சிவசங்கர். எஸ். ஜே. யின் சிறுகதைகள்

kadanthai koodum keyas theoriyum“கடந்தை கூடும் கேயாஸ் தியரியும்” என்னும் தலைப்பிலான சிவசங்கரின் 14 கதைகளும் புதிய வடிவத்தையும் கதையாடலையும் கொண்டுள்ளன.

கிடைத்த/ செவிமடுத்த/ படித்த விஷயங்களை /அனுபவங்களை அப்படியே கதையாக்கும் பிரச்சனை இவரிடம் இல்லை.. புனைவாக, மிகை யதார்த்த விவரிப்பாக, மறு எழுத்தாக்கமாக எழுதிக் கொண்டே போகிறார்..

2007லிருந்து எழுதிவரும் சிவசங்கர் தற்கால சிறுகதை, உலக இலக்கிய பரப்பில் எவ்வடிவில் கையாளப்படுகிறது என்னும் பிரக்ஞையுடன் எழுதுவதுதான் அவருக்கு புதிய சாளரங்களைத் திறந்து காட்டுகிறது..

'ஒரு குப்பி வார்த்தைகள்' கதையில் இடம்பெறுபவனுக்கு ஒரு சிக்கல். திடீரென்று அவனுடைய வார்த்தைகள் தீர்ந்து போகின்றன. சொல்ல வேண்டிய வார்த்தை சொல்ல வேண்டிய தருணத்தில் கை கொடுக்க மறுக்கிறது. இவ்வளவுக்கும் அவன் அதுவரை வார்த்தைகளை சேகரத்தில் வைத்திருப்பவன். ஆனால் அடுத்தவனோ கிடைக்கும் சிலவான வார்த்தைகளுக்கு இறக்கைகளை ஒட்டி, மிதக்க விடுகிறான். பறக்கவிடுகிறான்.. வான்காவின் ஓவியங்களைப் பார்க்க முற்பட்டால் வண்ணங்கள் எழுத்துக்களாய் மாறி இருக்கின்றன – எழுத்துக்கள் புதிர்களாய் தோன்றுகின்றன.. சிற்பங்கள் சிற்பமாவதற்க்கு முந்தைய நிலையில் இருந்த ஒழுங்கின்மையும், வரைவுகளுமாய் காட்சி தருகின்றன.. புத்தகத்தின் பக்கங்கள் வெற்று தாள்கள்களாகி விடுகின்றன

'அவன் ஒரு' சிறுகதை கிளி, கடிகார முள், மீன், மிதியடி, கார்பொம்மை, பயணப்பை, ஈசி செயர், வாயிற்கதவு, மெமரி கார்ட், முரசு என எதுவாயினும் ஓர் அமைப்புக்குள் அடங்கி விடும்போது, அடக்கப்படுதலும் ஒடுக்கப்படுதலும் நேர்வதை அங்கதமாக்குகிறது. மையம் அவனை தாங்கி நிற்பதைத் தவிர அவன் மீதான உபரி அதிகாரம் எதையும் செலுத்தவில்லை என்று கதையாடலை தொடங்கும் சிவசங்கர். “மெல்ல மெல்ல அவன் தீண்டபடாதவன் ஆனான். புனிதங்களுக்கும் தீட்டுக்கும் அவன் உடம்பில் சுற்றி இருக்கும் கயிறுகள் போல் ஒரு சூட்சுமம் இருப்பதை அவன் அறிந்த நாளில் அவன் ஒலி எழுப்பும் வலுவை இழந்திருந்தான்” என்றே முடிக்கிறார்..

'ஒரு நகரின் இரு கதைகள்' கால்வினோ பாணி கதையாடலாய், ஒரு நகரின் மரங்கள், நாய்கள், சுவர்கள், சாலைகள், பறவைகள், கிணறுகள், என்று சொல்லாடல்களை அடுக்கி கொண்டே பொய் இப்படி முடிகிறது

