அரவாணிகள் பற்றிய முதல் நாவல் ‘வாடா மல்லி’. எழுதியவர் சு. சமுத்திரம். ஓர் அரவாணி எழுதிய முதல் நாவலாக வெளிவந்துள்ளது ‘முன்றாம் பாலின் முகம்’. எழுதியவர் பிரியா பாபு. ’தமிழகத்தில் அரவாணிகளின் வழக்காறுகள்’ என்னும் ஓர் ஆவணப்படத்தையும் ‘அரவாணிகள் சமு்க வரைவியல்’ என்னும் தொகுப்பையும் வெளியிட்டு தொடர்ந்து அரவாணிகளுக்காக பாடுபட்டு வருபவர். 

ரமேஷ் என்னும் வாலிபனுக்குள் பெண்மை உணர்வு மேலோங்குகிறது. பெண்ணாக அலங்கரித்துக் கொள்ள மனம் விரும்புகிறது. அரவாணியாக மாற அவனையும் மீறி ஓர் அரிப்பு உள்ளத்தில் எழுந்து கொண்டே இருக்கிறது. அறிந்த தாய் தடுக்க முயல்கிறாள். சமு்கம் கேலி செய்கிறது. அரவாணிகளின் நிலையை, மனத்தை, உணர்வைத் தாய்க்குப் புரியச் செய்து முடிவில் அரவாணியாகிறான். 

அரவாணியாகத் துடிக்கும் ஒரு வாலிபனுக்கும் தடுக்க முயலும் தாய்க்கும் இடையில் நடக்கும் உணர்வுப்பூர்வமான ஒரு போராட்டத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இரண்டு பக்கத்திலுமான நியாயத்தையும் எடுத்து வைக்கிறார். 

வீட்டில், வெளியில் அரவாணிகள் கேலி செய்யப்படுவதை, கண்டிக்கப் படுவதை, புறக்கணிக்கப் படுவதை, அங்கீகரிக்கப்படாததை நாவல் நெடுக பல அரவாணிகள் பாத்திரங்கள் வாயிலாகவும் ஆசிரியர் கூற்றாகவும் பதிவு செய்துள்ளார். ’’படிக்கும் போதே ஸ்கூல் பொம்பள, அலி, ஓரம்போன்னு கிண்டல் வேற. என்னோடே மனசை அடக்க முடியல. வீட்டுலயும் தினம் அடி, உதை, திட்டு, ஆம்பளயா நடக்கச் சொல்லி. முடியல’’ (ப. எண். 18). வியாபாரம் செய்து பிழைக்க முயற்சித்தாலும் சமு்கம் விடுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ்க்கையே போராட்டமானதே. ஆனால் அரவாணிகள் வாழ்க்கை மிகக் கொடுமையானது எனக் காட்டியுள்ளார்.

ரமேஷ் என்னும் வாலிபன் முழுமையாக அரவாணியாவதைக் குறித்து நாவல் பேசினாலும் அரவாணியாகி இருப்பவர்களும் நாவலில் படைக்கப் பட்டுள்ளனர். ரமேஷ் தேடிச் செல்லும் ஓர் உலகமாக அவர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக மூத்த அரவாணி ‘ஜானகியம்மாள்’. அருமையான பாத்திரம். ரமேஷ்க்கு ‘பார்வதி’யைப் போல் இன்னொரு தாய். அம்மா அரவாணியாக வேண்டாம் என்று வேண்டுவதைப் போல் ஜானகி அம்மாளும் வேண்டாம் என்கிறாள். இருவர் சொல்வதிலும் வித்தியாசம் இருக்கிறது. குடும்ப மானம், கௌரவம் கருதி வேண்டாம் என்கிறாள் பார்வதி. அரவாணி வாழ்வு சிக்கலானது, சிரமானது என்னும் அடிப்படையில் வேண்டாம் என்கிறாள் ‘ஜானகியம்மாள்’. ஆயினும் இருவரிடமும் ஒரே மாதிரியான அன்பை, பாசத்தை உணர்கிறான். மீனா, ஷைலஜா, வனிதா ஆகிய அரவாணிகளும் ரமேஷுக்கு நட்பாகவும் துணையாகவும் ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருக்கின்றனர்.

அரவாணிகளின் முக்கிய ஒரே திருவிழா ‘கூத்தாண்டவர் திருவிழா’. வருடமொரு முறை நடத்தப்படுகிறது. அவர்களால் கொண்டாடப் படுகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் வெற்றிப் பெற அர்ஜூனனுக்கும் நாககன்னிக்கும் பிறந்த ‘அரவான்’ஐ பலி கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அரவான் பலியாவற்கு முன் ஒரு பெண்ணோட உறவாட விரும்புகிறான். எவரும் முன் வராததால் கிருஷ்ணனே மோகினி அவதாரம் எடுத்து உறவாடுகிறான். மறுநாள் அரவான் பலியிடப்படுகிறான். இது தொன்மம். கிருக்ஷணன் அவதாரம் எடுத்தது சித்ரா பௌர்னமி. அதனாலே இந்நாளில் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள் அரவானைக் கணவனாக நினைத்து தாலி கட்டிக் கொண்டு மறுநாள் தாலி அறுத்து விதவையாகி விடுவார்கள். இது வழக்கம். இவ்விழா கொண்டாடப்படுவதை நாவலுக்குள் சாமர்த்தியமாக கொண்டு வந்துள்ளார். ரமேஷ்க்கு ஜானகியம்மாள் கூறுவதாக வாசர்களுக்கு பிரியா பாபு கூறியுள்ளார். இதைக் கொண்டாட்டம் எனச் சொல்ல முடியாது. விழாவிற்கு வரும் அரவாணிகளைத் தொட்டுப் பார்க்கவும் தீண்டி விளையாடவும் தவறாக நடந்து கொள்ளவும் ஓர் ஆண் கூட்டமே வந்து தொல்லை தருவதைக் காட்டியுள்ளார்.

