கேரளாவில் தீண்டாமை தலைவிரித்தாடிய நேரமது. மக்களின் பிரச்சனைகளை பேச வேண்டிய இலக்கியமும் எழுத்தும் கூட நம்பூதிரிகளிடமும் உயர்ஜாதி மக்களிடம் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான் ஒடுக்கப்பட்ட பாவப்பட்ட மக்களின் வாழ்க்கையை தன்னுடைய எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் வைக்கம் முகம்மது பஷீர். தன் எழுத்துக்காகவே அதிகம் தண்டனைக்குள்ளான கேரள எழுத்தாளரும் அவராகத் தான் இருக்க முடியும்.

Basheer பஷீரின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அனுபவங்களைத் தேடி அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரராக, அரசியல் கைதியாக, போதை அடிமையாக, மனநோயாளியாக, சந்நியாசியாக, பிச்சைக்காரனாக தனக்கு நேர்ந்த ஒவ்வொரு அனுபவத்தையும் இலக்கியமாக்கியவர் வைக்கம் முகம்மது பஷீர்.

அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை மட்டுமே எழுதுபவராக, ஆதிக்க சக்திகளை தொடர்ந்து கேள்வி கேட்பவராக, சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை மீறுபவராக என ஒரு புரட்சி எழுத்தாளராகவே பஷீர் வாழ்ந்திருக்கிறார். அவரின் வாழ்க்கையின் நடைபெற்ற அத்தனை சம்பவங்களையும் தொகுத்து ஈ.எம்.அஷ்ரப் என்பவர் நூலாக வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் வெளிவந்த இந்த நூலை குறிஞ்சிவேலன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘காலம் முழுதும் கலை’ என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மலையாள புத்தகத்தில் இருக்கும் சுவாரஸ்யம் சிறிதும் குறையாமல் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ள்ளது.

காயி அப்துல் ரஹ்மான் என்ற ஏழை வியாபாரியின் ஆறு குழந்தைகளில் மூத்தவர் தான் முகம்மது பஷீர். வறுமை, மதநம்பிக்கைகளில் ஊறிக்கிடந்த சமுதாயத்தை எதிர்த்து தன் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை படிக்க வைத்தார் அப்துல் ரஹ்மான். சுதந்திரப் போராட்டமும், தீண்டாமை எதிர்ப்பு போராட்டமும் கேரளாவில் உச்சத்தில் இருந்த நேரமது.

கோவிலுக்குள் நுழையும் உரிமை கேட்டு தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கண்களில் சுண்ணாம்பைத் தேய்ப்பது, சிறுநீர் கழிப்பது, கற்களால் அடிப்பது என போலீசாரும், மேல்சாதியினரும் துன்புறுத்தினர். இந்த தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பெரியார் கலந்து கொண்டார். காந்தியும் வைக்கத்திற்கு வந்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி பஷீரை வெகுவாக பாதித்தது. பஷீரும் படிப்பை விட்டுவிட்டு காங்கிரசில் சேர முடிவு செய்தார். வீட்டை விட்டு வெளியேறி கோழிக்கோடு சென்றார். காங்கிரசில் இணைந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார். போலீசாரால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டார். மூன்று மாத கடுங்காவல் தண்டனை கிடைத்தது. சிறையில் தங்களைத் துன்புறுத்தும் அனைவரும் உயர்ஜாதி இந்துக்களாக இருப்பதைக் கண்டார்.

அவர்களை கிண்டல் செய்யும் பாணியில் சிறையில் பல குறும்புகள் செய்தார். ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து அதில் துளசி இலைகளைப் போட்டு வருபவர்கள் மீது ஊற்றி அவர்களை புனிதப்படுத்தினார். உயர் அதிகாரிகளைப் போல பூணூலும் போட்டுக் கொண்டார். இதனால் இன்னும் சித்திரவதைகளுக்கு ஆளானார். தன்னை அடித்துத் துன்புறுத்தும் வாரியார் என்னும் இன்ஸ்பெக்டரை கொன்று விடத் தீர்மானித்தார். விடுதலையானதும் கத்தியை எடுத்துக் கொண்டு அவரைக் கொலை செய்யச் சென்றார். வழியில் காங்கிரஸ் தலைவர் ஒருவரால் தடுக்கப்பட்டார். இவ்வளவு வேகமும், கோபமும் இந்த சிறிய வயதில் இருக்கக்கூடாது என அவர் அறிவுறுத்தினார்.

