவது மற்றொரு வகை. முதல் வகையில் ஏராளமான தொகுப்புகள் வந்துள்ளன. இரண்டாம் வகையில் சமீபமாய் முயற்சி நடைபெற்று வருகின்றன. குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும், எங்’னம் கொண்டாட வேண்டும் என பெரியோர்களுக்காக எழுதுவது மூன்றாம் வகை. இவ்வகையில் வந்திருக்கும் தொகுப்பு ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்.’ குழந்தைகளைக் கொண்டாடக் கூறியவர் முனைவர் இரா. காமராசு. கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். பரவலாக அறியப்பட்டவர்.

முதல் அத்தியாயம் ‘தோட்டக்காரர்களாய் இருப்போம்’. குழந்தைகள் பேச முழு சுதந்திரம் அளிப்பதுடன் அவர்கள் பேசுவதை அக்கறையுடன் உள்வாங்க வேண்டும் என்கிறது. பள்ளிப்பாடம் தவிர அவர்கள் விரும்புவனவற்றையும் எழுதுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கிறது. தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுடன் நெருக்கமாக பழகுவது அவர்களை உற்சாகப்படுத்தும் என்றும் கூறுகிறது.

‘கல்வியில் மனித மாண்புகள்’ இரண்டாம் பகுதி. குழந்தைகளை ஒரு பொருளாக பார்க்கமால் ஓர் உயிராக பாவிக்க வேண்டும் என்றும் எதிர்கால்ததில் ஒரு மருத்துவராகவோ , ஒரு பொறியாளராகவோ, ஒரு விஞ்ஞானியாகவோ உருவாக்குவதை விட ‘குறைந்தபட்சம்’ ஒரு மனிதனாக உருவாக்க வேண்டும் என்றும் அறிவுரைக்கிறது. ‘குறைந்த பட்சம்’ என்பது இங்கு ‘அதிகபட்சம்’. நர்சரி பள்ளிகள் உயிருள்ள இயந்திரங்களையே உருவாக்குகின்றன என்று குற்றமும் சாட்டியுள்ளார்.

‘குழந்தைகளுக்கான எழுத்து’ பற்றியும் ஓர் அத்தியாத்தில் பேசியுள்ளார். தொலைக்காட்சி என்னும் ஊடகங்களால் குழந்தைகள் காணாமல் போய் விட்டார்கள் என்று ஆசிரியர் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். பாடப் புத்தகங்கள் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படுவதில்லை என்ற வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். குழந்தையின் வயதுக்கு ஏற்ப, புரிதலுக்கு உட்பட்ட படைப்புகளே வழங்க வேண்டும் என்கிறார். முக்கியமாக குழந்தையின் தனித்திறன் வளர்க்கப்பட வேண்டும் ,போற்றப் பட வேண்டும் என்றும் தன் கருத்தினை முன்வைத்துள்ளார்.

‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ என்னும் இத்தொகுப்பில் ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம’ ‘என்பது முக்கியமான கட்டுரை. குழந்தைகளைக் கொண்டாடுவதே குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மிகப் பெரிய சொத்து என்கிறது.

தினங்கள் கொண்டாடுவதை

விட்டு விட்டு

குழந்தைகளை எப்போது

கொண்டாடப் போகின்றீர்கள்? என்னும் கவிக்கோ அப்துல் ரளூமானின் கவிதையை முன் வைத்து குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களைச் சாடியுள்ளார்.

பள்ளிக் குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என போதிக்கிறது ‘தக்க வைத்தலின் ஆசிரியரின் அணுகுமுறை’ ஆசிரியர்கள் ஒரு பாசமுள்ள பெற்றோர் போல் இருக்க வேண்டும் என்கிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கையை குழந்தைகளுக்கு ஊட்டுபவர்களாக ஆசிரியர்கள் பங்காற்ற வேண்டும் என்றும் அறிவுரைக்கிறது. இக்கட்டுரை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கல்விக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. மற்றவை ஏடுகளில் வெளியானவை.

