நான் ஓர் எழுத்தாளன் கவிதைத் தொகுப்பினூடான ஒரு தேடல்

அறிமுகம்

சமூக நல்லிணக்கமானது அண்மைக் காலமாக உலக நாடுகளிடையேயும் ஒரு நாட்டிற்குள் வாழும் பல்பண்பாட்டுச் சமூகங்களிடையேயும் ஒற்றுமை, புரிந்துணர்வு, சகவாழ்வு ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்காக பேசப்பட்டு வரும் எண்ணக்கரு சார்ந்த ஒரு விடயமாகும். பல்லின சமூகங்களைக் கொண்ட நாடுகள் முரண்பாடுகளை களைந்து தமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றபோதே நல்லிணக்கத்திற்கானத் தேவை உணரப்படுகின்;றது. எமது இலங்கையை பொருத்தவரையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்று முடிந்த கசப்பான யுத்த அனுபவங்கள் இன்று சமூக நல்லிணக்கத்தை வேண்டி அதற்காக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சினூடாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதை நாம் மறுத்துவிடமுடியாது. நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம் இந்த மூன்று சொற்பிரயோகங்களும் நாடு சுதந்திரமடைந்த நாள் தொட்டு 70 வருடங்களுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. (தினகரன், ஆசிரியர் தலைப்பு, 10.08.2018) எனினும் இன்று வரை இவை கல்லில் நார் உறிக்கும் கதையாகவே இருக்கின்றமை எமது நாட்டில் வாழும் மக்கட் சமூகத்தை முன்னேற்றபாதைக்கு கொண்டு செல்வதற்கு பேரிடறாக இருக்கின்றது. இதற்கு முக்கிய ஏதுவாக அமைவது இன, மத, மொழி, சமய ரீதியாக ஒவ்வொரு சமூகமும் தம்மை பிளவுப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றமையே ஆகும். இவ்வாறானவொரு தருணத்தில் சமூக நல்லிணக்கம் என்றால் என்ன என்பது பற்றிய அறிவு அவசியமாகின்றது. பல்லின சமூகத்தில் வாழ்கின்ற ஒரு மனிதன் சமூகத்தோடு முரண்பாடுகள் இன்றி இணக்கப்பாட்டுடன் ஒற்றுமையாக வாழப்பழகிக் கொள்ளும் நிலையே சமூக நல்லிணக்கம் எனப்படுகின்றது. (பாத்திமா மின்சாரா. ஜே, 4வாஇளுநுருளுடுஇ ஊழகெநசநnஉநஇ pயபந .ழே. 574)

சமூக நடைமுறைகளையும், தனிமனித உணர்வுகளையும், அவனது வாழ்வியல்சார் அம்சங்களையும் யதார்த்தபூர்வமாக இலக்கியமாக்கி வரும் ஒரு படைப்பாளி தற்கால சமூகத்தில் நிலவி வரும் அநீதிகளை பொறுத்துக்கொள்ளமுடியாமல் அவற்றையும் தன்னுடைய படைப்பிற்குள் உள்வாங்கிக் கொள்கின்றான். இது இலக்கியப் படைப்பாளிகளுக்கே உரிய தனிப் பண்பாகும். அந்த வகையில் “நான் ஓர் எழுத்தாளன்” என்னும் கவிதைத் தொகுப்பு அநீதிகளை கண்டு உள்ளக் கிளர்ச்சியுடன் சமரச சமூகத்தை வேண்டி இலங்கைத் திருநாட்டில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஒரு படைப்பாளியின் அவாவை எளிமையான கவிதை மொழியில் வடித்துள்ளது. இலக்கிய உலகில் ஆசிரியர் ஸ்ரீகந்தநேசன் புயலாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இன்றைய படைப்பாளிகளிடமிருந்து வேறுபட்ட கோணத்தில் உண்மையான சமுதாய நோக்கும் ஆழமான அவதானிப்பும் சிந்தனையும் கடின உழைப்பும் ஆசிரியரிடம் அதிகமாக காணப்படுகின்றன என்னும் கருத்து நான் ஓர் எழுத்தாளன் என்னும் கவிதைத் தொகுப்பினூடாகவும் நிதர்சனமாகியுள்ளது. (புயல், ஆகாயத்தாமரைகள், ஆசியுரை, பக்.08) வட பகுதியைச் சேர்ந்த இப்படைப்பாளியின் கவிதைகள் இயற்கை, தேசப்பற்று, வறுமை, தொழிலாளர் மேன்மை, யுத்த அனுபவங்கள், மொழியின் முக்கியத்துவம் முதலிய பல்வேறு அம்சங்களைத் தாங்கி பன்மைத் தன்மையுடன் கவிதை மொழியினூடாக வெளிப்படும் அதேவேளை இன்று சமூக நல்லிணக்கத்தில் வலியுறுத்தப்படும் மொழி சமரசம், பல்பண்பாட்டு சமூகத்தை விளங்கிக் கொள்ளல், இன ஐக்கியம், சாதி ஒழிப்பு, பால் சமத்துவம், இளைஞர்களின் சிந்தனைகளினூடாக சமூக சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டல் ஆகிய அம்சங்களையும் பதிவாக்கியுள்ளன. உண்மையில் இக் கவிதைத் தொகுப்பில் உருவம் பெற்றுள்ள அனைத்து கவிதைகளும் 2008 ஆம் ஆண்டுகளில் படைக்கப்பட்டவை என்று இக் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுற்ற பின்னரே சமூக நல்லிணக்கம் பற்றிய சிந்தனை உதயமாகியது என்பதை எவரும் புறந்தள்ளி விடமுடியாது. ஆனால் புயல் அவர்கள் போர் முடிவதற்கு முன்பே தன்னுடைய பல கவிதைகளில் சமூக ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் அவாவி அவற்றை கவிதை என்னும் வடிவத்தில் மக்களிடையே கொண்டு செல்லவேண்டும் என்னும் எண்ணத்தில் சமரச முயற்சியை அன்றே தீர்க்கதரிசனமாக விதைத்துள்ளமை வியற்பிற்குரியதாகும்@ சிறப்புக்குரியதாகும். அவ்வகையில் இக்கட்டுரை புயல் பெ.ஸ்ரீகந்தநேசன் அவர்களின் “நான் ஓர் எழுத்தாளன்” என்னும் கவிதைத் தொகுப்பு சமூக நல்லிணக்கத்திற்கான பாதையாக எவ்வாறு அமைகின்றது என்பதை தெரிவுசெய்யப்பட்ட கவிதைகளை உள்ளடக்க பகுப்பாய்வு ரீதியாக ஆராய்வதை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.

