சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இருபது. தொகுப்பாசிரியர் பாலு மணிமாறன் அவர்கள். சரி, சிங்கப்பூர் பெண்களா என்ன பெரிசா எழுதியிருப்பார்கள், என்று கொஞ்சம் அவசரப்படாமல் மெதுவாக புத்தகத்தைப் புரட்டினால் வாசகனை பல்வேறு கோணத்திலிருந்து புரட்டிப் போடுகிறது அவர்கள் புனைவுகளின் வழி நம்மிடம் காட்டும் நிஜக்கதைகள்.

"சிறுகதைகளில் நாம் எதிர்பார்ப்பது என்ன? சுவராசியம். ஒரு கதை, குணச்சித்திரங்கள், மனோபாவ மோதல் அல்லது வர்ணனை இத்தியாதிகளுடன் ஓர் உருவ அமைதியும் காணவேண்டும்." என்பார் க.நா.சு. அப்படிப் பார்த்தால் இவர்களின் கதைகளில் இவை அனைத்தும் இருப்பதுதான் இத்தொகுப்பின் சிறப்பு. பல்வேறு தளத்தில் இயங்கும் எழுத்தாளர்களின் படைப்புகளை ஒருசேர வாசிக்கும்போது தொகுப்பு நூல்களில் அக்குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புலகம் மங்கி ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின், காலத்தின் படைப்புகளாக அவை முகம் காட்டும். இத்தொகுப்பும் சிங்கை, மலேசியாவில் வாழும் பெண்களின் உலகத்தையும் அந்தப் பெண்கள் வாழும் உலகத்தையும் கண்ணாடியாகவும் முகமூடி அணிந்தும் கோலமிடுகிறது.

உளவியல், அறிவியல், நட்பு, அப்பா-மகன் உறவு, மரணத்தை யதார்த்தமாக அணுகும் உணர்வுகள் மங்கிய நுகர்வோராய் மனித உறவுகள், தலைமுறை தலைமுறையாய் அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கும் குழந்தைகள், பால்ய நட்பைத் தேடி வரும் மனிதர்கள், திருமணத்திற்கு அப்பாலிருக்கும் சில (பிறன்மனை நோக்கல்) உறவுகள், பொழைப்பு தேடும் பெண்களும் அவர்களின் பல்வேறு குணாதிசயங்களும், தலைமுறை இடைவெளியை இட்டு நிரப்பும் அறநோக்கு இத்தியாதி பல்வேறு உலகத்தில் பயணிக்க இத்தொகுப்பு வாய்ப்பளிக்கிறது.

இந்தக் கதை இதனால் சிறப்புடையது, இந்தக் கதையின் உத்தி சிறப்பு, கரு, உத்தி, நடை அனைத்திலும் இக்கதை சிறப்புடையது என்று கதைகளுக்கு மதிப்பெண் போடும் வேலையையும் தொகுப்பாசிரியரே கலந்துரையாடல் மூலம் செய்துவிடுகிறார். ஓரளவு வாசகனுக்கும் சரி, விமர்சகனுக்கும் சரி அக்கருத்தில் முரண்பாடுகள் ஏற்படவில்லை. புலம்பெயர்ந்த இக்கதைகளின் வரலாற்றையும் அவரே பின்னூட்டாகக் கொடுத்து மிகச்சிறந்த அறிமுகப் படலத்தையும் நிறைவு செய்துவிடுகிறார். இந்த இரண்டின் மூலம் ஒரு தொகுப்பாசிரியராக தன்னிறைவுடன் தன் பாத்திரப் படைப்பை நிறைவு செய்யும் பாலு மணிமாறன் பிற தொகுப்பு நூல்களுக்கும் வழிகாட்டியாகும் சிறப்பு பாராட்டுதலுக்குரியது.

இத்தொகுப்பு பெண்களின் படைப்புலகம் என்பதால் பெண்ணியம் என்ற போர்வையில் அதன் இசங்களின் மடிப்புகளுக்குள் சுருட்டிவிடலாம் என்றால் அதுதானில்லை. பெண்ணியம் என்பதைப் பற்றி இவர்கள் பேசவில்லை. ஆனால் இவர்கள் பெண்கள்.! தங்கள் உலகத்தை, தங்கள் உலகத்தில் சந்தித்த அனுபவங்களை, தாங்கள் பார்த்ததை, அவரவர் பார்வையில் பதிவு செய்திருக்கின்றார்கள். இத்தொகுப்பிலேயே பெண்ணியத்தை நேரடியாகத் தொட்டிருக்கும் கதை "நான் என்னைக் காதலிக்கிறேன்" கதைதான்.