“நகரின் அகதிகள். அழுகைகள், அநீதிகள், கோபங்கள், விளக்குகள், சிலைகள் என ஏராளம் கதைகளை நகரம் ஒளித்து வைத்திருக்கிறது.. கள்ளச்சாவி ஓன்று கைகூடும் நாளில் நகரம் தன் சுவர்களின் ஈர மூலைகளில் ஒரு தேரையை போல் பதுங்கி இருக்கும் கதைகளை இழக்கும். அப்போது மற்ற நகரங்களின் அகதிகளுக்கு ஒரு அடைக்கல பட்டணமாகவும் நகரம் மாறி இருக்கும்”.. இதுவும் கதையின் இறுதியில் வரும் அடிக்குறிப்பாக அமைக்கப் பட்டிருக்கிறது

அறிவியலின் முன்னேற்றம் அணுமின்சாரத் தயாரிப்பு வரை பாய்ச்சலை பெற்றிருப்பினும், உதட்டு பிளவால் தர்மசங்கடப்படும் கதைசொல்லிக்கு கடந்தை வண்டுகளின் கூட்டில் எட்டு அறைகள் இருக்கவே, பிறக்கும் குழந்தைக்கு ஆறு விரல்கள் அமைந்து விடும் என்று தர்காவுக்கு போய் நேர்ச்சை செய்ய தென்னம்பிள்ளையுடன் கிளம்புகிறான்.. “நம்பிக்கை, அறிவியல், பேரழிவு, அச்சம் இவை நான்கும் சந்திக்கும் தங்க நாற்கர சாலையின் பேருந்து நிறுத்தத்தில் நான் காத்திருந்தேன் கையில் ஒரு தென்னம்பிள்ளையோடு..”

பல்லிடுக்கில் சிக்கிய இறைச்சி துணிக்கினை எடுக்க முற்பட்ட நாக்கு.. நாலாக துண்டிக்கப்பட்டு வயிற்றுக்குள் போய்விடுவதும்..

ஆனை விழுங்கி, சர்ப்ப விழுங்கி என்னும் வினோத பெயர்களால் உண்டாகும் சுவாரசியங்களும் இரண்டு கதைகளில் விஷமங்கலந்த விநோதமாக்கபடுகின்றன..

'அச்சநந்தி' - தேவரின் திருமேனியை வடிக்க முற்படும் சமண சிற்பி. நிழல் என்பது என்ன என்னும் தத்துவ விசாரணையில் இறங்கி, நிழலில்லாது இருக்க முற்படுபவதை 'நிழல்' கதையில் விவரிக்கிறார். கூடவே ஒரு வரலாற்று விமர்சனத்தையும் முன்வைத்துவிடுகிறார். “அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. அமாவாசைக்கு அவர்கள் வரக் கூடும் எனக்குள் எந்த சலனமும் இல்லை சாவை பற்றியோ கழுவேற்ற படுவதை பற்றியோ எந்த பயமுமில்லை.. ”

பைபிளில் இடம்பெறும் காயின் ஆபேல் கதை, சிசிபஸ் தொன்மம் மற்றும் கோடாரியை தொலைக்கும் தச்சரை பற்றிய வாய்மொழி கதை ஆகியவற்றின் மறு எழுத்தாக்கமாக மூன்று சிறுகதைகளை சிவசங்கர் தந்துள்ளார்..

'கொலை ஒரு பாவமல்ல' கதை பைபிள் கதையின் மறு எழுத்தாக்கம்

ஆதாம் ஏவாளின் முதல் பிள்ளை காயீனும் இரண்டாம் பிள்ளை ஆபேலும் தம் காணிக்கைகளை கர்த்தருக்கு படையலாக்குகின்றனர். காயீன் தனது நிலத்தில் விளைந்த தானியங்களையும்.. ஆபேல் தன மந்தையிலிருந்து சில ஆடுகளையும்.. ஆடுகளை ஏற்றுகொண்ட கர்த்தர் தானியங்களை நிராகரித்து விடுகிறார்.. வருத்தத்துக்குள்ளான காயீன் ஆபேலை நிலத்துக்கு கூட்டி சென்று கொன்று விடுகிறான்.. இனி உன் பூமி விளைச்சலை தராது நீ அலைந்து கொண்டிருப்பாய் என்று கர்த்தர் சபித்து விடுகிறார். அலைந்து திரிகையில் யாரும் அவனை கொன்று விடலாகாது என்பதற்காக, காயீனின் கழுத்தில் ஓர் அடையாளம் இடுகிறார்

இப்பைபிள் கதையினை காயீனின் பார்வையில் விவரித்துவிட்டு இப்படி முடிக்கிறார் ஆசிரியர். "நிகழும் ஒவ்வொரு துர்மரணத்திலும் சூட்சமமாய் என்னை நீங்கள் விரும்பினால் சந்திக்கலாம் என் தழும்பை வைத்து என்னை அடையாளம் கண்டு சந்தோஷப்படலாம். என் பெயர் காயீன்."