1. இன, மத ரீதியான நல்லிணக்கம்

“இலக்குள்ள இலங்கை”, “நாடு நலம் பெறவே”, “எங்கள் இலங்கை”, “தேசத்தின் தேசு”, “சூரியன்” முதலிய தலைப்புக்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கவிதைகளில் இலங்கை எமது நாடு என்னும் தேசிய உணர்வையும் இன - மத ஐக்கியங்களையும் எமது இலங்கை மண்ணில் நிலைத்திருக்கச் செய்தல் வேண்டும் என்னும் நோக்கில் கவிதையாசிரியர் கவிதைகளை படைத்துள்ளார்.

“இனபேதம் களைந்து

இதரன் என்னும் பாகுபாடில்லாமல்

இங்கிதமாக அனைவரும்

ஒற்றுமையாக ஒன்று கூடி

இந்நாட்டை இன்னாடாக்குவோம்

...................................

தமிழ் - சிங்களம் - முஸ்லிம் என்ற

இன பேதம் பாராமல்”

(இலக்குள்ள இலங்கை, பக்.15)

“தமிழுக்குள் வேண்டாம் பிரிவினைகள்

முஸ்லிம்க்குள் வேண்டாம் பிரிவினைகள்

சிங்களத்திற்குள் வேண்டாம் பிரிவினைகள்”

(நாடு நலம் பெறவே, பக்.29)

 எமது நாட்டில் முப்பது வருடகாலமாக மனித உயிர்களையும், உடைமைகளையும் காவுகொண்டு மனித மனங்களில் இன, மத, மொழிகளுக்கிடையே காழ்ப்புணர்ச்சியை யுத்தம் ஏற்படுத்தியது இன்று வரை ஆறா வடுவாக உள்ளது. அதனால்தான் கவிதையாசிரியர் நாட்டில் சமூகநல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று இனத்திற்குள்ளும் பிரிவினைகள் வேண்டாம் என்கிறார்.

வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, என்ற வேறுபாடின்றியும் சகலரும் இலங்கையர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்டால் மட்டுமே இந்த பயணத்தில் சரியான திசையை நோக்கிப் பயணிக்கமுடியும். கடந்தகால கசப்புணர்வுகள் எமது உள்ளங்களிலிருந்து பிய்த்தெறியப்பட வேண்டும். எண்ணங்கள் தூய்மையாக அமையும் பட்சத்திலேயே இந்த முயற்சி சாத்தியப்பட முடியும் என புத்திஜீவிகள் சமூகநல்லிணக்கத்தை நகர்த்திச் செல்வதற்கான கருத்துக்களை கூறுகின்றனர். (தினகரன், ஆசிரியர் தலைப்பு, 10.08.2018) அவ்வாறு புத்திஜீவிகள் கூறிவருகின்ற கருத்துக்களையே “நான் ஓர் எழுத்தாளன்” என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளும் வெளிப்படுத்துகின்றன. “எங்கள் இலங்கை” என்னும் தலைப்பில் பதிவாகியுள்ள கவிதையில்,

“இன முரண்பாடு என்னும் கைவிலங்கை தகர்த்தெறிவோம்

............................................................

வாழும் இனங்கள் எல்லாம்

.................................

தமிழ், சிங்களம், முஸ்லிம் என்னும்

இனப்பாகுபாடு இல்லாமல்

ஒன்றிணைந்த இதயங்களாகி”

(எங்கள் இலங்கை, பக். 20 -21)

என நேரடியாகவே இன முரண்பாடுகளை தகர்த்தெறிந்து, “ஒன்றிணைந்த இதயங்களாகி” பல்லின சமூகத்தில் ஒருவரையொருவர் புரிந்து சகவாழ்வு வாழ வழிகாட்டுகின்றார். நமது நாட்டில் இருவருக்கிடையில் மோதல், முரண்பாடு ஏற்படும் பட்சத்தில் முதலில் பிரச்சினைக்கான காரணங்கள் கண்டறியப்படாது தமிழ் - முஸ்லிம் - சிங்களம் என இன, மத கிளர்ச்சிகளே உருவாக்கப்படுகின்றன. இவ்வாறான பிற்போக்கான செயற்பாடுகள் ஒரு நாட்டின் அபிவிருத்தியையும் முடக்கும் தன்மை வாய்தன. இதனை அறிந்தே இன்றைய சமூகத்திற்கு இக் கவிதையாசிரியர் இனமுரண்பாடு என்னும் கைவிலங்கை உடைத்தெறிய வேண்டும் என்கிறார்.