குழந்தைத் தொழிலாளர்கள் ஏன் உருவாகிறார்கள், எப்படி உருவாகிறார்கள் என கூறும் கட்டுரையாக அமைந்துள்ளது ‘குழந்தை உழைப்பு நாகரிக சமூகத்தின் சவால்’. காரணம் பெற்றோரின் வறுமைiயும் வேலையின்மையும் என்கிறது. பெற்றோரின் குடிப்பழக்கம், சூதாட்டம் ஆகியவையும் காரணம் என்கிறது. தீய பழக்கமுள்ள, குற்றவாளி ஆகியவர்களின் குழந்தைகளும் ‘தொழிலாளர்கள்’ ஆகும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது என்கிறார். சட்டங்களால் சாதிக்க முடியாது என தீர்வுக்கும் வழி சொல்லியிருப்பது கவனிப்பிற்குரியது. மேலும் தலித்தியம், பெண்ணியம் போல குழந்தையியமும் பேசப்பட வேண்டும், எழுதப்பட வேண்டும் என்றும் வேண்டுகோளையும் வைத்துள்ளார்.’

தொடக்கக் கல்வியில் புதியமுறையான ‘செயல்வழிக்கற்றல்’ முறையின் நிறை, குறைகளை ஆராய்ந்து தீர்வையும் கூறுகிறார். ஆயினும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்துரையாடி கருத்துப்பரிமாறி இக்கல்வி முறையை சீர்படுத்தி , செழுமைப்படுத்தி நடைமுறைப் படுத்துவதற்கு முன் வர வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ந்து ‘கல்வியில் தரம்’ பற்றியும் பேசியுள்ளார். மேலார்களே தரம் பற்றி பேசுவதபகவும் குறிப்பட்டுள்ளார். முடிவில் முதல் மூன்று வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும் சூழ்நிலை உள்ளதால் கல்வியன் தரம் குறைந்துள்ளது என்று வருந்தி அரசை விமரிசித்துள்ளார். ‘சமத்துவக்கல்வி’ இதே கருத்தை வலியுறுத்தினாலும் ஆசிரியர்களுக்கு பயிற்சியை விட கல்வியே முக்கியம் என்று வலியுறுத்துகிறது. மாணவர்களை கைதிகளாக வைத்துள்ள இன்றைய கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்கிறார்.

இன்றைய சூழலில் ‘படிப்பைத் தேர்வு செய்தல்’ மிக முக்கியம். படிப்பைத் தேர்ந்தெடுக்கும் பெற்றோர் மாணவர் ஆகிய இருவரும் வேலைவாய்ப்பை மனத்தில் வைத்தே படிப்பைத் தோவு செய்கின்றனர். ஆனால் மரபு, பாரம்பரியம், பண்பாட்டுடன் மொழியும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். அப்போதே சாரமிக்க மனிதர்கள் உருவாவார்கள் என்றும் கருத்துரைத்துள்ளார்.

2001ம் அண்டு மத்திய அரசின் பொறுப்பில் இருந்த பாரதிய ஜனதா ‘கல்வியில் ஜோதிடம்’ என்னும் திட்டத்தை அறிவித்து பல கோடி நிதியையும் ஒதுக்கியது. இத்திட்டத்தை விமரிசித்து ‘மூடநம்பிக்கைகள் நம்பிக்கைகள்’ஆக மாற்றும் முயற்சி என்கிறார். ஆனால் கல்வியாளர்களும் சமூகவியலார்களும் விவாதித்து எதிர்காலத்துக்கு தௌpவு படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

வீடுகள் பெருக பெருக மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டே வாழ்கின்றனர். உறவுச் சங்கிலி அறுந்து வருகிறது. பொருள் சேர்க்க முனையும் மனிதர்கள் மனிதம் சேர்ப்பதில்லை. வீடுகள் விடுதிகளாகி விட்டன. மனிதர்கள் மனமற்றவர்களாகி விட்டனர். இவ்வாறான மனிதர்கள் ‘முழுமைகள்’ அல்ல ‘பின்னங்கள்’ என்கிறார். பின்னங்கள் பொதுவெனினும் அருமை. சிறியதெனினும் சிறப்பு. ‘கல்வியும்ஞானமும்’ கட்டுரையும் மனிதனாய் மாற முயற்சிக்கச் சொல்கிறது.