இவர்களின் படைப்புலகில் பயணிக்கும்போது புனைவுகளின் ஊடாக மறைந்திருக்கும் மறுபக்கத்தை, அந்த மறுபக்கத்தின் மனவெளியை, அதன் இருட்டை, வெளிச்சத்தை நாம் பார்க்கும்போது அது அவர்களையும் தாண்டி வேறொரு மனவெளியாக விரிகிறது. அந்த மனவெளியில் அவர்களும் அவர்கள் கதைகளும் அவரவர்களுக்கான பால்வீதியில், சில சூரியன்கள் நம் கண்ணுக்கு நட்சத்திரங்களாய், சில கிரகங்களாய், இன்னும் சில நிலவின் குளிர்ச்சியுடன் ..

முதல் கதை நுடம். சிங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர் தோழி ஜெயந்திசங்கரின் கதை. உளவியலை தன் கதையின் கருப்பொருளுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு குழந்தை- குழந்தையை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் உயர்நடுத்தர வர்க்கத்து பெண். குழந்தை ஏக்கம் நியாயமானது. ஆனால் அதற்காகவே எத்தனைப் பெண்களால் வேலையை விட்டுவிட முடியும்? மில்லியன் டாலர் கேள்வியை மறுபக்கத்தில் நின்று அப்பெண் கேட்கிறாள். அவளால் விடமுடிகிறது. ஆனால் அதுவே அந்தப் பிரச்சனைக்குத் தீர்வல்ல. ஒரு பெண் எப்போதும் ஒரு தாயாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இந்த உலகம் போற்றும் தாய்மையை அவள் தலையில் முள்கீரிடமாக்கிவிடும்.

அப்படியானால் என்ன செய்யவேண்டும் பெண்கள்? கருப்பையும் சூல்பையும் தாய்மையும் விட்டொழிப்பதுதான் பெண்விடுதலையா? அப்படிப்பட்ட விடுதலை கண்விற்று ஓவியம் வாங்கிய கதையாகப் போயிவிடுமே! ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரும்வரை வீட்டிலிருந்தே பணி செய்யும் முறை அல்லது பணிநேரக்குறைப்பு/ நீண்ட ஊதியமில்லாத விடுப்பு/ பணியிடங்களில் குழந்தைக் காப்பகம் அவசியம் என்பதை அரசாங்கம் சட்டமாக்க வேண்டும்... இப்படி எத்தனையோ வாசல்களை அக்கதையின் மறுபக்கம் திறந்துவிடுகிறது.

சிங்கப்பூர்-பெண்கள் இரண்டும் கலந்த ஜெயந்தி சங்கரின் புகழ்பெற்ற சிறுகதை ஈரம் (நாலேகால் டாலர்). அதைத் தவிர்த்து இத்தொகுப்பு நுடம் கதையை எடுத்துக் கொண்டிருப்பது இந்த மறுபக்கத்தையும் அதை நோக்கிய சிந்தனைத்தளத்திற்கான அவசியத்தையும் மேலும் வலியுறுத்துகிறது.

பொழப்பு சிறுகதை கதைக்கரு, கதாபாத்திரம், உத்தி அனைத்திலும் தனித்து நிற்கும் மிகச் சிறந்தப் படைப்பு. பொழப்பு தேடி வரும் எல்லோரையும் எல்லோரும் ஒரேமாதிரி எடைபோடுவதை உடைக்கிறது. இருவேறு பாத்திரங்கள் மூலம் இருவேறு முகங்களைக் காட்டி யதார்த்தத்தின் மிகநெருக்கத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறது.

புன்னகை என்ன விலை? இத்தொகுப்பின் பிறிதொரு மிகச் சிறந்த கதை. கதையில் எவ்விடத்தும் கருப்பொருள் வெளிப்படையாகப் பேசப்படவில்லை. சகமனிதனிடம் காட்டும் அக்கறையும் சிறுதுளி அன்பும் பட்டுப்போன மனித மாண்புகளைத் துளிர்த்தெடுக்கும் என்று உணர்த்தும் கதை. சொந்த மண்ணில் அந்நியனாகப் பார்க்கப்படும் பார்வையும் சந்தேகக் கண்களும் தீவிரவாதிகளை உருவாக்கும் ஆரம்பப்பள்ளிகள் என்பதை அண்மைய பல சரித்திர நிகழ்வுகள் வரலாற்றில் எழுதிவிட்டன.