யுத்த வடுக்களிலிருந்து மக்கள் மீண்டு எழ முடியாதவர்களாக இன்றுவரை தமது உள்ளத்தில் அந்த வேதனைகளை சுமந்த வண்ணம் வாழ்கின்றனர். இவற்றை நடைமுறையில் மக்களோடு மக்களாக கலந்து ஊடாடும்போது நன்கு அறியமுடிகின்றது. யுத்தம் நிறைவு பெற்ற உடனேயே அதன் அனுபவங்களும் மறைந்து நல்லிணக்கமும் சகவாழ்வும் எங்கும் பரவி விடுவதில்லை. இதனை நன்கு உணர்ந்த கவிதையாசிரியர் “ஊருக்குப் போவோம்” என்னும் தலைப்பில் அருமையான கவிதை ஒன்றை வடித்துள்ளார்.

“போர் ஒய்ந்த பூமியில் நிம்மதியாக வாழவும்

போகும் ஓடையெல்லாம் பூக்கள் நிசப்தமாக மலரவும்

.........................................................

முப்பது வருடங்களாக நாம்பட்ட வேதனைகள்

முழுவதையும் வருங்காலத்தில் நம்மவர் படாமல்

.........................................................

பழைய வரலாறுகளைக் கற்று புதிய

பாதையில் பயணித்து புதிய வரலாறு படைக்க”

என பாடியுள்ளார். இக்கவிதை உண்மையில் ஒரு சமரச சிந்தனையை படிப்போர் மனதில் ஏற்படுத்துகின்றது. இக்கவிதையிலே ஆசிரியர் முப்பது வருடகால யுத்தத்தில் பெற்ற அனுபவங்களினூடாக பெற்ற நல்லதொரு பாடத்தை வருங்கால சந்ததியினர் அனுபவிக்காமல் புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்கிறார். ஆனால் இன்றும் இளைஞர் மத்தியில் போர்கால அனுபவங்கள் வட்டமிட்ட வண்ணமே இருக்கின்றன@ வாழ்வின் அடையாளமாவும் இருக்கின்றது. இருவருக்கிடையில் முரண்பாடு ஏற்படும்போது முதலில் அவர் எந்த இனம், மொழி, சமயம் என பார்க்கப்படுகின்றது. பின்னர் அவரின் இனத்தையோ அல்லது மொழியையோ சுட்டிக்காட்டி தாக்குதல் இடம்பெறுகின்றது. இலங்கையில் கடந்த காலங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகியிருந்தமையை ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கின்றது. நடந்து முடிந்த கசப்பான நினைவுகளை மீண்டும் மீண்டும் உள்ளத்தில் ஏற்படுத்தி அதனை எல்லோரிடமும் பரப்பி சுகம் காணும் இனவெறியர்களை ஒழிக்கமுடியாமல் இருக்கும் இக் காலகட்டத்தில் பழைய வரலாறுகளை கற்று புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என கவிதையாசிரியர் விழைகின்றார். ஆனால் பழைய வரலாறுகளை கல்வெட்டுப் போல மனதில் பதித்துக் கொண்டு பழிவாங்கும் முயற்சிகள் நடைமுறைவாழ்வில் நாம் பழகும் சக மனிதர்களிடையே இருந்து வருகின்றமை கவலைக்குரிய ஒரு விடயமாகும். ஆனால் புயல் அவர்களின் கவிதைகள் யுத்தம் முடிவிற்கு வரும் முன்பே விதைக்கப்பட்ட நல்லிணக்க விதைகள் ஆகும். இவை ஏதோ ஒரு வகையில் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என அவர் சிந்தித்துள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

இக்கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் “சூரியன்” என்னும் தலைப்பிலான கவிதை சூரியனை குறியீடாக வைத்து தேசிய ஒற்றுமையை எடுத்துக்காட்டியுள்ளது. பொதுவாகவே சூரியக் கதிர்கள் தமிழருக்கு ஒரு மாதிரியாகவும் சிங்களவருக்கு இன்னொரு வகையிலும் பாரபட்சம் பார்த்து ஒளித் தருவதில்லை. ஆனால் மனித குலம் மட்டும் ஏன் தம்மை பிளவுபடுத்திக் கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ மறுக்கின்றது என்பதை மறைப்பொருளாகச் சொல்லி சூரியனைத் துதிப்பாடுகின்றார் கவிஞர். பின்வரும் கவிதை வரிகள் இவற்றை பதிவுசெய்துள்ள வகையை நோக்குவோம்.

“எம் தேசத்தின் தேசான சூரியனே...!

............................................

இனமதம் பாராமல் ஐக்கியமாக வலம் வருபவனே...!

.........................................................

உதயத்திலும் அஸ்தமனத்திலும் வாழ்வின்

அர்த்தங்கள் சொல்லிவிடும் சூரியனே...!

.............................................

எம் இனத்தை ஒரு குலமாக்கும் தலைவன் நீயே...!”

