(ஈழ சினிமா குறித்து யமுனா ராஜேந்திரன் எழுதிய புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம் நூலின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள் இங்கு வெளியாகி இருக்கின்றன. 240 பக்கங்கள் கொண்ட, 140 ரூபாய் விலையுள்ள இந்நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது).

yamuna_400ஈழமக்கள் இனப்படுகொலை உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் பாரிய அளவில் உலக நாடுகளில் புகலிடம் தேடினார்கள். இந்தியாவில் மூன்று இலட்சம் அகதிகள் இருக்கிறார்கள். கனடா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் உள்பட, ஆப்ரிக்க நாடுகளினுமெனப் பரந்து, 12 இலட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் உலக நாடுகளில் புகலிடம் தேடினார்கள். கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் ஒரு இலட்சம் மக்கள் எனக் கொண்டால், ஈழத்தின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அந்த நிலத்திலிருந்து அகன்றுவிட்டார்கள். புகலிடம் தேடிய ஈழமக்களின் வாழ்வு என்பது தமது பூர்வீக நினைவுகளாலும், குடியேறிய நாடுகளில் வாழ்தலுக்கான அடிப்படையான சவால்களையும் ஏற்றது என்பதாகவே அமைகிறது. 

குறும்படங்களுக்கென ‘பாரிஸ் கலை பண்பாட்டுக் கழகமும்’, லண்டன் ‘விம்பம்’ அமைப்பும், ‘சினி சங்கம்’ அமைப்பும், கனடா ‘சுயாதீன திரைப்படக் கழகமும்’ போட்டிகளை ஏற்பாடு செய்தன. அருந்ததியின் முகம், ஜீவனின் எச்சில் போர்வை, நிழல் யுத்தம் போன்ற முன்னோடிப் படங்கள் வெளியாகின. அகதி வாழ்வின் தனிமை, தாய் நாட்டுக்கான தமது பொறுப்புணர்வு, ஆண் பெண் உறவில் ஐரோப்பிய வாழ்முறை தோற்றுவிக்கும் சவால்கள் போன்றவற்றை இந்தப் படங்கள் பேசின. தமிழக சினிமாவிலிருந்து விலகி, தமது வாழ்வு குறித்த தரிசனங்களுடன், யதார்த்தவாதத்தையும் தேர்ந்து கொண்டு, புகலிடக் குறும்படங்கள் வெளியாகத்  துவங்கிய காலம் இது.

அசலான, துயரமான வாழ்பனுபவங்கள். வரலாற்று அனுபவங்கள் அவர்களுக்கு முன் இருந்தது. படைப்பாளிக்கு வேண்டிய கொந்தளிப்பான மனநிலையும் பதட்டமும் கடப்பாடும் அவர்களிடம் இருந்தது. திரைப்படக் கலை சார்ந்து தேர்ந்து கொள்வதற்கு அவர்களுக்கு முன்பாகத் தமிழகத்தின் மனோரதிய மற்றும் சாகசச் சினிமாச் சட்டகம் முன் இருந்தது. ஈழத்தின் சாசகச் சினிமாச் சட்டகமும் அவர்களின் முன் இருந்தது. ஹாலிவுட் தொழில்நுட்ப சினிமாவும் திரில்லர்களும் அவர்களின் முன் இருந்தது.  இந்த மூன்றுவகையான பண்புகளையும் வெளிப்படுத்தியதாக பின்வந்த புகலிடக் குறும்படங்கள் அமைந்தன. கலைப் பிரக்ஞையும் விமர்சன பூர்வமான அரசியலும் கொண்டவர்களாக  அருந்ததி, ஜீவன், புதியவன் போன்றவர்கள் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் மனோரதியமான இலட்சிய நிலைபாட்டையும், சாகசங்களையும் முன்னிலைப் படுத்தியவர்களும் இருந்தார்கள். விடுதலைப் புலிகளின் அரசியல்  நோக்கில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஆளுமை கொண்ட தனித்தன்மையுள்ள திரைப்படைப்பாளிகள் என எவரும் உருவாகி வரவில்லை. கனடாவில் சமவேளையில் சுயாதீனமான இயக்குனர்கள் தோன்றினார்கள். கனடியத் தமிழ் வாழ்வின் ஆண் பெண் உறவுகளின் சிக்கலை மனுஷி போன்ற படங்களின் வழி சொன்னவராக கனடிய இயக்குரான சுமதிரூபன் உருவானார். கனடாவின் பாட்ரிக் பத்மநாதன் தனது அந்த ஒரு நாள் போன்ற  திரைப்படத்தின் வழி ஹாலிவுட் தொழில்நுட்பத்துடன், நேர்த்தியான படத்தொகுப்புடன் கச்சிதமான தமிழ் திரில்லர் குறும்படங்களை உருவாக்கினார்.