இப்பைபிள் கதையை யாரும் நவீன எழுத்துப் பரப்புக்கு கொண்டு வரவில்லை என்றே கருதுகிறேன். கதையில் பூடகம் இருப்பதால் காயீன் வஞ்சிக்க பட்டது வெளிதெரியாமல் மறைக்க படுகிறது. ஆபேலின் காணிக்கையை ஏற்கும் கர்த்தர், காயீனின் காணிக்கையை மறுதலிக்க என்ன கரணம்? பாவம் புரிந்தவன் காயீன் என்று மட்டும் கர்த்தர் சொல்கிறார். ஆதிப்பாவம் காயீனை தொடர்ந்தால் ஆபேலையும் தொடர வேண்டும். அதுதானே நியதி. அப்படியில்லை வேளாண் செய்தவனுக்கு ஒரு நீதியும் மேய்ச்சல் செய்தவனுக்கு ஒரு நீதியும்தான் வழங்க பட்டிருக்கிறது.. உண்மையில் வேளாண்மை செய்தவனுக்கு அநீதிதான் செய்ய பட்டிருகிறது

கர்த்தரால் வஞ்சிக்கபட்டவன் தம்பியை வஞ்சிக்கிறான். எல்லாம் வல்லவரே அநீதி இழைக்கையில், அற்பமான மானுடன் வேறென்ன செய்ய முடியும்?இந்த விமர்சனங்களை எல்லாம் சிவசங்கரால் கோபமோ, ஆத்திரமோ இல்லாது உணர்வு பூர்வமற்றுள்ள மொழியில் எளிய கதையாடலாக முன்வைக்க படுவது அவரை திறன்மிக்க கதையாசிரியராக்குகிறது. அகலிகை கதையை கொண்டு சாப விமோசனம் எழுதிய புதுமை பித்தன் போல் ஒரு படைப்பை தந்திருக்கிறார்

'சிசிபஸ்கள்' கதையில் ஒரு பறவையின் பார்வையில் சொல்லப்படும் கதையில் சிசிபஸ் தொன்மம் மறு எழுத்தாக்கமாகிறது. அபத்த தன்மையை எடுத்துக்காட்ட ஆல்பர்காம்யு சிசிபஸ் தொன்மத்தை கையாண்டார். தன் குஞ்சுகளுடன் ஆனந்தமாக இருக்கும் ஒரு பறவைக்கு தூரத்திலுள்ள மலைக்கு போக ஆசை/குறை.. ஒருநாள் அங்கு போய்விடும் அப்பறவை அங்கே மலையுச்சிக்கு பாறைகளை உருட்டிச் செல்வதும் திரும்புவதுமாக மனிதர்கள் குதூகலமாய் இருப்பதை பார்க்கிறது. அது விதிக்கபட்டதா /விளையாட்டா என்று புரியவிலல்லை. நான் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை” என்னும் வார்த்தைகளுடன் திரும்புகிறது..

sarppam avalai vanjikkavillaiஆனால் இந்த விவிலிய வாசகம், தொன்மத்தை மேலும் திறந்து காட்டாமல், மூடிவிடும் காரியத்தையே செய்கிறது..

'மொழியின் வாழ்கை குறிப்புகள்' மொழியின் சரிதத்தை, இயேசுவின் சரிதமாக ஒரு வாழ்கை வரலாற்றின் வடிவில் எழுதி பார்க்கும் முயற்சி. மொழி என்றால் அன்பு, மொழி என்றால் உணவு, மொழி என்றால் உயிர், மொழி என்றால் நம்பிக்கை, மொழி என்பது கோபம், மொழி என்பது வாஞ்சை என்று வரிசையாக அடையாளப்படுத்தபடுகிறது. அவ்வளவும் இயேசுவுக்கும் பொருந்துகிறது. இந்த கதையாடல் மிகவும் நுணுக்கமிக்கது. சவால் நிறைந்தது..

