சி.ஜெயசங்கர் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலாநந்தர் கற்கை நிறுவகத்தின் மேனாள் இயக்குநர். தற்போது இப்பல்கலையில் நுண்கலைத்துறை முதுநிலைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், இலங்கைக் கூத்துகளையும் தமிழகக் கூத்துகளையும் மீளுருவாக்க நோக்கில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். இலங்கை மட்டக்களப்புப் பகுதியில் உள்ள கூத்துக்களில் பாண்டித்தியம் பெற்றவர். அறிவு என்பது பல்கலைக்கழக உயர்ந்த கட்டங்களுக்குள் மட்டும் இருப்பதல்ல, நாம் வாழும் கிராமங்களில் இருக்கும் பாரம்பரிய உள்ளூர் அறிவு என்பது அறிவியலுக்கு மிஞ்சிய வளமை, வளர்ச்சி சார்ந்தவையாக வழங்கி வருவது. இவையே நாட்டார் வழக்காறுகளாகவும், நாட்டார் பாரம்பரியமாகவும், நாட்டார் புழங்கு பொருள்களாகவும், தொன்மைசார் தொழில்நுட்ப அறிவாகவும் வழங்கி வருகின்ற நிகழ்த்துதல்சார் பண்பாட்டின்மேல் அக்கறை கொண்டு தாம் வாழும் கிராம மக்களோடு தொடர்ந்து உரையாடல் நிகழ்த்துவதோடு அவர்களுடனான உறவின் வழித்தேடலாக, நாட்டார் நிகழ்த்துக்கலைகளை மீளுருவாக்கி வருகிற அளப்பரிய பணியினை கலாநிதி சி.ஜெயசங்கர் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

jaisankar tamil writerஇவரின் ‘மூன்றாவது கண்’ உள்ளூர் அறிவுத்திறன் மேம்பாட்டுக்குழு, நாட்டார் கலைகளையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்துவதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய, கிராமப்புற விளிம்புநிலை குழந்தைகளின் கல்வி அறிவு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.மேலும், கலைவழியான வாழ்வின் வாதைகளை மறந்து விடுதலையும் வளர்ச்சியும் முன்வைக்க வேண்டிய தேவையை உணர்ந்து பல முன்னெடுப்புகளைக் கூட்டுச் செயல்பாடாய்ச் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். சமகாலத்திற்குத் தேவையான கருத்தியலைக் கூத்துகளின் வழியாக முன்வைப்பதும், மறுவுருவாக்கம் செய்திடவும், கூத்துக் கலைஞர்களுடன் தொடர் உரையாடல்களை மேற்கொண்ட வரும் இவர், கலைச் செயல்பாட்டினூடாக இசை வடிவிலான பாடல்கள் பல எழுதி வருகிறார். அவ்வகையில், சி.ஜெயசங்கர் கவிதைகள் யாவும் பல்வேறு தாக்குதலால் உண்டான வலிகளுக்கான நம்பிக்கை எனும் மருந்தாக இருக்கின்றன. இவரின் கவிதைகள், செங்காந்தள் நிலவெளியில் பூத்த சொற்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், செங்காந்தள் தமிழ் நிலத்தின் குறியீடு. இவரின் கவிதைகளும் தமிழ்மண்ணின் அடையாளக் குறியீடு ஆதலால்தான் இவரின் கவிதைகள், அன்புவயப்பட்ட வளமைக்குறியீட்டுச் (fidelity) சொற்களாக விளங்குகின்றன மனித வாழ்வின் நம்பிக்கை சார்ந்த வளமைக்கானப் பாதையை அமைகின்றன என்பதை அவதானிக்க முடிகின்றன. கவிஞர் சி.ஜெயசங்கர் கவிதைகள் மின் படைப்பாக்கங்களாக வெளிவந்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.