     (சூரியன். பக். 31)

இந்த கவிதையில் சூரியன் அஸ்தமனத்திலும், உதயத்திலும் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்வதாக கவிதையாசிரியர் கூறியுள்ளமை உண்மையில் எந்தெவாரு நாட்டிற்குள்ளும் பிரகாசத்தை தரும் சூரியன் அந்த நாட்டில் வாழும் மக்களைப் போல இன, மதம் பாராமல் அனைவருக்கும் காலையில் ஒளியைத் தந்து, மாலையில் இருளையும் தந்து சமதர்மத்தை பேணுகின்றான் என்னும் உயரிய சிந்தனையை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த கவிதைகளில் கவிதையாசிரியர் எமது குலத்தை ஒரு குலமாக்கு என்றும் முப்பது வருடகால யுத்த அனுபவங்களை நம்மவர் அனுபவிக்காமல் புதிய பாதை படைக்க வேண்டும் என்றும் கூறிச்செல்வது இன்னொரு தளத்தில் நின்று நோக்கும்போது தமிழ் இனத்திற்குள் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்றார் என்றும் எண்ண இடம் உண்டாகின்றது. காரணம் இக்கவிதையாசிரியர் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் வடபகுதியை நிரந்தர வாழ்விடமாக கொண்டுள்ளதால் யுத்த பூமியின் கொடூர அனுபவங்களை மீண்டும் படரவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பிலும் இவ்வாறு பாடியிருக்கலாம். எனினும் கவிதைகளில் வரும் ஒரு சில வரிகள் மட்டுமே எனது இனம், நம்மவர் என்ற கருத்தை பதிவுசெய்கின்றது. ஏனைய வரிகள் அனைத்தும் இலங்கையில் வாழும் மூன்று இனங்களையும் ஒன்றாக கைகோர்த்து நல்லிணக்கமாக வாழவே வழிகாட்டியுள்ளன. அதுமட்டுமன்றி இக்கவிதைகளை வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்களும் சகவாழ்வை நிலைநிறுத்தும் எண்ணத்தில் படித்து மகிழும்போது மனதில் நல்லிணக்கம் ஏற்படும் வாய்புக்களே அதிகம் இருக்கின்றன.

2. பல்பண்பாட்டை விளங்கிக் கொள்வதினூடான நல்லிணக்கம்.

               எமது நாடு ஒரு பல்பண்பாட்டுச் சமூகத்தை கொண்ட நாடாகும். பல்வேறு கலாசாரப் பண்புகளைக் கொண்ட சமூகமே பல்பண்பாட்டுச் சமூகம் எனப்படும். அவ்வாறான சமூகத்தில் எல்லா இனத்தவரும் சமூகத்தவரும் எல்லா மொழி பேசுவோரும், ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். அதன் மூலமே முரண்பாடுகள் குறைவடையும். ஒற்றுமை வளரும்@ நிலையான சமாதானம் உருவாகும்@ நாடும் அபிவிருத்தியடையும். (தரம் - 08, குடியுரிமைக் கல்வி, இலங்கை இலவச பாடநூல் விநியோகம்)

 மேலும் எமது நாட்டில் உள்ள மரபுரிமைச் சொத்துக்களையும், பாரம்பரிய கலாசாரங்களையும் பாதுகாத்து அவற்றை அறிந்து நடக்கவேண்டும். அப்பொழுதுதான் எமது தேசம் என்ற தேசிய உணர்வும் விதைக்கப்படும். இலங்கை ஒரு பல்பண்பாட்டு சமூகம் என்பதை அறிந்து சமூக நல்லிணக்கம் நிலைக்க வேண்டி எமது நாடு என்னும் உணர்வுடனேயே “தேசத்தின் தேசு” என்னும் கவிதையில் பின்வருமாறு பாடுகின்றார் கவிதையாசிரியர்.

 “எமது தேசத்தின் பாரம்பரியங்களை

அடுத்து வரும் சந்ததியினருக்கு

எடுத்துரைத்து, வரலாற்றில் உனது

நாமம் வலம் வர உனக்கு உண்டு

உரிமை................

......................................

உனது

உரிமையும் தேசத்தின் மரபுரிமையும்

இழந்து முகவரி தெரியாத

பட்சிகளாகி விடாதே.”

(தேசத்தின் தேசு, பக். 25)

2017 ஆம் ஆண்டு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பாக இலங்கையில் வெளியிடப்பட்ட தேசியக் கொள்கை சமூக நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கான நடைமுறைகளை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் பிரஜைகளின் பொருளாதார, கலாசார, அரசியல் உட்பட வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் பரந்துபட்டுக் காணப்படும் நடுநிலைமை குறித்த கலாசாரம் ஒன்றை ஊக்குவிப்பதற்கு நன்கு நிர்வகிக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும் என குறிப்பிடுகின்றது. (நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை - 2017)

ஒரு பல்லினச் சமூகத்தில் வாழும் மக்கள் தமது நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்களின் பண்பாடு, கலாசாரம் மற்றும் எமது நாட்டின் மரபுரிமைகளையும் விளங்கிக் கொள்வது மிக அவசியமானதொன்றாகும் என்பதை கவிதை குறிப்பிடுவது போலவே 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சகவாழ்வுக்கான தேசியக் கொள்கையும் வலிறுத்தியுள்ளது.