விடுதலைப் புலிகளின் திரைப்படங்களை இருவகையிலானவர்கள் உருவாக்கினார்கள்., போர்க்கால சமூகம் பற்றிய பிரச்சினைகளைச் சித்தரித்த காற்றுவெளி படத்தை தமது சுயாதீனமான பார்வையில் உருவாக்கினார் திரைப்படக் கலையில் ஆளுமை கொண்ட, காலஞ்சென்ற இயக்குனர் ஞானரதன். பிரச்சாரம் என்பது இவரது படங்களில் பின்தள்ளப்பட்டிருப்பதை பார்வையாளன் அவதானிக்க முடியும். குருதிச் சன்னங்கள் பிறிதொருவகை திரைப்படம், விடுதலைப் புலிகளின் போர்பிரச்சாரத்தினது பகுதியாக தொழில்முறையிலான போராளிகளால் உருவாக்கப்பட்ட முழுநீளப் படம். விடுதலைப் புலிகளால் தொழில்முறையிலாக உருவாக்கப்பட்ட படங்கள் சீன, வடகொரிய பாணியோடு, தவிர்க்கவியலாத வகையில் ஹாலிவுட் பாணியையும் இணைத்துக் கொண்ட உணர்ச்சிவசமான, மனோரதியமான சாகசப் படங்களாகவே இருந்தன. திரைப்படக் கலையை உணர்ந்த ஞானரதன் மற்றும் பொ.தாசன் போன்ற ஆளுமைகள் உருவாக்கிய படங்களில் ஐரோப்பிய யதார்த்தவாத சினிமாவின் தாக்கம் இருந்தது. ஹாலிவுட்-இந்திய சாகச சினிமாவுக்கான எடுத்துக்காட்டாக குருதிச் சன்னங்கள் திரைப்படத்தையும், ஐரோப்பிய பாதிப்பிலான யதார்த்தவாத சினிமாவுக்கான எடுத்துக் காட்டாக ஞானரதனின் காற்றுவெளி திரைப்படத்தையும் பொ.தாசனின் தமிழோசை திரைப்படத்தையும் நாம் சுட்டலாம். ஞானரதனின் திரைப்படங்களில் பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு நெறியின் பாதிப்புகளை நம்மால் உணரமுடியும்.

விடுதலைப் புலிகளின் அணுசரனையில் வெளியான திரைப்படங்கள், தென்னிந்தியாவில் வெளியான திரைப்படங்கள் மற்றும் புகலிடத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் அன்றி, வடக்கிழும் கிழக்கிலுமாகச் சுயாதீனமான இயக்குனர்களால் உருவாக்கப்பட்ட குறும்படங்களும் வெளியாகின. விமல்ராஜின் கிச்சான் ராகவனின் மூக்குப்பேணி போன்றவை இவ்வகையிலான படங்கள். ‘பீஸ் ரீல்’ எனும் சர்வதேசிய மனித உரிமைத் திரைப்பட ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட பீஸ் ரீல் திரைப்படங்கள் மிகுந்த தொழில்நுட்ப உணர்வுடன் தயாரிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை இந்தத் திரைப்படங்களை விநியோகம் செய்தது. வடக்கிலும் கிழக்கிலுமாக போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அவல வாழ்வைச் சொல்வதாக இந்தக் குறும்படங்கள் இருந்தன. ஈழத் தமிழர்களிள் உருவாக்கிய படங்களில் ஈழ மண்ணிலாயினும் அல்லது புகலிடத்திலாயினும் - தொண்ணூற்றொன்பது சதவீதமானவை குறும்படங்களாகவே இருந்தன. குருதிச் சன்னங்கள், கடலோரக் காற்று போன்று, இரண்டாயிரம் ஆண்டின் மத்தியில் உருவாக்கப்பட்ட ஈழ மண்ணின் திரைப்படங்கள் முழு நீளப் படங்களாக இருந்தன.