‘ஓடைப்போலாயினும் கோடையிலும் கொஞ்சம்’ எனும் கவிதை இயற்கை சார்ந்த இயங்கியலைப் பதிவு செய்துள்ளது. இக்கவிதை, கார்மேகத்திடம் வினவுவதாய் அமைந்துள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால் இயற்கைத் தாவரங்களான மரம் செடி கொடிகள் இவையனைத்தும் கருகிக் கொண்டு இருக்கின்றன கோடைமழை வந்து மனதையும் இயற்கையையும் குளிரச் செய்யாதா என கவிமனம் ஏங்குகிறது.மேலும் ‘போற்றுதும்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதை, இயற்கையைப் போற்றிப் பாடுகிறது. அதனோடு இயற்கையைப் போற்றும் மனிதரைப் போற்றுவதோடு மனிதரை மனிதராக மதித்துப் போற்ற வேண்டுமென ‘போற்றுதும்’ கவிதை கூறுகிறது.

கருமேகங்காள் கருமேகங்காள்

தென்னங்குருத்தும் மஞ்சள் முருக்கும்

மல்லிகையும் மாவிலங்கும்

மாதுளையும் மலர்க்கன்றுகளும்

மா பலா வாழைகளும்

வாடி வதங்குவதில்

என்னதான் சுகம் கண்டாய்.

மனமிரங்கி,

கோடையிலும் கொஞ்சம்

ஓடை போலாயினும்

ஓடிப்போனால் என்னப்பா?

காற்றில் நெருப்பெரித்து

கற்றாழையில் நீர் பதித்து

வெக்கை தணிவிக்க

வெள்ளரியும் விளைவித்தாள் பூமித்தாயானவள்

வாழ்த்துகிறோம் ! வாழ்த்துகிறோம் !

இயற்கையையும் பருவமாற்றத்தினையும் இவ்வியற்கை தந்தாலும் அதற்கு ஏற்ப பூமித்தாய் மனிதர்களின் வாழ்வியலுக்கு உகந்தவைகளைத் தருகிறாள் என்பதை இக்கவிதை பதிவு செய்துள்ளது. நிலத்தையும் பெண்ணையும் ஒப்புமைப்படுத்திய விதம் கவிதையில் வெளிப்பட்டுள்ளது. இது பெண்ணும் நிலமும் வளமைப் பண்பாட்டின் (Resource Culture) குறியீடுகளாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது. நிலமும் பெண்ணும் சமூக விருத்திக்கான காரணமென்பதால் தான் ஆதிக்கச் சமூகம் பெண்ணையும் நிலத்தையும் உடைமைப்படுத்தியதை வரலாற்றில் நாம் பார்க்க முடிகிறது. நிலவுடமைச் சமூக உருவாக்கம் ஆணாதிக்க மனோபாவத்தினை உள்ளடக்கியிருப்பதால் தான் பெண் இனத்தினை அடிமைப்படுத்திப் பெண் வழியான நிலமானியத்தை ஆண் கையகப்படுத்திய பின்புலத்தை, ‘விளைவித்தாள் பூமித்தாயானவள்’ எனும் கவிதைவரியின் வழியாக அறிய முடிகிறது. கவிதைப் படைப்பாக்கம் வரலாற்றைக் கற்பனை வழியாகப் புனைவாக்குவது நிகழ்கின்றது. ஏன் நிலத்தினை, பெண் நிலம் என பாரதி, பாரதிதாசன் தொடங்கி எல்லாக் கவிதைவெளியிலும் பதிவு செய்துள்ளதைப் பார்க்கலாம். இதை ஆண்களின் பொதுப்புத்தி எப்போதும் மறுதலித்தே வருகின்றது. இது பிற்போக்குத்தனமாகும். வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பின்னணியில் புரிந்து கொள்ளும்போது தான் நிலத்தைப் பெண்ணோடு ஒப்புமையாக்கம் செய்துவருவதை அறியமுடியும். அந்தவகையில் சி.ஜெயசங்கர் அவர்கள் கவிதை வழி நிலத்தினைத் தாயாகப் பார்க்கிறார்.

 இயற்கையின் நுண்துளிர்ப்பில்

வேகங்கெட்டு உலகமே அடக்கம்.

 தனித்துக் கிடக்கின்றோம்

ஏது செய்வதென்று அறியாமல்!

நின்று போய்விட்ட ஓட்டத்தில்

வெளிப்பட்டது,

இலக்கற்ற ஓட்டம்,

பாதுகாப்பற்ற வாழ்வு.

 வேகமாய் மிகவேகமாய்

விரைந்து வளர்கிறது உலகம்.

ஈடுக்கொடுத்துப் போகவில்லையெனில்,

இருப்பற்றுப் போய்விடுவீர்!