ரமேஷ் அரவாணியாக மாறியதால்; கௌரவமும் மதிப்பும் போய்விட்டன என்னும் அப்பாவையும் அண்ணனையும் விமரிசனப்படுத்துவதாக காட்டியுள்ளார். ’’வீட்டுல அழகான பொண்டாட்டி இருக்கும் போதே, வெளியில் உங்களுக்கு ஒரு பொண்டாட்டி இருக்குதே அதுக்கு பேரு என்னப்பா?’’ என அப்பாவையும் ‘‘உனக்கு மாசம் ஒரு பொண்ணு வேணும். கூடவே குடிவேற. நீங்க எல்லாம் உங்களோட மன சந்தோசத்துகாக என்ன வேண்ணாலும் செய்யலாம். நாங்க மட்டும் எதுவும் செய்யக் கூடாதே’’ என அண்ணனையும் பார்த்து ‘பாரதி’யாக சமுகத்தை நோக்கி அரவாணிகள் எழுப்பிய குரலாக ஒலித்துள்ளது. ஓர் ஆண் அவனுக்குள் நிகழும் மாற்றத்தால் அரவாணியாக மாறுவது இயற்கை என்பதுடன் அது கௌரவக் குறைச்சல் அல்ல என பாத்திரம் வாயிலாக வாதிட்டுள்ளார்.

ரமேஷ் என்னும் ஆண் மகனை, அவன் அரவாணியாக மாற்றம் பெறுவதையே நாவல் மையப்படுத்தியுள்ளது. அவனுக்குள் பெண் உணர்வு இருந்தாலும் அரவாணியாக அறுவை சிகிச்சை செய்யும் வரை ‘அவன்’, ‘இவன்’ என்று எழுதியவர் அறுவைச் சிகிச்சைக்குப் பின் முழு அரவாணியாகி விட்ட பிறகு ‘அவள்’, ‘இவள்’ என்று எழுதி இருப்பது பாராட்டிற்குரியது. ஓர் அரவாணி என்பதை விட ஒரு நாவலாசிரியராக இங்கு வெற்றிப்பெற்றுள்ளார். ரமேஷ் என்னும் ஆண் ‘பாரதி’ என்னும் பெண் ஆனாள் என்று புரியச் செய்துள்ளார்.

‘மு்ன்றாம் பாலின் முகம்’ என்னும் இந்நாவலை ஒரு நெடுஞ்சாலையைப் போல் நேராக இலக்கு நோக்கிக் கொண்டு சென்றுள்ளார். அரவாணிகளுக்கு அங்கீகாரம், சமத்துவம், உரிமை கோரும் விதமாக அமைந்துள்ளது. சமு்கத்தில் தற்போது அரவாணிகளுக்குள்ள நிலையையும் அறியச் செய்துள்ளது. அவர்களின் வாழ்நிலையையும் எடுத்துக் காட்டியுள்ளது.

ஒரு தலித் தன் பிரச்சனையை எழுதும் போதே ஒரு பெண் தன் பாடுகளை படைக்கும் போதே அதில் உயிர்ப்பும் உண்மையும் இருக்கும் என்பார்கள். ஓர் அரவாணியே அரவாணி பற்றி எழுதிய இந்நாவல் அவ்வகையிலேயே உயிர்ப்பும் உண்மையும் பெற்றுள்ளது. அரவாணியாக மாறுவதைப் பற்றியே பேசியுள்ள நாவல் ஏன் மாறுகிறார், எதனால் மாறுகிறார் என எழுதியிருந்தால் இன்னும் உயிர்ப்பு கூடியிருக்கும். அரவாணிகளின் வலியை உணரச் செய்திருக்கும்.

அரவாணிகள் என்பவர்கள் காலம் காலமாகவே இருந்து வந்துள்ளனர் என்பதற்கு இலக்கியத்தில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. நவீன இலக்கியத்தில் பதிவுகள் குறைவாகவேயுள்ளன. ‘மூன்றாம் பாலின் முகம்’ மூலம் அவர்களின் ‘மு்ன்றாம் பாலின் மனம்’ காட்டியுள்ளார். அரவாணியாக மட்டுமின்றி ஒரு சமுகப் பிரதிநிதியாய்த் தன் கடமையாற்றியுள்ளார். அரவாணிகள் குறித்த அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். அரவாணிகளை அவர்களின் வாழ்நிலையை இத்தொகுப்பு ஓரங்குலமாவது உயர்த்தும் என்னும் நம்பிக்கையளிக்கிறது.

‘‘புடவையை உதறி விட்டு பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்ப் புது உலகை உருவாக்க புயலாய்ப் புறப்பட்டாள் பாரதி’’ என நாவல் முடிகிறது. ஒரு புயலாகப் பிரியா பாவுவின் வாழ்வு தொடர்கிறது என அறிய முடிகிறது. தொடர வாழ்த்துக்கள். 

வெளியீடு

 சந்தியா பதிப்பகம்

 நியூடெக் வைபவ்

 57 52ம் தெரு

 அசோக் நகர்

 சென்னை 600083

 

- பொன். குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)