விடுதலைப் புலிகளின் காலத்தில் ஈழத் திரைப்படங்கள் புத்துயிர் பெற்றன என்றே சொல்ல வேண்டும். சினிமாவைப் பயிற்றுவிப்பதைத் தீவிரமாக அவர்கள் செயல்படுத்தினார்கள். தமிழக சினிமா இயக்குனர்களை அழைத்து தொழில்துறைப் பயிற்சிகளை தமது அணிகளுக்கு அவர்கள் அளித்தார்கள். தமிழக இயக்குனர்களுடன் சேர்ந்து கூட்டாகப் படங்களை உருவாக்க முயற்சித்தார்கள். ஹாலிவுட் படங்களே ஆயினும் திரைப்படங்களுக்கு அவர்கள் தமிழில் துணைத் தலைப்புக்களை உருவாக்கினார்கள். ஈழவிடுதலையையும் போராளிகளின் சாகசத்தினையும் மையமாகக் கொண்டு, ஈழத்திற்கென ஒரு திரைப்படத் தொழிற்துறையையும் திரைப்படக் கலாச்சாரத்தையும் உருவாக்க வேண்டும் என்கிற தூரதரிசனம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்ததை நாம் திட்டவட்டமாகச் சொல்ல முடியும்.

விடுதலைப் புலிகள் பிரதானமாக வரித்துக் கொண்ட திரைப்பட அழகியல், பொன்மணி, வாடைக்காற்று தோற்றுவித்த மரபாக இல்லை. மாறாக, தமிழகசினிமா சட்டகத்திலான உணர்ச்சிவசமான, சாகச சினிமா மரபாகவே இருந்தது. இதற்கான காரணமாக விடுதலைப் புலிகளைப் பாதித்த ரசனையைத்தான் நாம் சுட்டமுடியும். ஹாலிவுட் படங்களிலும் தமிழக சினிமாவிலும் பிரபாகரனுக்கு இருந்த ஈடுபாடு, ஐரோப்பிய நவயதார்த்தவாத சினிமாவிலோ மற்றும் மூன்றாமுலகின் மூன்றாவது சினிமாவிலோ அல்லது மூன்றாமுலக புரட்சிகர சினிமா மரபிலோ அவருக்கு இருந்ததாகச் சான்றுகள் இல்லை. இந்த நிலையிலேயே ஞானரதன், பொ.தாசன் போன்ற ஆளுமைகள் தமது தனிப்பட்ட ரசனை சார்ந்த பண்பினால் அத்தகைய யதார்த்தவாத சினிமாவை விடுதலைப் புலிகளின் திரைப்படக் கலாச்சார அமைப்புக்குள்ளாகவே முயன்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.

மேற்கிலிருந்து சென்று தமிழகத் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஈழத்தின் கலைஞர்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்ட முழுநீளத் திரைப்படம் புதியவனின் மண். தமிழகத் தொழல்நுட்பக் கலைஞர்களுடன் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பிறிதொரு குறுந்திரைப்படம் ரவீந்திரன் பிரதீபனின் என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம். தமிழகத்திலிருந்து ஈழம் சென்ற சென்ற ஜான் மகேந்திரன் இயக்கிய திரைப்படம் ஆணிவேர். இயக்குனர் மகேந்திரனின் மேற்பார்வையில் ஈழத்தில் உருவாக்கப்பட்ட குறுந்திரைப்படம் பனிச்சமரம் பழுத்திருக்கு. இரண்டாயிரமாம் ஆண்டில் சகல விதத்திலும், ஈழத்தமிழர்கள் அனைவரிடமும், புகலிடத்திலாயினும் ஈழத்திலாயினும் நேர்ந்த முக்கியமானதொரு திரைப்படம் குறித்த பண்பு மாற்றத்தை இந்த முயற்சிகள் சுட்டி நிற்கின்றன.  விடுதலைப் புலிகளும் சரி, விடுதலைப் புலிகளின் ஆதரவிலான அதனது விமர்சகர்களும் சரி, தமிழகச் சினிமாவின் தொழில்நுட்பத் தேர்ச்சியாளர்களை இணைத்துக் கொண்ட வகையில் பரந்துபட்ட பார்வையாளர்களுக்காக தொழில்நுட்ப நேர்த்தியுடன் திரைப்படங்களை உருவாக்கத் தலைப்பட்ட காலம் இது.