நட்பு - கதையில் இஸ்மாயில் ராவுத்தரும் நடராஜனும்.. கதையோ கதைக்கருவோ புதிதல்ல. நிறைய சினிமாக் கதைகள் வேறு இக்கதையின் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு வந்துவிட்டன. ஒரு பெண் இஸ்மாயில் ராவுத்தரும் நடராஜனும் கொண்டிருந்த நட்பை, ஒருவரை ஒருவர் சந்திக்கத் துடிக்கும் உணர்வை எழுதியிருக்கிறார். ஏன்.. இரண்டு பெண்கள், பால்யகாலத்து நண்பிகள்.. நான் சமீராபானுவா கொக்கா? நான் லட்சுமியா கொக்கா? என்று கேட்டுக்கொண்டு ஒருவரைச் சந்திக்க ஒருவர் அலைவதை நினைத்துப் பார்க்க முடியுமா?

இன்றுவரை பெண்ணின் உலத்தில் பெண்ணுக்கான நட்பு என்பதும் அவள் திருமணத்திற்குப் பின் விலக்கி வைக்கப்பட்ட பண்டமாய், கணவனின் நட்பே தன்னுடைய நட்பின் உலகமாய் உருமாற்றிக்கொண்டு தன்னை ஏமாற்றிக் கொள்ளும் அவலம். எந்தப் பெண்ணாலும் தன் நட்பைத்தேடி இஸ்மாயில் ராவுத்தர் மாதிரி அலைவதை புனைவில் கூட பெண் எழுத்தாளர்களாலும் காட்ட முடியவில்லையே! இந்தப் பக்கம் பெண்ணின் இருட்டான பக்கம். ஆண்களின் நட்புலகை வெளிச்சப்படுத்திய பெண்களுக்கும் நட்புலகம் உண்டு என்பதை இக்கதையின் மறுபக்கத்தில் பார்க்கும்போது ஏற்படும் வலியும் வேதனையும் அதிகம்.

புரு கதையில் அதிநவீன அறிவியல் தாக்கம். ஆனால் புருசோத்தமன் பாலியல் அறுவைச் சிகிச்சை செய்து புருவாக மாறியதும் அந்த அறிவியல் சமூகத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய செயலாக இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார். "அவன் தன்னுடலில் சில அதிர்ச்சியான மாற்றங்களைக் கண்டான். வீட்டைவிட்டு போக முடிவு செய்தான். தன்னைப் போல மரபுமுறை மீறிப் பிறந்த எந்தச் சிறுவரும் உயிரை விடக் கூடாது என்பதற்காக.. அவள் வெறியுடன் படித்தாள்" என்று பதிவு செய்வதன் மூலம் சொல்லி விடுகிறார். அரவாணிகளின் பிரச்சனையை எடுத்துக் கொண்டுபோய் ஒர் அதிநவீன அறிவியல் புனைவுடன் ஒட்டுப்போட்டு எப்போதும் தன் சகமனிதர்களான இவர்களை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் யதார்த்தத்துடன் முடிச்சுப் போட்டு இச்சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கும் பாலியல் அறங்களை விமர்சனம் செய்கிறார்.

மெல்லிய மன உணர்வுகளைப் பதிவு செய்யும் கதைகளில் முன் நிற்பவை முகவரிப் புத்தகம், அம்மாவுக்கு வயசாச்சு, பிதாமகன், சீனமூதாட்டியின் கதவுகள்.