'பிம்பம்' கதையில் கிரம்ளின் அரண்மனை வாசலில் உள்ள கண்ணாடியின் மாய ஆற்றல் சொல்லபடுகிறது. இதுவரை அதில் படிந்த பிம்பங்களல்லாம் காட்சி வரிசையாய் இருக்க, கதை சொல்லியின் நண்பர்கள் விளாடிமிர், செக்கோவ் ஆகியோர் பிம்பங்கள் நழுவிவிட, அவற்றை தேடுவதுதான ஒரு மாயப்புனைவு.. இக்கதையில் விளாடிமிர், செக்கோவ் ஆகியோரின் பெயர்களை சொல்லிவிட்டு அப்படியே விட்டு விடுகிறார்.. இவர்களுடனான உரையாடல் சேர்ந்திருந்தால் அல்லது இவர்களின் பார்வைகளும் பதிவு செய்யபட்டிருந்தால் கதை இன்னும் செழுமை பெற்றிருக்கும்..

'வாலறுந்த பல்லிகள்' கதை ஓர் அறையில் அடைபட்டிருப்பவன் கிலுகிலுப்பை, வானொலி, தொலைக்காட்சி என அடுத்தடுத்த பொழுதுபோக்கு சாதனங்கள் கிடைத்தாலும் அதிருப்தியை/நெருக்கடியை உணர்வதை மிகை யதார்த்த தளத்தில் விவரிக்கிறது. அந்த அறைக்குள் நுழையும் ஒரு பாவை, தம் மரபினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் காத்துவந்த ஒளித்துண்டு திருடுபோனதை சொல்கிறது. அடுத்து

"வனமழியும், மழை அழியும் காற்றழியும் எம் ஒளி எங்கே?எம் ஒளி எங்கே? உங்கள் குளம் அழியும். உங்கள் குடல்கள் பட்டினியாயிருக்கும். எம் ஒளி எங்கே?. ”. என்று சபிப்பதாயும் கேள்வி கேட்பதாயும் பேசுகிறது.

அனால் இதன் பிறகான கதை, இப்புள்ளியின் கவனக்குவிப்பைத் தொடராமல் வேறெங்கோ போய்விடுகிறது..

சிவசங்கரின் மிகபெரிய பலம் வடிவம். அடுத்து கதை சொல்வதில் அனாயச மாயத்தன்மை. தன ஓவியங்களில் எல்லாவற்றையும் கலைத்து போட்டு கெக்கலி கொட்டி சிரிக்கும் சால்வடார் டாலி போல் சிவசங்கர் பரிகசித்தும் நய்யாண்டி பண்ணியும் கலகம் விளைவித்து விடுகிறார். இரண்டு பக்கங்களில் கூட வலுவான கதைகளை தந்து விட முடிகிறது இவரால்.

மறு எழுத்தாக்க முறை இவரிடம் நன்கு கைகூடியுள்ளது. காயீன் –ஆபேல் கதையின் இவரது மறு எழுத்தாக்கம் “கொலை ஒரு பாவமல்ல” தமிழின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாகும் திறனுடையது

 இது சிவசங்கரின் இரண்டாவது சிறுகதைதொகுப்பு. பதினான்கு கதைகள் புதிதாய் சொல்லப்படுகின்றன. புதிய வடிவங்களில், கேட்டிராத விவரிப்பில்.

'ஃபிராய்டின் நாட்குறிப்புகள்' என்னும் கதை ஆதாம்-ஏவாள் கதையை மறுஎழுதாக்கமாக்குகிறது. கதையிலுள்ள இடைவெளிகளை நிரப்புவதும், கதையில் சொல்லப் படாததை சொல்ல முற்படுவதும், ஏற்க முடியாததை விமர்சிப்பதும் என்று மறுஎழுத்தாக்க நிகழ்வுக்குள் தன் சிறுகதைக்கு உருவம் தரும் போதே, அதனை பின்நவீனத்துவ எழுத்தாகவும் உருமாற்றி விடுகிறார் சிவசங்கர்.

