1945 ல் இரண்டாம் உலகப் போர் முடிவுற்றது. உலகின் பல இடங்களில் காலனிய ஆட்சிகள் முடிவுக்கு வந்தன. பிரிட்டிஷ், பிரெஞ்சு, ஸ்பெயின், போர்ச்சுகள் போன்ற ஐரோப்பிய நாடுகள் தங்கள் காலனிகளை விட்டு வெளியேறினர். அக்காலனிய நாடுகளில் மக்கள் எழுச்சி காரணமாக ஏற்கனவே விடுதலை போராட்டங்கள் நடைபெற்று வந்தன. தவிரவும் ஐரோப்பியா நாடுகள் இரண்டாம் உலகப் போரில் பெரும் இழப்பைச் சந்தித்திருந்தன. காலனிய ஆட்சியாளர்கள் வெளியேறியதற்குப் பல காரணங்கள் இருந்தன. எனினும் அவற்றில் மேற்கூறியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஆகிய பாசிச நாடுகள் ஒரு அணியாக இருந்தன. நேச நாடுகளும் சோவியத் யூனியனும் அவற்றை எதிர்த்துப் போரிட்டன. சோவியத் யூனியனிடம் நாஜி ஜெர்மனி தோல்வியுறும் வரை பாசிச சக்திகளின் கை உலகெங்கும் ஓங்கி இருந்த்து. அப்போது நேச நாடுகள் தங்கள் போர்த் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தங்களது காலனி நாடுகளை ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டன.

ஆசியக் கண்டத்தில் ஜப்பான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. தாய்லாந்து, மலேயா, சிங்கப்பூர் ஆகியவையும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தன.

இந்தியாவில் விடுதலைப் போரட்டம் தீவிரமாக நடைபெற்று வந்த காலம். காங்கிரசுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுபாஷ் சந்திர போஸ் அதிலிருந்து வெளியேறினார். இந்திய விடுதலைக்கு ஆயுதந்தாங்கிய புரட்சி என்ற கொள்கையக் கையிலெடுத்தார்.

அதற்கு ஆதரவு திரட்டுவதற்காக உலகம் முழுவதும் சென்றார். பிரிட்டனுக்கு எதிராக இருந்த பாசிச சக்திகளான் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியை நாடினார்.அவரது இந்திய தேசிய ராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிவந்தது. அதில் பணியாற்றியவர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள்.

ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் சுபாஷ் சந்திர போஸ். இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான். இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம். அத்துடன் நீண்ட காலம் பிடிக்கும். எனவே கடல் வழியாக அவற்றைக் கொண்டு வர எண்ணியது ஜப்பான் முடியாட்சி இராணுவம்.

எனவே சயாமி (தாய்லாந்து)லிருந்து பர்மா வரை இருப்புப்பாதை மூலம் திட்டம் நிறைவேற்ற முற்பட்டது. இரயில்பாதை நிர்மாணிப்பை ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட்டது. தாய்லாந்தில் 9வது அணி அப்பணியைக் கண்காணித்தது. 1942 செப்டம்பர் 16 ஆம் தேதியிலிருந்து 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதை நிர்மாணித்து முடிக்கப்பட வேண்டும் என்று ஜப்பான் அரசு கட்டளை போட்டது.

அந்த இருப்புப்பாதையை அமைக்க ஏராளமான ஆட்கள் தேவைப்பட்டனர். அந்த மரண இரயில்வே அமைப்பு பாணியில் 16000 ஆயிரம் போர்க்கைதிகள் ஈடுபடுத்த்ப்பட்டனர். அனைவரும் பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய படைவீரர்கள். தொழில் நுட்ப வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்தி கொண்டனர்.

சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் இன்னும் இது போன்ற பிற பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

இதற்காக ஆசியத் தொழிலாளர்கள் பெருமளவில் கொண்டு செல்லப்பட்டனர். அதில் பெரும்பான்மையினோர் தமிழ் தொழிலாளர்கள்.

பதினெட்டாம் நூற்றண்டின் இறுதிக்காலத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய மலேயா கொண்டு போகப்பட்டிருந்தனர். ஏற்கெனவே அவர்கள் தேயிலை தோட்டங்களில் கொத்தடிமைகளாக வாழ்ந்து வந்தனர். குடும்பம் . குடும்பமாக அங்குள்ள குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தனர்.

இப்படிப்பட்ட நிலையில் தான், தங்கள் வசமுள்ள மலேயா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் பலரை - குறிப்பாகத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து வந்த தமிழ்ர்களை - கங்காணிகள் மூலம் ஏமற்றிக் கொண்டு சென்றனர். நகரங்களில் வாழ்ந்து வந்த உதிரித் தொழிலாழர்கள், தெருவில் போவோர் எனப் பலரும் பிடிக்கப்பட்டு சயாம் ரயில்பாதை அமைக்கும் வேலைக்கு கொண்டு செல்ல்ப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் தமிழ்ர்கள் என்று குத்து மதிப்பான புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களும் இருந்தனர். அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த போதும், சாலைகளில் சென்று கொண்டிருந்த போதும், கம்போங்களில் தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக் கொண்டிருந்த போதும் சுற்றி வளைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்களும் கனிசமான் அளவில் இவ் வேலைக்குப் பயன்படுத்தப்பட்டனர்.