3. மொழி உரிமையினூடான நல்லிணக்கம்

மொழி என்பது அடிப்படையில் கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு ஊடகமாக செயற்படுகின்றது. இதற்கு அப்பால் ஒருவரின் தாய்மொழி ஒரு விடயத்தில் ஆழமான அறிவை பெற்று தேர்ச்சியடைவதற்கு இரண்டாம் மொழியைவிட உதவி செய்கின்றது. இருப்பினும் மொழிப் பற்றில்லாமல் மொழி வெறியுடன் இயங்குவதுடன் இன்னுமொரு சமூகத்தின் தாய்மொழியை புறக்கணிப்பதும் நியாயமான விடயம் அல்ல. எமது இலங்கையில் கடந்த காலங்களில் இவ்வாறான மொழி புறக்கணிப்புகள் ஏற்பட்டுள்ளமை வரலாற்று உண்மை.

இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் கொண்டுவரப்பட்ட பல சட்டங்களில் தனிச் சிங்களச் சட்டமும் ஒன்று. இது உண்மையில் சிறுபான்மைச் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். போருக்கான சூழலை இலங்கை மண்ணிற்கு அறிமுகம் செய்த மூல காரணியும் இதுவே. ஒரு சமூகம் புறக்கணிக்கப்படும்போது தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள போராடுவது தவிர்க்கமுடியாதவொன்றாகின்றது. ஈழ யுத்தமும் இவ்வாறான தவிர்க்க முடியாத சூழலிலேயே உருவாகியது.

கருத்துச் சுதந்திரம், தனிமனித உரிமைகள், தனிமனிதனுக்கான நியாயமான போதிய வசதியுடனான வாழ்வு பற்றிய சிந்தனைகள் எல்லாம் நவீன காலத்தில் மிகவும் வலியுறுத்தி விளக்கப்படுகின்றன. எனவே மனிதன் இந்த உணர்வுகளைக் கூரிய அளவில் பெற்றுள்ளான். அதனால் அநியாயங்களுக்கு எதிரான போராட்டங்கள் நவீன காலத்தில் மிக அதிகம். (மன்சூர்.எம்.ஏ.எம், 1999, பக்.04) இவ்வாறான நிலையே தனிச் சிங்களச் சட்டத்தினால் சிறும்பான்மையினர் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கநேர்ந்தது. இலங்கையில் மொழிப் பிளவுகள் தலைதூக்கி இன வன்முறையை மேற்கிளப்பியமையினால், இரு மொழி பேசுபவர்களுக்கிடையில் சமூக நல்லிணக்கம் எட்டாக் கனியாகியது. இது இலங்கையில் சமூக நல்லிணக்கத்திற்கான பாதையை திறப்பதற்கு பெரும் சவாலாக அமைந்தது. இதனைத் தெளிவுபடுத்துவதாகவும் ஒரு சில கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

“நாடு நலம் பெறவே நாமெல்லாம் இணைந்திடுவோம்” என்னும் தலைப்பின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள,

“மூன்று இனங்கள் இருந்தாலும்

மொழிகள் இரண்டு தான் - இதை

நிலை நிறுத்துவதற்கு நாம்

அனைவரும் இணைந்திடுவோம்

.....................................

தாய் மொழியுடன்

இன்னுமொரு மொழியைப் பயில்வோம்

தமிழ், சிங்களம் என சிந்திக்காமல்

இரண்டையும் தாய்மொழியாக

கொள்வோம் கொள்கைகள்

மாறாக இருந்தாலும் இனம் ஏகம் என்போம்”

(நாடு நலம் பெறவே நாமெல்லாம் இணைந்திடுவோம். (பக். 28 – 29)

இக் கவிதை மிகவும் இலகுவான உரைநடை பாங்கில் இருமொழிக் கொள்கையை வலியுறுத்துகின்றது. தமிழ் - சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் முதலாம் மொழி, இரண்டாம் மொழி என பாகுபாடு செய்யாது இரண்டு மொழிகளையும் கற்று மொழியினூடாகவும் சமரச சமூகத்தை உருவாக்கி சமூக நல்லிணக்கத்தை இலங்கையில் மலரச் செய்வோம் என்கிறார் இக்கவிதை ஆசிரியர். தமிழ் - சிங்களம் என சிந்திக்காமல் இரண்டு மொழிகளையும் தாய்மொழி என்று எண்ணவேண்டும் என அவர் பாடியுள்ளமை இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் ஆழந்து சிந்திக்கவேண்டும். மீண்டும் நாட்டில் மொழி பிளவுகள் ஏற்படா வண்ணம் ஒற்றுமையை வலுபெறச் செய்வதற்கும், இரு மொழிகளையும் சம நோக்கில் கற்றுத் தேர்ச்சியடைந்தால் நாட்டில் மொழி முரண்பாட்டை நீக்கலாம் என்றும் கவிதையில்

தமிழ், சிங்களம் என சிந்திக்காமல்

இரண்டையும் தாய்மொழியாக

கொள்வோம்” என பாடியுள்ளார்.

