‘சக்திமிகு உணர்வுகளின் இயல்பான பிரவாகமே கவிதை’ என்பார் ஆங்கிலக் கவிஞர் வொர்ட்ஸ்வொர்த். இயற்கையாக மனதில் பொங்கி எழும் உணர்வுகளுக்கு அணைபோட முடியாது. செயற்கையான வார்த்தைகளால் அத்தகு உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. பொம்பூர் குமரேசனின் கவிதைகள் கிராமத்து வாழ்வை, ஒரு விவசாயக் குடும்பத்தின் பின்னணியை, அவர்களின் கள்ளங்கபடமற்ற சந்தோஷங்கள், அதை உடனே பறித்துக் கொள்ளும் யதார்த்த வாழ்வின் சோகங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றைக் கண் முன் கொண்டு வருகிறது.

appavin vettiசங்கராபரணி நதியைப் போற்றும் கவிதையில் ஆரம்பித்து நதி அன்னைக்கு நாம் செய்யும் துரோகத்தில் முடிகிற இத்தொகுப்பு, நதியைப் போலவே தெளிந்த நீரோட்டமாக, ஆரவாரம் இன்றி அதே நேரம் ஆழமான பாடுபொருட்களோடு சீராக ஓடுகிறது.

“...எங்கள் பிறப்பும்
சங்கராபரணிதான்
எங்கள் இறப்பும்
சங்கராபரணிதான்.

...எங்கள்
செத்த வயல்களில்
பச்சை இரத்தம்
பாய்ச்சியவள்.

...ஒருமுறை
கரை உடைத்துக்கொண்டு
எங்கள் கழனிகளைப்
பாழாக்கிய போதும்..

பெரியப்பா மகன்
ஏழுமலையும்
இராமச்சந்திரன் தம்பி
ஏழுமலையும்
ஆறோடு ஆறாகப் போன போதும்

இரத்தமும் சதையுமான
ஆற்றை நாங்கள்
கும்பிடாமல் இல்லை.”

பெரும்பாலான கவிதைகள் அவர் அப்பாவைப் பற்றியதாக ஒரு தனிமனிதனின் வாழ்வு எவ்வாறாக சமூகத்தின் பெரும்பாலானோரின் வாழ்வைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது என்பதை ஒரு குறியீடாகத் தொகுப்பின் பல கவிதைகளின் மூலமாகச் சொல்லிச் செல்கிறது.

வாட்டிய வறுமையை வாழ்வின் அங்கமாக இயல்பாகக் கடக்கும் இவரது கவிதைகள் எங்கேயும் பரிதாபத்தையோ பச்சாதாபத்தையோ கோரி நிற்கவில்லை. அன்றாடச் சம்பவங்களைச் சித்தரிப்பதன் மூலமாகவே நம் உணர்வுகளில் தீராத தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

“கை, கால் போலச்
சூம்பி நிற்கும் கரும்புகள்
பார்வை போலப்
பட்டுப்போன பூவரச மரம்...
உதடுகளைப் போல
வெடித்துப் போன வாய்க்கால்...

அப்பாவைப் போலவே
நிலம்
நிலத்தைப் போலவே
அப்பா.” (அப்பா நிலம்)

---

“தினம் தினம்
நெல்லுக்கு
நீர்ப்பாச்சும்
அப்பா.

ஒருமுறை கூடக்
கடைக்குக்
கூப்பிட்டுப்போய்
“ஏதுடா வேணுமினு”
கேட்டதே இல்லை.” (ஏக்கம்)

ஒரு சின்னஞ்சிறுவனின் ஆதங்கம் இங்கு அழுத்தமாக வெளிப்பட்டாலும் அப்பா மேல் கொண்ட அளப்பற்ற மரியாதையை, குடும்பத் தலைவனாக அல்லாடுபவரின் துயர் கண்டு இவர் படும் வேதனையை, வலியினைப் பேசுகின்றன.. 'லாந்தர்', 'அப்பாவின் செருப்பு', 'அப்பாவின் வேட்டி', 'அப்பா நிலம்', 'அப்பா மாடு', பருக்கை', 'கூரை' போன்ற பல கவிதைகள்.

கிழிசல் சீருடையுடன் பள்ளி செல்லும் சிறுவன் எதிர் கொள்ள நேரும் அனுபவங்களான ‘தபால் பெட்டி’யில் தன் அவமானங்களையும் சிரமங்களையும் தாண்டி அப்பாவின் வாழ்வையே பார்க்கிறார் கவிஞர்.

“தையலையும் மீறி
மீண்டுமங்கே
ஓட்டை வழி தெரியும்
அப்பாவின் வாழ்வு.”

எத்தனையோ இன்னல்களுக்கு நடுவே எளிய மக்களின் வாழ்வை நகர்த்திச் செல்வது அன்பு ஒன்றே. ‘நினைவுகள்’, ‘மகாலட்சுமி’ ஆகிய கவிதைகளில் அம்மாவுக்கு அப்பா மேலும், அப்பாவுக்கு அம்மா மேலும் கவிஞருக்குப் பெற்றோர் மேலுமாக நீக்கமற நிறைந்து கிடக்கும் அன்பு மனதை நெகிழ வைக்கிறது.

எளிய வார்த்தைகள் மூலம் வலிமையான செய்திகளைக் கடத்துகின்றன நேர்மையான இவரது பதிவுகள். ஒவ்வொரு கவிதையிலும் தேர்ந்தெடுத்த சொற்பிரயோகம் வியக்க வைக்கிறது. குறிப்பாக ‘வேப்ப மரம்’.