விற்பனர் எச்சரிப்பில்

விதிர் விதிர்த்தோம் வேகங்கொண்டோம்!

‘மண்ணில் நல்லவண்ணம் வாழ’ எனும் கவிதை மனிதர்கள் நோய்நொடியின்றி வாழும் சூழல் உருவாகவேண்டும்.அதேநேரத்தில் எவ்வித தாக்குதலின்றி நல்லவண்ணமாக வாழும் காலத்தை நோக்கிப் பயணிக்கும் தன்மையைக் கவிதை பதிவுசெய்துள்ளது.நவீன உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வளர்ச்சி யாருக்கான வளர்ச்சி ஆக இருக்கின்றது என்பதைப் பேசிச் செல்கிறது உலகமயச் சூழலில் நாம் எல்லோரும் நுகர்வியம் எனும் ஒரு வலைக்குள் அணியம் ஆக்கியுள்ளது இக்கவிதை பேசுகின்றது. விற்பனர்களின் உச்சரிப்பில் விதிர்விதிர்த்து வேகம் கொண்டோம் என்று கூறுகிறார். வீடு, வாசல், தொழில், சொத்து, சேமிப்பு, காப்புறுதி, கட்டுப்பணம், சுற்றம், உறவுகள் அனைத்தும் சுழன்றடிக்கும் பேரலையில் வாழ்வின் கனவு விருத்திக்கான இவ்வுலகம் அளவில்லாத துன்பத்தில் சுழல்கின்றது என, ‘மண்ணில் நல்லவண்ணம் வாழ’ கவிதைக் காட்டுகின்றது.

நம்மிடம் எல்லாம் இருந்தும் தனித்து விடப்பட்டவர்களாக ஆக்கப்பட்டுள்ளதைக் கவிதை பதிவாகிறது. செய்வதென்று அறியாமல் நின்று போய்விட்டது வாழ்வின் ஓட்டம் என்றும், இலக்கற்ற ஓட்டம் பாதுகாப்பற்றக் காட்டுகின்றது என்றும், வாழ்க்கையில் அதிகாரம் நிலைநிற்க அதலபாதாளம் தேடி எதிரிகளை இலக்கு வைக்கும் அதிநுட்ப ஆயுதங்கள் இருமலிலும் தும்மலிலும் தாக்குகின்றன எனக்கவிதை வழியாக வாழ்வின் இருத்தலைநோக்கி நகர்கிறது. மண்ணில் நல்ல வண்ணம் வாழ உடலில் எதிர்ப்புச் சக்திகளைப் பாதுகாப்போம் மனிதருக்கு தன் உடலைப் பாதுகாத்துக் கொள்வதற்கு என் மண்ணில் வாழ்வதற்கு ஒவ்வொருவரின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்திகளின் வழியாகவே நம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்று அரசுசார் நிறுவனங்கள் கூறுவது இக்கவிதைவழியாக அபத்தமாக இருப்பதை அறிமுடிகிறது. இன்றைய சூழலில் நோய்க் கிருமிகள் கூட மனிதர்களின் அழிவினை விளைவிக்கும் போர்ஆயுதமாக விளங்குகின்றதை ‘இலக்கற்ற ஓட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்று சி.ஜெய்சங்கர் கூறுகின்றார் என எனக்குள் தோன்றுகிறது.

‘காலம் வாய்ப்பாக இருக்கிறது’ எனும் கவிதை இறந்துபோன வாழ்க்கைக்கான இருத்தலில் நம்பிக்கை கொள்கிறது. தேர்வு மதிப்பெண்களுக்காகப் பாடத்திட்ட வாசிப்புக்கும் மூழ்கடிக்கப்பட்ட நெறிமுறைகள் இளைய தலைமுறையை இயந்திரத்தனத்திற்குள் கொண்டு சேர்ப்பதோடு சமூகப் பொதுநலம் எனும் சமூக அக்கறையற்ற கல்வியாளர்களை விருத்தி செய்வதை எள்ளி நகையாடுகின்றது கவிதை. ஒவ்வொரு சமூக நிகழ்வையும் ஆழத்தையும் நுண்ணியல் நோக்கில் பார்ப்பது இன்றைய சூழலில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது கூட நவீன முதலாளித்துவத்தின் வெற்றியாகும்.