இக் கவிதையில் வேண்டப்படும் இருமொழிக் கொள்கையையே 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்விற்கான தேசியக்கொள்கை பின்வருமாறு பதிவு செய்துள்ளது. அரச பொறிமுறையினால் சிங்கள மொழியை நிர்வாக மொழியாக பயன்படுத்தி பொது அறிக்கைகளும் தமிழ் மொழியை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பயன்படுத்துவது தவிர இலங்கையின் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அனைத்து அரச நிறுவனங்களிலும் சகல நடவடிக்கைகளிலும் அரசியலமைப்பின் iஎ அத்தியாயத்தின் 22(1) ஆம் பகுதிக்கமைய பயன்படுத்துதல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது. (நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை - 2017)

4. பால்நிலை சமத்துவத்தினூடான நல்லிணக்கம்

நல்லிணக்கம் தொடர்பான கொள்கைகள் வகுக்கப்பட்டபோது அதில் கவனம் செலுத்தப்பட்ட இன்னுமொரு முக்கியமான அம்சம் பால்நிலை சமத்துவமாகும். இதனை 2017 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட அதே சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசியக் கொள்கையில், “கொள்கை வகுப்பின் போதும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு வழிவகைகளை திட்டமிடல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளின் போதும், மகளிரின் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து, பாதுகாப்பான வகையிலும் அவற்றை நிறைவேற்றும் வகையிலும், ஆண் - பெண் பால்நிலையினரை ஈடுபடுத்துவது பற்றியும்....” என நீண்ட அறிக்கையொன்று மக்கள் கவனத்தில் கொண்டுவரப்பட்டது. (நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை - 2017)

 உண்மையில் சமூக நல்லிணக்கமும் சகவாழ்வும் ஒரு நாட்டிற்கு தேவையாயின் அந்நாடு பால்நிலை சமத்துவத்தையும் சரியான முறையில் விளங்கி அவற்றை கடைபிடிக்க வேண்டும். இதனையே இத் தேசியக் கொள்கையும் குறிப்பிடுகின்றது. இதே கருத்தை வலியுறுத்துவதாக பின்வரும் கவிதைப் பகுதியும் அமைந்துள்ளது.

“ஆண் பெண் பாகுபாடு பாராமல்.....” என “நாடு நலம் பெறவே நாமெல்லாம் இணைந்திடுவோம்” என்னும் தலைப்பிலும் “தேசத்தின் தூண்கள்” என்னும் தலைப்பிலான கவிதையில்,

“சீதனக் கொடுமைகள் ஆண் - பெண்

வேறுபாடுகள் எல்லாவற்றையும் தகர்த்து

தரணியில் தலைவர்களாகி விடுங்கள்”

என்னும் கவிதையிலும் ஆண் - பெண் சமத்துவம் வேண்டப்படுவதினூடாக சமூக நல்லிணக்கத்திற்கான வழி காட்டப்படுகின்றது. இன்று இலங்கையின் அபிவிருத்தியில் இலங்கைக்கு அந்திய செலாவணியை ஈட்டித்தருவதில் பெண்களுக்கு கணிசமான பங்களிப்பு இருக்கின்றது. இல்லற வாழ்வில் குடும்பத்தை தூணாகத் தாங்கிக் கொண்டு தொழிலிலும் பல சாதனைகளை செய்து வருகின்றனர் பெண்கள். இவ்வாறான ஒரு நிலையில் அவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகள், இன்னல்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அவர்களின் அமைதியான வாழ்வை வினாக்குறியாக்கிவிடும் என்பதை உணர்ந்தே ஆண் - பெண் சமத்துவத்தை ஏற்படுத்தவேண்டும் என விழைகின்றார் கவிதையாசிரியர். இதன் மூலமும் சமூக நல்லிணக்கத்திற்கான பாதையை பால்நிலை சமத்துவத்தினூடாகத் திறக்கின்றார்.

5. ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒழித்து சமரசத்தை நிலை நிறுத்துவதற்கான நல்லிணக்கம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பங்களிப்பினை முறையாகப் பெற்று, அவர்களைத் தீர்மானமெடுக்கும் சக்தியாக மாத்திரமன்றி வாய்ப்பக்களையும், சேவைகளையும் அணுகச் செய்யும் பொருட்டு, ஊக்கமுடன் வலுவூட்டுவதற்கான உரிய பொறிமுறைகளை தயாரிப்பதன் ஊடாக அனைத்தையும் கொண்ட நிறைவான சமூகமொன்றினைக் கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முனைப்புடன் செயற்படல் வேண்டும் என சமூக நல்லிணக்கம் தொடர்பான அறிக்கை குறிப்பிடுகின்றது. (நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை - 2017)

இதன் மூலம் ஒரு நாட்டில் வர்க்க பேதமோ, சாதியமோ இருக்கக் கூடாது என்பதும் அனைத்து மனிதர்களும் சமநிலையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர்கள் என்பதும் புலனாகின்றது. இதே நல்லிணக்க கருத்துக்களை “நான் ஓர் எழுத்தாளன்” என்னும் கவிதைத் தொகுப்பில் வெளிவந்துள்ள பல கவிதைகள் சான்று பகர்ந்து நிற்கின்றன.

ஈழத்தில் சாதிக் கொள்கைகள் மிக இறுக்கமாக பேணிக்காக்கப்படுகின்ற யாழ்ப்பாணச் சமூகத்தை நோக்கி,

“யாழ்ப்பாணச் சமூகமே நீங்கள்

எல்லோரும் தமிழர்கள் தானா...?!

செட்டியாருக்கு ஒரு சுடலை

வெள்ளாளருக்கு ஒரு சுடலை

பஞ்சமருக்கு ஒரு சுடலை

........................