“அந்தப் பேடைப் புறாவும்
இந்தக் காடைக் குருவியும்
அடிக்கடி கூடுகட்டிக்
கூட்டாஞ்சோறாக்கிப்
பந்திபோட்டுப்
பரிமாறிக் கொண்டது
அதோ..
அந்த வேப்பமரத்தடியில்தான்.

ஈரமண்ணால்
இட்லி சுட்டதும்
செங்கல் அரைத்து - அதற்குச்
சட்னி வைத்ததும்
அதோ...
அந்த வேப்பமரத்தடியில்தான்.

...அவள் சிரிப்பு
அவனுள் விதை தூவியதும்
அவன் அணைப்பு
அவளுள் முளைவிட்டதும்
அதோ...
அந்த வேப்பமரத்தடியில்தான்.

இப்போதும்
அதோ...
அந்த வேப்பமரத்தடியில்தான்
நான்கு கண்கள் பிதுங்கி
இரண்டு நாக்கு நீண்டு...

பாவமந்த வேப்பமரம்
மனிதர்களின் சாதியினை
அறியாதது...

காதலைப் போலவே!”

மனிதத்தைக் கொன்று தலைவிரித்தாடும் சாதி வன்முறையை, சாதீயத்தை, உரக்கச் சாடும் மேலும் சில கவிதைகளாக ‘தீட்டு’, ‘சினிமா’.

மனதை மலரச் செய்யும் குழந்தைகளின் உலகமாக ‘சிபிராஜ்’ ‘தமிழினி’, ‘அவள்’, ‘நேசிதா’ கவிதைகள்:

“பொம்மைகளையும்
பொருட்களையும்
எத்தனை முறை
எடுத்து வைத்தாலும்
அவளால்
வீடெங்கும்
இறைந்து கிடக்கிறான்
இறைவன்.”

காலம் செய்த மாயத்தால் நாம் இழந்த ‘விளையாட்டுகள்’, ‘நகர வாழ்க்கை’யில் தொலைத்து விட்ட இனிமைகள், முற்றத்தில் ‘சிட்டுக்குருவி’களைக் கூடு கட்ட வைத்து அவற்றோடு கொஞ்சி விளையாடி வளர்ந்த நம்மிடம் இன்று பிள்ளைகள்

“தாத்தா
‘சிட்டுக்குருவியென்ன
‘ஆங்கிரிபேட்’ போல
பெருசா இருக்குமா..?’” எனக் கேட்கும் போது வாயடைத்து நிற்க நேரும் சூழல்கள் என விரிகின்றன சில கவிதைகள்.

‘தாத்தா’ காலமும் நமது காலமும்..

“எங்கள் வீட்டுச்சாவி
பெரியப்பா வீட்டைத் திறக்கும்;
பெரியப்பா வீட்டுச் சாவி
சித்தப்பா வீட்டைத் திறக்கும். 

இன்று
என் வீட்டுச்சாவி
என் அண்ணன் வீட்டிற்குப்
பொருந்துவதில்லை;
என் அண்ணன் வீட்டுச்சாவி
என் வீட்டிற்குப்
பொருந்துவதில்லை.”

கிராமத்து அப்பாவிப் பெண்களுக்குத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் அவலத்தைப் பேசுகிறது ‘பொம்பூர்’:

“பிறந்தது பொம்பூர்
வளர்ந்தது பொம்பூர்
வயதுக்கு வந்ததும் பொம்பூர்
வாழப் போனது வேலூர்
முதல் குழந்தை பிறந்ததும் பொம்பூர்
இரண்டாம் குழந்தை பிறந்ததும் பொம்பூர்
வாழா வெட்டியா வந்ததும் பொம்பூர்
அவளுக்கு எல்லாமே பொம்பூர்தான்
ஆனாலும் சொல்கின்றார்கள்
அவள் வேலூர்க்காரியாம்.”

ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தற்போது தமிழாசிரியராகப் பணியாற்றும் கவிஞர் பொம்பூர் குமரேசன் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் நறுமுகை சிற்றிதழில் எழுதி வந்த கவிதைகளின் தொகுப்பே இந்நூல். சமூகச் சுழற்காற்றில் அலைக்கழிக்கப்பட்டு மாற்றங்கள் ஏற்பட வழியே இல்லாத எளிய மக்களின் துயரங்களுக்கு சாட்சியாக இவை இருப்பதை, காலம் இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. தனது கவிதைகள் காலத்தின் கண்ணாடி என்று குறிப்பிடுகிறார் கவிஞர். ஆனால், ஒரு குறிப்பிட்டக் காலத்தின் கண்ணாடியாக நின்று விடாமல் எக்காலத்துக்கும் பொருந்தும் பதிவுகளாக முக்கியத்துவம் பெறுகின்றன இக்கவிதைகள்.

இப்படியொரு நூலுக்கு நான் எடுத்த ஒளிப்படம் முகப்பு அட்டையாக அமைந்ததில் மனநிறைவடைகிறேன்.

தொடர்ந்து எழுதவும் மேலும் பல நூல்களைக் கொண்டு வரவும் கவிஞருக்கு வாழ்த்துகள்!

*
'அப்பாவின் வேட்டி'
பொம்பூர் குமரேசன்
‘நறுமுகை’ வெளியீடு
96 பக்கங்கள், 62 கவிதைகள்
விலை ரூ.75/-
தபாலில் பெற்றிட: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

- ராமலக்ஷ்மி