வாழ்க்கை என்பது எதிர்பார்த்தவையும், எதிர்பாராத திருப்புமுனைகளும் நிறைந்தது. இங்கே எதிர்கொண்டு வாழும் துணிவு அவசியம். ஒரு மனிதன் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளில் தொலைந்து போகாமல் உயிர்ப்புடன் இருக்க வழி உண்டா? அதற்கு என்ன வழி என்ற கேள்வி ஒவ்வொருவரையும் புரட்டிப் போடுகிறது. வாழ்க்கையை வாழ்ந்துதான் தீர்க்க முடியும் என்ற புரிதல் இல்லாமல் துன்பங்களைச் சந்திக்கும் போது துவண்டு போகும் இயலாமை பெரிய ஆபத்து.

ranimainthan book on mustafaசெல்வச் செழிப்பில் வாழ்ந்த ஒருவர் அந்தச் சொத்து அரசால் முடக்கப்படும்போது தற்கொலை செய்து உயிரையே தியாகம் செய்து விடுகிறார். அவர் உயிருக்கான மதிப்பு அவ்வளவுதானா! மாணவர்கள் தேர்வுகளில் தோல்வி அடையும் பட்சத்தில் தன் சுவாசத்தை நிறுத்திக் கொள்கின்றனர். அவதூறு பேசுவதைக் கேட்டுச் சகிக்க முடியாமல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்களும் உண்டு. ஆனால் ஒன்றை மட்டும் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரே மாதிரியான அச்சு அல்ல.

தோல்விகளும் – வெற்றிகளும் கலந்த முழுமையான வாழ்க்கையில் தன்னிறைவு காணும் போது சராசரியான வாழ்க்கைக்குப் பதிலாகச் சாதனைமிக்க வாழ்க்கை வசப்படுகிறது. மனம் பாரம் தாங்க முடியாமல் சாய்வதற்கு ஒரு தோள் தேடி அலையும் போது நிழல் தரும் மரங்களாக இருப்பவை மற்றவர்களின் வாழ்க்கை அனுபவங்கள்.

படிப்பு என்பது ஆடம்பரம் என்று கருதப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்து இன்று பொருளை மட்டுமல்லாமல் மனிதர்களையும் பெருஞ்செல்வமாகத் திரட்டி வைத்திருக்கும் ஒருவரின் வரலாறு படிப்பவருக்கு நிச்சயம் ஓர் உத்வேகத்தைத் தரும். இதை உணர்ந்து கொண்ட வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் தனி முத்திரை பதித்திருக்கும் ராணிமைந்தன் ‘முஸ்தபா – சிங்கப்பூரில் ஒரு வெற்றித் தமிழர்’ என்ற நூலை எழுதித் தந்திருக்கிறார். நூலின் வடிவமைப்பும், தாளின் தரமும் படிப்பவர் புருவத்தை உயர்த்துகின்றன.

ஆறு பிள்ளைகள் இருக்கும் பெற்றோருக்கு ஏழாவது பிள்ளையாக முத்துப்பேட்டையில் பிறந்தவர் முஸ்தபா. அவருக்கு அடுத்தபடியாக ஒரு தங்கையும், ஒரு தம்பியும் பிறந்தனர். பெரிய குடும்பத்தைப் பசி இல்லாமல் வாழ வைப்பதற்கே அப்பா அப்துல் காசிம் பெரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டி இருந்தது. தாயார் ரஹ்மத் அம்மாளுக்குத் தமிழார்வம் அதிகம். அது முஸ்தபாவிற்கும் வாய்த்திருந்தது. மனிதாபிமானமிக்க ஒருவரை அறிமுகப்படுத்தும் ஆசிரியர் இதை ஒரு தனிமனிதன் துதிபாடும் நூலாக அமைக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு.