 பூமியின் முதல் மனிதர்களான ஆதாமுக்கும் ஏவாளுக்கும், ”சுயம்” இல்லை அடையாளம் இல்லை, ”நான்” என்னும் உணர்வு கொள்ள முடியவில்லை என்ற சிக்கல். இது ஆதாமை விடவும் ஏவாளை அதிகமாக இம்சிக்கிறது. அடுத்து, ஃபிராய்டு தன் இறுதி ஆண்டுகளில் எழுதியதாக இடம் பெறும் நாட்குறிப்பு பகுதியில், ஆபேலுக்கும் காயீனுக்கும் நடந்த சண்டையில், தன்மேல் அவர்களுக்கிருந்த அன்பே காரணமென்றும், எவ்வளவு முயன்றும் ஆபேலை காப்பாற்ற முடியாத துர்பாக்கியவதி தானென்றும் ஏவாள் அரற்றினாள் என்று குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 மூத்த மகன் காணிக்கையாகத் தந்த தானியக்கதிர்களை ஏற்காமல், இளையவன் ஆபேலின் ஆடுகளை கர்த்தர் ஏற்று கொண்ட ஆவேசத்தில், இளையவனை கொன்று விடுகிறான் காயீன். இது பைபிளில் இடம்பெறுவது. இதனை 'ஈடிபஸ் சிக்கல்' தளத்திற்கு கொண்டு வந்து விடுகிறார் சிவசங்கர். காரணம் பைபிள் கதையில் நிரப்பபடாத இடைவெளியும் விளக்கபடாத சிக்கலும் அநீதியின் கன பரிமாணத்துடன் இருக்கின்றன. காயீனை வஞ்சித்தவர் கர்த்தரே தவிர ஆபேல் அல்ல. ஆனால் கர்த்தரை பழி தீர்த்துக்கொள்ள இயலாத காயீன் தம்பியை கொன்று விடுகிறான். சிவசங்கரோ, கொலைக்கு காரணம் கர்த்தரில்லை.. தாய் ஏவாள்தான், ஏவாள் மீதான ஈர்ப்பின் போட்டியில், காயீன் ஆபேலை தீர்த்துக் கட்டி விடுகிறான், ஏவாள் சித்தம் பேதலித்து உளவியல் சிகிச்சைக்காக ஃபிராய்டிடம் வருகிறாள் என்று விவரிக்கிறார்.

 முதல் தொகுப்பில் ஒரு வடிவில் இக்கதையை மறு எழுதாக்கமாக்கியிருந்த சிவசங்கர், இதில் இன்னொரு வகையாக எழுதி பார்க்கிறார். காயீனின் வேதனையும் குற்றவுணர்வும் அவனை அலைந்துதிரிய வைத்து புலம்புவதாக முதல்கதை இருக்க, ஏவாளின் பிதற்றலாக இந்த கதை இருக்கிறது.

 “தொன்மங்கள் அசாத்தியமானவை. அவை கடவுள் புராணங்கள் ஆகட்டும், மானிட சாகசங்கள் ஆகட்டும், அற்புதமான, உளவியல் கூறுகள் அவற்றில் தென்படுகிறது. இனக்குழுவாழ்வு, குலக்குறிகள், குலத்தடைகள், தகாப்புணர்ச்சி, புதிர்த்தன்மை என்ற ஒரு மாய தொடர்ச்சி நவீன உலகோடு தொடர்கிறது" என்று வருகிறது ஃபிராய்டின் பதிவு

 பைபிள் கதை, கிரேக்கத்தின் ஈடிபஸ் தொன்மம், ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வு என மூன்று பெரும் படிமங்கள் ஒரு புள்ளியில் சந்திக்க எழும் மோதலும் பதற்றமும் சாத்தியப்பாடுகளும் அற்புத புனைவொன்றை தந்துள்ளன.

 இதற்கு முற்றிலும் நேர் எதிரான ஒரு வடிவில் இருப்பது “நேற்று/ நாளை/ இன்று” கதை, நாளை தூக்கு தண்டனை பெற இருக்கும் கைதி. நேற்று அவன் மனைவி ஆண் குழந்தையை பெற்றிருக்கிறாள். இன்று அவன் என்னவெல்லாம் எதிர்பார்ப்பான் /எப்படியெல்லாம் பதற்றமடைவான் என்பதை 5 சாத்தியப்பாடுகளாக ஒரு குட்டிக் கதையாக எழுதுகிறார் சிவசங்கர்.