வேண்டாம் வேண்டாம் இந்த ஜாதி

கொடுமை – நாமெல்லாரும்

மனிதரே! என்பதை உணருவோம்”

(மரணத்தின் பின்னும் நிம்மதியில்லையா, பக்.69)

என “மரணத்தின் பின்னும் நிம்மதியில்லையா” என்னும் தலைப்பில் சாதிய ஒழிப்புக்கு எதிராக கவிதையினூடாக குரல் எழுப்புகின்றார். சாதி கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு இயக்கங்களும் பல்வேறு இலக்கியங்களும் தோன்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தமை வரலாற்று உண்மை. பொது இடங்களில் இன்று பெரிதாக சாதி தொடர்பான கொள்கைகள் வெளிப்பார்வைக்கு தளர்த்தப்பட்ட நிலையில் இருந்தாலும் மனிதர்களின் உள்ளத்தில் இரத்தத்துடன் கலந்து இருப்பதை மறுக்கமுடியாது. இதனை இன்று திருமணம் என்னும் இரு மன பந்தத்தில் கண்டுகொள்ளமுடிகின்றது. பழம்பெருச்சாலிகளிடம் மட்டுமன்றி படித்தவர்களிடமும் சாதி பார்த்து திருமணம் செய்யும் வழக்கம் முற்று முழுதாக மாறிவிடவில்லை. நாம் அனைவரும் மனித பிறவிகளே என சிந்திக்காது செயற்படும் அற்பமான போக்கினை கண்டித்து அவற்றை களைந்தெறிய “நாமெல்லாம் மனிதரே...” என கவிதையில் ஆசிரியர் குறிப்பிடுகின்றமை சமரச சிந்தனைக்கான பாதையாக அமைகின்றது. இது தவிர “புதுயுகத்தின் பறவை” என்னும் கவிதையில் “சமுதாய ஏற்றத்தாழ்வுகளைத் தகர்” என்றும் கிராமம் என்னும் கவிதையில் “தீண்டாமை இல்லை, வர்க்க பேதம் இல்லை...” என்றும் சாதியத்தோடு வர்க்கம் பற்றியும் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். “இலக்குள்ள இலங்கை” என்னும் கவிதையில்

“வேலை வேளையில் முதலாளி

தொழிலாளி வேறுபாடின்றி

இலக்குள்ள இலங்கையை உருவாக்க...”

(இலக்குள்ள இலங்கை, பக்.15)

என்றும் “ஆண்டான் அடிமை” என்னும் கவிதையில்

“ஆண்டவன் அளித்த மண்ணில்

ஆண்டானென்றும் அடிமையென்றும்

ஆதங்கங்கள் வேண்டாம் மனிதனே!

....................................”

(ஆண்டான் அடிமை, பக்.06)

என ஆசிரியர் கூறுவதினூடாக வர்க்கப் பிளவுகளை அகற்றி முதலாளி – தொழிலாளி என்னும் வேறுபாடின்றி அனைவரையும் உழைத்து வாழ வழிகாட்டுகின்றார். இலங்கையில் வாழும் நாம் எமது நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு முதலில் எமது உள்ளத்தில் சமத்துவம் என்னும் புதிய ஒளி ஒளிர வழிசெய்ய வேண்டும். மனித இனமாக பிறந்த நாம் எமக்குள் இன, மத, மொழி பிரிவினைகளுக்கு அப்பால் உயர்ந்தவர் - தாழ்ந்தவர், முதலாளி – தொழிலாளி என்னும் பிளவுகளையும் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு பாகுபடுத்தியுள்ளோம். ஒருவரின் வருமானமும், செய்யும் தொழிலும் சாதியத்தையும் வர்க்கவுணர்வையும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக மனிதர்களிடையே பணக்காரன் - ஏழை என்னும் தாழ்வான சிந்தனைகள் நடைமுறையில் இருந்து வருவதை அவதானிக்கமுடிகின்றது. மனிதன் என்னும் சிந்தனைக்கு அப்பால் தோன்றும் எந்தவொரு பாரபட்டசமும் நிச்சயமாக ஒரு நாட்டில் நல்லிணக்கம் உதயம் பெற வழிசமைக்காது. இதனாலேயே ஆண்டான் - அடிமை என்ற பேதம் வேண்டாம் என்றும் சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கூறி நாம் எல்லோரும் மனிதர்களே என மக்களிடையே சமூக நல்லிணக்கத்திற்கான பாதையை காட்டியுள்ளார்.

6. இளையோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலினூடான நல்லிணக்கம்

ஒரு நாட்டில் புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி சார்ந்த விடயங்களை முன்னெடுத்தச் செல்வதில் அந்நாட்டில் வாழும் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் கணிசமான பங்களிப்பு இருக்கின்றது. இன்றும் சமூக நல்லிணக்கத்தை எமது நாட்டில் நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பதற்கு பல்வேறு பயிற்சி பட்டறைகளும், செயலமர்வுகளும் இளைஞர்களை மையப்படுத்தியதாகவே பெரும்பாலும் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை நன்கு உணர்ந்த இக் கவிதையாசிரியர் தன்னுடைய சமூக நல்லிணக்கம் பற்றிய பல கவிதை பதிவுகளை இளையோர்களை நோக்கியே கூறுகின்றார். சான்றாக “புதுயுகத்தின் பறவை” என்னும் கவிதையில்,

“வாழ்க்கையின் வழியில் வாழ்ந்து

வலியால் வாடி

வாழ்வுக்கு வடிவம் வடிவமைப்பது

வாலிபனே உன் பணி

...........................

புது யுகத்தில் புதுமை படை

வறுமையால் வாடுகிறவர்களை

வாழ வைக்க வழி சமை

.......................”