முகமூடி கதையின் கருவும் கதாபாத்திரங்களும் ஓர் எதிர்மறைக் கருத்தை முன்வைக்கின்றன. அதாவது தன் மகள் ரீனாவை வெளியில் போய்வர தயக்கமின்றி அனுமதிக்கும் அம்மாவும் அப்பாவும் திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகளை வைத்திருப்பவர்கள் என்று சித்தரிப்பதன் மூலம்.. இந்த மாதிரி குழந்தைகளுக்கு உரிமைகள் கொடுப்பதாகக் காட்டிக்கொள்ளும் பெற்றோர்கள் இப்படித்தான் இருப்பார்களாக்கும் !!! என்று யோசிக்க வைத்துவிடும் அபாயம் இருக்கிறது. பிறன்மனைநோக்கல், பிறனில்விழையாமை எல்லாம் திருவள்ளுவர் கால்த்திலிருந்தே இருக்கத்தான் செய்கிறது. இக்கருப்பொருட்களை கதைக்கருவாக்கும்போது கயிறுமீது நடப்பது போல.

அதைப் போலவே பார்வை கதையிலும் சொல்லப்பட்டிருக்கும் உவமை. 'திருவிழாவில் தொலைந்து போன பையன் மாதிரி ஒருவன் பார்த்தானே? அது?"

"அதுவா அது.. மே.பி. அவன் பார்வைக்கு நான் அவனது காதலி மாதிரியோ மனைவி மாதிரியோ இருந்தேனோ என்னவோ.. யாருக்குத் தெரியும்?" (பக் 63 & 64).

இதைப் படித்தப் பிறகு திருவிழாவில் தொலைந்து போன பையன்கள் திருதிருவென முழிப்பதை நிறுத்திக்கொண்டாலோ மாற்றிக்கொண்டாலோ நல்லது!!. என்று தோன்றுகிறது.

கதைகளின் சில வரிகள்:

"அவன் மறைந்த பின் அவர்கள் தங்கள் சுமை குறைந்த உணர்வை மறைக்க பெரிதாக மெனக்கெடவில்லை. ஒரு நல்ல மனிதன் கிட்டத்தட்ட அறுபது வருடம் வாழ்ந்த வாழ்க்கை ஒரு வருட உடல் உபாதையல் எவ்வளவு சீக்கிரம் மறக்கப்பட்டுவிடுகிறது. மிகச் சமீபமாக நடந்த விஷயங்களை மட்டுமே ஞாபகத்தில் வைத்துக் கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறதே மனித மனம்!" - ரம்யா நாகேஸ்வரனின் முகவரிப் புத்தகம் கதையில்.

**
"மனைவி என்றால் எனக்கு உரிமை வேண்டும். அடிமை என்றால் கூலி தர வேண்டும். வேசி என்றால் நேரத்துக்கேற்ற சம்பளம் வேண்டும்"

"காதல் என்பது என்ன? பிடித்தவரது சுயத்தை ரசிப்பது தானே காதல். இனி என் சுயத்தை நானே ரசிக்கப் போகிறேன். அதாவது நான் காதலிக்கப் போகிறேன் என்னையே. என் மனம் அணிந்திருந்த திருமணம் என்ற ஆடை அவிழ்ந்தது.. நிர்வாணமாயிற்று சுயம். தைரியமாக என் காதலை அதற்கு ஆடையாக அணிவித்தேன்" - செளம்யாவின் நான் என்னைக் காதலிக்கிறேன் கதையில்.

சிங்கப்பூரில் இத்தனைப் பெண்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தொடர்ந்து இயங்குவதும் மனதிற்கு நிறைவளிக்கும் செய்தி. ஒவ்வொரு கதையையும் தனித்தனியே எடுத்துக் கொண்டு அக்கதைகளின் ஊடாக எழுதப்படாமல் மவுனத்தில் உரையாடும் மனவெளியையும் சேர்த்தே வாசிக்கவும். ஏனெனில் உங்கள் உலகத்தில் உங்கள் மொழியில் எங்களைப் பற்றி நாங்களே எழுத இந்த மனவெளிப் பயணங்கள் ஒரு ஒத்திகை. வேறொரு மனவெளியில் சிறகடித்து சிறகடித்து பறந்து பறந்து எப்படியும் எங்கள் சிறகுகள் கண்டடையும் எங்களுக்கான எங்கள் மனவெளியை. அதுவரை எங்கள் எழுத்துகள் வேறொரு மனவெளிதான்.

--------

தலைப்பு: வேறொரு மனவெளி
- சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்.
தொகுப்பாசிரியர்: பாலு மணிமாறன்.
வெளியீடு: தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர்/ சென்னை.
பக்: 240 விலை: ரூ 150 / S$20.

- புதிய மாதவி, மும்பை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.