விரல்விட்டு எண்ணத்தக்க சில படங்கள், ஞானரதன் மற்றும் பொ.தாசன் போன்றவர்களது குறும்படங்களைத் தவிர, நிதர்சனம் தயாரித்த பெரும்பாலுமான குறும்படங்களும் முழநீளப் படங்களும் ஹாலிவுட் பாணியையும் தமிழக மனோரதிய சினிமா பாணியையும் ஒட்டியதாகவே இருந்தன. தமிழீழத்தின் முதல் திரைபடம் எனக் கோரப்படுகிற ஆணிவேர் முழுமையாகவே தமிழ் கதாநாயக சினிமாவின் தன்மையையே கொண்டிருந்தது. தமிழீழத்தில் தயாரிக்கப்பட்ட குருதிச் சன்னங்கள், அர்ஜூனின் ஜெய்ஹிந்த் ரக இந்திய தேசபக்த வகையினத்தை, ஈழத்தேசபக்திக்குப் பெயர்த்ததாகவே இருந்தது.  திரைப்பட நிறுவனத்தை உருவாக்குபவர்களின் ரசனையிலும், திரைப்படத்தை உருவாக்குபவர்களின் ரசனையிலும், வெகுமக்களின் ரசனையிலும் மாற்றம் வேண்டும் எனும் பிரக்ஞை இல்லாமல், தனித்த தேசியப் பண்புகள் கொண்ட சினிமாவை உருவாக்குவது சாத்தியமில்லை.

ஈழநிலப்பரப்பில் மட்டுமல்ல ஈழத்தமிழர்களின் புலம்பெயர்ந்த நாடுகளில் தோன்றிய புகலிட சினிமாவும் இதே விதமான சிக்கலை எதிர்கொண்டது. அருந்ததியின் முகம், ஜீவனின் எச்சில் போர்வை போன்ற யதார்த்தவாத சினிமாக்கள் புகலிடத்தில் ஆரம்பகாலத்தில் தோன்றின. கனடாவிலிருந்து வெளியான அடிக்ட் மற்றும் கோப்பை போன்ற ஒரு சில படங்களைத் தவிர பெரும்பாலுமானவை மணிரத்னம் பாணிப் படங்களாகவும், ஹாலிவுட் தொழில்நுட்பத் திரில்லர் பாணிப் படங்களாகவும்தான் இருந்தன. புதியவனின் குறும்படங்கள் தவிர இலண்டனிலிருந்தும் ஐரோப்பாவிலும் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள், விஜயகாந்த ரகப் படங்களாகவும், விக்ரமன் ரகக் காதல் படங்களாகவும்தான் இருந்தன.

ஈழப் போராட்டமும், அதனது உடன் விளைவுகளான இடப் பெயர்வும், வன்முறையும் உலக அளவிலான திரைப்படத்திலும் பாதிப்புகளைச் செலுத்தியிருக்கிறது வெல் கம் டு கனடா (Welocme To Canada) எனும் திரைப்படத்தினையும், நோ மோர் டியர்ஸ் ஸிஸ்டர் (No More Tears Sisters) எனும் திரைப்படத்தினையும் கனடிய திரைப்படக் கழகம் தயாரித்து வெளியிட்டது. உயிராபத்துக்களினிடையிலும் பல்வேறு துயர்களினிடையிலும் கனடாவுக்கு வந்து சேரும் ஈழத் தமிழ் அகதி மக்கள் பற்றிய திரைப்படம் வெல் கம் டு கனடா. விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட மனித உரிமையாளரும் உடல்கூற்று மருத்துவ அறிஞருமான ரஜனி திரணகமாவின் வாழ்வு பற்றிய திரைப்படம் நோ மோர் டியர்ஸ் ஸிஸ்டர்.  விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியதோடு, அரசியல் அணுசரனையும் வழங்கினார்கள் என இலங்கை அரசினால் குற்றம் சாட்டப்பெறும் நார்வே அரசாங்கத்தின் ‘நார்வே திரைப்படக் கழகம்’ விடுதலைப் புலிகளின் பெண் கரும்புலிகளைப் பற்றி மை டாட்டர், டெரரிஸ்ட் (My Daughter, Terrorist) எனும் விவரணப்படத்தைத் தயாரித்திருக்கிறது. மலையாள இயக்குனரான ராஜேஷ் டச்ரிவரின் இயக்கத்தில்  இன் த நேம் ஆப் புத்தா (In The Name of Budhdha) எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. புத்தனின் பெயரால் திரைப்படம், ஆவணப்படமும் கதைப்படமும் முயங்கியதான ஒரு சொல்நெறியில் கேரளத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம்.