ஒரு காப்பியத்தில் எப்படி நாட்டுவளம், நகர்வளம் என்று பாடப்பட்டு அந்த நூலுக்கு அழகு சேர்க்குமோ அதுபோல நாட்டு வளமாக, நகர வளமாகத் தஞ்சை மாவட்டத்தின் கழுத்தை அலங்கரிக்கும் பகுதி முத்துப்பேட்டை என்று வர்ணிக்கிறார் ராணி மைந்தன். அங்கே இருக்கும் அலையாற்றிக் காடுகளின் தனித்தன்மையையும் நூல் பேசுகிறது. சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையின் போது சீறி வரும் அலைகளின் வேகத்தை ஆற்றித் தனித்து அந்தப் பகுதியைக் காப்பதால் அதற்கு அலையாற்றிக் காடுகள் என்று பெயராம்.

ஆங்கிலத்தில் ‘மான்குரோவ்’ என்று அழைக்கப்படும் அலையாற்றிக் காடுகள் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களையும் தடுக்கக்கூடியவை என்பது அறிவியல் ஒப்புக் கொண்ட உண்மை. எனவே சுனாமியிலிருந்து முத்துப்பேட்டையைக் காத்த பெருமை அலையாற்றிக் காடுகளுக்கே உரியது. இந்த அறிவியல் உண்மையைப் போல ஆறும் கடலும் ஒன்று கலக்கும் இடத்தில் உருவாகும் பெரிய ஏரி போன்ற நீர்ப்பரப்பான லகூனையும் விளக்குகிறது புத்தகம்.

சிங்கப்பூரில் நாணய மாற்றுத் தொழிலின் (மணி சேஞ்சிங் பிசினஸ்) முன்னோடிகள் தமிழகத்து இசுலாமியப் பெருமக்கள் என்ற வரலாற்று உண்மையை நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். சிங்கப்பூர் துறைமுகத்தின் அருகில் இருக்கும் ஒரு சந்து ‘சேஞ்ச் அலி’ என்று பெயர் சூட்டபட்டதன் சுவாரசியமான தகவல் இதோ: காரைக்காலைச் சேர்ந்த அலி என்பவர் முதன் முதலில் அங்கே பணம் மாற்றும் வர்த்தகத்தை (சேஞ்ச்) தொடங்கியதாகவும் அவர் பெயரிலேயே அந்தச் சிறிய சந்து ‘சேஞ்ச் அலி’ என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஆசிரியர் இசுலாமியர் பயன்பாட்டில் கொண்ட ‘நானா’ மற்றும் ‘காக்கா’ என்ற சொற்களுக்கான சொல்லாராய்ச்சியையும் நடத்தி முடிவு கூறுகிறார். அதாவது மூத்த சகோதரரை மலாய் மொழியில் நானா என்றும் மலையாள மொழியில் காக்கா என்றும் அழைப்பதை மறைக்காமல் பதிவு செய்கிறார். மேலும் மனதைத் தொடும் பல செய்திகளையும், உழைப்பின் மகத்துவத்தையும் நேர்மையாக விவரித்துள்ளார்.

முத்துப்பேட்டையில் இருந்து சென்னைக்கு வந்த முஸ்தபா சகோதரர்கள் எழுதுபொருட்கள், பால் பொருட்கள் விற்பனைக்கான கடையைத் தொடங்கி நடத்தியதில் லாபத்திற்குப் பதில் நஷ்டமானதால் கடை இல்லாமல் போனது. அதையும் பாதிக்கப்பட்ட முஸ்தபா சொல்லும் அழகே தனி. “நாங்கள் எங்கே மூடினோம்? கடை தானாகவே மூடிக் கொண்டது,” என்று நகைச்சுவை உணர்வோடு கூறும் போது ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று துன்பம் வரும் வேளையில் சிரிக்கச் சொன்ன வள்ளுவத்தைப் பின்பற்றும் போக்கை உணர முடிகிறது.