முகவர்கள் செயலற்றுப் போயினர்

முகவர் நிலையங்கள் செயலிழந்து போயின.

நம்பிக்கையின்பிறப்பிடம்

மீளவும், துளிர்க்கவும், தளைக்கவும்

காலம் வாய்ப்பாகி இருக்கிறது.

இழந்தவைகளை மீட்டுத் தருவதற்கு இன்று அனைத்தும் செயல்பாடுகளும் மக்களுக்கானதாக இல்லாமல் ஏதுமற்றவர்களாக வாழும் சமூகத்திற்கு விடிவு எனும் நம்பிக்கையோடு வாழ்க்கை நகர்வதுவதற்கு ‘காலம் வாய்ப்பாகி இருக்கிறது’ என இருத்தலில் நம்பிக்கையைக் காட்டுகிறது கவிதை.

உணவே மருந்தாகிய அறிவுமுறை

காலனியம் புதைத்துவைத்த,

நவீன புதைகுழியில் இருந்து

மீண்டு எழுகிறது.

காலம்! வாய்ப்பாகி இருக்கிறது.

உணவே மருந்து என்று இருந்த தமிழ் மரபு காலனியாதிக்கத்தால் புதைகுழியானது வாழ்க்கை என்று கூறுகிறார் கவிஞர். வாழ்வியலில் நவநாகரீகம் புகுந்து தம்சுயத்தையும் பாரம்பரியத்தையும் காலனியம் மாற்றி விட்டது. நவீன மருத்துவம், நவீன வாழ்வு, நவீன ஆடை, நவீன உணவு, நவீனத் தொழில்நுட்பம் எனும் நவீனப் பண்பாட்டுச் செயல்பாடுகள் அனைத்தும் காலனியத்தின் ‘நவீன புதைகுழிகள்’ எனக் கவிஞர் சி.ஜெயசங்கர் உருவகப்படுத்தியுள்ளார். இருப்பினும் கடிகாரத்தின் சுழற்சி ஒருநாள் மாறும் என்று நம்பிக்கை ‘காலம் வாய்ப்பாகி இருக்கிறது’ எனும் கவிதைவழி நம்பிக்கைத்துளிர் விடுக்கிறார் சி.ஜெயசங்கர்.

உள்ளூர் என்பது

உலகம் தழுவிய ஊர்களின்

தொடர்பும் பகிவுர்ம்

வேற்றூர் வெறுப்பும் மறுப்புமன்று.

‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ என்னும் பழமொழி பொதுமைச் சமூகமாக வாழும் வாழ்க்கையைக் கூறுகின்றது. ஆனால், முதலாளித்துவம் பரப்பிய நோய்தொற்றால் கூடிவாழ்ந்தவரை வீட்டிற்குள்ளும் தீண்டாமையை உண்டுசெய்த செயல்கள் ஒருபுறமிருந்தாலும் நாம் வெறுப்பின்றி பகிர்தலாய் வாழ்வோம் என இக்கவிதை கூறுகின்றது.

தாயினும் மேலான அன்புடையோராய் நாம் இருக்க வேண்டும். இயற்கையில் மனிதர் மனிதரும் இயற்கை என்பதை உணர்ந்து வாழ வேண்டுமென ‘தாயினும் மேலான அன்புடையோராய்’ கவிதை கூறுகிறது.இக்கவிதையில் கடவுளர்களின் பேரால் நடத்தப்படும் மோதல்களையும் முரண்பாடுகளையும் கேள்விக்குட்படுத்துகிறது. மானுட இயற்கை வாழ்வில் மனிதர்களிடத்தில் எந்த கடவுளர்களும் ஏற்றத்தாழ்வுகளைச் சொல்லவில்லை. எவரையும் தீட்டு என்று ஒதுக்கவில்லை, எவரையும் பழிவாங்கச் சொல்லவில்லை அன்புடைய மனிதர்கள் இதை அறிந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறார் கவிஞர் ஜெயசங்கர்.