ஈழப் போராட்டம் உக்கிரம் பெற்றதன் பின் வெளியாகின சிங்களத் திரைப்படங்களில் சர்வதேசிய ரீதியில் கவனம் பெற்ற அல்லது உலகத் திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்ற சிங்களப் படங்களில் பெரும்பாலானவை தமிழ் இனப் பிரச்சினையின் விளைவுகளைப் பேசிய திரைப்படங்களாகவே இருக்கின்றன.  பிரசன்ன விதானகேயின்  பவுர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம் (Death in a Full Moon Day), மற்றும் ஆகஸ்ட சூரியன் (Auguest Sun), அசேகா ஹந்தகமாவின்  இது எனது சந்திரன் (This is My Moon), சுதத் மகதிவேவேவாவின் சாம்பலின் நிழல் (Shadow of the Ashes),  விமுக்தி ஜெயசுந்தராவின் கைவிடப்பட்ட நிலம் (Forsaken Land),  இனோகா சத்யாங்கினியின்  காற்றுப் பறவை (The Wind Bird), சத்யஜித் மைதிபோவின் தாமரைக் குளத்தின் நறுமணம் (Secent of the Lotus Pond)   போன்ற சிங்களத் திரைப்படங்கள்  இக்காலகட்டத்திய பிரச்சினைகளைப் பேசிய படங்களாக இருக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்குமான மோதல் குறித்த படங்களும், சிங்கள வெகுமக்களின் உளவியலில் அது ஏற்படுத்திய பாதிப்புகளைச் சொன்ன படங்களும், இக்காலத்தில் வெளியாகிய பிறிதொரு வகையிலான படங்கள் எனலாம்.  சின்னத் தேவதை (Little Angel),  சரோஜா (Saroja), நிறமற்ற பூக்கள் (Colourles Flowers),ஆகஸ்ட் சூரியன் (Auguest Sun), இந்த வழியால் வாருங்கள் (Come Along This Way) போன்ற திரைப்படங்கள் இத்தன்மையானவை.

இந்தத் திரைப்படங்களிலும் தமிழரது கோரிக்கையின் நியாயங்களை ஒப்பி, விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களைப் பேசிய சிங்கள இயக்குனர்களும் இருந்தார்கள். பிரசன்ன விதானகே மற்றும் அசோகா ஹந்தகமா போன்றவர்கள் இத்தகைய இயக்குனர்கள். சமவேளையில் விடுதலைப் புலிகளை, கோரக் கொலை புரிகிற பயங்கரவாதிகள் எனச் சித்தரித்து, இலங்கை ராணுவத்தின் வெறியாட்டத்தை தேசபக்த யுத்தம் எனச் சித்திரித்த இயக்குனர்களும் இருந்தார்கள்.  சின்னத் தேவதை, சரோஜா, நிறமற்ற பூக்கள் போன்ற திரைப்படங்களின் இயக்குனர்கள் இவ்வகையினர். துசரா பிரீஸின் பிரபாகரன் திரைப்படம் தமிழர் மீதான துவேஷ சினிமாவின் உச்சபட்டசமான எடுத்துக்காட்டு.

இலங்கை ராணுவத்தை விமர்சித்த காரணத்திற்காக கடுமையான தணிக்கையை சிங்களத் திரைப்படக் கலைஞர்கள் எதிர்கொண்டார்கள். இவர்களது படங்கள் அனைத்தும் இலங்கையில் தடைசெய்யப்பட்டன. உலகத் திரைப்பட விழாக்களில் இலங்கையில் தடைசெய்யப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டு போரின் நிஜமுகம் வெளியுலகிற்குத் தெரிய வந்தது. ராணுவ அதிகாரிகள், பிரசன்ன விதானகே, அசோக ஹந்தஹமா, வசுந்தரா போன்றவர்களுக்கு நேரடியாகவே அச்சுறுத்தல் விடுத்தார்கள். விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, இலங்கை தேசபக்திக்கு எதிராக இவர்கள் செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டார்கள். சிங்கள இனவெறியர்களால் நேரடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளான திரைப்பட இயக்குனராக தர்மசிறி பண்டாரநாயகே இருந்தார். இவரது தூதிக்காவா எனும் நாடகத்தின் பின் அவருக்குக் கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