(புதுயுகத்தின் பறவை, பக்.51)

“ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தை

உருவாக்கி – எதிர்கால

சவால்களையும் சிக்கல்களையும் உடைத்தெறிவோம்.

எமது தேசியத்தை, இளைஞர்களாகிய

நாங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

தவறாமல் உலகிற்கு உரைத்திடுவோம்.”

(எங்கள் இலங்கை, பக். 20)

என புதிய சமூகம் ஒன்றிணை கட்டியெழுப்ப இளைஞர்களை ஊக்குவிக்கின்றார்@ நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றார். “எமது தேசியத்தை இளைஞர்களாகிய நாங்கள்...” என வரும் கவிதை வரி உண்மையில் எமது நாடு என்னும் தேசிய உணர்வை பாய்ச்சுவதோடு அவற்றை இளையோர்களே நன்கு உணரவும் கட்டியெழுப்பவும் வல்லவர்கள் என கவிதையாசிரியர் பாடுகின்றார். மேலும் “தேசத்தின் தூண்கள்” என்னும் நீண்ட கவிதையும் சிறுவர்களின் சிந்தனைகளைத் தட்டியெழுப்பி சமதர்ம பாதையில் பயணிக்க அவர்களை நல்வழிபடுத்துகின்றது.

முடிவுரை

 நான் ஓர் எழுத்தாளன் என்னும் கவிதைத் தொகுதியில் பதிவாகியுள்ள கவிதைகளைத் தொகுத்து நோக்கும்போது ஒரு நல்லிணக்க சமூகத்தை உருவாக்குவதற்கான பல கருத்துக்கள் இலகுவான கவிதை நடையில் உருபெற்றுள்ளதை அறியமுடிகின்றது. இக் கவிதைத் தொகுதியினை சுவைக்கும்போது உள்ளத்தில் புதிய ஒளி பிறக்கின்றது. எமது நாடு, எமது மக்கள், எமது சகோதரர் என்னும் சிந்தனைகள் நெஞ்சை குளிர்விக்கின்றன. வடபகுதியை வாழிடமாக கொண்ட ஒரு படைப்பாளியின் அனுபவங்களைச் சொல்லும் இக்கவிதைகள் மீண்டும் யுத்தத்திற்கான வழியை காட்டாது புதிய சிந்தனைகளினூடாக சகவாழ்வு, இன, மத ஒற்றுமை, புரிந்துணர்வு மனிதர்களிடையே ஏற்படுத்துவதற்கு நல்வழிகாட்டியுள்ளமை இக் கவிதையாசிரியர் சமூக நல்லிணக்கத்தை இலங்கையில் கட்டியெழுப்புவதற்கு விழைந்துள்ளார் என்பதையே உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளிப்படுத்தியுள்ளது.

சர்வதேச மட்டத்திலும் நாடளாவிய ரீதியிலும் இன்று பேசப்பட்டு வரும் சமூகநல்லிணக்கம் என்னும் எண்ணக்கருக்குள் கொண்டிருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் முன் ஆயத்தமாகவே “நான் ஓர் எழுத்தாளன்” என்னும் கவிதைத் தொகுதி மிக எளிமையாக கூறியுள்ளது. இன்றைய சமூகத்திற்கும் இனிவரும் சந்ததியினருக்கும் ஆரோக்கியமான நல்லிணக்க சமூகத்தை உருவாக்க இக்கவிதைத் தொகுப்பு ஒரு ஆவணமாகவும் அமைந்துள்ளது. மேலும் இரு மொழி பேசும் எமது நாட்டில் சமூக நல்லிணக்கத்தை சகோதர மொழியினரிடையேயும் கொண்டு செல்வதற்கு “நான் ஓர் எழுத்தாளன்” என்னும் கவிதைத் தொகுதியில் ஆக்கம் பெற்றுள்ள நல்லிணக்கம் சார்ந்த கவிதைகளை தேர்ந்தெடுத்து சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்தால் நல்லிணக்கம் பற்றிய எண்ணங்கள் இன்னும் வலுபெற வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என்பதும் இங்கு மனங்கொள்ளத்தக்கது.

துணைநூல்கள்

  1. புயல், நான் ஓர் எழுத்தாளன், தாய்மொழி வளர்ச்சி மன்றம், வடமாகாணம், 2016.
  2. மன்சூர்,எம்.ஏ.எம், இனப்பிரச்சினை ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம், மீள்பார்வை வெளியீடு, 1999, கொழும்பு.
  3. நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை - 2017, இலங்கை
  4. தினகரன் ஆசிரியத் தலைப்பு, “நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது சவால் மிக்கதொரு காரியம்”, 10.08.2018 அன்று வெளியிடப்பட்டது, www.thinakaran.lk.
  5. பாத்திமா மின்சாரா, ஜே., “சமூக நல்லிணக்கம் : இலங்கை பௌத்த முஸ்லிம் உறவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு”இ நான்காவது சர்வதேச மாநாடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
  6. புயல், ஆகாயத் தாமரைகள் சிறுகதைத் தொகுப்பு, ஆசியுரை, தாய்மொழி வளர்ச்சி மன்றம், வடமாகாணம், 2014.

- சி.ரஞ்சிதா, உதவி விரிவுரையாளர், மொழியியல் துறை, களனிப் பல்கலைக்கழகம், இலங்கை