ஆனால் அந்தக் கோபம் அவர் வாழ்க்கை முழுவதும் இருப்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் காண முடிகிறது. இருபது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதினார். அவை பயங்கரவாதத்தை தூண்டுபவையாக இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்ய வாரண்ட் வந்தது. வைக்கத்தில் இருந்து தப்பி எர்ணாகுளம் சென்று அங்கிருந்து கண்ணனூர் வழியாக பெங்களூர் சென்றார். அடுத்த ஒன்பது வருடங்களும் பஷீர் தீவிர பயணம் மேற்கொண்டார்.

கையில் சிறிதும் காசில்லாமல் நடந்தும் வாகனங்களிலுமாக தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தார். பலவகைப்பட்ட மக்களையும் வாழ்க்கையையும் அறிந்து கொள்வது மட்டுமே அவரது நோக்கமாக இருந்தது. பல நாட்கள் தண்ணீர் மட்டுமே அவரது உணவாக இருந்திருக்கிறது.

இடையில் சில மாதங்கள் கப்பல் தொழிலாளியாக மெக்காவுக்கும் பயணம் செய்தார். தன்னுடைய பெயரை ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டு அஜ்மீர் பாலைவனத்தில் நிர்வாண சாமியாராக வசித்தார். அதன்பின் புத்தகயாவில் சில காலம் வாழ்ந்தார். முஸ்லீம் சந்நியாசிகளான சூஃபிகளுடன் சில காலம் வாழ்ந்தார். எல்லைக்காந்தி, ஷேக் அப்துல்லா ஆகியோருடனும் சில காலம் வசித்தார்.

தனக்குக் கிடைத்த அத்தனை அனுபவங்களையும் பின்னாளில் எழுத்தில் பதிவு செய்தவர் பஷீர்.

மீண்டும் ஊர் திரும்பியதும் தன்னுடைய வேலை எழுதுவது மட்டுமே என்று தீர்மானித்தார். அரசர்களும், பணக்காரர்களும் மட்டுமே கதைகளின் நாயகர்களாக இருந்த நேரத்தில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களையும் வஞ்சிக்கப்பட்டவர்களையும் பற்றி எழுதினார். திருவிதாங்கூர் சமஸ்தானம் பற்றியும், சர்.சி.பி.ராமசாமி ஐயர் பற்றியும் ‘அதிர்ஷ்டம் கெட்ட என் தேசம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரை வெளிவந்த தீபம் இதழ் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

‘பட்டத்தின் பேய்க்கனவு’ என்ற பெயரில் அரசை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியதற்காக கைது செய்யப்பட்டார். நண்பர்கள் உதவியுடன் சிறையில் இருந்தபடியே ‘மாத்ருபூமி’, ‘உஜ்ஜீவனம்’ பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார். இந்த நேரத்தில் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கட்சியை ஆதரித்த அதே நேரத்தில் அதன் தனிநபர் சுதந்திரமின்மையை கடுமையாக எதிர்க்கவும் செய்துள்ளார்.

ராமசாமி ஐயருக்கு எதிரானக் கட்டுரைக்காக பஷீருக்கு ராஜதுரோகத் தண்டனையாக இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இனிமேல் இப்படிப்பட்ட கட்டுரை எழுத மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தால் விடுதலை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அது படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடும் வேலை என்று கூறி பஷீர் மறுத்ததோடு சிறைத் தண்டனையை முழுமையாக அனுபவித்தார்.

மிகச் சிறந்த கதைகளான மதிலுகள், கைவிலங்கு, டைகர், இடியன் பணிக்கர் போன்ற கதைகளை பஷீர் இந்தச் சிறை வாசத்தின்போது தான் எழுதியிருக்கிறார். வெளியில் வந்ததும் புத்தகக் கடைகள் நடத்தினார். இந்த நாட்களில் வாசிப்பது, எழுதுவது, பட்டினி கிடப்பது என்பதுதான் அவரது வாழ்க்கையாக இருந்தது.