தமிழ் சாகசத் திரைப்படமும் உணர்ச்சிவசமான மனோரதிய பாணியும் ஈழத் திரைப்படங்களில் மிகமோசமான பாதிப்பை உருவாக்கி இருக்கிறது என்பதைத் திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியும். பாரதிராஜா, ஜான்மகேந்திரன், மகேந்திரன், சீமான் போன்றவர்கள் நேரடியாகப் பிரபாகரனைச் சந்தித்திருக்கிறார்கள். ‘ஈழப் பிரச்சினையை முன்வைத்து திரைப்படங்களை உருவாக்குங்கள்’ எனத் தனது கோரிக்கையையும் பிரபாகரன் இவர்களிடம் முன் வைத்திருக்கிறார். மகேந்திரனின் புதல்வரான ஜான் மகேந்திரன் ஈழப் பின்னணியில் இன்னொரு தமிழகக் காதல் கதையைத் தனது ஆணிவேர் திரைப்படத்தில் கொடுத்திருக்கிறார். மகேந்திரனின் மேற்பார்வையில் பனிச்சமரம் பழுத்திருக்கு எனும் குறும்படத்தை ஈழத்தின் ஆதவன் திரைப்படக் கழக மாணவர்கள் எடுத்திருக்கிறார்கள்.  ஈழப் போராட்டத்தினால் உந்துதல் பெற்றவர்கள் தமிழகத்தில் உருவாக்கிய படங்களும் உணர்ச்சிவசமான சாகசப் படங்கள்தான். சீமானின் தம்பி மற்றும் புகழேந்தியின் காற்றுக்கென்ன வேலி மற்றும் செல்வத்தின் ராமேஸ்வரம் போன்ற திரைப்படங்களை இதற்கான சான்றாகச் சுட்டலாம். சீமானின் தம்பி முன்னும் பின்னுமான வசனங்கள் தவிர எந்தக் கருத்தியல் தரிசனமும் அற்ற ஒரு தாதா படமாகவே இறுதியில் எஞ்சி நின்றது. 

தனிப்பட்ட முறையில் பிரபாகரனை ஆகர்சித்த படங்களாக ஹாலிவுட் சாகச நாயகர்களான சுவர்ஸ்நேக்கர் மற்றும் ஸில்வஸ்ட்டர் ஸ்டோன் போன்றவர்களின் படங்களே இருந்திருக்கிறது. ஹாலிவுட் போர்ப் படங்கள் தமிழ் துணைத் தலைப்புக்களுடன் (with tamil subtitles) விடுதலைப்புலிப் போராளிகளுக்கு திரையிட்டுக் காட்டப்பெற்றிருக்கிறது. ஈழவிடுதலைப் போராட்டம் தென்னிந்திய சினிமாவிலும் தன்னுடைய பாதிப்புக்களை விட்டுச் சென்றிருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கமும் மிகப் பெரும் பாதிப்புக்களை தமிழ் சினிமாவின் மீது ஏற்படுத்தியிருக்கிறது. காற்றுக்கென்ன வேலி திரைப்படம் மிக வெளிப்படையாகவே ஈழப் போராளிகளைப் பற்றிப் பேசியது. ராஜீவ்காந்தியின் படுகொலை தமிழில் குற்றப்பத்திரிக்கை மற்றும் குப்பி, கன்னடத்தில் சைனட், கேரளத்தில் மிசன் நைன்டி டேஸ் (Mission Ninety Days) என நான்கு திரைப்படங்களுக்கான கதைக் களம் ஆகியிருக்கிறது. கன்னத்தை முத்தமிட்டால், தெனாலி, நள தமயந்தி, ராமேஸ்வரம், நந்தா போன்ற திரைப்படங்கள் தமிழகத்தில் அடைக்கலமாகின ஈழ அகதிகள் பற்றிய திரைப்படங்களாக இருக்கின்றன. 