 ஒரு வலுவான கதைப்புள்ளி எவ்வளவு பிரம்மாண்டமாக விரிவு கொள்ள இயலும் என்பதை இதில் உணர முடிகிறது. புனைவின் வசீகரம் மிக ஈர்ப்புடன் படிந்திருக்கிறது.

'ஏலே அத்துரம்மான்' கதையில் வரும் விளிம்பு நிலை மனிதன் சிறைவாசமெல்லாம் பழகிப் போய் பிறரை ஏமாற்றிப் பிழைப்பவனா அல்லது சித்தம் பேதலித்துத் திரிபவனா என்பது தெளிவாகாததால் நம்மை எச்சரிக்கை கொள்ளச் செய்பவனா என்பதை நிச்சயிக்க முடியாத தவிப்பை ஏற்படுத்துகிறான்.

'நாதியற்றவர்கள் பற்றிய சிறு குறிப்புகளில்' பாட்டுக்காரன், கவி, துரதிருஷ்டக்காரன், இசைஞன், கனவுக்காரன், ஓவியன், என ஆறு பேரின் அவரவர் அம்சங்களில் தீவிரமாகி இருப்பவர்கள் விவரிக்கப்படுகிறார்கள். ஓவியன் தண்டவாளத்தை தீட்டத் தொடங்கினால் ரயில் நெருங்கி விடுகிறது. கவி எழுதியது வந்து சேர்ந்த மாத்திரத்தில் அச்சகம் பற்றி எரிகிறது, பாட்டுக்காரனின் குரலிலிருந்து எழும் அதிர்வு மலைகளைத் துளைக்கிறது. இப்படி இவர்களில் கனவுக்காரன் பகுதி நுட்பமானது. கனவைச் சுமந்து கூன் விழுந்தவன் அடுத்தடுத்து தவழத் தொடங்கப் பின்னர் பருந்தொன்றை சுமந்து செல்லும் காற்றைப் போல் அதன் பிறகு கனவுகள் என்னை சுமக்கின்றன. இலவம் பஞ்சாய் மிதக்கிறேன். “ஒவ்வொன்றாய் வெடித்து சிதறுகின்றன கனவுகள் விதைகளை தூவியபடி”.

 ‘சொர்க்கத்துக்குப் போ!’ வில் மரணமடைந்த பின் அவனே தன்னைப் பற்றிய அடுத்தடுத்த நிகழ்வுகளை சொல்லிக் கொள்வதான மிகையதார்த்த நிகழ்வு இடம் பெறுகிறது. அவன் இந்துவாகவும் தாய் கிறித்துவ மதத்தினளாகவும் பெரும்பாலான நண்பர்கள் இஸ்லாமியராகவும் இருப்பவன். ஆனால் தீவிர விவரிப்பாகக் கதை போய்விடுகிறது. இத்தகைய சூழலிலான கதையை சுவை முரண் சேர்த்து எள்ளி நகையாடலாக அமைத்திருந்தால் வேறு தளத்தினதாக மாறி இருக்கும். யாவும் சமீபித்திருக்கிறது என்னும் கவிதைத் தொகுப்பில் மரணமாலை என்னும் கவிதையில் இதே கருத்திழையை பகடி செய்து கொண்டாடும் படி வாசகனைச் செய்திருக்கிறார் கடங்கநேரியான்.

'பறவைகளால் ஒரு நூலகம்' ஒரு பறவை சேகரிப்பாளனைப் பேசுகிறது. கனவுகளால் கதை சொல்கிறது. மனிதனுக்கும் பறவைக்கும் ஒரு கூடு அவசியமாகி விடுவதை நினைவூட்டுகிறது. சிறகுகள் விரித்த ஒவ்வொரு பறவையும் ஒரு புத்தகம் என்கிறது. தனது லட்சியப் பறவையான ஏழுவர்ணக்கிளி பறக்கும் போது கூட்டு ஒர்மையைக் கிளறும் வலி காணாமலாகிறது.