பஷீரின் எழுத்துக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர் அருவெறுக்கத்தக்க மொழியில் எழுதுவதாகவும், அவருக்கு மலையாள இலக்கணம் தெரியவில்லை எனவும், நல்ல மொழிநடை இல்லையெனவும் விமர்சகர்கள் விமர்சித்தார்கள். சமுதாயம் வரையறுத்து வைத்துள்ள ஒழுக்கம், சாதி போன்ற பல விஷயங்களை பஷீர் கேள்விக்குள்ளாக்கினார் என்பதே அதற்கு காரணம்.

பஷீருக்கு ஆதரவாக பிரபல இலக்கிய விமர்சகர் எம்.பி.பால் தன்னுடைய கருத்தை இவ்வாறு தெரிவித்தார். “இரத்தத்தைக் கண்டால் தலைசுற்றக் கூடியவர்கள் பஷீரின் எழுத்துக்களைப் படிக்காமல் இருப்பதே நல்லது. நம்பூதிரிகள் மற்றும் உயர்ஜாதி இலக்கியவாதிகளின் உரையாடலிலும் சமுதாய அமைப்பிலும் மகிழ்ச்சி கண்டவர்களுக்கு பஷீரின் கோழி இறைச்சியும் பிரியாணியும் பிடிக்கும் என்று தோன்றவில்லை. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இலக்கியம் உயர்ஜாதி முதலாளிகளின் சொத்து ஒன்றும் அல்ல”.

தன்னுடைய ‘பால்யசகி’ என்ற நாவலின் முன்னுரையில் இதற்கு பஷீர் பதில் அளித்துள்ளார். “மஞ்சள் நீராட்டு விழாவை மட்டும் இலக்கியமாக்கலாம். ஆனால் சுன்னத் கல்யாணத்தை இலக்கிய குலப் பெருமைக்கு ஒத்துவராது என்று நினைப்பவர்களிடம் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை”.

ஒருசமயம் நண்பர்களோடான இலக்கியக் கூட்டத்தில் நண்பர் ஒருவர் பஷீருக்கு மலையாள இலக்கணம் தெரியவில்லை என்றும், அவர் அதைக் கற்றுக்கொண்டு எழுத ஆரம்பிக்கலாம் எனவும் உபதேசித்தார். அதற்கு பஷீரின் பதில், “போடா, உன் பொண்டாட்டிக்கு வரதட்சணையா வந்ததாடா இந்த மலையாள மொழி? எனக்கு என்ன இஷ்டமோ அதைத்தான் எழுதுவேன். எனக்குத் தெரிஞ்ச எழுத்துக்களைத் தான் எழுதுவேன். அது யாருக்கு சேரணுமோ அவங்களுக்கு போய்ச் சேரும். உன்னோட ஏட்டு இலக்கணம் எனக்குத் தேவையில்லை”

தன்னுடைய எழுத்துக்கள் யாருக்கு என்பதில் பஷீர் தெளிவாக இருந்தார். அதனால் தான் தன்னுடைய புத்தகங்கள் மிகக் குறைந்த பக்கங்களில் மிகக்குறைந்த விலையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். எழுத்துக்கள் எளிய மக்களின் பேச்சு வழக்கில் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் கொண்டார். இலக்கியம் என்ற பெயரில் தன் புத்தகத்தில் அதிக திருத்தம் செய்வதையும் அவர் அனுமதிக்கவில்லை.

பஷீர்ன் நாவல்கள் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவை திரைப்படமாகவும் வெளிவந்தன. அதன் திரைக்கதையையும் பஷீரே எழுதினார். அதிலும் சில திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தான் வாழ்ந்த காலம் வரையிலும் பெரும் எழுத்தாளராக, சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு மனிதனாக, அனுபவங்களை தேடி பயணப்பட்ட ஒரு பயணியாக கேரள மக்களால் பேப்பூர் சுல்தானாக வாழ்ந்த பஷீரின் வாழ்க்கையை தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

நூல்: காலம் முழுதும் கலை- ஈ.எம்.அஷ்ரப்
தமிழில் : குறிஞ்சிவேலன்
கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை-18
பக்கம்: 183
விலை: ரூ.75