தென்னிந்தியாவில் ஈழப் பிரச்சினை பற்றி வந்த திரைப்படங்களில் அரசியல் நீக்கப்பட்டது என்றாலும் கூட நிகழ்வுகளுக்கு நேர்மையாக இருந்த படம் என கன்னடப்படமான சைனட் படத்தையே நாம் சொல்ல முடியும். சைனட் படத்தில் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ராஜீவ்காந்தியின் படுகொலையின் பின்னிருந்த அரசியல், மலையாளப் படமான மிசன் நைன்டி டேஸ் வசனங்களில் இடம்பெறுகிறது. ஈழத்திலிருந்து குடிபெயர்ந்த அகதிமக்களின் பிரச்சினைகளைப் பேசிய வாசந்தியின் நாவலான நிற்க நிழல் வேண்டும் சித்திரிக்கிற ஆண்பெண் உறவு சார்ந்த பிரச்சினைகளை அல்லது அரசியல் பிரச்சினைகளைக் கூட ஈழ அகதிகள் குறித்த தமிழ்த் திரைப்படங்கள் சித்தரிக்கவில்லை. தெனாலியும் ராமேஸ்வரமும் லொகேஷனை மட்டும் மாற்றிப் படம் பிடித்த தமிழக சினிமாக் காதல் கதைகள் அன்றி வேறில்லை.

தேசிய இனப்பிரச்சின பற்றிய படங்கள் காதலினிடையில் சொல்லப்படுவது போன்று, அப் பிரச்சினை பற்றிய கதையை, குழந்தையின் தத்துப் பிரச்சினை பற்றிய அறம் சார்ந்த பிரச்சினையாக மாற்றிய திரைப்படமாக மணிரத்னத்தின் கன்னத்தை முத்தமிட்டால் நின்றுபோகிறது. தமிழகத் திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்ட அரசியல் என்பதில் என்றும் குறிப்பான அரசியல் இருந்தது இல்லை. செல்வமணியின் குற்றப்பத்திரிக்கையில் இருந்து, ஷங்கரின் முதல்வன் ஈராக, மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து வரையிலான திரைப்படங்கள் வெற்றுவேட்டு தமிழ் அரசியல் சினிமாவுக்கு எடுத்துக்காட்டான இலட்சணங்கள். தமது சொந்த நிலப்பரப்பு சார்ந்த பிரச்சினைகளையே குறிப்பான அரசியல் அறிவுடன், கடப்பாட்டுடன் எடுக்கத் தெரியாதவர்கள், ஈழப் பிரச்சினையை வரலாற்று அறிவுடன் யதார்த்தமாக எதிர்கொண்டு எடுப்பார்கள் என நினைப்பதும் கூட அபத்தம்தான்.

எந்தத் தனித்துவ சினிமாவை விழைகிற சமூகம் ஆயினும், ரசனை மாற்றம் என்பதை நிறுவன மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும், வெகுமக்கள் மட்டத்திலும் தீர்மானகரமாகச் சிந்திப்பது என்பது அந்தச் சமூகத்தின் தனித்துவ சினிமா உருவாக்கத்திற்கு முன் நிபந்தனையாக ஆகிறது. விடுதலைப் புலிகள் ஒரு ஆயுத அமைப்பு எனும் அளவில் அழிக்கப்பட்ட நிகழ்வுடன் ஈழத்தமிழர்களின் அரசியலிலும் கலாச்சார வாழ்விலும், அவர்களது சிருஷ்ட்டிபூர்வமான சுயாதீனமான நடவடிக்கைகளிலும், மிகப்பெரும் இடைவெளியை வெட்டிவிட்டு வரலாறு நகர்ந்துவிட்டது. ஈழ மண்ணில் ஈழத் தமிழர்களின் வாழ்வென்பது தமது அரசியல் உரிமைகளுக்கு ஆனது எனும் அடிப்படைகளில் இருந்து உயிர்வாழ்தலுக்கு ஆனது எனும் கொடும் நிஜத்துக்கு நகர்ந்துவிட்டது. வரலாற்றுத் தரிசனம் கொண்டு, யதார்த்தவாத சினிமா மரபை விழைந்த, ஈழத்தமிருக்கானதொரு தனித்த திரைப்பட அழகியல் வடிவம் மற்றும் தனித்த திரைப்படக் கலாச்சாரத்தை அவாவிய ஞானரதன் போன்ற கலைஞர்கள் அகாலத்தில் மறைந்துவிட்டார்கள். அவர்தம் கனவு இன்னும் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

- யமுனா ராஜேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)