 “நானொரு கில்நாஸ்டியாவாசி” எனும் புதிரான நகருக்கு ஒருவன் வந்து ஒரு வாரத்திலேயே விசித்திர நிகழ்வுகள் நடக்கத் தொடங்குகின்றன. முதலில் அங்கு நிகழும் சகிக்க முடியாத சம்பவங்களால் குறிப்பாக மரங்களை வெட்டுவதால் சுற்றுச் சூழலியாளன் இறந்து போகிறான். வாய் பேச முடியாதவன், வரலாற்று ஆய்வாளன், மனித உரிமையாளன், வர்ணம் தீட்டுபவன், சமத்துவவாதி என அடுத்தடுத்து மடிகிறார்கள். ஆறு மரணங்களுக்குப் பிறகு ஏழாவது நாளிலிருந்து அவன் கில்நாஸ்டியாவாசி ஆகிவிடுகிறான். NIL-CASTIA என்பதிலிருந்து CILNASTIA என்னும் சொல்லை சாதிகளற்ற உலகம் என்னும் பொருளில் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் உணர்த்தக் கருதுவது பன்மைத்தன்மை இன்றி பல்லுயிர் வளப்பத்தை அழித்து ஒற்றை முகத்துடன் தட்டையாக கோரமாய் விழிக்க இருக்கும் எதிர்கால/நிகழ்ந்து கொண்டிருக்கும் உலகினை....

 “கடவுள் மனிதனைப் படைத்தார் மற்றும் அவன் வாழ்வதற்கான உலகைப் படைத்தார்: அவர் மனிதனாக இருந்திருந்து வாழ விரும்பிருக்கும் உலகை அவர் படைத்தார் என்றெண்ணுகிறேன் உலவுவதற்குப் பூமி, பெரும் வனங்கள், விருட்சங்கள், நீர், விலங்குகள், வேட்டையாடி விலங்கைக் கொள்ளும் ஆசையை அவனிடத்தே அவர் வைக்கவில்லை என்றெண்ணுகிறேன். மனிதன் தனக்குத்தானே அதனைக் கற்பித்துக் கொள்வான் ஏனெனில் அவன் இன்னும் கடவுளாக ஆகிவிடவில்லை என்பதை அவர் அறிவார்.

“எப்போது ஆவான்”

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவர்கள் மணமானவர்களோ இல்லையோ அப்போதோ பின்னரோ மணமாகப் போகிறவர்களோ அல்லது ஒரு போதும் மணமாகப் போகிறவர்கள் இல்லையோ என்பது ஒரு பொருட்டில்லை என்றுணரும் தருணத்தே அவ்விருவரும் சேர்ந்து கடவுளாகி விடுகிறார்கள்.

 வில்லியம் ஃபாக்னரின் GO DOWN MOSES நாவலில் இடம்பெறும் பகுதி இது. பைபிள் கதையை மறு எழுத்தாக்கம் செய்யவும் ஃபாக்னர் கடவுள் செய்ய மறந்ததை/செய்த துரோகத்தை உணர்ந்து மனிதன் மீட்சி பெறும் தருணத்தை பைபிள் மொழியிலேயே சொல்லி விடுகிறார்.

 ஏவாளின் கதையை மறு எழுத்தாக்கம் செய்யும் சிவசங்கருக்கு பைபிள் கதையிலிருந்து கில்நாஸ்டியா வரையிலும் நிறைய கேள்விகள் எழுகின்றன. நிறைய விமர்சனங்கள் உண்டாகின்றன. அதிருப்தியும் ஆவேசமும் ஏற்படுகின்றன. இந்தக் கேள்விகளும், விமர்சனங்களும் அதிருப்தியும் பல்வேறான வடிவங்களில் சாத்தியப்பாடுகளில் புனைவாகின்றன. ஏவாளின் சித்தப் பிரமையும் அத்தூர்ரமானின் பிதற்றலும் தூக்கிலேறப் போகின்றவனின் பதற்றமும் கலைஞர்களின் தவிப்புகளும் வெளிப்படுகின்றன. கலைஞனின் தேடல் சிரத்தையும் அக்கறையும் கொண்டிருக்கும் போது, பல நூற்றாண்டு கால-வெளியைத் தொட்டு, இத்தருணத்தில் சிலிர்ப்பையும் சிறகடிப்பையும் ஏற்படுத்திட இயலும். இது சிவசங்கரின் எழுத்தில் இயல்பாக நிகழ்கிறது.

தமிழுக்குப் புதியதொரு சிறுகதையாளர் சிவசங்கர்..

- சா.தேவதாஸ்