வறுமையில் வாடிய போது தன்னைக் கை தூக்கி விட்டவர்களை நன்றியோடு நினைத்து அவர்களுக்குச் சரியான அங்கீகாரத்தைத் தீபாவளி பண்டிகையில் புத்தாடை வழங்கியும், தன் சொந்த ஊரில் தான் நிறுவிய பள்ளிக்கூடத்தின் நிர்வாகக் கட்டடத்துக்கு அவர்கள் பெயர் சூட்டியும் சிறப்பளிக்கும் பெரிய பாரம்பரியத்தைக் காட்டித் தருகிறது நூல். தந்தையார் இறந்த பின் பாகப்பிரிவினை பிரச்சினையில் தன் பங்கை விட்டுக் கொடுத்து அமைதிக்கு வழிவிட்ட மனிதருக்கு மனைவி வரமாக அமைந்தார் போன்ற செய்தி வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஊட்டுகிறது.

சகோதரர்கள் மீது பாசமழை பொழியும் இவர் உலகத்தில் இருக்கும் பாசத்தை இரு கூறாகப் பிரித்துவிடலாம் என்கிறார். அதில் ஒன்று தன்னைப் பெற்றெடுத்த தாய் தன் மீது காட்டும் தாய்ப்பாசம் என்றும் மற்ற எல்லா உறவுகளின் பாசமும் தாய்ப்பாசத்திற்கு ஈடாகாது என்றும் கூறும் இடத்தில் ஒரு திருமூலரைத் தரிசிக்க முடிகிறது. “தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை” என்பதுதானே திருமந்திரத்தின் கொள்கை.

முஸ்தபா என்ற தனிமனிதன் கையில் எந்த முதலீடும் இல்லாமல் தொடங்கிய வியாபாரம் இன்று சிங்கப்பூரில் நாணய மாற்று வியாபாரத்தில் முன்னணி வர்த்தகர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அயராத உழைப்பு, நிர்வாகத் திறமை, பேச்சு வன்மை, பழகும் பண்பு போன்றவையே.

தனக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை மற்றவர்கள் வாழும் போது அதைப் பார்த்து மனம் வெதும்புவது இயற்கை. தனக்கு மறுக்கப்பட்ட நன்மையை எப்பாடுபட்டாவது பிறருக்கு வழங்குவது அரிதான செயல். அன்றைய நாளில் எஸ்.எஸ்.எல்.சி.யில் எழுபது மதிப்பெண்கள் பெற்றுத் தேறியபோதும் வறுமையின் காரணமாகப் படிக்க முடியாமல் போனது. எப்போதுமே படிப்பு விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தான் பிறந்த மண்ணில் ஒரு பள்ளியைக் குறிப்பாக மகளிர் பள்ளியை அதிலும் பெண்கள் பூப்படைந்த பின் படிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதும் ஊரில் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து ஒரு பள்ளியை உருவாக்கி எல்லா பெண்பிள்ளைகளுக்கும் கல்வியின் வாசலைத் திறந்து வைத்திருக்கிறார்.

வீட்டில் தாய்மொழியான தமிழில்தான் பேச வேண்டும் என்பதற்காகத் தன் மருமகள்களையும், மருமகனையும் தமிழ்க் குடும்பங்களிலிருந்து தேர்வு செய்திருக்கிறார். சிங்கப்பூர் வீட்டின் பெயரையும் ‘நன்றி’ என்று வைத்து அழகு பார்த்தவர். மேலும் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவி அதன் சார்பாகத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘கோ. சாரங்கபாணி ஆய்வு இருக்கை’ என்பதற்கு முழுமுதற் காரணமாக அமைந்தார். இதுபோல் பல படிப்பினைகள் தரும் நூலாக வடிவெடுத்துள்ளது ராணிமைந்தனின் இந்நூல்.

நூல்: முஸ்தபா (சிங்கப்பூரில் ஒரு வெற்றித் தமிழர்)
ஆசிரியர்: ராணிமைந்தன்
விலை: ரூ.180 மட்டும்
வெளியீடு: ரஹ்மத் பதிப்பகம், சென்னை
 
- முனைவர் சி.ஆர். மஞ்சுளா, தமிழ்ப் பேராசிரியர், சென்னை சமூகப்பணி கல்லூரி, எழும்பூர், சென்னை