மலேயாவில் நூற்றுக்கணக்கான ரப்பர் தோட்டங்கள் இருந்தன. ஒரு தோட்டத்திலிருந்து நூறு பேர் கொண்டு செல்லப்பட்டிருந்தால் அதில் போர் முடிவுற்று இறுதியில் திரும்பி வந்தவர்கள் நான்கு அல்லது ஐந்து பேர் தான் என்று தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜப்பானியரால் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். மருத்துவ வசதிகலும் போதிய உணவுமில்லை. நோய்வாய்ப்பட்டவர்களைத் தூக்கி குடிசையில் போட்டு விடுவார்கள். ஏனென்று கேட்கமாட்டார்கள். இறந்த பலரை அங்காங்கே விட்டுப் போய்விடுவார்கள்.

இவர்கள் பாதை அமைத்துக்கொண்டிருக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் சரியாக வேலை செய்யவில்லை எனில் இவர்களை கொன்று விடுவார்கள். இன்னொரு புறம் மேலிருந்து திடீர் திடீரென பிரிட்டிஷ் படைகள் விமானத்திலிருந்து இருப்புப்பாதைப் பணியில் ஈடுபடுவோர் மீது குண்டு வீசித் தாக்கும். மத்தளத்திற்கு இருபக்கமும் இடி எனபதைப் போல் இவர்களுக்கு திரும்பிய பக்கமெல்லாம் சாவுதான்.

போர் முடிவுக்குப் பின் ஒரு சிலரே கோலாலம்பூர் திரும்பினர். அவர்கள் அங்கு வந்த போது தங்கள் குடும்பம் சிதைந்திருப்பதைக் கண்டனர். நிம்மதியை இழந்து மீண்டும் சயாமுக்கே திரும்பிச் சென்று வாழ்ந்தனர். அவ்வாறு சிக்கிக் கொண்ட ஒரு தமிழ் இளைஞனின் அனுபவங்கள் தான் இங்கு கதை வடிவில் கூறப்பட்டிருக்கிறது. இது அவரது தனி பட்ட வாழ்க்கை அல்ல. சயாம் மரண ரயில்பாதையில் பாசிச ஜப்பானிடம் சிக்கி உயிரை இழந்த - இலட்சக் கணக்கான தமிழர்களின் - தமிழ்ச் சமூகத்தின் வரலாறு. யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது. இக்கொடுமை இன்னும் சரியாக தமிழகத்தில் அறியப்படவில்லை.

ஜப்பானிய ராணுவ அடக்கு முறையினால் ரயில்பாதை அமைப்புப் பணி செய்து கொண்டே இறந்தவர்கள் பலர். கொடுமை தாங்காது தப்பிக்க முயன்று சுட்டு கொல்லப்பட்டவர்களும் உண்டு.

மரண இரயில்பாதை அமைப்புக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட எல்லாச் சமூக மக்களில் பத்தாயிரம் பேர் மட்டுமே மலாயாவுக்குத் திரும்பி வந்தாகக் கூறப்படுகிறது.

ஜப்பானிய மரண இரயில்வேயில் பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாயின. கணவனை இழந்த அழுகுரல்கள் நீண்ட காலம் எதிரொலித்தன. தந்தையைப் பறி கொடுத்த பிள்ளைகளின் எதிர்காலம் சிதைந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற பின் ஜெர்மனியும் ஜப்பானும் தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நாட்டை சார்ந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கியது. அந்த வகையில் 1996 ஆம் ஆண்டில் 25கோடி வெள்ளியை மலேசியா அரசாங்கத்துக்கு ஜப்பான் வழங்கியதாகக் கூறுகின்றனர்.

ஆனால் அந்த தொகை மரண இரயில் பாதை திட்டத்தில் பணியாற்றுபவர்களின் குடும்பங்களுக்குப் போய்ச் சேரவில்லை. அந்தத் தொகையை மாலாயா அரசு இராணுவத் தளவாடங்கள் வாங்க செலவிட்டு விட்டதாக இத்திட்டத்தில் பணியாற்றி இன்னும் உயிரோடிருப்பவர்கள் கூறுகின்றனர்.

இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஆஸ்திரேலியப் படைவீரர்கள் சிலர் தங்களது அனுபவங்களை நூலாக கொண்டு வந்துள்ளனர். தாங்கள் பாதிக்கப்பட்ட வரலாற்றை ஆங்கிலேயர்கள் பிரிட்ஜ் ஆன் தி ரிவெர் க்வாய் என்ற பெயரில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படமாகவும் எடுத்து விட்டனர். அது இன்று வராலற்று ஆவணமாக விளங்கிறது. பிரிட்ஜ் ஆன் தி ரிவெர் க்வாய் வெளியான அத்திரைப்படம் உலகெங்கும் பாரட்டப்பட்ட படம். வெள்ளையர்கள் தாங்கள் பாதிக்கப்பட்ட வரலாற்றை ஆவணப்படுத்திவிட்டார்கள்.

ஆனால் நம் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள் பதிவு செய்யப்படவில்லை. தமிழர்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். ஓரிரண்டு நூல்களே வெளி வந்துள்ளன. அவற்றில் ஒன்று தான் இப்போது எமது தமிழோசை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் சயாம் மரண ரயில் என்ற நூல்.

கோவை க.விசயக்குமார்.

(முன்னுரையிலிருந்து)

சயாம் மரண ரயில்
ஆசிரியர் : சண்முகம்
தமிழோசை பதிப்பகம்,
1050, சத்தியசாலை, காந்திபுரம்,
கோவை-641012
பேசி : 9486586388
பக்கங்கள் : 304
விலை : 150