குழந்தைகளுக்கான இத்தொகுப்பில் பெண்களுக்காகவும் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரை ‘பெண்ணைப் பேச பெண்ணே எழு’. இது கவிஞர் அறிவுமதியின் வரி. ஆண் என்னும் அகம்பாவத்துடன் இயங்கும் மனிதர்களை எதிர்க்கச் சொல்கிறது. பெண்ணியம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ‘நம்பிக்கையிழக்கும் இளைஞ‌ர்கள்’ கட்டுரையிலும் ‘இளம் பெண்கள்’ குறித்துத் தனியே பேச வேண்டும் என்கிறார். இவர்களை ‘ஐந்தாம் ஜhதி’ என்று சுட்டிக் காட்டியுள்ளார். தீண்டாமையினால் பாதிக்கப்பட்டுள்ள தலித் இளைஞ‌ர்கள் பற்றியும் பேச வேண்டும் என்கிறார். இளைஞ‌ர்கள் வேலையின்றி இருப்பது சுகம் அல்ல சோகம் என்கிறார். ’சும்மா இருக்கும் சோகம்’ ‘வேலை வாய்ப்பு என்பதை அடிப்படை உரிமையாக்கிட வேண்டும்’ என்கிறது.

‘படைப்பு வெளியில் குழந்தைகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரையில் குழந்தைகள் குறித்தான இரு தொகுப்புகளை அறிமுகம் செய்து சில கவிதைகளை எடுத்துக்காட்டியுள்ளார். ஒன்று சரவணன் எழுதிய ‘ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சி’. இரண்டு கு. ரா. எழுதிய ‘குழல் ரூ யாழ் - குழந்தை’. பொன். குமார் எழுதிய ‘இனிது’ என்பதும் குழந்தைகள் பற்றிய கவிதைகளால் நிறைந்ததாகும்.

‘மனவளம்’ கட்டுரையில் பூமியைப் புரட்ட அழைப்பு விடுத்தவர் ‘பெரிதினும் பெரிது கேள்’ பகுதியில் ‘வாழ்க்கையைப் பொருள் பொதிந்ததாக்குவோம்’ என்கிறார். இதுவே இறுதி. இதில் ‘ஓர் ஆயிரம் பிரதிகள் அச்சாகும் இலக்கிய நூல் விற்றுத்தீர பல கோடி தமிழர்கள் வாழுமிடத்தில் எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதெல்லாம் நமது தலைமுறை சார்ந்த வினாக்களாக முன்நிற்கின்றன’ என்றெழுதி இருப்பது ஓர் எழுத்தாளராக தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது அனைவரின் குரலாகவே ஒலித்துள்ளது.

‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ என்னும் இத்தொகுபபின் முதல் பகுதி குழந்தைகளைக் கொண்டாடச் சொல்கிறது. ஏன் கொண்டாட வேண்டும் என்றும் கூறுகிறது. குழந்தைகள் மீதான முனைவர் இரா. காமராசுவின் அன்பும் அக்கறையும் வெளிப்பட்டுள்ளது. குழந்தைகள் தொடர்ந்து கல்வி குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். நடைமுறைக் கல்வி முதல் நாளையக் கல்வி முறை எடுத்துரைத்துள்ளார். ஒரு கட்டுரையாளராக அறியப்பட்டவர் இக்கட்டுரைகள் மூலம் ஒரு கல்வியாளராக தன்னை நிறுவியுள்ளார். இளைஞ‌ர்களுக்காகவும் பேசி நம்பிக்கையூட்டியுள்ளார். கல்வியைத் தேர்ந்தெடுப்பது முதல் வேலைவாய்ப்பு வரை தௌpவுபடுத்தியுள்ளார். கட்டுரையின் இடையிடையே மேற்கோள்கள் காட்டி தன் நிலைக்கு ஆதரவு திரட்டியுள்ளார். இன்றைய அவசர காலத்தில் குழந்தைகளைப் பற்றியும் கல்வியைக் குறித்தும் சிந்திப்பதற்கு எவருக்கும் நேரமிருப்பதில்லை. வாய்ப்புயம் ஏற்படுவதில்லை. அத்தகையவர்களை இத்தொகுப்பு சிந்திக்கச் செய்கிறது. ஓர் இலக்கியவாதியகவும் ஓர் ஆசிரியராகவும் தன் பங்களிப்பை இத்தொகுப்பின் வழி வெளிப்படுத்தியுள்ளார். ஆசிரியர்களும் பெற்றோர்களும கல்வியாளர்களும் இன்றைய இளைஞ‌ர்களும் அவசியம் வாசிக்க வேண்டும். பெரு முயற்சிக்கு பாராட்டுக்கள்.

 வெளியீடு: அன்னம், 1 நிர்மலா நகர், தஞ்சை 613007.

 விலை - ரூ. 50.00

Pin It