ஜெயசங்கரின் 'விபத்தாக வந்துவிட்டது' எனும் தலைப்பில் அமைந்த கவிதை பிரதான மாடங்களும் கோபுரங்களும் புராதனமாக இருந்தவை. ஆதியான நம்பிக்கைக்கான வாழ்க்கை விபத்தாக வாய்க்கப் பெற்றது என்றும் மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்து விடப்பட்டவர்கள் ஆனார்கள். தனித்து விடப்பட்டதன் சூழலில் அச்சமும் மரண பயமும் கேள்விக்குறியாகி நாளைக்கான தேவையை மனதிலும் அறிவிலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது ஆதியான நம்பிக்கைச் சொற்கள் விபத்தாக வந்துவிட்டதாக இக்கவிதையில் கூறுகிறார் சி.ஜெயசங்கர். மனிதர்கள் இயற்கை வாழ்வில் அன்பெனும் நம்பிக்கைத் துளிகளும் உதிர்தலும் வாழ்தலும் வீழ்தலும் நெஞ்சை உறையக் கனவு காணுதலும், கற்பனை செய்து பார்க்கவும் சிந்திக்கவும் ஒவ்வொரு வாய்ப்புகளும் விபத்துகளால் ஏற்படுகின்றதெனக் கவிதையில் பதிவு செய்துள்ளார். கவிதைகள், தனக்கான வாழ்வியலையும் தனக்காக நம்பிக்கையையும் நம்பிக்கையினூடாக வாழ்வு துளிர்பெறுவதும், கனவுகளும் கற்பனைகளும் சிந்தனைகளும் அனைத்து விதமான இயற்கை நிகழ்வுகள் எல்லாமே விபத்துகளின் வழியாகக் கிடைக்கின்றன என்று கூறுவது மண் சார்ந்த, சூழல் சார்ந்த, இழப்புகள் சார்ந்த சுயம் சார்ந்த இருத்தலைக் கூறுகின்றன.

அதிகாரம் நிலை நிற்க,

அதலபாதாளம் தேடி,

எதிரிகளை இலக்கு வைக்கும்

அதிநுட்ப ஆயுதங்கள்

தும்மலுக்கும் இருமலுக்கும்

முகமழிந்து கிடக்கின்றன.

            பிரித்தாளும் சூழ்ச்சியின் பிரிகோடுகள் மறையும் காலம் வெகுவிரைவில் இருக்கின்றதாகக் கவிதை நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்குகின்றன. ‘உணர்வால் இணைவோம் நாமெல்லாம்’ எனும் கவிதை சமகாலச் சூழலை எடுத்தியம்புகிறது. ஒருபொழுதும் உடலால் தனித்திருப்போம் ஒவ்வொரு கணமும் உணர்வால் இணைந்திடுவோம் எனும் கவிதைவரிகள், முதலாளித்துவம் தந்த தீ நுண்ணுயிர் காரணமாகக் கொத்துக் கொத்தாக நோய்த்தொற்றுள்ளோர் இறப்பும், சமூகமயமாக இருந்த கூட்டுணர்வு, கூட்டுச்செயல்பாடு, கூட்டு நடவடிக்கை எனும் கூட்டு இயங்கியலை நோய்த்தொற்றின் வழியாகப் பிரித்தாலும் நாம் உணர்வால் இணைந்தே வாழ்வோமென இக்கவிதை கூறுகின்றது.

மனிதம் எனும் மாண்போடு அன்பு எங்கும் தழைத்தோங்கிட ஒவ்வொரு மொழிசார்ந்த இனத்திலும், ஒவ்வொரு நிலத்திலும் மகிழ்ச்சி நிறைந்திட விதைப்போம் நடுவோம் விளைவு செய்வோம் எனக் கவிதை வழியாக, மொழியாலும் இனத்தாலும் ஒன்றிணைந்த வாழ்வியலை உலகெல்லாம் பேதமற்ற பொதுமை உணர்வால் நாம் இணைந்து வாழ்வோம் என்று பறைசாற்றுகிறார் கவிஞர் ஜெயசங்கர். தமிழக, இலங்கைச்சூழலில் கல்வி நிறுவனம் சார்ந்த திறனாய்வாளர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். ஆனால் கவிதைப் படைப்பாளர்கள் மிகக் குறைவே. இலங்கைச்சூழலில் கல்வி நிறுவனம் சார்ந்த படைப்பாளர்களில் சி.ஜெயசங்கர் குறிப்பிடத்தக்கவராக அடையாளப்படுகிறார்.

- ம.கருணாநிதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்.625 514