அம்மி கொத்த சிற்பி எதற்கு என இலக்கிய கொள்கையில் தடுமாறாமல் கடைசி வரை நின்றவர். கடைசி வரை எளிமையாகவும் அன்பாகவும் நிறைய படைப்பாளிகளை உருவாக்கி எனறும் இலக்கிய கவிதை உலகின் பிதாமகர் அவர்.

abdul rahman"மனிதன் எழுத்தைப் போன்றவன். அவன் மற்ற மனிதர்களோடு அச்சுக்கோத்துக் கொண்டு வாக்கியமாகும் போதுதான் அர்த்தம் பெறுகிறான்" என்கிறார் ஆறாவது விரலில் கவிக்கோ. நான் இன்று வரை கேள்விப்பட்டிருந்தது சிவராத்திரி என்ற ஆன்மீக வழிபாட்டைத்தான், ஆனால் அவர் வாணியம்பாடியில் நடத்திய கவிராத்திரி என்ற நிகழ்ச்சி தமிழ் உலகிற்கு மிகவும் அற்புதமான கொடையாகும். இந்த நிகழ்வில் இருந்து அவர் கவிதையை எந்த அளவிற்கு காதலித்து இருக்கிறார் என்பது நமக்குப் புரிகிறது. எப்பொழுதுமே வாழ்வின் பொதுவுடமைகளைத் தொடர்ந்து கஸல், ஹைக்கூ, மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை என அவர் எவரும் பேசாத விஷயங்களை அதிகம் பேசியிருப்பார். அவர் குறித்த நேர்காணல் வீடியோ ஒன்றைப் பார்க்கும் பொழுது அதில் கவிதை உலகை குறித்தும் நாம் படித்துக் கொண்டாட வேண்டிய கவிஞர்களைக் குறித்து விரிவாகப் பேசியிருப்பார். இத்தனை ஒளிவு மறைவு இல்லாமல் சக படைப்பாளியை வாழ்த்தியும் வளரவும் அவர்களுக்குத் தேவையான இலக்கியத் தகவல்களை அள்ளி அள்ளித் தரும் குணத்தில் அவருக்கு நிகர் அவரே.

அதில் பஷோ கவிதை ஒன்றை மேற்கோள் காட்டிப் பேசியிருப்பார்.

அழகிய குளம்
தாவியது தவளை
பளக் சப்தம்

இந்த ஹைக்கூ கவிதை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட கவிதையாகும். அதற்கு கவிக்கோ அவர்கள் குளம் என்பது நாம் வாழும் சமூகம் ஆகும், அதில் பிரச்சனைகள் தவளையைப்போல் வந்து வந்து விழும். அதில் ஏற்படும் சப்தத்தால் உருவாகும் அலை சில நேரங்களில் தோன்றி அடங்கும், மீண்டும் உருவாகும். அதற்கு அவர் ஜல்லிக்கட்டு பிரச்சனை ஏற்படுத்தி உள்ள விளைவுகளை கூறி அது தோன்றி அடங்கிவிட்டது, மீண்டும் பிரச்சனைகள் வரும் என்று கூறினார். அவர் கூறியது போல் இன்று சந்திக்கும் வைரஸ் தொடர்பான பிரச்சனை இப்படித்தான் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. இது பிரபஞ்சத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஹைக்கூவின் கருத்தாக அவர் கூறினார். அப்படியே உலகம் தன் பாதையில் நகரந்து கொண்டுதான் இருக்கிறது.

அவர் கவிதைகள் இன்றும் இளமையாக என்னோடு பேசி வருகிறது. வரும் காலத்திலும் அதே இளமையுடன் பேசும்.

குழந்தைகளை பற்றிய அவருடைய கவிதை ஒன்று என்னை நெகிழச் செய்கிறது.

"புத்தகங்களே புத்தகங்களே
குழந்தைகளை
கிழித்துவீடாதீர்கள்"

இவரின் நேசம் எந்த அளவு குழந்தைகள் மேல் இருந்திருக்கிறது என்பதும் நமது இந்தியக் கல்வி முறையின் கற்பித்தலில் உள்ள சிக்கலும் புரிகிறது. அவரின் வீடு புதுக்கவிஞர்களுக்கு வேடந்தாங்கலாக அமைந்திருக்கிறது.

அடுத்து அவர் கவியரங்கக் கவிஞர் என்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்களும் புதுவையில் தொடர்ந்து கவியரங்கத்தில் கவி பாடுவதுண்டு. அவர் கலப்படம் என்ற தலைப்பில் கவி பாடியதை எழுத்து வாயிலாக அறிந்தேன். அதில் அவர்

கலப்படத்தைப் பற்றி
கவிதை எழுத நினைத்தேன்
பேனாவைத் திறந்தேன்
பேனா எழுதவில்லை

சற்று மௌனமாக இருந்து விட்டு மீண்டும் ஒரு முறை கவிதையை வாசிக்கிறார்

கலப்படத்தைப் பற்றி
கவிதை எழுத நினைத்தேன்
பேனாவைத் திறந்தேன்
பேனா எழுதவில்லை
மையிலும் கலப்படம்

நீண்ட கரகொலிக்குப் பின்னால் மீண்டும்

சுண்ணாம்பை
வெண்ணெய் என்று
பழகிவிட்டோம்
இனி
வெண்ணையே கிடைத்தாலும்
அதை வெற்றிலையில்தான் தடவுவோம்.

