gurusamy book on tamil literatureபேராசிரியர் ஞா. குருசாமி எழுதியுள்ள ‘தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…)’ என்கிற நூல் இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. தகவல்களை மட்டுமே திரட்டித் தந்த தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் வரிசையில் இணைந்துவிடாமல் 1970க்குப் பிறகான சமூக, அரசியல், பொருளாதார காரணிகள் இலக்கிய ஆக்கத்தின் செல்நெறியைத் தீர்மானித்த விதத்தை ஒவ்வொரு இலக்கிய வகைமைக்கும் விரிவாக விளக்கியிருக்கும் தன்மை இந்த நூலின் மிக முக்கியமான வேறுபாட்டுச் சிறப்பாகும்.

நூலுக்காக நூலாசிரியர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல் நூல் முழுக்க விரவித் தெரிகிறது. நூலாசிரியர் நூல்களைத் தேடித்தேடி, அலைந்து, பெற்று, தொகுத்துத் தந்திருக்கும் பான்மை அவர்தம் தேர்ந்த ஆய்வு திறத்தை வெளிப்படுத்துகிறது. நூலின் செறிவான கட்டமைப்பு இந்நூலுக்கு நூற்களஞ்சியத்திற்கான தகுதியை கொடுக்கிறது. அற இலக்கியத்தின் இடம் பிற்காலத்தில் மெல்ல மெல்ல மாற்றம் பெற்று சமகாலத்தில் சிறுவர் இலக்கியமாக மாறி இருக்கிறது என்னும் கருத்தை அதற்கான காரணத்தோடு விளக்கியிருப்பது பாராட்டத்தக்கது. சமகாலக் காப்பியங்கள் தனிமனிதர்களின் புகழுரைகளாக மாறிவிட்ட போதிலும் பழைய காப்பியங்களின் அமைப்புமுறை இன்னும் முழுமையாக மாறிவிடவில்லை என்பது நூலை மனம் கொள்ள வைக்கிறது.

இலக்கிய வகைமையை காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைத்திருக்கும் இந்நூலில் மிகவும் குறிக்கத் தகுந்த பகுதி சமய இலக்கியங்கள் பற்றியது. 1970களுக்கு பிறகான சமய இலக்கியங்களின் ஆக்கங்கள் குறிப்பிடும்படியாக இல்லை என்கிற குறையை இந்த நூல் தீர்த்து வைத்திருக்கிறது. குறிப்பாக இதில் விவரிக்கப்பட்டுள்ள பௌத்த, சமண, சைவ, வைஷ்ணவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய வகைமைகளில் உருவாகியிருக்கும் இலக்கியங்கள் பற்றிய செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. சமயம் சார்ந்து நூற்றுக்கணக்கான இலக்கியங்கள் கடந்த 50 ஆண்டுகளில் வெளியாகி இருக்கின்றன என்பதை இந்நூலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஒப்பீட்டளவில் சமய இலக்கியத்தின் இந்த வளர்ச்சி முன்னெப்போதையும் விட அதிகமானது என்றே சொல்லலாம். இலக்கிய வரலாற்றை எழுதும்போது இலக்கிய வகைமையின் எல்லாவற்றையும் உள்ளடக்கும் சாத்தியப்பாடுகள் குறைவுதான். என்றபோதிலும் சமய இலக்கியங்கள் குறித்து இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் தரவுகளே அதிகம் என்கிறபோது சமய இலக்கியம் குறித்த தேடலை இன்னும் அதிகப்படுத்தினால் கிடைக்கும் தகவல்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதில் வியப்பில்லை.

நூலின் சிறப்பம்சங்களில் மற்றொரு பகுதி புனைவுகள் பற்றியது. சிறுகதை, நாவல் குறித்த வரலாற்று அறிமுகம் இந்தப் பகுதியைச் செறிவாக்கியிருக்கிறது. புனைவிலக்கிய ஆக்கங்களில் புதிதாக உருவான தொழில்சார் வாழ்வியல் முறை செலுத்தி இருக்கும் தாக்கத்தை விளக்கியிருக்கும் இடம் பாராட்டத் தகுந்தது. நாடகங்கள் குறித்த பகுதியில் பிரதிகள் எழுதப்பட்ட சூழல் வரலாற்றுப் பின்னணியில் விவரிக்கப்பட்டு சமூகவெளியில் பிரதிகளுக்கு இருந்த தேவையை இனம் காட்டி இருப்பது இதுவரை எந்த இலக்கிய வரலாற்று நூலிலும் நான் காணாதது.

கவிதைகள் பகுதியில் அரசின் ஐந்தாண்டு திட்டங்களில் இருந்த இலக்கும் நோக்கும் இலக்கியச் சூழலை தீர்மானித்த விதம் சான்றுகளுடன் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அரசு வறுமை ஒழிப்புக்குக் கவனம் செலுத்திய காலங்களில் ‘வறுமை ஒழிப்பு’ என்கிற கருப்பொருள், பலபல வகைமைகளில் புனைவுகள் ஆகின்றன என்பதை நூலாசிரியர் விளக்கியிருக்கும் பான்மை குறிக்கத் தகுந்தது.

இணைய இலக்கியத்தின் வரலாற்றியல் பதிவு நூலின் மற்றொரு வேறுபாட்டுச் சிறப்பு. ஒருங்குக்குறி எழுத்துகளின் வரவு இணையத்தில் பல்வேறு மொழிகளின் பயன்பாட்டுக்கான சூழலை எளிமையாக்கியதும், அதற்குப்பிறகு அதிவேகமெடுத்த இணைய இலக்கியத்தின் வளர்ச்சியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரபல தமிழ் இணைய இதழ்கள் பற்றி தொகுப்புத் தகவல்கள் பயனுள்ளவை. நூலை தலித்தியம் பெண்ணியம் மார்க்சியம் முதலிய கோட்பாட்டு வகைமைகளிலும் அமைத்திருக்கலாம். மற்றபடி கல்விப்புலத்திற்கும் திறனாய்வாளர்களும் படைப்பாளிகளுக்கும் இந்நூல் காத்திரமான உசாத்துணையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

வெளியீடு

:

அகரம்,

மனை எண் 1,

நிர்மலா நகர்,

தஞ்சாவூர் - 613 007

விலை

:

160/-

நூல் பெற

:

83000 44180