இனிமையான தமிழ் அரங்கத்தை தன் அழகான சொல்லாற்றலால் கட்டிப் போட்டவர்.

இதைத் தாண்டி அவர் புதுக்கவிதையில் குறியீடு என்கிற நூல் அவருடைய டாக்டர் பட்டம் பெற்ற ஆய்வேட்டை கவிதை உலகிற்கு கொடையாகக் கொடுத்துள்ளார். அதில் பல்வேறு குறியீடுகளின் பயன்பாடு பற்றி நிறையவே பேசியிருப்பார் . நிறைய கவிஞர்களை மேற்கோள் காட்டி இருப்பார் உதாரணமாக

பா. செய்பிரகாசத்தின் கவிதையான

இளங்காலை ஒளி எழட்டும்
உன்னால்
இருளின் வேதங்கள் எரியட்டும

என்கிற கவிதையை இருவகை குறியீட்டுக்கு உதாரணமாக குறிப்பிடுகிறார். தொன்மங்கள் மற்றும் வழக்கு குறியீடுகள் சார்ந்த அவரது கவிதை ஒன்று..

என் ஆறாவது விரல் வழியே
சிலுவையிலிருந்து
வடிகிறது ரத்தம்
ஆம்
என் மாம்சம்
வார்த்தை ஆகிறது என்றார்.

அடுத்ததாக மு. மேத்தாவின் கவிதை ஒன்று

இன்னொரு கண்ணகி
எழுந்து வந்தால்
உடையப் போவது
சிலம்பு மட்டுமல்ல.

என்கிற கவிதையில் தொன்மம் வரலாற்று குறியீடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பயன்பாடுகள் பற்றியும் நிறையவே பேசியிருப்பார். இப்படி குறீயிட்டைப் பயன்படுத்தும் ஒவ்வொரு கவிஞருக்கும் புதுக்கவிதையில் குறியீடு என்கிற நூல் மாபெரும் பொக்கிஷம், மேலும் அதில் தொன்மங்கள், படிமங்கள் மற்றும் குறியீடு சார்ந்த விளக்கங்களை விரிவாகக் கற்று தெளிவு பெறலாம்.

அவருடைய முதல் தொகுப்பான பால்வீதி அருமையான கவிதைகளைக் கொண்டிருக்கும். அதில்

புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி

என்கிற கவிதையில் காலம் காலமாக மக்கள் தேர்தலில் தோற்றுக் கொண்டிருப்பதை பேசியிருப்பார். இன்று வரை மக்கள் குருடர்களாகவே உள்ளனர் என்பதும் என் சிந்தனையே.

மற்றுமொரு கவிதையில்

வரங்களே
சாபங்கள்
ஆகுமென்றால்
தவங்கள்
எதற்காக?

என்று ஆட்சியாளர்களை கேள்வி கேட்டிருப்பார். அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பி மக்கள் காத்திருந்தது அனைத்தும் ஐந்தாண்டு தவங்களில் வீணாகிப் போகிறது, இப்படி நீளும் அவரின் படைப்புலகக் கவிதை கடலைப் போன்றது. அதில் நீந்தி கரையை அடைய முடியாது. அவருடைய ஆலாபனை முற்றிலும் புதிய சிந்தனைகளாகவும் பித்தன் என்கிற கவிதை தொகுப்பு சாதரணமாக எளிதில் கடந்துவிட முடியாது. மேற்கத்திய கவிஞர்களில் கலீல் ஜிப்ரானைக் கொண்டாடுவது போல் நாம் அப்துல் ரகுமானை தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். அத்தனையும் நுட்பமான தத்துவங்களாகவும் தரிசனங்களாகவும் காட்சி அளிக்கிறது. அவருடைய படைப்புகள் அனைத்தும் உலகத்தின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இதையெல்லாம் வாசித்த அனுபவம் எனுக்குள் அவரை கடந்து செல்வது மிகவும் சிரமாக உள்ளதால் என்றும் எனக்கு மட்டும் அல்ல இந்த உலகம் அழியும் வரை பிறப்பெடுக்கும் கவிஞர்களுக்கு பிடித்தமான தீராத கவிச்சுடர் அவர். அந்த சுடர் எரியட்டும் அந்த பிரமாண்ட வெளிச்சத்தில் கவிதைகள் பிறந்து கொண்டே இருக்கட்டும்.

ஆதார நூல்கள்:

கவிக்கோவின் காணொளி தொகுப்பு

புதுக்கவிதையில் குறியீடு − அப்துல் ரகுமான்

பால்வீதி − அப்துல் ரகுமான்

தீராத கவித்துவத்தின் சுடர் − இன்குலாப், அறிவுமதி, பழநிபாரதி

- ப.தனஞ்ஜெயன்